சுடுமணல்

திறீ பிராங் ஹொட்டேல்

Posted on: January 3, 2015

நவம்பர் 1985.32ம் இலக்க பஸ் நிலையத்தில் காத்திருந்தான் மதன். அருகில் பேர்ண் புகையிரத நிலையம். இன்றுதான் அவன் சுவிஸ் பஸ் இல் முதன்முறையாக ஏறப்போகிறான், அதுவும் தனியாக. பஸ் இன் பின்வழியால் பயணிகள் இறங்கினர். முன்வழியால்  ஏறினர். அவர்கள் முண்டியடிக்கவில்லை. ஒருவர்பின் ஒருவராக அசைந்து ஏறிக்கொண்டிருந்தனர். மதன் தனது பின்வாங்கிய கால்களுடன் இறுதியில் போய் நின்றான்.
முல்லர் சொன்னபடி 6வது பஸ் தரிப்பிடத்தில் இறங்கினான். அங்கே முல்லர் காத்துக்கொண்டு நின்றார்.யார் இந்த முல்லர். நடுத்தர வயதிருக்கும். ரை கட்டியிருந்தார். தோளில் ஒரு பை. டீசன்றாக தெரிந்தார் மதனுக்கு. நேற்று பேர்ண் புகையிரத நிலையத்தில் இப்படித்தான் அவர் அறிமுகமாகியிருந்தார். மதனின் அருகில் வந்த அவர் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தார். இலங்கை ஆங்கில கொலனியாக இருந்ததால் இலங்கையர்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுவார்கள் என்று அப்பாவித்தனமாக முல்லரும் நினைத்திருக்கக்கூடும். ஆனாலும் மதன் ஓரளவு தட்டித் தடக்கி பேசக்கூடியவன்.அவனது வேலையில்லாத நிலைமையை முல்லர் வேதனையோடு பார்ப்பதுபோல் தெரிந்தது. அவர் தான் உதவ முன்வருவதாக சொல்லியபடி, தனது பையிலிருந்து இரண்டு புகைப்படங்களை எடுத்தார். ஒரு ஹொட்டேல் வெளிவிராந்தையில் அவரும் நான்கைந்து பேர்களும் குளியல் உடையில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். விடுமுறைக் களிப்பு இறகாய் விரிந்து மிதந்தது.

“இந்தக் ஹொட்டேல் எனது நண்பரினுடையது. நான் சொன்னால் நிச்சயம் உங்களுக்கு அங்கு வேலை கிடைக்கும்.“ என்றார் முல்லர்.

“எனக்கு வேலைசெய்ய அனுமதிப்பத்திரம் இல்லையே.“ என்றான் மதன்.

“அது பரவாயில்லை. நீ ஒருவரிடமும் சொல்லாதே. தெரியாமல் வேலை செய்யலாம். கையில் நேரடியாகவே காசு வரும். உனது கஸ்ரங்கள் எனக்குப் புரிகிறது. நான் இலங்கைக்கு நான்கு தடவைகள் போய்வந்திருக்கிறேன். அழகான கனவுலகத் தீவு. இனிமையாகப் பழகும் மக்கள். உனக்கு நான் உதவிசெய்ய விரும்புகிறேன்“ என்று அடுக்கிக்கொண்டிருந்தார் முல்லர்.

மதனுக்கு உள்ளால் ஓர் எதிர்பார்ப்பு ஓடத்தொடங்கியிருந்தது. அவன் இதுபற்றி யாருக்கும் சொல்லாமல் இருப்பதை தவமாக எடுத்துக்கொண்டான்.

இப்போ முல்லரும் மதனும் பஸ்தரிப்பிடத்திலிருந்து ஒரு நடைத்தூரத்தில் வீட்டை அடைந்தனர். முல்லர் தனியாளாக இருந்தார்.

“உங்களுக்கு குடும்பம் இல்லையா?“

“இல்லை. நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.“

வீட்டின் சுவர்களை கலைப்பொருட்கள் அலங்கரித்திருந்தன. பழைய வேலைப்பாட்டுடன்கூடிய சாப்பாட்டு மேசையில், அவர் சமைத்துவைத்த உணவுகள் இருந்தன. பஸ்மதி சோறு, அவித்த மரக்கறித் துண்டுகள். நடுவில் நீளமாக குழிவிழுத்தி அதற்குள் மஞ்சளாய்க் குழம்பு காட்டப்பட்டிருந்தது. அதற்குமேல் அன்னாசிப் பழத் துண்டுகள் கிடந்தன.

“காஸ்மீர் சோர்ஸ்“ என அதைக் காட்டினார் முல்லர். ருசி உறைப்பை இழந்து நின்றது. முள்ளுக் கரண்டியோடு போராடப் போராட மதனுக்கு இருந்த பசியும் போய்விட்டிருந்தது.

“நல்லாயிருந்தது சாப்பாடு“. மதன் சம்பிரதாயித்தான்.

“நன்றி. ஆனால் நீ நன்றாக சாப்பிடவில்லையே“

“இல்லை, போதும். பசி இல்லாததுதான் காரணம்.“

முல்லர் தனது அல்பத்தைக் எடுத்துவந்தார். ஹாட்டேலில் தான் கழித்த விடுமுறைகாலப் படங்களை விளக்கங்களோடு கடந்துவந்துகொண்டிருந்தார். இப்போ அல்பத்தின் முழுப்பக்கத்தில் விரித்திருந்த துவாய்த்துண்டில் அநாயாசமாய் சரிந்திருந்தாள் அந்தப் பேரழகி. அவளில் உடலில் நீர்த்துளிகள் பூத்திருந்தன. அவள் ஒரு சிறு துணியை மட்டும் இடுப்பில் கட்டியிருந்தாள். மதனுக்குள் அவள் அரவமற்று ஊடுருவினாள். முல்லர் மிக அருகில் அரக்கிவந்ததை அவன் கவனித்திருக்கவில்லை. முல்லரின் கைகள் மதனின் துடையில் தட்டுப்பட்டபோது அவன் சடாரென விலத்தினான். அதே வேகத்தில் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தான். வீட்டின் கேற்றை அவன் சாத்தியிருக்க அவகாசம் இருந்திருக்காது. படபடப்புடன் பஸ்நிலையத்துக்கு விரைந்தான். தவறுதலாக கை பட்டிருக்கவும்கூடும் என்ற நினைப்பு எழுவதும் அமுங்குவதுமாக இருந்தது.

நேரம் மாலை ஏழு மணியை நெருங்கியிருந்தது. நடுநிசிபோல் இருள் திரண்டிருந்தது. அந்தக் குளிரிலும் மதனுக்கு வியர்ப்பதுபோல் இருந்தது. பஸ்சிலிருந்து இறங்கி தனது வசந்தமாளிகையை நோக்கி அவன் நடந்தான்.

வசந்தமாளிகையை பனி மூடியிருந்தது. மண்முகடுக்குள் புதையுண்டு போயிருந்தது அது. பனிக்காலம் என்பதால்  மண்முகடு பனித்திரள் முகடுகளாக மாறியிருந்தது. கீழிறங்கிப்போகும் சரிவான பாதையின் முடிவில் அதன் வாசல் இருந்தது. வழமைபோல் மதன் கியூவில் நின்றான். குளிருக்கு முன்னால் உடல் ஓர் அடிமையாய் குறுகிப்போயிருந்தது. அது நக இடுக்குகளில் ஊசிக்குளிராய் விகாரமடைந்திருந்தது. வாசலில் நின்ற அந்த வெள்ளைக்காரன் ஒவ்வொருவரிடமும் மூன்று பிராங் பணத்தை புடுங்கிவிட்டு உள்ளே கலைத்துக்கொண்டிருந்தான். அகதிகளுக்கான உதவிப் பண செலவில் படுக்கைக்கு நாளுக்கு மூன்று பிராங் என்ற கணக்கு பிசகிவிடாமல் இருக்கவேண்டும்.

மதனிடமும் மூன்று பிராங்கை வாங்கிய வெள்ளைக்கார பொறுப்பாளன் நாய் கலைப்பதுபோல வாயால் உஸ் விட்டு கையால் சைகையும் காட்டினான். மதனும் தனக்கான கட்டிலை பிடிப்பதில் அவசரம் காட்டினான். முன்னறையில் கட்டில்கள் போய்விட்டிருந்தன. அடுத்த அறைக்கு சென்றான். கையையும் காலையும் தரையில் ஊன்றியபடி ஒரு நாய்நடையுடன் வாசலைக் கடந்தான். ஒரு மீற்றர் உயரமும் ஒரு மீற்றர் அகலமும் இருக்கலாம் அந்த வாசலுக்கு. படலை எதுவும் இல்லை. சரியாகச் சொன்னால் அது ஒரு சதுரப் பொந்து. அந்த அறையில் ஒருவாறு கட்டிலொன்று கிடைத்தது. இல்லையேல் அடுத்த அறைக்கு மீண்டும் நாய்நடை நடந்திருக்க வேண்டும்.

இந்த வசந்தமாளிகையை அகதிகள் “மூன்று பிராங் ஹொட்டேல்“ என பெயர்வைத்து அழைத்தனர். யுத்தகாலங்களில் இராணுவத்தினர் இரகசியமாகத் தங்கும் நிலக்கீழ் அறைகளைக் கொண்ட கட்டிடம் அது. கட்டில்கள் மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பிணைக்கப்பட்டிருக்கும். போர்வையை உதறினால் தும்மல் வரலாம் என பயந்தான் மதன். மெல்ல உள்ளுக்குள் புகுந்து இழுத்திப்போர்த்துக் கொண்டான். சுமார் 70 பேர்வரை அதற்குள் படுக்கையை கண்டடையலாம்.

நாளைய சந்ததியின் விடிவுக்காக இன்று எம்மை அர்ப்பணிப்பது வரலாற்றுக் கடமை என்று பனங்காட்டை அண்டியிருந்த வைரவர் கோவிலில் நடந்த அரசியல் வகுப்பில் மதனும் அள்ளுப்பட்டுப் போனவன். அன்றுவரை இரகசியமாக குடித்துக்கொண்டிருந்து கள்ளையும் கைவிட்டான். பிறகு இந்தியா போய் சவுக்கம் காடு அது இது என்று முகாம்களிலெல்லாம் படுத்துறங்கியதற்கும், நுளம்புத் (கொசுத்) தொல்லையில் சாக்குப் போர்வையுடன் படுத்துறங்கியதற்கும் இது எவ்வளவோ மேல் என்று பட்டது. அங்காலும் இங்காலுமாய் போர்வையோடு இறுகி இறுகி புரண்டு படுத்தலில் சூட்டுச் சுகம் அடைந்தான். முல்லரின் நினைவை அடிக்கடி துரத்தவேண்டியிருந்தது.

பனிப்பொழிவுக் காலமாதலால் மாலை நாலரை மணிக்கே இருட்டிவிடும். ஏழரை மணிக்குத்தான் இந்த திறீ பிராங் ஹொட்டேல் கேற் திறப்பார்கள். அந்த வெள்ளையன் பேசுவது மதனுக்கும் புரியாது. எல்லாவற்றுக்கும் “யா…யா“ என்பதும், தலையசைப்பதும், மிஞ்சிப்போனால் மெல்லியதாய்ப் புன்னகைப்பதும்தான் மதனுக்கும் வரப்பெற்றிருந்தது.

அந்த வெள்ளையனுக்கு நடுத்தர வயதிருக்கும். மெல்லியதாய் தாடி வைத்திருந்தான். அவனது முகத்தில் சிரிப்பை காணக் கிடைக்காது. அடித்தொண்டையால் அவன் பேசுவான், ஏசுவான். அவன் முன் அறையில் சின்னதாய் ஒரு கூடுபோன்ற அடைப்புள் படுத்துறங்குவான். அதனால் முன்னறையில் நிம்மதியாய் தூங்கலாம். மற்ற அறைகளில் நிலைமை அப்படியிருக்கவில்லை.

மதன் இந்த ஹொட்டேலுக்கு படுக்கைக்கு வந்த முதல்நாள் அது. இரவு சுமார் ஒன்பதரை மணியிருக்கும். ஒரு நாலைந்து பேர் பியர் போத்தல்களுடன் மதனிருந்த அறைக்குள் புகுந்து வந்தனர். அந்த அறையில் சுமார் 20 பேர்வரை படுத்திருந்தார்கள். அநேமாக எல்லோரும் தூங்கிவிட்டிருந்தார்கள். திடீரென லைற் வெளிச்சம் பரவியது. ஒரே தூசண வார்த்தைகளும் பியர் ஏவறை நாற்றமும் அறைக்குள் பரவியது. அருகில் படுத்திருந்தவனின் போர்வையை உருவினார்கள். நடுவில் தரையில் விரித்தார்கள். அவர்களின் நாட்டாமை தொடங்கியது. கார்ட்ஸ் விளையாடத் தொடங்கினார்கள். உறக்கத்திலிருந்தவர்கள் இப்போ அநேகமாக எல்லோருமே விழித்திருந்தார்கள். அளாப்பல்கள், இழுபறிப்பாடுகள் என்று கார்ட்ஸ் விளையாட்டு குழப்படிப்பட்டது. யாரும் இவர்களை கேள்விகேட்க முடியாது. விபரீதமாகப் போய்விடும். அதனால் எல்லோரும் இழுத்து மூடி போர்வைக்குள் குறுகிப்போயினர். நித்திரைபோல் பாவனை செய்தனர்.

மதனுக்கு ஆத்திரம் மேலிட்டுக்கொண்டிருந்தது. பயம் கட்டிப்போட்டது. “இந்த லும்பனுகளையெல்லாம்; லைற் போஸ்றிலை கட்டவேணும். ஒருநேரம் ஊரிலை இவங்களையெல்லாம் சந்திக்காமலா போவம். போட்டுத் தள்ளோணும், இவங்கள் தரவளியளை.“ என்று தனக்குள் முணுமுணுத்தான்.

மதனும் மாலையில் ஒரு பியர் குடித்திருந்தான். அதை அவன் குடித்துக்கொண்டிருந்தபோது லோகன் “ஏன்ரா இயக்கத்திலை எல்லாம் குடிக்காமல்தானே இருந்தாய். அப்பிடியே விடன். ஏன் குடிக்கப் பழகிறாய்“ என்று சொன்னான்.

“அந்த அறுவாரை நினைச்சுத்தான் குடிக்கிறன். இல்லாட்டி ஏன் இப்பிடி இங்கை வந்து இந்த குளிரிலை சிப்பிலிப்பட வேணும். குடிக்கிறதுதான் அதையெல்லாம் மறக்க ஒரே வழி“ என்றான் மதன்.

“வந்தனாங்கள் ஒரு இரண்டு வருசம் பல்லைக் கடிச்சுக்கொண்டு உழைக்கிறம்.. ஊருக்குப் போறம் எண்டு இருக்கோணும். காசை வீணாக இதுக்கெல்லாம் சிலவழிக்கக்கூடாது.“ என்றான் லோகன்.

பேர்ண் புகையிரத நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடங்களிலெல்லாம் மதனும் குந்தியிருந்தான். லோகன் அப்போதான் மதனுக்கு அறிமுகமாகியிருந்தான். அந்தக் குளிருக்கு அகதிகள் எல்லோரும் குறண்டிப்போய் அங்கு பகல்பொழுதை கழிப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் யக்கற், காலணி எல்லாமே செஞ்சிலுவைச் சங்கத்தில் (றெட் குறொஸ்) இல் கிடைத்தவை. பழையவை அவை. அளவானது, பொருத்தமானது அல்லது பிடித்த நிறம் பிடித்த ஸ்ரைல் என்பதெல்லாம் பொருத்திவைத்து யக்கற்றை கண்டடையவே முடியாது. அதனால் அவை கோமாளித்தோற்றத்தையும் சில சந்தர்ப்பங்களில் கொடுத்துவிட்டிருந்தன. குளிர் மட்டுமல்ல, வருவோர் போவோரெல்லாம் பார்க்கும் வெள்ளைப் பார்வைகளும் அகதிகளை குறுகவைத்துக்கொண்டிருந்தது. வேற்றுக்கிரகவாசிகள் போலவும், வேண்டாத விருந்தாளிகள் போலவும் உணரவைத்தது.

குற்றவாளிபோல் மதன் உணர்ந்தான். ஊரில் பொலிசைக் கண்டால் குற்றம்செய்யாமலே தான் இளவயதில் பயப்பட்டது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

தாய்க்காரி தன்ரை நகைகளையெல்லாம் விற்க, மிச்சத்துக்கு சகோதரி தாலிக்கொடியை அடகுவைச்சுக் கொடுத்த நிகழ்வெல்லாம் எதிர்காலம் பற்றிய சூனியத்தில் நெளிந்தன. இந்த அகதிவாழ்வு இங்கு எப்படி இருக்கப்போகிறது என்ற எந்த படமும்; மதனிடம் கற்பனைக்குள்கூட வர மறுத்தது.

புகையிரத நிலையத்துள் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இருப்பிடங்களிலெல்லாம் பரதேசிகளாய் குந்தியிருந்தார்கள் இந்த வேண்டா விருந்தாளிகள். கூட்டம்கூட்டமாக நின்றார்கள். சுவிஸ்காரர் இதுவரை கேட்காத கணனிமொழியாக வேகமெடுக்கும் மொழியில் கதைத்துக்கொண்டிருந்தார்கள் இந்தத் தமிழர்கள். ஐரோப்பியரின் தோற்றத்தின் முன்னால் கட்டையாகத் தேய்ந்திருந்தார்கள். அவர்களின் நிறத்தின் முன்னால் கறுப்பாக இருந்தார்கள். “வெள்ளைக்காரன் இப்பிடியாம்… வெள்ளைக்காரன் அப்படியாம்…“ என்றெல்லாம் ஊரில் பிளந்த கதையின் மாந்தர்களை மதன் சூழவும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.

நம்மடை ஆட்கள் குழுக் கட்டி நின்று கதைத்துக்கொண்டிருந்ததை மதன் வித்தியாசமாக பார்க்கவில்லை. கொஞ்ச நாளுக்குப் பின்னர்தான் அதன் தார்ப்பரியம் காதோரக் கதைகளாய் மதனிடமும் வந்து சேர்ந்தன. சென்ற மாசம்தான் இந்த புகையிரத நிலையத்தின் அண்டர்கிறவுண்ட் பகுதியில் எங்கடையாட்கள் வாள்வெட்டு நடத்தினவை என்ற விவகாரம்தான் அது. இரண்டு ஊர்க்காரர்களுக்கிடையில் சண்டையாம். ஊரில் இவர்களுக்கிடையில் இப்படி பகை இருந்ததேயில்லை. எப்படித்தான் இங்கை வெட்டுப்படுறாங்கள் என்ற மதனின் சந்தேகத்துக்கு அநேகமாக ஒருவருக்கும் விடை தெரிந்திருக்கவில்லை.

இவர்களில் ஒரு கோஸ்டியினர்தான் இப்போ கார்ட்ஸ் விளையாட்டில் இருந்தனர். அதில் இரண்டு பேரின் முகத்தை மதனுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள்தான் மதன் முதன்முதலில் இந்த புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியபோது, உதவிசெய்ய முன்வந்தனர். “பொன்னம்பலம் (பொலிஸை இப்படி குறியீட்டுமொழியில் அழைப்பது வழக்கம்) கண்டிடுவான். நோர்மலாக எங்களை மாதிரியே நடந்துகொள்ளும்“ என்றவர்கள் கொஞ்சம் ஒதுக்குப் புறத்தில் கூட்டிச் சென்றனர்.

“அண்ணை எப்பிடி அகதியாய்ப் பதியிறது?“ என்று மதன் கேட்டான்.

“கொஞ்சம் பொறும். நீர் ஊரில் எந்த இடம்?“ என்று கேட்டார்கள்.

மதன் தனது ஊரை சொல்லவும், வேறு எந்தப் பேச்சுமின்றி அப்படியே மதனை விட்டு விலகிச் சென்றனர்.

இதை மறுபக்கத்தில் நின்ற கோஸ்டி அவதானித்திருந்தது. இப்போ அவர்கள் மதனிடம் வந்தார்கள்.

“என்ன புதுசா? என்றவர்கள், “எந்த ஊர்?“ என விசாரித்தார்கள்.

“அவங்களிட்டை என்னத்துக்குப் போனனீர். வாரும். எல்லா உதவியும் நாங்கள் செய்யிறம்“ என்றவாறு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

அந்த இருவரும் காட்டுக் கத்தலுடன் விளையாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகத் தெரிந்தது. பியர் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆழ்ந்த உறக்கம் குளிரை தின்றுவிட்டிருந்தது. போர்வையுடன் உடலுறவில் ஈடுபட்டதுபோல கிடந்தான் மதன். போர்வையை அவனது உடல் இறுக அணைத்திருந்தது. அநேகமாக கனவில் அவன் உலவியிருக்கக் கூடும். திடீரென புரியாத மொழியில் அதட்டலான குரல் மதனை தூக்கத்தின் துய்ப்பிலிருந்து விலக்கிற்று. அந்த வெள்ளைக்காரன் ஏதோ உரப்பியபடி போர்வையை இழுத்தெறிந்தான். அவன் எல்லா கட்டில்களையும் உசுப்பி எழுப்பினான்.

வெளியில் விடிந்திருந்தது. எல்லோரும் இடிபாட்டுடன் நாய்நடையுடன் முன்னறைக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறைச்சாலையின் விதிமுறைபோல் எல்லோரையும் வெளியே தள்ளி கேற்றை மூடினான் வெள்ளைக்காரன். வெளியில் பல்துலக்கவும் முகம் கழுவவும் பைப்புகள் இருமருங்கிலும் ஒருவித செற்றப்புடன் வரிசையில் இருந்தன. சுடுதண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரிஜ் க்குள்ளிருந்து ஊற்றெடுக்கும் மெல்லருவியாய் குழாய்களுக்குள்ளிருந்து நீர் வந்தது. இதில் வாயைக் கொப்பளிக்கவும் முகத்தைக் கழுவவுமாய் ஒரு சித்திரவதையை மதனும் தனக்குத் தானே செய்துகொண்டான்.

மரங்கள் பனியறைந்துபோய்க் கிடந்தன. அசையவேயில்லை. பச்சையுமில்லை. பழுப்புமில்லை. பனித்திரள்கள் கிளைகளிலும் பட்டையிடுக்குகளிலும் தவழ்ந்தன. முன்வீதி பனிச்சேறாய்க் கிடந்தது. கார்கள் சேறடிக்கும் சத்தம் புதுசாய் ஒலியெழுப்பின.

மதனின் எல்லா உடுப்புகளையும் களைந்துவிடும் வெறி அந்த காலைக் குளிருக்கு இருந்தது. கைகளை இறுகக் கட்டியபடி நோய்ஞ்சான் உடலை இன்னமும் சுருக்கியபடி மதன் நடந்துபோனான். சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் அவர்கள் எல்லோரும் நடந்துகொண்டிருந்தார்கள். குளிரும் மனச்சோர்வும் அதை பத்து கிலோ மீற்றராக இழுத்து விரித்துப் போட்டிருந்தது.

வீதியை மூடிய பனித்திரளை ஒரேஞ்ச் கலர் வாகனங்கள் உரசி அள்ளி, வீதி மருங்கிலும் குவித்தபடி போய்க் கொண்டிருந்தன. பின்னால் பனியுருகுதலுக்கான உப்பை விசிறியபடி மற்றைய வாகனம் போனது. நடைபாதையில் சிறிய ஒரேஞ்ச் வாகனம் பனித்திரளை ஒதுக்கிக்கொண்டு சென்றது. சிறு சல்லிக்கல்லுகளையும் உப்புகளையும் விசிறினார்கள்.

சறுக்குப்படாமல் நடப்பதில் கவனமாக இருந்தான் மதன்.

குளிக்கும் இடத்தை அவர்கள் வந்தடைந்தனர். கட்டட முகப்பில் “அகதிகள் குளிக்கும் நேரம் – காலை 8 மணியிலிருந்து 10 மணிவரை“ என அறிவித்தல் இருந்தது. டொச் மொழியில் எழுதப்பட்டிருந்தது. காதுவழி மொழிபெயர்ப்பாய் மதனையும் அது தமிழில் வந்தடைந்திருந்தது.

இரு மருங்கிலும் நான்கு நான்கு பெட்டியறைகள் (கபீன்கள்) இருந்தன. லைன் இருபக்கமும் நீண்டது. மதன் குளித்துக்கொண்டிருந்தான். சுடுதண்ணீரை கண்ட உடல் சிலிர்த்தது. இருபது இருபது றாப்பன்களாக (சதங்களாக) உள்ளே காசுப்பெட்டியுள் போட்டான் மதன். காசு முடிய தண்ணி இரக்கம்காட்டாமலே நின்றுவிடும். சவர்க்காரத்தை அவசர அவசரமாக உடலெல்லாம் தேய்த்தான். கையிலிருந்த காசின் இறுதி எச்சரிக்கையோடு போராடியபடி குளித்துக்கொண்டிருந்தான்.

10 மணிக்கு முதல் எல்லோரும் குளித்து முடித்துவிட வேண்டும். அந்த அவசரம் கதவில் ஒரே தட்டலாகவும் தூசண வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது. “தேய்ச்சது போதும். வாடா வெளியிலை. நாங்கள் குளிக்கிறயில்லையா.. வெளியிலை வாடா..“ என்று வசவுகள் வேறு வந்தவண்ணம் இருந்தது. தட்டல்கள் அதட்டல்களாக எல்லா கதவுகளையும் சீண்டிக்கொண்டிருந்தன.

குளிப்புச் சுகம் வீதிக்கு வந்ததும் குளிரோடு கூட்டுச் சேர்ந்தது. முன்னரைவிட இன்னும் குளிர்வதாய் உணர்ந்தான் மதன்.

அடுத்த நடை ஆரம்பமாகிறது. சமையல் செய்யும் இடத்தை நோக்கி அது இருந்தது. நாய் வாழ்க்கை என்பதற்கான வரைவிலக்கணத்தை செழுமைப்படுத்தியபடி அவர்கள் நடந்தார்கள்.

“போகிற வழியில் பால்பெட்டியொண்டு வாங்கவேணும். சமைக்கிறதுக்கு அரிசி பருப்பு எல்லாம் என்னட்டை இருக்கு. இப்போதைக்கு நீ ஒண்டும் வாங்காதை. பிறகு பார்க்கலாம்.“ என்றான் லோகன். மதன் இன்னும் சமையல் செய்யும் இடத்தை பார்த்திருக்கவில்லை.

ஊரில் வெளியில் நின்று சாமானை கேட்டு வாங்கிப் பழகிய மதனுக்கு கடைக்குள்ளேயே போய் தாமாகவே தேடி சாமான்களை எடுப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இத்தனைக்கும் அது பெரிய கடையாக இல்லை. இருவரும் கடைக்குள் போகிறபோது அங்கிருந்த வெள்ளைக்காரர்கள் தம்மை வித்தியாசமாகப் பார்ப்பதாகத் தோன்றியது. மதனுக்கு கூச்சம் ஏற்பட்டது. நேராக கண்களுக்குள் பார்த்து பேசுவது ஊரிலேயே அவனுக்கு இயலாத விடயம். பழக்கமுமில்லை. இப்போ பேசுவது என்று இல்லாவிட்டாலும் பார்வையைத் தன்னும் நேராக வைத்திருக்க அவனால் முடியவில்லை. அது திரும்பவும் திரும்பவும் வளைந்து உள்ளிழுத்துக் கொண்டது. அது ஓயாது ஏதோவொருவகை குற்றவுணர்ச்சியை அல்லது தாழ்வுச்சிக்கலை மதனிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இப்போ நீலநிற கடை யூனிபோர்ம் உடன் அந்த சிறுக்கி கண்ணில் எத்துப்பட்டுக்கொண்டேயிருந்தாள். தோள்வரை பரவியிருந்தது பொன்னிற மயிர். சுருள் வேறு. அவளது விரல்கள் இடையிடையே காதோரமாய் பறப்பெடுக்கும் சல்லிமயிரை பின்னால் வாரிவிட்டுக்கொண்டிருந்தன. கண்மணி ஒரு பூனையினதைப் போல நீலமாய் இருந்தது. மதனின் பார்வை தடவிக்கொண்டு திரிந்த உணவுப் பொருட்களிலிருந்து இடையிடையே அந்தச் சிறுக்கியிடமும் போய்வந்துகொண்டிருந்தது. அவள் முகத்தை கடுப்பாய் வைத்திருந்தாள். வெள்ளைத் தோல் மீது ஊறியிருந்த நாட்டம் அவளை இன்னமும் அழகியாய் காட்டியது.

லோகன் சொன்னான், “அந்த நாயைப் பார்த்தியா. சாமான்களை ஒழுங்குபடுத்துற மாதிரி எங்களை பின்தொடர்ந்து வருகுது. நாங்கள் களவு கிளவு எடுத்துப்போடுவம் எண்ட பயம்.

எங்கடையாக்களும் குறைஞ்ச ஆட்களில்லை. போனகிழமைதான் ஒண்டு கள்ளவேலை செய்தது. பிடிபட்டிருக்கும்… தப்பியிட்டுது. வாழைப்பழச் சீப்பிலை ஒட்டியிருந்த விலை ஸ்ரிக்கரை மெல்லவாய் கிழிச்செடுத்து மாத்தி ஒட்டயிக்கை வேலைசெய்யிறவள் கண்டிட்டாள். பிரச்சினை வந்தது. எங்கடையாள் ஓடியிட்டான். கடையிக்கை நிண்ட எல்லாரும் எங்களை வித்தியாசமாய்ப் பார்த்தாங்கள். ஏதொவெல்லாம் கதைச்சாங்கள். முகம்கொடுக்க முடியாமல் இருந்தது.“ என்று லோகன் சொன்னபோது மதனின் லயிப்பு அறுந்துபோனது.

“பின்னை. இப்பிடி கடையை திறந்துவிட்டிருந்தால் களவெடுக்க கைவராமல் என்ன செய்யும்.“ என்றான் மதன்.

சிறுக்கியின் அழகை கொஞ்சம் கிள்ளிக்கொண்டு வீதிக்கு மீண்டது மதனின் பார்வை.

சமையல் இடம் என்றால் எப்பிடியிருக்கும் என்று மதன் கட்ட முயற்சித்த கற்பனையை இடிபாடுகளோடு அறிமுகப்படுத்தினான் லோகன்.

“நீ நினைக்கிறமாதிரி ஒண்டும் பெரிய குசினியுமில்லை, சாப்பாட்டு அறையளுமில்லை. ஒரு பெரிய கோல். இரண்டு கரைக்கும் சமைக்கிற அடுப்புகள்.. அதான் கொட் பிளேற்றுகள் இருக்கும். இடம் வேறை பிடிக்கோணும். மற்றபடி சில மேசையள். அதிலை இடம் கிடைச்சால் இருந்து சாப்பிடலாம்.“

“நான் வந்த அன்றைக்கு பால்பெட்டியிலை பெயர் எழுதி பிரிஜ் க்கை வைச்சன். அடுத்தநாள் அந்தப் பால்பெட்டியை நாலு பேர் எடுத்துவைச்சு பால் ரீ போட்டு குடிச்சுக்கொண்டிருந்ததையும் பார்த்தன். போய்க் கேக்கேலாது. பிரச்சினைதான் வரும். விட்டிட வேண்டியதுதான்.“

“அந்தக் கோலுக்குப் பக்கத்திலை இருக்கிற பெரிய அறையிலை இரண்டு மூண்டு பெரிய அலுமாரியள் இருக்கு. அதுக்கைதான் எங்கடை றவலிங் பாக், உடமை எல்லாம்.. பூட்டு கீட்டு ஒண்டுமே கிடையாது.“ என்று அடுக்கிக் கொண்டிருந்தான்; லோகன்.

“அங்கை இதுக்கெல்லாம் ஆர் பொறுப்பு?“

“ஒரு சுவிஸ் கிழவன் பொறுப்பாய இருக்கிறான். நாங்கள் சமைக்கிற நேரத்திலை அவனை காண்றதே அரிது. பகலிலை அங்கை தங்கி நிற்கலாம். ஆனால் அநேகமாக எல்லாரும் றெயில்வே ஸ்ரேசனுக்கு போய்விடுவாங்கள்.“

“பராக்குப் பார்க்கிறதுக்கோ?“ என கேட்டான் மதன்.

“இல்லை. இங்கை நிண்டால் ஒரு பிரச்சினை. கொஞ்ச கொசப்புகள் இருக்குதுகள். சரை விக்கிற வேலை செய்யிறதுகள். அதாலை பொன்னம்பலத்தான் எப்பவும் அங்கினையிக்கை யூனிபோர்ம் இல்லாமல் சுத்திக்கொண்டு திரிவான். ஏன் சோலி எண்டு மற்றச் சனம் எல்லாம் போயிடும்.“

“அதென்னண்ணை சரை?“

“போதைப்பொருள். கெரொயின் எண்டு கேள்விப்பட்டிருக்கிறியா?“

மதன் புருவத்தை சுழித்தான்.

“ஒருத்தரும் வேலை செய்ய அனுமதிப்பத்திரம் இல்லை. அதாலை ஊரிலை காணியை கீணியை வித்துப்போட்டு வாக்குறுதியளோடை வந்த சில சனத்தை சரை வியாபாரியள்; பாவிக்கிறாங்கள். அதுகள் இரண்டு மூன்று சரையை வித்திட்டு பொலிசிலை மாட்டுப்படுறதும் நடக்கும். வியாபாரிமார் நேரடியாய் விற்கிறதில்லை. அதாலை அவங்கள் பிடிபடுறதும் குறைவு. இந்தக் கரைச்சலாலை மற்ற சனமெல்லாம் இங்கை நெடுக தங்கி இருக்கிறயில்லை. வெளிக்கிட்டு ஸ்ரேசனுக்குப் போயிடுங்கள்.“ என்றான் லோகன்.

“போதைப்பொருளோ..? சமூகவிரோதியள். உவங்களையெல்லாம் லைற் போஸ்ட் இலைதான் கட்டவேணும்“ என்றான் மதன்.

இந்த நாட்டில் தனது எதிர்காலத்தை ஒரு மாதிரிக்குத்தன்னும் வரைய முடியாது தவித்தான் மதன். “காம்ப் அடிச்சு விடும்வரை இந்த நாய் வாழ்க்கைதான்“ என லோகன் சொன்னபோது, மதனின் குகைக்குள் ஒரு சிறுவெளிச்சம் தெரிந்தது. அது காம்ப் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

முதல்நாள் பொலிசில் அகதியாகப் பதிவுசெய்தபோது அந்தப் பொலிஸ்காரன், அந்த மலேசிய பெண் மொழிபெயர்ப்பாளர், ரைப் பண்ணினவன்; என மூவரும் மதனை கேள்விகேட்டு மட்டும் கொல்லவில்லை, பார்வையாலும் கொன்றார்கள். பொலிஸ்காரன் மதனின் பொக்கற் இரண்டினுள்ளும் கையைவிட்டு வெளியே இழுத்து செக் பண்ணிப் பார்த்த வேகம் எதிர்பாராத ஒன்று. அவன்மீதான பயத்தை ஊர்ப்பொலிஸ்காரனின் அடிஉதையும் அதட்டல்களும்; வரவிடாமல் தடுத்தது. இவங்கள் எவ்வளவோ மேல் என்று பட்டது. மற்றது, நாலு சுவருக்குள்ளை நடந்ததால் தனக்குள்ளேயே போட்டு பூட்டிவிடலாம் என்ற துணிவும் இருந்தது.

இந்தக் கதையின் மாந்தன் தான் மட்டுமில்லை என மதனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. “பொலிஸ்காரனை விடு. அவன் சுவிஸ்காரன். அவன்ரை நாடு.  இவள் மலேசியாக்காரிக்கு என்ன கொழுப்பு.“

மலேசிய பெண் மொழிபெயர்ப்பாளரை தூசணத்தால் பேசுவது அகதிகளிடம்  வழமையாக இருந்தது. அவள் பெண்ணாக இருந்தாள். தமிழ் பேசுபவளாக இருந்தாள்.

“அவள்தான் தன்னிச்சையாகவும் சில கேள்விகேட்டு துளைச்செடுக்கிறாள்“ என லோகனும் சொன்னான். மதனுக்கு சொல்லத் தெரியவில்லை.

அவர்கள் பேசியபடியே சமையல் இடத்தை வந்தடைந்தார்கள். அந்நியப்பட்ட உலகில் விடப்பட்டதாக உணர்ந்தான் மதன். உடல், உள சோர்வு அவனது இளமையை கேலிசெய்தது.

முன்சந்தியில் வாகனங்களை வீதிகள் பிரித்தெடுத்து ஓடவிட்டிருந்தன. தண்டவாளம் போன்று வீதியில் ஒட்டிக்கொண்டிருந்த இரும்புக்கோடுகளில் ட்ராம் வண்டிகளைக் கண்டான் மதன். அவை றெயின் குட்டிகளாய் அவனது பார்வைக்குள் புகுந்துகொண்டன. சனசந்தடியை குவித்தும் உதிர்த்தியும் விட்டிருந்தது அந்தச் சந்திவெளி. “பெத்லகேம்“ என்று இருந்தது அந்த இடத்தின் பெயர். ஒரு நீலநிற போர்ட் இல் அது வெள்ளை நிறத்தில் ஆழப் பதிந்திருந்தது.

பெத்லகேம் என்றதும் இயேசுநாதர் சிலுவையை சுமந்துசென்றுகொண்டிருந்ததை மதன் கண்டான். இரத்தம் சிலுவையில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. மதனின் தோள்கள் வலியெடுத்தபடியே இருந்தன.

–    ரவி (சுவிஸ்,26102014)

—————————————-

நன்றி: ஜீவநதி (ஜனவரி-2015)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 27,578 hits
%d bloggers like this: