ஒரு பெண் துணிச்சலாக தனது கருத்தைச் சொல்லும் உரிமை ஆணதிகாரத்தில் எரிச்சலை வரவழைக்கிறது. பெண்கள் எப்போதுமே கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு இவை சாட்சிகள்.
அரசியல் தளத்தில் கருத்தை சொல்வதிலிருந்து, இணையத்தளம் ஊடாக, முகநூலில் புகைப்படம் போடுவதுவரையான அவர்களின் சுதந்திரத்தை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது ஆணதிகார மனநிலை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போதெல்லாம் “பெண்ணியவாதிகள்“ என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என கேட்பதையும் நாம் பார்த்திருக்;கிறோம். சுவாரசியம் என்னவெனில் பெண்ணியம் பேசும் ஆண்களிடமிருந்துகூட சில சந்தர்ப்பங்களில் இந்தக் கேள்வி எழுந்துவிடுவதுதான். குடும்ப அமைப்புமுறைக்குள் இயங்கும் ஆண்களுக்கு இதிலெல்லாம் எந்தப் பாத்திரமும் இல்லையா?
தமிழ்த்தேசிய வெறியர்கள் மட்டும் இதை செய்வதாக எடுத்துவிட முடியாது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா மேடையில் தன்னியல்பான நடனம் ஆடியதுக்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள் நாம் கண்டவை. தமிழ்த் தேசிய வெறியர்கள் ஒரு கரையில் அடக்கிவாசிக்க, மறு கரையில் கலாச்சார காவலர்கள் சத்தமாக இதை வாசித்தனர்.
குஸ்புவின் விடயத்திலும் தமிழ்த்தேசிய வெறியர்கள் சத்தமாகவே வாசித்துக் காட்டினர். அந்த விவகாரத்தில் “முறைப்பாடு“ அவரது கணவருக்கு கடிதம் எழுதுவதுவரை போயிருந்தது.
அரசியல் ரீதியிலான கருத்துகளை (தரவேற்றப்பட்டிருக்கும்) பெண்ணுடலின் அரசியலுக்கூடாக வடித்தெடுப்பது நடந்துகொண்டேயிருக்கிறது. சிவகாமி விடயத்திலும் இது நடந்தது. மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் எதிர்கொள்ளும் தமிழ் உணர்ச்சியாளர்களை கலாச்சார காவலர்களை நாம் கண்டுகொண்டேயிருக்கிறோம். இதை கண்டுகொள்வது சுலபம்.
பெண்ணியவாதத்தைப் பேசும் சில ஆண்களிடமும் எப்போதுமே “பெண்ணியவாதிகள்“ என்ற சுட்டல் பெண்களை மட்டும் நோக்கியதாகத்தான் வருகின்றது. மூலைக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் ஆண்வயப்பட்ட இந்த மனநிலையை கண்டுகொள்வது கடினமாகவே இருந்துவிடுகிறது.
இந்த மனநிலைக்குள்ளும் புதைந்திருப்பது “கண்காணிப்புத்தான்“ எனச் சொல்வது பிழையாகுமா?
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/819789898092106?pnref=story