1984 கடைசிப் பகுதி.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரந்தராயன்குடிக்காடு கிராமம்.
கழக கமாண்டோப் பிரிவினருக்கான தொலைத்தொடர்பு முகாம்.
“பெரிய ஐயா” வருகிறார், உளவுப்படை தளபதி சங்கிலியின் பாதுகாப்புடன்.
பெரிய ஐயா வெள்ளை வேட்டியுடன் சிவப்புநிற ரீசேர்ட் உடன் இப்போதெல்லாம் பஸ்ஸில் வந்து இறங்குவதில்லை. அவருடன் சந்ததியாரையும் காண்பதில்லை.
மோட்டார் சைக்கிள் சவாரி. கமாண்டோ யூனிபோர்ம். முன்னுக்கும் பின்னுக்கும் இன்னும் ஒருசில மோட்டார் சைக்கிள் உறுமல். ஜீப் வேறை.
“தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரினை யார் அறிவார்”
கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது இந்தப் பாடல் வரி. அநாமதேய குரல் அது. அது எல்லா முகாம் தோழர்களினதும் பொது உளவியல் காயம்.
பெரியவர் வாசிக்கிறார். புன்னகைக்கிறார். யார் எழுதினது என அவர் கேட்கவில்லை. என்ன பிரச்சினை என அவர் விசாரிக்கவில்லை.
எல்லாம் முடிந்து திரும்புகின்றனர்.சுமார் ஒரு மணி நேரம் போனது. சங்கிலி தனியாக மோட்டார் சைக்கிளில் வருகிறார். நேரடியாகவே ஒரு முகாம் தோழரை கையில் பிடிக்கிறார். அழைத்துச் செல்கிறார்.
எழுதினது அந்தத் தோழன்தான் என்பது எமக்கு பிறகு தெரியவருகிறது.மாலையில் அந்தத் தோழன் திரும்பி கொணர்ந்து விடப்படுகிறான். கையில் கட்டுப் போடப்பட்டு துணியால் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. முகம் பேயறைந்துபோய்க் கிடந்தது.
மோட்டார் சைக்கிள் விபத்து, கை முறிந்துவிட்டது என்கிறான்.அவன் உயிரோடு திரும்பி வந்தது ஒரு அதிசயம் போல இருந்தது எமக்கு.அந்தத் தோழனின் அண்ணா சங்கிலிக்கு நன்கு தெரிந்தவன். அதனால் முறிவோடு மட்டும் திரும்பக் கிடைத்தான்.
இப்படியொரு சூழல் இயக்கத்துக்குள்.
உலக உருண்டையை சங்கிலியால் கட்டி ஓரிடத்தில் சுத்தியலால் அடித்து நொருக்குவதுபோல் கழக லோகோ கொடியில் பறந்துகொண்டிருந்தது. உலகப் புரட்சியின் ஒரு முக்கியமான கண்ணியாம் இலங்கை. அந்தக் கண்ணியில் தாக்குதல் தொடுப்பதன்மூலம் உலகப் புரட்சிக்கு வித்திடுவார்களாம். சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். காற்று கொடியை அசைத்து நெளித்தது.
பாப்பாநாட்டில் B முகாம் இருந்தது. சவுக்கம் தோப்பு சுற்றிவளைத்திருந்தது.
கழகம் பேய்த்தோப்பாக ஆகிக்கொண்டிருந்தது.
எத்தனையாயிரம் இளைஞர்களின் யுவதிகளின் கனவுகளை அழித்து நாசமாக்கியது இந்தத் தோப்பு.
ஆண்டுக்கொருமுறை இதற்குள் விளக்கேற்றி புனிதப்படுத்த இப்போதும் நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அவலம் !
Fb link: