ஆயுதங்கள் மனிதர்கள் மீது மட்டுமன்றி இயற்கை மீதும் பண்பாடுகள் மீதும் மனவளங்கள் மீதும் பெரும் அழிவுகளையும் பாதிப்பையும் செலுத்துகிறது. இது பெரும் துயரம். அதிகார அலகுகொண்ட ஆட்சிமுறைகள் இதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. போர்கள், ஆக்கிரமிப்புகள், இயற்கை சூறையாடல், வளங்களின்மீதான மேலாதிக்கம் தன்னலன்கள் என இன்னபிற வடிவங்களில் அது குரூரிக்கிறது. அதனால் ஆயுதங்களின் மீது நாம் காதல்கொள்ள முடியாது.
ஆயுதங்களின் துணைகொண்டு நிகழ்த்தப்படும் இந்த ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் பிரச்சினை எழுகிறது. அதுவும் உலக மேலாதிக்க ஒழுங்குகள், அதனடிப்படையிலான நாடுகளுக்கு இடையிலான ஊடாட்டங்கள் என்பது இடதுசாரியம் அறிவித்த ஆயுதப் போராட்ட வழிமுறைகளுக்கு இன்று சவாலாகியிருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது சர்வதேச ரீதியில் ஒடுக்கப்படும் சக்திகளுக்கு முன்னால எழுந்திருக்கும் சவால்.
புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு உலகமேலாதிக்கத்தின் சதிகளுக்கு வெளியே, எமக்குள் நாம் இழைத்த தவறுகள் மீதான விமர்சனங்கள் ஆரம்பகாலம் தொட்டே இன்றுவரை முன்வைக்கப்பட்டும் கண்டறியப்பட்டும் வருகிறது. அதனால் புலிகளின் மீதான விமர்சனம் என்பது இப்போதும் உயிர்ப்புடன்தான் இருக்கும். போராட்ட வழிமுறைகளில் நிகழும் நிகழ்த்தப்படும் தவறுகளை அலசி ஆராய்வது பல பரிமாணங்களில் நிகழ்ந்துகோண்டே இருக்கும். ஒடுக்கப்படும் சக்திகளின் போராட்ட வழிமுறைக்கு அது பெரும் பங்களிப்பாகும். ஒடுக்கப்படும் சக்திகளின்மீது (அரச பயங்கரவாதத்தால்) நிர்ப்பந்திக்கப்படும் போராட்டம் நிலவும்வரை, இது நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
புலிகளின் அழிவை மட்டும் வைத்துக்கொண்டு ஆயுதப் போராட்டம் தவறு என்பவர்கள் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நிகழ்ந்த தவறுகளை முன்னர் தாம் விமர்சித்ததிற்கு (அல்லது இப்போதும் விமர்சிப்பதற்கு) முரணான நிலைக்கு அவர்களை அறியாமலே நகர்ந்துவிடுகின்றனர். அதாவது புலிகளின் ஆயுதப் போராட்டம் பிழையான போக்கிலுள்ளதாக முன்னர் சுட்டிக்காட்டிவிட்டு, இப்போ ஆயுதப் போராட்டமே பிழை எனும்போது புலிகள் ஆயுதப் போராட்டத்தை சரியான போக்கில் முன்னெடுத்தார்கள், அது தோல்வியுற்றுவிட்டது என்ற செய்தியே வரிகளுக்கிடையில் கிடைக்கிறது.
சமூகத்தில் வன்முறை மனோபாவம் எங்கிருந்து தொடக்கிவைக்கப்படுகிறது என்பதை சமூகவியலாளர்கள் முன்வைக்கின்றனர். குழந்தை வளர்ப்பிலிருந்தே தொடங்கிவிடும் இந்த நோய் பாடசாலையினூடு பயணித்து சமூக வாழ்முறைவரை வந்து நிற்கிறது. தவறிழைத்தால் தண்டிப்பதற்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், தண்டிக்கப்படுவதை ஒழுக்கமாக அல்லது இயல்பானதாக ஏற்றுக்கொள்வதற்குமான மனவளம் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகள் மாணவர்கள் மீது கட்டமைக்கப்படும் இந்த மனவளம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது வளர்ச்சி காணுகிறது. சாதியம் , ஆண்மேலாதிக்கம், அறிவதிகாரம் போன்ற சமூக அதிகாரங்களை இல்லாமலாக்க மேற்கூறிய மனவளம் தடையாகவே இருக்கிறது.
ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம் என உச்சரிப்பவர்கள் ஒடுக்குமுறையாளர்கள் வன்முறையை ஆட்கொல்லி ஆயுதங்களின் துணைகொண்டு நடத்துவதற்கு எதிராக போராடக்கூடிய வழிமுறைகள் பற்றிய விரிவான விளக்கங்களை தர முயலவேண்டும். ஆயுதங்களை முதன்மையில் வைப்பதா அரசியலை முதன்மையில் வைப்பதா என்பதில் நிகழ்ந்துவிடும் தவறுகளை வைத்துக்கொண்டு ஆயுதப் போராட்ட முறையை எதிர்ப்பது கோட்பாட்டு ரீதியிலானதல்ல.
தம்மை மார்க்சியர் என்று சுட்டும் நண்பர் நண்பிகள் மார்க்சியம் ஆயுதப் போராட்ட வழிமுறையை முன்மொழிவதை கோட்பாட்டு ரீதியில் எதிர்கொள்ள முன்வருதல் வேண்டும். வரலாறு முழுவதுமே போர்களால் எழுதப்பட்டிருக்கிறது என்பது ஒரு மாபெரும் அவலம். இதற்கு எதிர்நிலையில் வைக்கப்படும் மதக் கோட்பாடுகளால் நடைமுறையில் விளைந்ததும் ஒன்றுமில்லை. மாறாக மதஅடிப்படைவாதம் தலைதூக்கி நிலைமையை இன்னும் சீரழிக்கிறது. ஆயுதப் போராட்ட வழிமுறையை அது இன்னும் சிக்கலாக்கியிருக்கிறது. எனவே முடிந்தால் வேறு பாதைகள் கண்டறியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உரையாடல்களை நிகழ்த்துவது பிரயோசனமாக இருக்கலாம்.
இன்று இஸ்ரேலின் சியோனிச வெறியிலிருந்து மக்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக பாலஸ்தீன போராளிகள் ஆயுதத்துடன் நிற்கவேண்டியுள்ள நிர்ப்பந்தத்தை எப்படி ஆயுதநீக்கம் செய்து புரிந்துகொள்வது?. வெறும் மதக்கோட்பாடுகள் போல நாமும் ஆயுதப் போராட்டம் சேய்யாதீர் என உச்சரிததுக்கொண்டிருந்தால் சரியாகிவிடுமா?.
தர்க்கவியலாகப் பார்த்தால் ஆயுதப் போராட்ட எதிர்ப்பை முன்வைக்கும் எவரும் ஒடுக்குமுறையாளர்களையும், ஒடுக்கப்படுபவர்களையும் (ஆயுதம் தூக்கும் நிலைமைகளில்) சர்வதேச ரீதியில் எதிர்க்க வேண்டும். அதுதான் அவர்களது நேர்மை. அதை அவர்கள் செய்வதில்லை. செய்யவும் முடியாது அவர்களால். ஒடுக்கப்படுபவர்களுக்காக குரல்கொடுப்பதில் அவர்கள் அர்த்தமிழந்துவிடுவர்.
28072014
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/737985452939218