வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..!

மறுப்பைப் பதிவு செய்தல் !

(குறிப்பு: வாசகர்களே ! இவ்வாறான ஒரு பத்தியை எழுத வேண்டி ஏற்பட்டது பிரயோசனமானதுதானா என எனக்குத் தெரியாது. இன்றைய முகநூல் போன்ற பொதுவெளியின் தன்மையை கவனத்தில் எடுத்து -2005 க்குப் பின்- திரும்பவும் ஒருமுறை இந்த மறுப்பை பதிவுசெய்ய வேண்டி ஏற்பட்டிருக்கிறது.)

சனநாயக்தின் காவலர்களில் ஒருவரான அசோக் அவர்கள் சபாலிங்கத்தின் படுகொலையில் சுவிஸ் மனிதம் குழுவினரை நோக்கி வந்திருக்கிறார். தனது முகநூலில் இதுபற்றிய முனகலுடன் தொடங்கிய குரல் நகர்ந்து வந்து மனிதம் குழுவிடம் வந்து, இறுதியில் எனது படலைக்கு வந்துசேர்ந்திருக்கிறது. உண்மைகளை கண்டறிவதிலுள்ள தீராத வேட்கையில் அசோக் இருக்கிறார். “எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்“ என்று அவர் கொடுத்துக்கொண்டிருக்கும் வெளிக்குரல் முகநூலில் வருகிறபோது பலருக்கும் சந்தேகங்களை எழுப்பிவிடக்கூடியதாக தேர்ந்த சொற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குரல் தனிநபர் விருப்பு வெறுப்புச் சார்ந்தது. வஞ்சனை மிக்கது.

ஒருவர்மீது அல்லது ஒரு குழுமீது ஒரு பழியை சுமத்துகிறபோது ஒரு சமூகஜீவிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கவேண்டும். அவர் அதை வந்தடைந்த பாதையை, முடியுமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன. தனது முகநூல் உள் பெட்டிக்குள் தனக்கு வந்த செய்தியையும், நேரில் யாரோ ஒருவர் சொன்னதையும் ஆதாரம்காட்டி (மனிதம் குழுவினூடாக வந்து) கடைசியில் எனது பெயரைக் குறிப்பிட்டும் எழுதுகிறார். இந்த செய்தியின் அடிப்படையில் எனது பெயரை குறிப்பிட்டு எழுத முடிகிற அசோக்கிற்கு, இந்த செய்தியை அவருக்கு அனுப்பியவரினது, சொன்னவரினது பெயரை போட்டு எழுதமுடியவில்லை. சரி, அவர்கள் இதை வெளியிட வேண்டாம் என சொல்வதாக எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் என்ன செய்திருக்க வேண்டும். நீண்டகாலமாக என்னை அறிந்துவைத்திருந்த தோழரோ மண்ணாங்கட்டியோ என்ற அடிப்படையில் என்னுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கலாம். ஏசியிருக்கலாம். அதையும் விடுவம். குறைந்தபட்சம் எனக்கு அதை ஏதாவது வழியில் தெரியப்படுத்திவிட்டு “உண்மையைப் பேச வாருங்கள், உரையாடலுக்கு வாருங்கள்“ என பொதுவெளியில் அழைத்திருக்க வேண்டும். அவர்களை நிழல்களாக வைத்துக்கொண்டு நான் எப்படி உரையாடுவது. குரையாடத்தான் முடியும். எனக்கு ஏதாவது மனநோய் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும்.

அசோக் அவர்களே !

மார்க்சியத்தில் மாவோவை அடிக்கடி துணைக்கிழுக்கும் உங்களுக்கு மாவோ சொல்லிவைத்திருக்கும் “முரண்பாடுகளை கையாள்தல்“ இப்படியா விளங்கித் தொலைத்திருக்கிறது. என்னை உங்களுக்கு நீண்ட காலமாகத் தெரியும். அப்படியிருக்க ஏன் என்னுடன் முதலில் விவாதித்துவிட்டு பின் எழுதமுடியாமல் போனது? சரி அதையும் விடுவம்.

இதுபற்றிக் கதைக்க உங்களது முகநூல் பெட்டிக்குள் (9.1.15 அன்று) உங்களது தொலைபேசி இலக்கத்தை கேட்டு எழுதினேன். அல்லது எனது இலக்கத்துக்கு அழைக்கும்படி கேட்டு எனது இலக்கத்தையும் எழுதியிருந்தேன். இதுவரை பதிலில்லை. பிறகு ஞாபகப்படுத்தியும் எழுதினேன். அதற்கும் பதிலில்லை. (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) பின் உங்களது இலக்கத்தை எனது நண்பர் மூலம் பெற்றுக்கொண்டு 12.01.2015 அன்று காலையில் (சுமார் 9:40 அளவில்) தொலைபேசி எடுத்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை. ஒருவேளை உங்களது முகநூல் பெட்டி என்குறித்து மற்றவர் எழுதிய செய்திகளை திறந்து காட்டுகிறது. நான் எழுதிய செய்தியை மட்டும் திறக்க மறுக்கிறதோ!

இந்த இலட்சணத்தில் உண்மைகளைப் பேசுவோம் உரையாடுவோம் என்றெல்லாம் எழுத கை கூசவேண்டும். இதுதான் உங்கள் முகம். ஆனால் முகநூலில் நீங்கள் “மேக்அப்“ உடன்தான் வருகிறீர்கள். சொல்லாடல்களை ஜனநாயகப்படுத்தி அழகாக அடுக்குகிறீர்கள்.

இது எனக்கு முதல் அனுபவமல்ல. முன்னர் ஒருமுறை எனது பெயரில் ஒரு தனிநபர்மீதான தாக்குதலாக பின்னூட்டமொன்று (நீங்களும் ஆசிரியராக இருக்கும்) “இனியொரு“ இணையத்தளத்தில் வந்திருந்தது. முதலில் ரவி என்று வந்தது. இதே பெயர் வேறு ஆட்களுக்கும் இருக்கலாம்தானே என பேசாமலிருந்தேன். அதற்குப்பிறகு இன்னொரு பின்னூட்டம் ரவி(சுவிஸ்) என்ற வந்தது. அதன்பிறகு “அது நானல்ல“ என தெளிவுபடுத்தி போட்ட பின்னூட்டம் இனியொருவின் மொடறேசனுக்காகக் காத்துக் கிடந்து பின் இறந்துபோனது. பின் உங்களுக்கு மின்னஞ்சலில் இதை குறிப்பிட்டு எழுதினேன். பதிலில்லை. மீண்டும் இன்னொரு பின்னூட்டத்தைப் போட்டேன். அதுவும் முந்தையதுக்கு நடந்த அதே கதிதான். பின்னர் நீண்ட மின்னஞ்சலொன்று உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினேன். உங்களது இந்த சனநாயகத்தைக் கேள்விகேட்டு எழுதினேன். உங்களால் வெளியிட முடியாவிட்டால், இதை நான் மற்றைய இணையத்தளங்களுக்கு அனுப்ப இருக்கிறேன் என எழுதியபின், சற்று அசைந்தீர்கள். நான் முதலில் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து பின்னூட்டமாக இட்டு நகர்ந்தீர்கள். நீங்கள் உண்மைகளைப் பேசுவோம் என்றெல்லாம் எழுத முடிகிறது, பாருங்கள்..!

முன்பொருமுறை அ.யேசுராசாவும் சு.வில்வரத்தினமும் இலண்டனுக்கு வந்தபோது, சு.வியின் கவிதைத்தொகுப்பை (உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற தொகுப்பு) சுவிஸில் வெளியிட நான் சுவிசுக்கு அழைத்திருந்தேன். அவர்கள் எனது வீட்டில் தங்கிநின்றார்கள். இதை அறிந்த நீங்கள், “ரவியும் புலிக்கு வேலை செய்கிறாராம்“ என்ற விசாரிப்புகளை எனது நண்பர்களிடமே கேட்டுத் திரிந்ததை நண்பர்கள் சொன்னார்கள். பாரிசில்கூட நாம் லாச்சப்பலில் சந்தித்துக்கொண்டபோது என்னை போகவிட்டு என்னுடன் வந்த நண்பரை (அவரை முன்னர் உங்களுக்கு தெரியாது) நான் காணாதபடி இழுத்துப்பிடித்து இதே சந்தேகத்தை கேட்டீர்கள்தானே. பின்னர் அவர் இதை என்னிடம் சொன்னார்.

பின்பொருமுறை நான் இதுகுறித்து பாரிசில் உங்களை நேரடியாக சந்தித்தபோது கேட்டேன். “ஏன் நீங்கள் என்னிடம் இதுபற்றி நேரடியாகவே கேட்டிருக்கலாமே“ எனவும் சொன்னேன். அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டீர்கள்.

உங்களுக்கு சந்தேகம் வருவதிலுள்ள சில்லறைத்தனத்தையும், அதை நீங்கள் அணுகும் விதத்தையும் சுட்டிக்காட்டவே இந்த நிகழ்வுகள் பற்றி எழுதியிருக்கிறேன். இப்போதுகூட என்னிடம் முறுகுவதற்கு அப்படியொரு சில்லறைத்தனமான காரணம்தான் இருக்கும் என நம்புகிறேன்.

தனிமனிதர்கள் பற்றிய தாக்குதல்களை ஒரு சஞ்சிகை லெவலுக்கு (ஜன்னல்களைத் திறவுங்கள் என்ற சஞ்சிகை) புகலிடத்தில் வளர்த்துச் சென்று காட்டியவர் நீங்கள். உண்மைகளைப் பேசுவோம், உரையாடுவோம் என்றெல்லாம் எழுத முடிகிறது, பாருங்கள்..!

கடந்தகால உங்கள் அரசியல் வெளிக்குள்ளும் ஊடுருவி சில விடயங்களை என்னால் சொல்ல முடியும்.  இப்போதைக்கு இன்னும் போகாமல் இத்தோடு நிறுத்துகிறேன்.

இனி வாசகர்களிடம் வருகிறேன்.

1994 இல் சுவிசில் நடந்த இலக்கியச் சந்திப்பில் தோழர் சபாலிங்கம் கலந்துகொண்டார். அப்போது புலிகளின் பொறுப்பாளராக இருந்த முரளியை (அவரது மெய்ப்பாதுகாவலர்களோடு) இலக்கியச் சந்திப்பினுள்ளே அழைத்துவந்தவர் புஸ்பராசா. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனாலும் புஸ்பராசாவுக்கு முரளியுடன் இருந்த தனிப்பட்ட நட்பு என்ற அடிப்படையில் இதை நாம் புரிந்துகொண்டோம். அங்கு புலிகளை கறாராக விமர்சித்தவர்கள் சேரன், சபாலிங்கம் மட்டுமல்ல (நான் உட்பட) மனிதம் குழு தோழர்கள் சிலரும்தான். இச்சந்திப்பில் முரளிக்கு பின்னால் உட்கார்ந்திருந்த “மார்க்சியவாதியான“ அழகலிங்கம் என்பவர் இவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசினார்,

// புலிகளைத்தவிர மற்றெல்லா இயக்கங்களும் அரசியல் முதுகெலும்பற்றவை//  என.

1994 மே மாதம் தோழர் சபாலிங்கம் அவர்கள் பாரிசில் அவருடைய வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. புகலிட இலக்கிய அரசியல் பரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியது. பல சஞ்சிகைகள் நின்றுபோயின.

illakkiyasanthippu-swiss- 1993

(thanks : photo – Thevan Nagarajah)

தோழர் சபாலிங்கம் ASSEY (ஈழம் கலைகள் சமூக விஞ:ஞானக் கழகம்) எனும் இடம்பெயர்ந்த தமிழர்களின் வெளியீட்டு நிறுவனத்தை நடாத்தி வ.ஜ.ச ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி, ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளையும், தராகியின் Eluding Peace பத்தி எழுத்துகளையும் வெளியிட்டுள்ளார். புத்தளம் முஸ்லிம் மக்கள் வரலாறு, புதியதோர் உலகம், எமர்ஜென்சி 58, யாழ்ப்பா வைபவமாலை போன்றவற்றை மறுபதிப்பும் செய்தார். இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவின் அறிக்கைகளை பிரெஞ்ச் மொழியிலும் வெளிக்கொணர்ந்தார். கணனிகளற்ற காலத்தில் புதியதோர் உலகம் நாவலைக்கூட போட்டோப் பிரதி எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டார்

தோழர் சபாலிங்கம் உதிரியாக நின்றும், இலக்கியச் சந்திப்பு தோழர்களுடன் நின்றும் புலிகளின் அரசியலையும் அராஜகப் போக்குகளையும் விமர்சித்துக் கொண்டிருந்தவர். அவர் வெறும் புலியெதிர்ப்பாளரல்ல. எல்லா இயக்கங்களையும் விமர்சித்த ஒருவர். “அவர் ஆரம்பகாலப் போராளி என்பதால் 70 களிலிருந்தான விடுதலைப் போராட்ட வரலாற்றை  ஆவணப்படுத்தும் பெருமுயற்சியில் இருந்தார். புலிகள் பற்றி முக்கியமாக பிரபாகரன் பற்றி மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியில் வந்துவிடலாமென கொண்ட அச்சம்தான் அவரது கொலைக்கான காரணம்” என பலராலும் பேசப்பட்டது. பதிவுசெய்யப்பட்டும் இருக்கிறது.

2005 இல் “மானுடன்“ என்ற புனைபெயரில் இலக்கியச் சந்திப்புக் குறித்த நீண்ட விமர்சனமொன்று தேனீ இணையத்தளத்தில் எழுதப்பட்டது. அதில் சபாலிங்கம் கொலை பற்றியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அது இவ்வாறு இருந்தது.

  • // திரு.சபாலிங்கம் புலிகளை கடுமையாய் விமர்சித்து பேசிய பேச்சு அடங்கிய வீடியோக்கசற் புலிகளைச் சென்றடைந்துள்ளது. இந்த வீடியோககசற் மூலமே சபாலிங்கம் கொலையாளிகட்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மனிதம் குழுவைச் சேர்ந்தவரும் இலக்கியச் சந்திப்பு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவருமான யோகராசா புலிகளின் முன்னைநாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியுடன் இலக்கியச் சந்திப்பு மண்டபத்தில் அன்னியோன்னியமாக உரையாடியாதாகவும் வீடியோக்கசற்றைத் தருவாதாக உறுதி கூறியதையும் அவதானித்த சாட்சிகள் உள்ளனர்.//

எதிர்பார்க்கவே முடியாத அபாண்டமான இந்தக் குற்றச்சாட்டு மனிதம் குழுவில் இருந்த எல்லோரையும் அதிர்ச்சிக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கியது. அதற்கு நாம் எமது மறுப்பை (2005 may/june)தேனீ இணையத்தளத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

உண்மை இப்படியிருக்க ,

// இந்த வீடியோ சம்பந்தப்பட்ட நபர்கள் இன்றுவரை மௌனம்கொண்டே வாழ்கிறார்கள். ஊண்மை எப்போது வெளிவரும்? //
என அசோக் இப்போ முகநூலில் எழுதுகிறார். மறதியா அல்லது வேண்டுமென்றே பூசும் சேறா இது?

மானுடன் என்ற பெயரில் 2005 இல் இலக்கியச் சந்திப்புப் பற்றிய கட்டுரையை எழுதியவர்கள் “மார்க்சியர்களான“ அழகலிங்கமும், பேர்லின் தமிழரசனும்தான் எனவும் அதுபற்றி அவர்கள் தன்னுடன் கதைத்தபோது அதில் தான் முரண்பட்டுக்கொண்டதாகவும் சொன்னார் அசோக். இதை அவர் எனக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தார். இதுகுறித்துப் பேச அழகலிங்கத்துக்கு தொலைபேசி எடுத்தேன். தொடர்புகொள்ளவே முடியவில்லை. பின்னர் மின்னஞ்சல் அனுப்பினேன். “இதை எழுதியது நீங்களா இல்லையா“ என்பதை மட்டும் தெளிவுபடுத்துங்கள் என. பதிலேதுமில்லை. இன்றுவரை தொடர்புமில்லை. இவை 2005 இல் நடந்தவை.

இன்று மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதையாக முகநூலுக்கூடாக அசோக் வருகிறார். மீண்டும் நிழல் யுத்தம். ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி, தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. முகநூல் உள்பெட்டி அவருக்கு திறந்து காட்டுதுமில்லை. எல்லாம் செயலிழந்துவிட்டது போலும்.

உரையாடல் பண்ணுவோம் , உண்மைகளைப் பேசுவோம் என்றெல்லாம் கோசம் விடுபவர்கள் இப்படி நிழல்யுத்தம் நடத்துவது கேவலமாக இல்லை ?

முன்னர் மானுடனுக்கான எனது பதிலில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன்,
// இலங்கை அரசின் புலனாய்வுத் துறையில் இருப்பவர்களையே புலிகளின் உளவுப்படை அடையாளம் கண்டு போடுகிறது. இலக்கியச் சந்திப்பில் எடுத்த வீடியோ கசற்றைப் பார்த்துத்தான் புலிகள் சபாலிங்கத்தை அடையாளம் கண்டதாக கண்டுபிடிக்கிறார்// என்று எழுதியிருந்தேன்.

இத் தர்க்கத்தை மறுக்க முடியாத நிலையில், தற்போது கசெற்றை புலிகளிடம் வழங்கியதன்மூலம் சபாலிங்கத்தின் கொலை “துரிதப்படுத்தப்பட்டது”  என நுணுக்கமாக சொல்லாடுகிறார் அசோக்.

80களின் கடைசியிலும் 90 களின் ஆரம்பத்திலும் புலிகளின் அதிகாரத்துவப் போக்குகளுக்கெதிராக புகலிடத்தில் செயற்பட்ட (சுமார் 40) சிறுசஞ்சிகைகளில் மனிதத்தின் பங்குபற்றி அரசியல் இலக்கிய வட்டத்தில் நன்கு தெரியும். சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டவுடன் இதே அசோக் செயற்பட்ட இலக்கியச் சந்திப்பு தம்மால் உடனடியாக பிரசுரமொன்றை கூட்டாக வெளியிட முடியாமல் போயிற்று. இதை உடனடியாக செய்வது சாத்தியமில்லை என எமக்குக் கூறப்பட்டது. அதனால் இரவோடு இரவாக நாம் (சிறுசஞ்சிகைகள்) இதுகுறித்து பரபரப்பாக இருந்து செயற்பட்டோம். மனிதம், தேடகம், தூண்டில், சமர் ஆகிய நான்கு இதழ்களும் பிரசுரமொன்றைத் தயாரிப்பதில் கூட்டாக செயற்பட்டு மற்றைய சஞ்சிகையாளர்களிடமும் தொடர்புகொண்டு, அவர்களையும் இணைத்துக்கொண்டு (அப்போ பக்ஸ், ரெலிபோன் முறையே தொடர்புகொள்ள வசதிப்பட்ட காலம்) மறுநாளே பகிரங்கமாக எல்லா நாடுகளிலும் இது விநியோகிக்கப்பட்டது. (கீழே இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் இலக்கியச் சந்திப்புத் தோழர்கள் பாரிசில் சபாலிங்கத்துக்கான அஞ்சலிக் கூட்டத்தை நடத்தினார்கள், புலிகளை பகிரங்கமாகவே கண்டித்துப் பேசினார்கள் என்பதும் இன்னொரு முக்கியமான பதிவு.

இந்தப் படுகொலையைச் செய்த புலிகளை கண்டித்து மனிதத்தில் ஆசிரியர் தலையங்கமும் எழுதப்பட்டது. (கீழே இணைக்கப்பட்டுள்ளது). மனிதம் குழுவிலிருந்தவர்களை பயம் ஆட்டிப்படைத்தபோதும், தொடர்ந்து செயற்பட்டோம். இப்படி இயங்கிய மனிதம் குழுமீது இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை எந்த ஆதாரமுமின்றி உருவாக்கி, எமது மறுப்பையும் புறம்தள்ளி  புதுப்பிக்கும் இந்த மனநோய்க்கு தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டிருப்பது எந்தளவு பிரயோசனம் என தெரியவில்லை.

அந்தக் கொலையின் பின்னர் பாதுகாப்பின்மையை மனிதம் குழு தோழர்களும் உணர்ந்திருந்தனர். ஆனாலும் தொடர்ந்து 1994 இறுதிவரை அது இயங்கியது.

சில விடயங்களையும், நிலவிய சூழலையும் புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் மனிதம் குழு பற்றிய ஒரு அறிமுகம் வாசகர்களுக்கு தேவைப்படலாம். அதை சுருக்கமாக சொல்ல முனைகிறேன்.

இயக்கவழி கற்றுக்கொண்ட கட்டுப்பாடுகள் மனிதம் குழுவுக்குள் ஏற்கனவே தாக்கம் செலுத்தியிருந்தது. (உதாரணத்துக்கு சிகரட், குடிவகை, கார்ட்ஸ் விளையாட்டு, சினிமா, மஞ்சள் பத்திரிகை சம்பந்தப்பட்டவை). கட்டுப்பாடு ,ஒழுக்கம் சம்பந்தப்பட்ட கோட்பாட்டுப் புரிதல் எம்மிடம் இருந்ததில்லை. இவைபற்றி பின்னர் சுவிஸ் க்கு நாம் அ.மார்க்ஸ் ஐ அழைத்தபோது விரிவாக அவர் அதை புரியவைத்தார். எமது கட்டுப்பாடுகள் மீதான புரிதலில் சற்று அதிர்ச்சி மனிதம் குழுவுக்குள் ஏற்பட்டது. அதேநேரம் எமது சிந்தனை முறையை ஒரு வட்டத்துக்குள்ளிருந்து வெளியே கொண்டுவரவும் வைத்தது.

பெண்ணொடுக்குமுறையின் முக்கியமான வெளிப்பாடு என்ற வகையில் பூப்பு நீராட்டுவிழாவுக்குப் போவதை மனிதம் தனது தோழர்களிடம் அனுமதிக்கவில்லை. எமது சொந்தங்களுக்குள் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட்டபோதுகூட, எவருமே கலந்துகொள்ளாமல் விட்டோம். அதன்போதெல்லாம் முரண்பாடுகளை எதிர்கொண்டு கடந்துவந்திருக்கிறோம். அந்தக் காலகட்டங்கள் இப்போதையது போன்றதல்ல. கல்யாணவீடு, பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் பொருள்வரவை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட காலம். அங்கு நாம் பூவோடு மட்டும் செல்வோம். பரிகசிப்பை எதிர்கொண்டாலும்கூட தொடர்ந்து அதைச் செய்தோம். தாலி கட்டுவது சம்பந்தமாக ஒரு விட்டுக்கொடுப்பு எம்மிடம் இருந்தது. அது கட்டுப்பாடாக இல்லாதபோதும் நாம் சில தோழர்கள் தாலி கட்டி திருமணம் செய்யவில்லை.

எழுதுவதற்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருந்தது. அது ஒரு போராட்டமாகவே எம்மை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியால் மனிதம் வெகுஜன அமைப்பா அல்லது புரட்சிகர அமைப்பா என்ற விவாதம் தவிர்க்கமுடியாமல் மேலெழுந்தது. இதுபற்றிய விவாதம் முடிவில் வெகுஜன அமைப்புத்தான் என முடிவுற்றது. இந்த விவாதம் எழுந்தது தன்விருப்பினால் அல்ல. அதன் நடைமுறை வேலைமுறைகளால்தான் என்பதை சொல்லவருகிறேன்.

அதையும்விட மனிதம் குழுவில் அங்கம் வகித்தவர்கள் சிலர் தீப்பொறி அமைப்பில் சேர்ந்திருந்தனர். தீப்பொறி தலைமறைவாக இயங்கிய காலமது. எனவே அவர்கள் தம்மை வெளிக்காட்டாமல் தொடர்ந்து மனிதம் வேலையிலும் ஈடுபட்டு வந்தனர். மனிதம் இறுதிவரை சுயமான வெகுஜன அமைப்பாகவே இருந்தது. இடையில் தீப்பொறி அமைப்பு தனது தவறான முடிவினால் தனது தோழர்களை (அமைப்பு வேலைகள் காரணமாக) மனிதம் அமைப்புக்குள்ளிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தியது. அவர்கள் தாம் வெளியே போவதற்கு வேறு காரணங்களையே முன்வைக்க வேண்டிய நிலையில் இருந்தனர். சிறு எண்ணிக்கையிலான அவர்கள் தனித்தனியாக (சற்று கால இடைவெளியுடன்) வெளியேறினார்கள். அவர்கள் மனிதத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதால், மற்றைய மனிதம் தோழர்களுக்கு சந்தேகங்களும், சலிப்பும் ஏற்பட்டது.

இந்த நிலைமைகள் எல்லாம் சேர்ந்து உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்து மனிதம் குழுவின் சிதைவை நடத்தி முடித்தது. 1994 இல் மனிதம் தனது இறப்பை 30வது இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் நேர்மையாகவே பதிவுசெய்து முடிந்துபோனது. தீவிரமாகச் செயற்பட்ட மனிதம் குழுவின் இந்த உள்முரண்பாடு தோழர்களுக்கிடையிலான உறவுகளையும் தீவிரமாகவே பாதித்தது. பலர் ஒதுங்கிச் சென்றனர். பிறகு எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளியாமல் போயிற்று. முரண்பாடுகளை கையாள்வதில் எமக்கு அப்போதிருந்த பக்குவமின்மை மீது இப்போதும் நாம் வருந்துவதுண்டு.

மனிதம் குழுவின் தோற்றம் உதிரிநிலைகளிலிருந்து ஒன்றுசேர்தலுடன் ஆரம்பமாகிய ஒன்று. நானும், அருள் என்ற எனது நெருங்கிய தோழரும் தள பின்தள அனுபவங்களோடு 1985 இறுதியில் இங்கு அகதியாக வந்திருந்தோம். நாம் புளொட்டின் அராஜகப் போக்குகளை இங்கு முதன்முதலில் அம்பலப்படுத்தியபோது எதிர்ப்பட்டவர்கள்தான் பின்னையகாலத்தில் மனிதம் குழு தோற்றத்துக்கு வழிவகுத்தார்கள். 1987 இல் புலிகளின் அட்டகாசம் நிலவிய காலம். மற்றைய இயக்க அழிப்பு தளத்தில் நடந்ததின் தொடர்ச்சியாய் புகலிடத்திலும் அந்த வன்மம் வெளிப்பட்டது.

முதலில் நாம் ஏழு அல்லது எட்டுப் பேர் சந்தித்து அரசியலை படிப்பது விவாதிப்பது என ஒன்று சேர்ந்தோம். புலிகளுக்குப் பயந்து இரகசியமாகவே இது தொடர்ந்தது. அப்போது “வாசகர் வட்டம்“ என்ற பெயரோடு இருந்தோம். இதில் புலி தவிர்ந்த மற்றைய இயக்கத்திலிருந்து விலகியவர்கள் இருந்தோம். பின்னர் வெளித்தெரிய வேலைசெய்யும் நிலைக்கு நகரும் நோக்கில், “மனிதம்“ என்ற பெயரில் வீடியோ சஞ்சிகையை அரசியல் விடயங்களோடு வெளியிடத் தொடங்கினோம். இதில் எல்லா இயக்கங்கள் பற்றியதும், அரசு பற்றியதுமான விமர்சனங்கள் மென்போக்கில் வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு 5 சஞ்சிகைகள் வெளிவந்தன. அது காணொளி வடிவம் என்பதால் வேகமாக பரவலடைந்தது. எங்களை நாம் வெளிக்காட்டி வேலைசெய்ய ஒரு வழியைத் திறந்துவிட்டது. “மனிதம் குழு“ என்ற பெயர் எமக்கு வெளியிலிருந்து வந்தது.

ஆனாலும் “வாசகர் வட்டம்“ என்ற பெயரோடுதான் நாம் அமைப்பாக இருந்தோம். 1989 இல் இந்திய இராணுவம் இலங்கைக்குள் புகுந்தபோது, மனிதம் மேலதிகமாக கையெழுத்துச் சஞ்சிகையையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் வீடியோ சஞ்சிகை வேலைப் பளுவால் நின்று போனது. கையெழுத்துச் சஞ்சிகைமீது முழுக் கவனமும் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது வெளியிடப்பட்டது. மனிதம் சஞ்சிகை படிப்படியாக விமர்சனங்களை மென்மைப் போக்கிலிருந்து கறாரான நிலைக்கு எடுத்துச் சென்றது.

மனிதம்  சஞ்சிகை இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாசகர்களுக்கு இலவசமாகவே அனுப்பிவைக்கப்பட்டன. இறுதிக் காலங்களில் சுமார் 150 பிரதிகள்வரை அங்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வடபகுதிக்கு அது போய்ச்சேர முடியாமல் இருந்தது. இலங்கையைப் பொறுத்தளவில் கொழும்பிலும், கிழக்குப் பகுதியிலும் (குறிப்பாக முஸ்லிம் மக்களிடம்) கணிசமானளவு போய்ச் சேர்ந்தன.  தமிழகத்துக்கும் அனுப்பப்பட்டது. அதேபோல் கேரளா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் சிறு எண்ணிக்கையிலான பிரதிகளும் றஸ்ய தமிழ்ச் சங்கம் போன்றவற்றுக்கும் அவை போய்ச் சேர்ந்திருக்கிறது. புகலிட நாடுகளில் சந்தா முறையில் தபால் மூலம் விநியோகிக்கப்பட்டது. சிறுபத்திரிகை நடத்தியவர்களுக்குத் தெரியும் சந்தா முறையில் வந்துசேரும் நிதியின் உறுதிப்பாடற்ற தன்மை. சொந்தப் பணத்திலேயே பெரும்பாலும் இதைச் செய்யக்கூடியதாக இருந்ததற்கு நாம் சுமார் 40 பேர்வரை மனிதத்தில் இருந்தது வாய்ப்பாக இருந்தது.

இதையும்விட தமிழகத்தின் புதிய ஜனநாயகம் , புதிய கலாச்சாரம் தோழர்களோடும், பின் அதனுடன் சேர்த்து மனஓசை தோழர்களோடும் தொடர்பு இருந்தது. அந்த இதழ்களை எடுத்து இங்கு விநியோகித்து பணத்தை அனுப்பிக்கொண்டிருந்தோம். புதிய ஜனநாயகம் குழுவினருக்கு கணனி வசதிக்காக நிதியுதவி செய்தோம். பின்னரான காலங்களில் கொழும்பில் சரிநிகர் வெளியிடப்பட்டபோது அதையும் எடுத்து விநியோகித்து பணம் அனுப்பினோம். அவர்களுக்கும் ஒருமுறை நிதியுதவியும் செய்திருக்கிறோம்.

மாதத்தில் ஒருமுறை தவறாது நாம் கூடுவதுண்டு. தலைவர் செயலர் என ஒருவருமில்லை. சுழற்சி முறையில் ஒரு பத்திரிகைக்குழு இருந்தது. அதேபோல் நிதிக்கு பொறுப்பாளராக இருப்பவரும் மாறிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு கூட்டமும் வௌ;வேறு ஆட்கள் தலைமை தாங்குவதும், அங்கு உரையாடப்படுபவைகளை எழுத்தில் பதிவுசெய்வதுமாக ஒரு ஒழுங்கு இருந்தது. இந்த அறிக்கை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விடுபடல்கள், திருத்தங்கள் செய்யப்பட்டு பைலுக்குள் போகும். இறுதிக் காலத்தில் இந்த அறிக்கைகள் இரண்டு பெரும் பைல்களாக இருந்தன. இன்று எதுவுமே எம்மிடம் இல்லை. சேகரிக்கப்பட்ட வாசகர் கடிதங்களில் பெரும் பகுதி (குறிப்பாக பெருமளவு கடிதங்கள் கிழக்கு மாகாண முஸ்லிம் வாசகர்களிடமிருந்து வந்தவை) எம்மிடம் இல்லை. 30 இதழ்களினதும் எஞ்சிய பிரதிகள் ஒழுங்குமுறையாக சேகரித்து வைக்கப்படவுமில்லை. நிதி பற்றி விபரம் அடங்கிய பைல்களும் எம்மிடம் இல்லை. மையப்படுத்தப்படாமல் தோழர்கள் எல்லோரிடமும் இவை சிதறிக் கிடந்ததாலும், முரண்பாடுகளின் தீவிரத்தால் ஏற்பட்ட தொடர்பாடலற்ற உதிரித்தன்மையும் இதற்கு மேலும் துணைபோனது.

இங்குதான் நாம் தவறிழைத்தோம். ஒரு ஆவணப்படுத்தல் என்பது பற்றிய கவனம் எம்மிடம் இருக்கவில்லை. வருடத்துக்கு 12 தடவைகள் என நடந்த மனிதம் குழுவின் சந்திப்புகளும், அதிகளவில் நடந்த பத்திரிகைக்குழு சந்திப்புகளும், ஒவ்வொரு இதழையும் சுவிசில் நான்கு பெரிய புகையிரத நிலையங்களில் (ஆண், பெண் தோழர்கள்) நின்று விநியோகித்த நிகழ்வுகளும், அகதி முகாம்களுக்குச் சென்று கலந்துரையாடிய பல சம்பவங்களும் என சுமார் ஆறு வருடம் மனிதம் குழுவென்று இயங்கிய எமது காலப்பகுதியில் ஒரு போட்டோ தன்னும் எடுத்துக் கொள்வது பற்றி யோசிக்கவேயில்லை. விளம்பரமின்றி செயற்பட வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பக்கம் யோசிக்க விடவில்லை.

இவ்வாறு ஆவணப்படுத்தல் பற்றிய எந்த அக்கறையுமின்றி நாம் இருந்ததின் இன்னொரு அம்சம்தான் சுவிசில் நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றிய வீடியோ ஓர் இறுதியான கசெற் வடிவமாக தொகுக்கப்படாமல் போனது. அவை மனிதம் குழுவிலிருந்த தோழர் ஒருவரால் (இவர் வீடியோ எடுப்பதை பகுதிநேர வேலையாகக் கொண்டிருந்தவர்) எடுக்கப்பட்டவை. அவை பழையகால பெரிய கசெற் (விஎச்எஸ்) வடிவில் எடுக்கப்பட்டவை. சுமார் 6 கசெற்றுகளாவது இருக்கலாம். அவை அவரிடமே கிடந்து பல வருடங்களாக இழுபட்டு, அவர் வீடு மாறும்போது அதை கண்டெடுத்தார். உதிரியாய் நாம் இருந்த காலத்திய மேலதிக அசட்டை மனோபாவத்தால் அதுவும் சேகரித்து வைக்கப்படாமல் குப்பைக்குள் போயிற்று. 2005 இல் மானுடனுக்கு எழுதிய பதிலில் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இது எமது ஆவணப்படுத்தல் சம்பந்தமாக இருந்த அக்கறையின்மையும் அசட்டையும்தான். ஒரு வரலாற்றுப் பதிவை நாம் இழந்துபோனதை பிற்காலத்தில் உணர்ந்தோம். எதுவும் கையிலில்லை. மனிதம் சஞ்சிகையின் ஒரு தொகுதி மட்டும் என்னிடமும் இன்னும் ஒருசில தோழர்களிடமும் எஞ்சியிருக்கிறது. வெளியிடப்பட்ட மனிதம் வீடியோ சஞ்சிகை 5 இல் 2 பிரதிகள் என்னிடமில்லை. இதுதான் நிலைமை.

இப்படியிருக்க சுவிஸ் இலக்கியச் சந்திப்பு கசெற்றை ஆதாரமாக கொண்டுவரக் கேட்டு அடம்பிடிப்பவர்களுக்கு எம்மால் எதுவுமே செய்ய முடியாது. கசெற் இலக்கியச் சந்திப்பில் வைத்தோ அல்லது பிறகோ புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மிகப் பெரிய அபாண்டமான பழி. அத்தோடு எனது பெயரை அதற்குள் இழுத்துவைத்து அசோக் கட்டியிருக்கும் இந்தக் கதை மனிதத்துள் நாம் செலவுசெய்த நேர்மையான உழைப்பின் மீது வைத்து உயிரை அரிவது போன்றது. இவ்வளவு நேரத்தை வீணாகச் செலவுசெய்து மனவுளைச்சலை உழுதுகொண்டு இதை எழுதி முடிக்கிறேன்.

இதுசார்ந்து பேசுவதற்கு இனி என்னிடம் எதுவுமில்லை. திரும்பத் திரும்ப நாம் (முன்னாள் மனிதம் குழுவினர்) விளக்கமளித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

– ரவி (15012015)

 

பின்னிணைப்புகள்:

அசோக்கின் முகநூல் உள்பெட்டிக்கு நான் அனுப்பிய செய்தி

inbox message (TP No. deleted)

————————————————-

அசோக்கின் (ஜனவரி2015) முகநூல் சுவரெழுத்து

ashok-fb status

***********************************

தோழர் சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டவுடன் வெளியிடப்பட்ட பிரசுரம் (தமிழ், டொச் மொழிகளில்)

sabalingam-tamil

Sabalingam-deutsch

———————————————————-

அப்போதைய மனிதம் ஆசிரியர் தலையங்கம்

sabalingam-manitham editorial2

———————————————————-

2015 இல் “மானுடன்” என்ற பெயரில் வந்த – இலக்கியச் சந்திப்பு தொடர்பான- கட்டுரை

article of Manidan in Thenee.

3 thoughts on “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..!”

  1. எனக்கும் இந்த மோசமான செயலுக்கும் எத்தகைய தொடர்பும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) இல்லை என்பதை ஏற்கனவே ‘தேசம் நெற்றில்’ வெளிப்படையாக எழுதியிருக்கின்றேன். இந்தப் படுகொலையைக் கண்டிப்பதோடு மீண்டுமொரு தடவை எனது பெயர் தேவையற்று வீணான சந்தேகங்களோடு இதனுடுடன் தொடர்புபடுத்தப்படுவதை வன்மையாக மறுக்கின்றேன்.

    நடராஜா முரளிதரன்

  2. திரு அசோக் அவர்களுக்கு ! நான் சார்ந்திருந்த மனிதம் குழுமீதும் அதில் செயற்பட்ட நண்பர் ரவி மீதுமான அபாண்டமான குற்றச்சாட்டை தயவு செய்து நிறுத்துங்கள். நாங்கள் உங்ளுக்கு என்ன தீமை செய்தோம்? எங்கள்மீது ஏன் இந்த வன்மம் . யாரோ இரண்டு நண்பர்கள் சொன்னார்கள் என்பதை வைத்துக்கொண்டு எப்படி இலகுவாக மற்றவர்கள் மேல் பழி போட முடிகிறது. ரொம்ப தப்பு அசோக். மனிதத்திடம் மன்னிப்பு கேளுங்கள்.

  3. http://anupoothy.blogspot.ch/2015/01/blog-post_18.html

    மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s