எனக்குள் இப்போதும் கிரிக்கெட் ரசிகன் வாழ்ந்துகொண்டேயிருக்கிறான். உலகக் கோப்பைக்கான இன்னொரு ஆட்டக்களம் போய்க்கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த போட்டியிலும் இலங்கைதான் வெற்றிபெற வேண்டும் என எனது ரசிகனோடு நானும் ஒன்றியிருந்தேன்.
இங்கிலாந்து 50 ஓவர்களில் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தபோது, எனது ரசிகன் சற்று வாடிப்போனான். அவனளவுக்கு நான் இல்லையென்றபோதும் இலங்கை வெற்றிபெற முடியாமல் போனால் அதை எந்தவித சோர்வுமற்று கடந்துபோக தயாராக இருந்தேன். இலங்கை அணி 47 ஓவர்களிலேயே இந்த 300 ஓட்டத்தையும் தாண்டியது. ஒருவர் மட்டும் ஆட்டமிழந்து, இங்கிலாந்தை அடித்து நொருக்கியதை இரசிகன் கொண்டாடினான். அவன் மைதானத்திலேயே எப்போதும் இருந்தான். நானோ இடையிடையே மைதானத்துக்கு வெளியே இழுத்துவரப்படுவதும், அதைத் தாண்டி உள்நுழைவதுமாக இருந்தேன்.
” Lions Era ! ”
” Beware of Lions ! ”
என்ற கோசங்களை அந்த மைதாதனத்தில் சிலர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதை கமரா இடையிடையே தட்டியாய் தூக்கிப் பிடித்து என்னை இடையூறுசெய்தது. அந்தக் கணங்கள்தான் என்னை மைதானத்தைவிட்டு வெளியே துரத்திக்கொண்டிருந்தன.
நானும் எனது ரசிகனும் இணைபிரியாமல் ஒன்றித்திருக்கும் காலத்திற்காக ஏங்குகிறேன்.