அரசியல் மயப்படுத்தப்படுவதைப் பற்றி பேசும்போது அரசியல்மயப்படல் என்பதை ஓரங்கட்டாமல் இருப்பது முக்கியமானது. வாழ்நிலை உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பதை அரசியல்வெளிக்கு அப்பால் வைத்து வரைவுசெய்ய முடியாது. இந்த 30 வருட யுத்தம் உருவாக்கிய புறச்சூழல் மக்களிடம் உண்டாக்கிய உணர்வலைகள் என்ன? தமது இருத்தலை பாதிக்கும் விசயங்களில் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் இயன்றளவு காட்டிவரும் எதிர்ப்பு அரசியல்மயப்படலன்றி வேறென்ன?
உதாரணத்துக்கு இன்றைய அரசின் காணிக்கொள்ளை செயன்முறையின்போது மக்கள் காட்டிவரும் எதிர்ப்புணர்வை அரசியல்மயப்படலுக்கு வெளியே வைத்து எப்படி வரையறுப்பது. அவர்களின் உணர்ச்சி கலந்த பேச்சில் வெளிப்படுவது அரசியல்மயப்படலன்றி வேறு என்ன? அவர்களின் சொல்லாடல்களில்கூட அரசியல் வார்த்தைகள் வந்து விழுவது ஒன்றும் தற்செயலானதுமல்ல.
நடைமுறையற்று தத்துவார்த்த ரீதியிலும் கோட்பாட்டு ரீதியிலும் பேசும் அரசியலும் உரையாடல்களும் பாசறைகளும் இன்ன பிறவும் மட்டும் அரசியல்மயப்படுத்தலாக வரைவுபெறுகிறதா என மயக்கமுறவேண்டியிருக்கிறது. அதற்காக அதை நிராகரிப்பதாக மொழிபெயர்க்கத் தேவையில்லை. அது மிக அவசியமாதும்கூட.
மக்களிடமிருந்து வெளிப்படும் அரசியலுணர்வைப் பறக்கணித்து தம்மை முன்னேறிய பிரிவினராய் வரையறுக்கும் தவறை இயக்கங்களில் உழன்றுதிரிந்த எம்போன்றோர் செய்ததற்கு இப்போது வெட்கப்பட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு குறிப்பாக இந்த இடத்தில் பதிவுசெய்கிறேன்.
புகலிடத்தில் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு ரீதியிலும் கருத்துக்களை முன்வைப்போரின் பிள்ளைகளில் (அதாவது அடுத்த சந்ததியில்) எத்தனை வீதமானோர் அரசியல் விழிப்புணர்வு கொண்டோராக இருக்கிறார்கள்?. (இந்த முதல் சந்ததியில் இன்று அரசியல் நடைமுறைகளில் ஈடுபடுவோர் கணிசமானளவு இல்லை.)
புலிகளின் அரசியலுடன் உடன்படுவதில் எமக்கு இருக்கும் மறுப்பு என்பது ஓர் உண்மையை மறைத்துவிட முடியாது. அடுத்த சந்ததியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விழிப்புணர்வு என்பது அவர்கள் ஐரோப்பிய வீதியில் இறங்கிப் போராடியதினூடாக வளர்ந்தே இருக்கிறது. எதிர்காலத்தில் சரியான அரசியல் போக்குகளை அவர்கள் அடையாளம் காணுவது என்பதும் ஈடுபடுவது என்பதும் சிந்தனாவாதிகளாக உருவாகுவதும் அவர்களின் இன்றைய போராட்டத் தொடர்ச்சியினூடு அடுத்தடுத்த கட்டமாக சாத்தியப்படவே செய்யும்.
அண்மையில் சூரிச் இல் (சுவிஸ் தேர்தல்களில்) வாக்களித்தல் சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. அந்த யுவதியும் வீதியில் இறங்கிப் போராடியவள். இப்போ பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை தொடர்கிறாள். அவளது அரசியல் பார்வைகளும் முரண்பாடுகளை அவள் எதிர்கொண்ட விதமும் பிசகற்ற அரசியல் (தமிழ்ச்) சொல்லாடல்களும் என்போன்றே பலரையும் வியக்கவைத்தது. இதை ஓர் உதாரணமாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
மீண்டும் சொல்வதாயின் இவற்றையெல்லாம் புறக்கணித்து முன்னேறிய பிரிவினராக உழலும் சிந்தனைப் போக்கு எமக்கு எங்கோவோர் மூலையில் நின்று உழலுகிறதா என எண்ணத் தோன்றுகிறது. முகநூல் உட்பட பொதுவெளிகளில் அரங்கேறும் கொடுக்குக் கட்டல்களும் புடுங்குப்பாடுகளும் தரும் அயர்ச்சிக்கு இந்த இடங்களில் விடையிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
22072014