இயக்கம் கற்றுத்தந்த பாடம் என்றெல்லாம் உருப்படியாக எதுவும் தொடர்ந்துதோ இல்லையோ, அவை கற்றுக்கொடுத்த மலினப்பட்ட சந்தேக மனநிலை அவ்வப்போது முளைத்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது- ஒரு நோய்க்கூறுடன்.
ஒரு நினைவுக் குறிப்பு :
1984 ஏப்ரல். தமிழகத்தின் பாப்பாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த புளொட் அமைப்பின் “B” முகாம்.
இன்னமும் முகாம் பரிச்சயப்பட்டிருக்காத ஒரு காலைப் பொழுது. காலைக் கடன்களைமுடிக்கப் போகும்போது கூட்டம் கூட்டமாக கிசுகிசுத்ததை சந்தேகித்திராத எனக்கும் அந்தச் செய்தி வந்தது. மதன் முகாமைவிட்டு ஓடிவிட்டானாம்… புலியளின்ரை உளவாளியாம் அவன்… என்றவாறு அது பரவியது.
இப்போ நாம் சுமார் 320 பேர் பயிற்சிக்குப் புறப்படுவதற்கான படையணிநிலையில் நிற்கிறோம். திடீரென இரு வாகங்கள் வேகமாக வந்து முகாம் வாசலில் புழுதியெழுப்பி நின்றது. ஒரே களேபரம். திடுதிடுப்பென இறங்கியவர்கள் மதனை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
முகாம் பொறுப்பாளரான மதன் மெல்லிய தோற்றமுடையவர் அவர். இராணுவக் கடுப்புடன் அவர் முகத்தை வைத்திருப்பதில்லை. நெருங்கிக்கொள்ள தயக்கம் தராத முகத்தோற்றம் அவருடையது.
அனைத்து முகாம் பொறுப்பாளர் தாக்குதலில் வெற்றிபெற்ற வீராவேசத்தோடு மதனை தாக்கத் தொடங்க எமது பரேட் குலைந்து அரைவட்டமாகியது. நடுவில் மதன் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தான். எந்த உண்மையும் அறியமுடியாத இராணுவ இரகசியம் என்ற வன்முறை வசதிகொண்ட சூழலுக்குள் நாம் விடப்பட்டிருந்தோம். அநியாயம் என்று தெரிந்திருந்தாலும்கூட அணிதிரள முடியாதவாறு தனிமனித உறவுநிலைகள் அறிமுக வெளிப்படைத் தன்மைகள் அற்ற நிலையே முகாமுக்குள் கவனமாகப் பேணப்பட்டிருந்தது.
புலிகளின் உளவாளி என்ற உரப்பலில் நாம் எல்லோரும் உண்மையறியாது குழம்பிநின்றோம். அவர்கள் அடித்தார்கள் குதறினார்கள்… சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர்சூட்டிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப்போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
“நான் சொல்லுறதைக் கேட்டுப் போட்டு அடியுங்கோ…” என்று திரும்பத் திரும்ப மதன் சொன்ன வார்த்தைகள் என்னிடம் தொங்கின. இவர்கள் ஏன் சொல்லவிடுகிறார்கள் இல்லை… என்ற கேள்வி பலநாட்களாகவே என்னை துன்புறுத்தியது. என்னடா சொல்ல இருக்கு உனக்கு?…
சுந்தரத்தின்ரை நினைவுதினத்துக்கு நாங்கள் டெல்லி றெயினிங் காம்பிலை உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு “மாட்டன்” எண்டு சொன்னனி. நீ புலியின்ரை ஆள்தான்ரா…நாயே.. என்றெல்லாம் கத்தினார்கள்.
காதால் கேட்கமுடியாத தூசண வார்த்தைகளுடன் மதன் கிழித்தெறியப்பட்டான். இப்போ அவனது உடலில் பெனியனும் அரைக் காற்சட்டையும் மட்டுமே இருந்தது. இரத்தமும் புழுதியும் அவனுக்கு உடையணிந்துகொண்டிருந்தன. உனக்கெல்லாம் என்னடா கழகத்தின்ரை பெனியன் என்று கேட்டவாறு பெனியனை கிழித்தெறிந்தான் ஒருவன். காற்சட்டையையும் உருவினார்கள். கொட்டனால் அவனது முழங்காலை மீண்டும் மீண்டும் தாக்கினார்கள். எழும்படா நாயே… என்ற குரலுக்கு அவனால் செயல்பட முடியாத நிலையில் கையில் இழுத்து தூக்கினார்கள்…கீழே போட்டார்கள். சிதைந்து கிடந்த மதனின் முதுகில் ஏறிநின்றவாறு “கிறாவலிங் செய்யடா” என்று கட்டளையிட்டார்கள். அவனால் அசையவே முடியவில்லை. அடித்தார்கள்.
சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த புரியமுடியாத சம்பவத்தில் மனம் கோணல்மாணலாய்ப் போனது. அவர்கள் மதனை கிழிசலாக்கி முகாமின் வலது பக்கத்திலுள்ள இரண்டாவது சித்திரவதை முகாமை நோக்கி இழுத்துச் சென்றார்கள். நாம் மீண்டும் பரேட்டாய் (parade) அடுக்கப்பட்டோம். பயிற்சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பயிற்சிநேரம் முழுவதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையுமே தெளிவாக தெரிந்துகொள்ளும் பேச்சுக்கே அங்கு இடமில்லை.
மதிய நேரம் நாம் திரும்பிக்கொண்டிருந்தோம். சவுக்கம் பற்றைக்குள் கார் ஒன்று நின்றது. துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காரை மேய்ந்திருந்தது.. அது பற்றைக்குள் ஒளித்துவிடப்பட்டிருந்தது. மதன் பண்ணையார் ஒருவரின் வீட்டில் ஒளிந்திருந்ததாகவும் அவனை மீட்டு கொண்டுவரும் தாக்குதலில் பண்ணையார் கொல்லப்பட்டதாகவும் பண்ணையாரின் அடியாட்கள் நடத்திய பதில் தாக்குதலில் காரில் குண்டுகள் பாய்ந்த அடையாளங்களே அவை என்றம் பின்னாளில் தெரிய வந்தது.
அன்று இரவு முகாமைச் சுற்றி டியுற்றிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. புலிகள் வந்து தாக்கக்கூடும் என்று கதையை விட்டார்கள் முகாம் நிர்வாகிகள். மதன் காட்டிக்கொடுத்துவிட்டான்… துரோகம் செய்துவிட்டான்… என்றெல்லாம் கதை பரப்பப்பட்டது. சவுக்கம் காட்டுக்குள் இருந்த மூன்றாவது சித்திரவதை முகாமினுள் கைதியாக்கப்பட்டிருந்த விசு என்பவனையும் மதன் அழைத்துப் போனதாகவும் அவன் (விசு) தப்பிவிட்டான் என்றும் கதை உலாவியது. மதனின் மீதான சித்திரவதை காட்சிகள் என்னை தொந்தரவு செய்தன.
***
( குறிப்பு : இந்த சம்பவம் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலிலும் வருகிறது.)
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/838678646203231?pnref=story