சுடுமணல்

தந்தையர் தின நினைவு.

Posted on: June 15, 2014

எனது அப்பா 1970 டிசம்பரில் மரணமடைந்திருந்தார். அப்போது எனக்கு பதினொரு வயது. தேசியப் பொருளாதாரத்தை முன்னிலைக்குக் கொண்டுவரும் மாற்று முயற்சியொன்றில் இலங்கை இடதுசாரியச் செல்வாக்கின்வழி செயற்பட முயற்சித்த சிறிமாவின் ஆட்சிக் காலமது. அது “சிறீமாவின்ரை பஞ்சநேரம்” என வர்ணிக்கப்பட்டிருந்தது.

நாற்பது வருடங்கள் எனது அப்பாவின் துணையின்றிய வாழ்காலம் அதேகாலப்பகுதியில் தொடங்கியது அம்மாவுக்கு. அப்பா இருக்கும்போது அம்மாவை வீடுவிட்டு வெளியே போகாதபடி வைத்திருப்பதை பெருமையாய் கொண்டாடினார்.பெண்களின் ஆளுமைகளை வளரவிடாமல் தனக்குக் கீழ் வைத்திருப்பதே சமூக அந்தஸ்தாய் கொண்ட ஆண்நோக்குச் சமூகத்தின் ஒரு வகைமாதிரியாய் எனது அப்பாவும் இருந்தார்தான். அதேநேரம் அவரிடம் இன்னொரு அழுத்தமான ஆளுமையான பக்கமும் இருந்தது.

சுவிசில் எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் காலங்களின்போது ஆரம்பப் பாடசாலைக் கல்வியூட்டலின் முறைகளைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த முறைமைகளுடன்  எனது அப்பா 1960 களிலேயே பயன்படுத்திய முறைமை அதிகம் பொருந்திப் போயிருந்ததே அதற்குக் காரணம். இது எனது அப்பா பற்றிய மதிப்பீட்டை உயர்த்தியிருந்தது.

“அ,ஆ” என்ற எழுத்தை முதன்முதல் எழுதப் பழக்குவது சம்பந்தமான வழிமுறை இப்போதும்கூட அதுவும் புகலிடத்திலும்கூட நிலவுகிறது. ஆனால் “அ” என்பதை ஏடுதுவக்குதல் என்பதற்கு பாவிப்பதோடு நிறுத்திவிட்டு முதன்முதலில் “ட” என்ற எழுத்தையும் பின் “ப” வினையும் அதன்பின் “ம” வினையும் என தனக்கென ஒரு எழுதக் கற்பிக்கும் முறையை உருவாக்கினார். (இதுபற்றி அவர் தன் கைப்பட எழுதிய குறிப்பை அண்மையில் நான் இலங்கையிலிருந்து என்னுடன் எடுத்துவந்தேன்.)

நிலவிய கல்வியூட்டல் முறைகளுக்கு வெளியே எமது அப்பா ஒரு ஆரம்ப வகுப்பு ஆசிரியனாக (முதலாம் இரண்டாம் மூன்றாம் வகுப்பு) உலவியதை இப்போதும் அவரிடம் படித்த பலர் நினைவு கூர்வர். அவர் பிள்ளைகளுக்கு அடிப்பதில்லை. அதாவது தண்டனை வழங்குவதில்லை.. வகுப்பறையின் எல்லைகளை அவர் குறுகலாக உணர்ந்தார். எப்போதும் மரத்தின் கீழ் அவரது வகுப்புகள் நடக்கும். வாய்ப்பாடுகூட ஆடிப்பாடலுடன்தான் எமக்கெல்லாம் மனனமாகியது.

அவரிடம் ஓவியம் வரையும் திறமையும் இருந்தது. (ஆனால் ஓவியரல்ல.) நல்ல புள்ளிகள் வாங்கிவிட்டால் பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதற்காக நாம் விரும்பும் உருவத்தை ஓவியமாக அவர் சிலேற்றில் சோக்கட்டியினால் வரைந்துவிடுவார். அது அழிபடாமல் சிலேற்றின் பின்புறமாக வைத்துப் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருப்போம்.

சிறுபிள்ளைகள் சட்டையுடன் சிறுநீர் கழித்தாலோ, ஏன் மலம் கழித்தாலோகூட அந்தப் பிள்ளையை பாடசாலைக் கிணற்றில் கழுவிவிடுவதும் அந்த உடைகளை தோய்ப்பதும் மாற்று உடைகளைக் கொடுப்பதுமாக ஒரு தகப்பனாக அவர் மாறிவிடுவார். சோர்வாய் பிள்ளைகள் இருப்பதை கவனித்தால் அதை கேட்டறிவார். பசியால் என்று தெரிந்தால் என்னை மந்திகைச் சந்தியிலுள்ள “ஊமையன் கடைக்கு” அனுப்பி இடியப்பமோ தோசையோ பணிஸோ வாங்கிவிர அனுப்புவார்.

சுகவீனம் எனத் தெரிந்தால் அருகிலுள்ள எமது ஆயுர்வேத மருந்துக் கடைக்கு என்னை அனுப்பி மருந்துகளை கொணரச்செய்வார். அவர் ஒரு அறியப்பட்ட ஆயுர்வேத வைத்தியராகவும் இருந்தார். அதனால் எமக்கு மந்திகையில் ஒரு மருந்துக் கடை இருந்தது. சிலவேளைகளில் அந்தப் பெரிய திறப்பால் கடையைத் திறப்பதிலும் பூட்டுவதிலும் நான் சிரமப்படும்போது பக்கத்துக் கடைக்கார வேலுப்பிள்ளை மாமா உதவிசெய்வார்.அந்த மருந்துக் கடை பாடசாலை முடிய பின்னேரங்களிலும் லீவு நாட்களிலும் திறபடும். அது அவரது நண்பர்களுடனான சந்திப்பு மையமாகவும் மாறிவிடும்.

ஆயுர்வேத மூலிகைகளை யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தமாக வாங்கிவருவார். அவற்றை வகைப்படுத்தி தனித்தனியாக கோர்லிக்ஸ் போத்தல்களில் அடைத்து, அதற்குரிய லேபல்களையும் நானே சொத்தி எழுத்துகளால் எழுதவைத்து, அதை அலுமாரியில் அடுக்கிவைக்கவேண்டிய இடத்தில் நானே வைத்துக்கொள்ளவும் என ஒரு தொடர் வழிமுறையை செய்விப்பார். ஏனெனில் நான் தனியாக கடையில் நிற்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போது,  வாடிக்கையாளர் வரும்போது அவற்றை கொடுத்து பணம் வாங்கவேண்டும். நான் கடையில் நிற்பது தெருவால் போவோருக்கு தென்படாது. அவளவு உயரம். மேசையில் எனது நாடி முட்டியபடி இருக்கும். போதாததுக்கு முன்னுக்கு அடுக்கிவைக்கப்படும் முட்டாசு போத்தல்கள் எனக்கு தெருவை மறைத்துவிடும்.

முக்கிமுனகி ஆயுர்வேத பாடல்களை எல்லாம் மனனமாக்கினேன். அதை தனது நண்பர்கள் குழாம் முன்னால் கொறித்துத் துப்ப வைப்பார். பாராட்டுகள் கிடைக்கும்.

அவர் ஒரு கடவுள் பக்தராக இருந்தார். எனக்கு அது இளமையில் அற்றுப்போனது. அவர் ஒரு சாத்திரியாராகவும் இருந்தார். எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் போனது. அவரிடம் இடதுசாரிய சிந்தனை எதுவும் இருந்ததில்லை. என்னை அது வந்துசேர்ந்தது. (அப்படியாய் நம்புகிறேன்). ஆனாலும் அவர் என்னிடத்தில்; ஒருவித ஆளுமையை விட்டுச் சென்றதாக எனக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. நேர்மையை கற்றுக்கொடுத்ததாக ஒரு மதிப்பீடு இருக்கிறது. தனக்காக மட்டும் வாழ்வதை அவர் வெறுத்தார் என்றுதான் சொல்வேன்.

அவர் தனது வைத்தியத்துக்கு வசதியற்றவர்களிடத்தில் பணம் வாங்குவதில்லை. வீடுதேடி சைக்கிளில் போய் வைத்தியம் பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் அவர் இதையே செய்தார். பலவீனம் என்னவென்றால் இந்த நல்லெண்ணத்தை துஸ்பிரயோகம் செய்த வசதிபடைத்தவர்களையும் அவர் விட்டுவிட்டு வெறுங்கையோடு வருவதுதான். கடை ஒரு வியாபார நிலையம் என்றில்லாமல் அவரது வைத்தியத்துக்கான ஆதார நிலையமாக ஓடியது.

பாடசாலை வளவைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டிருக்கும். அதற்கான கதியால்களை வீடுவீடாக மாட்டுவண்டியில் சென்று சேகரித்து வருவார். அவற்றை வேலியைச் சுற்றி நாட்டுவதிலிருந்து அவை வளரும்வரை தண்ணீர்விட்டு வளர்த்தும் விடுவார். அதற்காகவே அதிகாலை பாடசாலைக்குச் செல்லும் நாட்கள் அதிகம்.

அவர் ஒரே மரத்தில் ஒட்டு முறையில் விதவிதமான மாங்காய்களை காய்க்க வைப்பார். அதை நாடி வருபவர்களுக்கு இலவசமாகவே அவற்றை செய்தும் கொடுத்தார். ஆயுர்வேதக் குறிப்புகளை தாள்களில் மட்டுமல்ல ஏட்டில் எழுதும் வேலையையும் செய்தார். அவரிடம் இரண்டு எழுத்தாணிகள் இருந்தன. தான் இறப்பதற்கு சில மாதங்களின் முன் ஏட்டுக் குறிப்புகளை காகிதத்தில் எழுதி முடிக்கும் வேலையையும் செய்தார். இப்போ எழுத்தாணிகள் இல்லை. ஏட்டின் பெரும்பான்மையானதும் அவரது பெட்டகத்துள் சரியான கவனிப்பின்றி செல்லரித்துப்போனது. எஞ்சியவற்றை எடுத்து வந்தேன் அவர் நினைவாக.

இந்த ஏட்டை தயாரிப்பதிலிருந்து ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதுவரையான வேலைகளில் எனது பிஞ்சுக் கைகள் பட்ட நினைவாக அவற்றை பொத்திவைத்திருக்கிறேன். இந்த தந்தையர்தினத்தில் அதை நினைத்துப் பார்க்கிறேன்.

 

Fb link:

https://www.facebook.com/notes/713343965403367/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Blog Stats

  • 20,815 hits
%d bloggers like this: