33 வருடங்கள் கடந்துவிட்டது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டது வரலாற்றின் மிகப் பெரும் பண்பாட்டுக் கொலை. இது ஓர் இனத்தின் அறிவுத் தளத்தின் முதகெலும்பை முறிக்கும் சதி. அதனால் அது இனப்படுகொலையின் ஒரு அங்கம்.
வசதியற்றவர்களுக்கும் அது ஒரு அறிவுப்பிரசாதமாக இருந்து கைகொடுத்திருக்கிறது. அது தலித்துகள் உட்பட விளிம்புநிலை மாந்தரையும் சென்றடைந்தது. தெற்காசியாவிலேயே மிகப்பெரும் நூல்நிலையமாக அது வளர்ந்த கதையின் பின்னால் இருந்த உழைப்புகள் அர்ப்பணிப்புகள் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கைக்கே ஒரு பெருமை சேர்க்கிற தேசிய வளமும்கூட. இனவெறி இந்தப் புரிதலையும் தாண்டியது என்பதாய், இதுவே இலங்கையின் வரலாறு என்பதாய் அதற்கான சாட்சியமாய் சுடர்விட்டெரிந்து சாம்பல் பூத்துக் காட்டியது யாழ் நூல்நிலையம். 97 ஆயிரம் நூல்களாலான அதன் சிறகு தீயில் உதிர்த்துக் கொட்டியது. அந்த நூலகத்தை பயன்படுத்தியவர்கள் உட்பட மனிதநேயம் கொண்ட எல்லா இனத்தவரையும் அந்த இருண்ட உணர்வு உலுப்பியது. இன்னமும் அது ஜீரணிக்கப்பட முடியாத ஒன்றாய் இருக்கிறது.
புதிய நூல்நிலையத்தை எழுப்பியது ஒரு ஆறுதல்தான் என்றபோதும் பழைய நூல்நிலையம் தன் சிறகுக்குள் பாதுகாத்து வைத்த ஓலைச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள், கிடைத்தற்கரிய மூலப்பிரதிகள் என்பன முழுவதுமாய் திரும்பி வரப்போவதில்லை. இழந்தவை இழந்தவைதான்.
இந்த எரியூட்டல் ஒரு சம்பவம் மட்டுமல்ல. அது பாசிஸ்டுகளின் அல்லது இனவெறி கொண்டலையும் அரசுகளின் ஓர் கொடுமைமிகு அரச பயங்கரவாதம். இனவழிப்பின் திட்டமிடப்பட்ட செயல். இந்த செயலை நினைவு கூர்வதாய் அதன் பழைய கட்டடம் அதன் சிதிலங்களோடு விடப்பட்டு, அருகில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அதையும் அரசு கவனமாகவே கையாண்டு பழசின் சுவடுகளை அழித்திருக்கிறது. இருந்தும் இந்த நூல்நிலைய அழிப்பு நினைவுகூரப்படுவதை இச் செயலால் முழுமையாக மறைப்பிட முடியாது என்ற செய்தி சொல்லப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இன்னொரு பக்கமும் இருக்கிறது. இனவெறி, நிறவெறி போலவே சாதிவெறியும் நேரடியாக மட்டுமல்ல நுணுக்கமான தளங்களிலும் செயற்படுவது நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் சவால். தமிழ்ச் சமூகத்தின் குறிப்பாக யாழ் சமூகத்தின் எல்லா தளங்களிலும் இந்த சவால் சமூகமாற்றத்தை விரும்புவோர் முன்னும் மனிதநேயம் மிக்க செயற்பாட்டாளர்கள் முன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பின்தொடரும் ஒரு கேடு சாதியம்.
இது 2003 பெப்ரவரியில் புது நூல்நிலைய திறப்புவிழா விவகாரத்தின்போதும் நுண்மையாகவும் வீரியமாகவும் வெளிப்பட்டது. இந் நூல்நிலையத்தை கட்டியெழுப்புவதில் செல்லன் கந்தையன் யாழ் மேயராக இருந்து அர்ப்பணிப்புடன் உழைத்தவர். ஒரு தலித் என்ற காரணத்தால் புதிய கட்டடத்தை திறந்துவைப்பதிலிருந்து அவரை கழற்றிவிட சாதியவெறி நுணுக்கமாகவும் திரைமறைவுப் பலாத்காரத்துடனும் செயற்பட்டது என்ற வரலாறும் யாழ் நூல்நிலைய நினைவுகூரலைத் தொடரும்.
இனவெறியின் நினைவுகளை யாழ் நூல்நிலையத்தின் பழைய நூல்நிலைய விம்பம் நினைவுகூர, இனவெறியோடு சேர்த்து சாதிவெறியின் நினைவுகளையும் புதிய நூல்நிலையம் சேர்த்தே சுமக்கிறது, ஒன்றை வைத்து ஒன்றை நிராகரிக்காதபடி.
—————————————-
இரு கவிதைகள்
- புத்தரின் படுகொலை!
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.
‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்…
என்றனர் அவர்கள்.
‘சரி சரி உடனே மறையுங்கள் பிணத்தை’
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.
– எம்.ஏ.நுஃமான்
(நன்றி: மரணத்துள் வாழ்வோம்)
——————————————————
- பழசின் புதுசு
தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.
யாழின்
நூல்நிலைய எரிசிதைவுகளை
தீ விட்டுச்சென்றது,
வரலாற்றின் பதிவுக்காய்.
அதுவும் இப்போ அழிக்கப்பட்டாயிற்று.
அதன் சுவடுகளை சுத்தப்படுத்தி மீண்டும்
எழுந்தது நூல்நிலையம் -பழசின் புதுசாய்.
வெள்ளைநிறப் பூச்சின் பின்னால்
பேதங்கள் மறைக்கப்பட்ட சங்கதியில்
ஒழுக்கு விழுந்தது.
விடுதலைத் தீயில் சாதிவெறி வதங்கியதான
ஒரு மாயைப் பொழுதில்
அவர்கள் வந்து காவலாளியிடம்
திறப்பைப் பறித்துச் சென்றனர்.
பிறகொருநாள்
பூட்டிய தனி அறைக்குள்
’சுமுகமாய்’
பேச்சுவார்த்தை நடத்தினர் -வாயில்
ஆயுதவெடில் நாற.
புதிய நூலகத் திறப்பில்
சாதிக் கறல் படிந்தது.
நூலக வரலாற்றின் பதிவில்
செல்லன் கந்தையன் என்ற பெயர்
தீண்டத்தகாததாயிற்று.
எழுத்தறிவிப்போர் சாதியை எழுதி
அறிவைக் கற்பிக்க
ஊர்வலம் வந்தனர்.
’’நூலகத்தைத் திறவாதே!’’
இதைவிட வெட்கம் எதுவென நகைத்தது
முன்னவன் இட்ட தீ
மெழுகுதிரியையும் பெரும்தீ நகைத்தது,
யுத்த இரவுகளில்
படித்தலின் இறுதிமூச்சை நீ ஏந்தியதாய்
பெருமைப்பட்டதைப் பார் என்று.
தீமூட்டும் வேலை இனி
தேவையில்லை என்பதாய், அது தன்
கொள்ளியை எம்மிடமே
தந்துவிட்டுப் போயிருக்கிறது.
– ரவி (11.05.2003
http://www.vaarppu.com/view/98/
Fb link: