சீலனின் “வெல்வோம், அதற்காக..“ என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். தமிழீழ விடுதலைக்கு என புறப்பட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) தனது தோழர்களை உட்படுகொலைசெய்வதிலும் சித்திரவதை செய்வதிலும் சக்தியை விரயமாக்கி அழிந்துபோன இயக்கம். அது தளத்தில் (இலங்கையில்) இயங்கியதைப் போலன்றி, பின்தளத்தில் (இந்தியாவில்) மூடுண்ட இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம் என்ற குகைக்குள் சிக்கிச் சுழன்ற அனுபவங்களை, துயரங்களை, அனுபவித்த கொடுமையான சித்திரவதைகளை… என சீலனின் “வெல்வோம், அதற்காக..“ பேசுகிறது. 112 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கற்பனையல்ல, இலக்கிய நயம் இழையோடும் கதையுமல்ல. சொந்த அனுபவங்களின் தொகுப்பு.
நான் உழன்றுதிரிந்த இந்தக் குகைக்குள் கிட்டத்தட்ட அதே காலப் பகுதிக்குள் சீலனும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். என்னைவிடவும் பல மடங்கு பயங்கரத்துள் உழன்றிருக்கிறார். அதனால் நான் வாசக நிலையிலிருந்து எனது அனுபவங்களால் கடத்தப்பட்டிருந்தேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, முழுதாக மீண்டு நான் வரவில்லை.
சுமார் 30 வருடங்களை அந்த அனுபவங்கள் ஒருநொடிப் பொழுதிலேயே கொறித்துத் துப்பிவிடுகிறது. மறக்க முடியாமல் மனசின் எங்கோவோர் மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த விலங்கு ஒருபோதுமே இறந்துபோய்விடப்போவதில்லை என்பது நிச்சயமானது என்பதை இந் நூலை வாசித்தபோதும் உணர்ந்தேன்.
சீலன் ஒரு போராளியாய் பிளாஸ்ரிக் சொப்பிங் பாக் உடன் என் போன்றே வீட்டைவிட்டு இறுதியாகப் பயணித்திருக்கக்கூடும். எமது எல்லாக் கனவுகளும் சிதைக்கப்பட்ட அவலங்களை சீலனின் இந்த நூலும் தன்னளவில் வரைந்து செல்கிறது. வலி தருகிறது.
இரத்தம் காயாத நினைவுகள் தனது வலிகளை 1985 இல் பதிந்ததுபோன்ற உணர்வுநிலை கனமானதுதான்.ஆனால் அந்த காலப் பகுதியில் துலங்க மறுத்த இயக்க உள்ளகப் போக்குகள் 30 வருடங்களுக்குப் பின்னரான எழுத்துகளிலும் தொடர்வது இந்த நூலின் பலவீனமாகப் படுகிறது.
தங்கராசா, சந்ததியார் போன்றோரின் அரசியல் போக்குகள் அதை அவர்கள் கையாண்ட விதங்கள், உளவுப் படையின் வளர்ச்சி, முக்கியமாக பிஎல்ஓ பயிற்சி எடுத்தவர்களின் வரவுடன் சங்கிலியின் உளவுப்படையின் பரிமாணம், மத்தியகுழுவுக்கான நியமனமுறை, அதன்மூலம் உமாமகேஸ்வரன் தனது தலைமையை அரசியல் களத்தில் உறுதிப்படுத்த முடிந்தமை, உளவுப்படையை பாவித்தமை, ஒரு உட்கட்சிப்போராட்டத்தை எடுப்பதில் சந்ததியார் தவறவிட்ட அல்லது தவறிழைத்த இடங்கள், அல்லது அதன் சாத்தியத்துக்கு குறுக்கேநின்ற இயக்க அராஜக சூழல், ஒரத்தநாட்டு மத்தியகுழுக்கூட்டத்தின் பின்னான திருப்புமுனை, அதன்காரணமான (காந்தன் உட்பட) மத்தியகுழு உறுப்பினர்கள் தப்பியோடவேண்டியளவுக்கு இருந்த உள்ளக அராஜக நிலைமைகள் என்பன பற்றிய பார்வைகள் போதாமையாக இருக்கிறது.
தளத்துடனான பின்தளத்தின் தகவல் பரிமாற்றம் பொய்களால் கட்டப்பட்டவை. இலங்கையிலிருந்து வரும் மத்தியகுழு உறுப்பினர்கள்கூட முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. முகாம் தோழர்களின் கடிதங்கள் பிரித்து வாசிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டே தளத்தில் குடும்பத்தாருக்கு சேர்க்கப்படுகிறது, அதுவும் அவ்வப்போது.
இராணுவ இரகசியம் என்ற போர்வையால் இந்த அராஜக சூழலை போர்த்தி வைத்திருந்தனர். அதனால் முகாம்களில் நடப்பவை எதையும் தளத்தில் அரசியல்வேலை செய்தவர்கள் அறியாதிருந்தனர். இதையும் சீலன் வேறுபடுத்திக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
1984 ஓகஸ்ட் இல் பிஎல்ஓ பயிற்சி முடித்து காந்தன் வந்திருந்தார். இயக்கத்தின் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருந்த சந்ததியார் உட்பட, காந்தன் (ஜான் மாஸ்ரர்), கேசவன் (கோவிந்தன்) போன்றோர் இவ் அரசியல் சூழலை எதிர்கொள்வதில் கையாளப்பட்ட முறைகளில் ஒன்றாக 1985 பெப்ரவரியில் ஒரத்தநாட்டில் நடத்தப்பட்ட மத்தியகுழுக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தலைமையை கூட்டுத் தலைமையாகக் கொண்டுவருவதற்கான முயற்சியில் அந்த வாக்கெடுப்பில் தமது பெரும்பான்மையை நிலைநாட்டுவதை ஒரு கத்திவிளிம்பில் நடப்பதுபோன்ற செயலாகவே (சந்ததியார் சார்பு என சொல்லப்பட்ட) ஜனநாயக சக்திகள் மேற்கொண்டனர்.
கூட்டத்துக்கு முதல்நாள் தொலைத்தொடர்பு முகாமில் இருந்த எனக்கும் இன்னும் ஓரிரு தோழர்களுக்கும் காந்தன் இந்த நிலையை இரகசியமாகச் சொல்லி, தாம் இந்த வாக்கெடுப்பில் தோல்வியுற்றால் மரணம்தான். எனவே சிலவேளை தாம் தலைமறைவாக நேரிடும்.. கவனமாக இருங்கள் என சொல்லிவிட்டுப் போனார்.
இப்படியெல்லாம் நிலைமைகள் இருக்க எல்லோரையும் ஒரே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது சிக்கலுக்குரியது. இயங்கியல் போக்கிலான அரசியல் விமர்சனங்கள் அதன் இடத்தை எடுத்திருக்க வேண்டும்.
சீலன் இருந்த இந்த “எச் (H)” முகாமில் நடந்த போராட்டகாலப் பகுதியும் (காந்தன், கண்ணன், சங்கிலி உட்பட) பிஎல்ஓ பயிற்சி முடித்து வந்த காலப் பகுதியும் சமாந்தரமானவை. எனவே இப் பிரச்சினைகளில் காந்தனை உட்படுத்திய சீலனின் பார்வைகள் தெளிவற்றவை. படைத்துறை செயலர் கண்ணன் மனிதநேயம் மிக்கவராக இருந்த அதேவேளை உமாவின் விசுவாசியாகவும் இருந்தவர். காந்தன் கண்ணனுடன் ஒரு உறவுநிலையை பேணிவைத்திருந்தபடியே சந்தியாருடன் மானசீக உறவில் இருந்தார். சீலன் கழுத்தில் உமாவின் படத்தை கொழுவி நடிக்கவேண்டி ஏற்பட்ட நிர்ப்பந்தம் போன்றே காந்தன் கண்ணன் இடையிலான உறவு இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
நாம் இருந்த முகாமிலும் சந்ததியாரின் ஆட்கள் என முத்திரை வந்துவிடக்கூடாது, கொலைக்களத்துள் வீசப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தாடியை எடுத்தோம்.. சரம் (லுங்கி) அணிவதை நிறுத்தி ஜீன்ஸ் போட்டோம். அரசியல் பேசுவதை நிறுத்தினோம். புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தினோம்.
புளொட் இன் வீங்கிப்போன வளர்ச்சி போலவே உளவுப்படையும் வீங்கிப் போயிருந்தது. இதன்வழியான பாசிசத்தன்மை கீழணியிருந்து மத்தியகுழுவரை பரவியிருந்தது. (மத்தியகுழு உறுப்பினராக இருந்த கண்ணாடி சந்திரனே நாலாம் மாடிக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இரகசியமாக கைதியாக வைக்கப்படுமளவுக்கு நிலைமை இருந்தது.)
மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டாலே சிறுநீர் கழிவதும் மலம் கழிவதுமாக உடல் கட்டுப்பாட்டை இழந்துபோய் சீலன் அவதிப்பட்ட சம்பவங்கள் உளவுப்படையின் கொடுமையை புரிந்துகொள்ளப் போதுமானது. சிலர் அந்தச் சத்தத்துக்கு நித்திரை குழம்பி அப்படியே இருந்த இடத்தில் நெஞ்சாங்கட்டை நிமிர்த்திய பிணம்போல பேயறைந்து இருப்பதை நான் இருந்த முகாமிலும் பார்த்திருக்கிறேன். இரவுகள் கொடுமையானதாக தெரிந்த நாட்கள் அவை. அதை தன்னுடலில் அனுபவித்த சீலனின் இரவுகள் எப்படியிருந்திருக்கும்.
அது விதைத்த பயங்கரம் எமது மனங்களின் மூலையில் உறங்கிப்போயிருக்கிறது. சீலனின் “வெல்வோம், அதற்காக..“ என்ற இந் நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது அது வந்துவந்து உரசியபடியே இருந்தது. இன்று ஆழ்ந்து உறங்குதல் சாத்தியப்படுமா?
– ரவி, 13112014
Fb link : ravindran pa
வெல்வோம் அதற்காக
இந்த புத்தகத்தை பற்றிய உங்கள் அறிமுக உரையை வாசித்ததன் பின்னர் எண்ண ஓட்டங்கள் பின்னோக்கி சுழல்வதை தவிர்க்க முடியவில்லை.அப்பிடியான ஒரு காலகட்ட நான் பிறந்திருக்காவிட்டாலும் ஏனோ அந்த அனுபவத்தை பெற மனம் துடிக்கிறது.இந்த புத்தகத்தை எப்படி வாங்குவது…