ஒரு நட்புக் குறிப்பு

 

மந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும்.  அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ஆஸ்பத்திரி இருக்கும் என.

 உண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.

அருகில்தான் எனது ஆரம்பப் பாடசாலை. அடிக்கடி நாம் அந்த ஆஸ்பத்திரியின் மனநோயாளர் பிரிவின் வெளியை புதினம் பார்ப்பதுண்டு. ஓட்டை வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் பூமரங்களுக்கு ஊற்றச் செல்வர் சிலர். பூமரத்தை பிடுங்கி தலைகீழாய் நடுவர் சிலர். மரங்களோடு பேசுவர் சிலர். ஆடிப்பாடுவர் சிலர். கொஞ்சம் புத்தி தெளிந்தவர்கள் அருகில் கைப்பந்து விளையாடுவார்கள்.  அவர்களது கட்டற்ற அசைவுகளும் செயல்களும் சிரிப்பை வரவழைக்கும்.

 சில நேரங்களில் தப்பியோடிய “பைத்தியங்களை” தோட்டந் துரவுக்குள்ளாலை ஓடி துரத்திப் பிடித்து இழுத்துவருவார்கள். அம்புலன்ஸ் இல் போய் பிடித்தும் வருவார்கள் ஊழியர்கள். இவையெல்லாம் சுவாரசியமாவும் பரிதாபமாகவும் மனச்சஞ்சலமாகவும் ஒரு குழையல் அனுபவமாக இருக்கும்.

 அந்த வார்ட் (அறை) பொதுவான வெளியை உடையது. அதனால் அங்கு எப்போதும் ஒரு சாம்ராச்சியம் நிலவும். அவர்களுக்குள் ஒருவர் பலசாலியாக நிரூபித்து தலைவராக ஆகிவிடும் வழமை நிலவியது. இப்படித்தான் கனகசபாபதி தலைவராக ஆனான் என்று கதை வந்திருந்தது.

 நினைவுகள் வாழ்வின் இடுக்குகளில் உயிர்த்திருப்பவை. கனகசபாபதி எனது ஊர் நண்பன். எனது வயதையொத்தவன். ஆங்கில ரியூசன் வகுப்பில் அவனும் நானும் நெருங்கிய நண்பர்களாகியிருந்தோம். ஆங்கில ஆசிரியர் எப்போதுமே சீரியஸ் தன்மை கொண்டவர் என்பதால் வகுப்பு நேரத்தில் சிரிப்பை வரவழைத்தல் ஒரு சுவாரசியம் அல்லது எதிர்மறுப்பு என்பதாக சுகம் தரும் அனுபவம். அதற்கெல்லாம் கனகசபாபதி எமக்குக் கிடைத்திருந்தான். மெல்ல சிரிப்பூட்டிவிட்டு எதுவும் தெரியாததுபோல நாம் இருந்துவிடுவோம். அவனின் அடக்குதலை உடைத்தெறிந்து சிரிப்பு பீறிட்டுவிடும். அவனால் அதற்கு பிரேக் போட முடிவதில்லை. தண்டனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

 அவ்வளவு அப்பழுக்கற்ற குழந்தை உள்ளம் கொண்டவன் அவன். சாதாரணமாகப் பேசும்போது முகத்தை முகிழ்த்தபடி கண்களை ஒளிர்த்தபடி அவனது புன்சிரிப்பு எப்போதுமே வசீகரித்துக்கொண்டிருக்கும், ஒரு குழந்தையினதுபோல. படிப்பில் குறைச்சலில்லை. இந்த குணாம்சங்களெல்லாம் என்னையும் அவனையும் நண்பர்களாக கட்டிப் போட்டிருந்தன. அந்த யுகம் கவிண்டு கொட்டுப் பட்டது.

 இப்போது வீதியில் அவன் எதிர்ப்படும்போது எனக்கு முடியாமல் போய்விடும். எதுவுமே தெரியாதவனாய், அதுவும் என்னைக்கூட தெரியாதவனாய் விலத்திப் போய்க்கொண்டடிருப்பான். எந்தக் கெடுதலும் செய்யாதவனாய் சில வேளைகளில் தனக்குள் ஏதோ முணுமுணுத்தபடி போய்க்கொண்டிருப்பான். அவனது முகம் பேயறைந்தது போல இருக்கும். அவனது சிரிப்பை, புன்சிரிப்பை, கண்களின் ஒளிர்வை எல்லாம் பிரளயம் அள்ளிச் சென்றிருத்தல்கூடும். அவனைக் காணும் அன்றைய பொழுது என்னை சித்திரவதை செய்யும்.

 அதன்பிறகு நான் ஊரில் இல்லை. திரும்பி வரும்போதுதான் அவன் தலைவனான கதையை நண்பர்கள் சொன்னார்கள். பழைய தலைவனுக்கும் அவனுக்கும் சண்டை நடந்து கனகசபாபதி வென்றுவிட்டான் என்றார்கள். இப்போ எனக்கு எதுவுமே சுவாரசியமாக இருக்கவில்லை. அவனை வழியில்கூட எதிர்கொள்வதற்கு என்னிடம் மனோபலம் இருந்திருக்கவில்லை. அவன் இந்த உலகை மறந்தவனாக, எனைக்கூட அறியாதவனாக செதுக்கப்பட்டு இருந்தபோதும், அவனது உயிரின் மீதான வாஞ்சை மேலிட்டிருந்தது.

 இன்றுவரை எனது நினைவை இடறும் ஒரு நண்பனாக வந்துபோய்க்கொண்டே இருக்கிறான். குழந்தைகளும் பைத்தியக்காரர்களும் எல்லைகளற்ற மனவளம் கொண்டவர்கள் என்ற வரியை வாசித்துக் கொண்டிருந்தபோதும் கனகசபாபதி வந்து போயிருந்தான்.

 (உண்மைப் பதிவு)

FB link:

https://www.facebook.com/notes/ravindran-pa/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/691859070885190

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: