பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.
மறுபுறத்தில் தனது பிள்ளைமீது வெளியிலிருந்து சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளுக்கு இந்த மனோபாவம் தற்காப்பு எடுத்துவிடுகிறது. உன்ரை பிள்ளை திறமோ? அந்தப் பிள்ளை அப்பிடி நடந்துகொள்ளயில்லையோ.. இந்தப் பிள்ளை இப்பிடி நடந்துகொள்ளயில்லையோ என்றவாறாக இது வடிவமெடுக்கிறது.
இரண்டிலுமே ஒப்பீடுதான் முதன்மை பெறுகிறது. தனித்துவம் சார்ந்த மதிப்பீடுகள் புறந்தள்ளப் படுகின்றன.
பிள்ளை வளர்ந்து உயர் வகுப்புக்கு வரும்போது அது பெற்றோரைப் பார்த்து இந்த மனவோட்டத்தை விமர்சிப்பதை புகலிட நாட்டில் நாம் மிகச் சாதாரணமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் குழந்தை இந்த மனவோட்டத்துக்கு வெளியில் வளரும் சூழல் காரணமாகிவிடுகிறது. எமது சிந்தனைமுறையை கேள்வி கேட்பதாய் இது அமைகிறது.
பெண்களை இராணுவப் பயிற்சி றாக்கிங் செய்யும் காணொளி (அண்மையில் வெளியாகியிருந்தது) மீதான கருத்துகளை பார்க்கும்போது இந்தவகை ஒப்பீட்டு சிந்தனை முறைமையை காணலாம்.
அந்தப் பெண்கள் தமிழ்ப் பெண்கள்தான் என தமிழ்த் தேசியவாதிகள் அல்லது தமிழின உணர்வாளர்கள் அல்லது நேரடியாய் பாதிக்கப்பட்ட நபர்கள் தீர்மானமெடுத்து கருத்துகளை வழங்கியது ஒருபுறம். இனவெறி இராணுவம் கடந்த காலத்தில் நடாத்திய கொடுமைகளிலிருந்து அவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் என ஆதாரமின்றி முடிவுக்கு வருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாவிட்டாலும்கூட, புரிந்துகொள்ளப்படக் கூடியது. அதை அவர்கள் பிரச்சாரத்துக்குப் பாவித்தார்கள் என்பது பிரச்சினைக்கு உரியது. அது பெண்கள் தரப்பில் உளவியல் ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் எந்தளவு அழுத்தம் தரவல்லது என்பது விமர்சிக்கப்பட வேண்டியது.
இன்னொரு புறம் “இயக்கத்தில் இதைவிட கொடுமையான றெயினிங் நடக்கிறது. கொலைகூட நடக்கிறது…” என்ற ஒப்பீடு ஒன்று. பல்கலைக் கழக றாக்கிங் உம் ஆதாரத்துக்கு இழுத்து வரப்படுகிறது.
நமது பிரச்சினையே வன்முறை உருவாகும் களங்கள் பற்றியது. அது றாக்கிங் ஆக இருந்தாலென்ன பள்ளிக்கூட வாத்தியின் தண்டனை முறையாய் இருந்தாலென்ன இராணுவமாய் இருந்தாலென்ன அதை நாம் அடையாளம் காண்பதும் எதிர்ப்பதும் முக்கியமானது. இதன் அடிப்படையில் எழும் விமர்சனங்கள் முக்கியமானது. வன்முறைகளை நேரடி நடவடிக்கையில் காண்பது ஒன்று. அதை நிகழ்த்தும் மனநிலையை வழங்கும் நுண்களங்கள் (கருத்தியல், சிந்தனை முறைமை, ஒழுங்கு, கட்டுப்பாடு..என) காண்பது இன்னொன்று. இதன் அடிப்படையில் எமது தமிழ்ச் சமூகம் சார்ந்து –சரியாகவே- வைக்கப்படும் விமர்சனத்தில்கூட, இனவொடுக்குமுறை அரசின் இராணுவ இயந்திரத்தை (அதன் கொடுமையான குணவியல்புகளை) இயல்பானதாய் கடந்து செல்லக் கோரும் போக்குகள் மிதப்பாய்த் தெரிகின்றன. தமிழ்ச் சமூகத்தை குற்றஞ்சாட்டுவதில் போய் முடிகிறது. குற்றஞ்சாட்டை அடுக்கியபடி அந்த மக்களுக்காக போராடப் போகிறோம் என்பது ஒரு முரண்நகை.
குறைந்தபட்சம் இராணுவப் பயிற்சி நெறிமுறைகளின் அடிப்படையிலாவது இதுபோன்ற சம்பவங்களை விளக்க முயலவேண்டும். பயிற்சி நெறிமுறைகளின் மீறல்களை இயல்பாய்க் காண்பதும் காட்டுவதும் மோசமானது. இதை (நெறிமுறைகளையும் மீறல்களையும்) ஒரு குழையலாய் எடுத்துக்கொண்டு, மற்றைய இராணுவங்களுடன் அல்லது இயக்கங்களுடன் ஒப்பிட்டு பதில் தேடுவது அபத்தமானது. இந்தக் குழையலே இராணுவம் என்றால் அப்படித்தான் இருக்கும், அரசு என்றால் அப்படித்தான் இருக்கும், போராட்டம் என்றால் உயிரிழப்பு இருக்கத்தான் செய்யும்… என்றவாறாக ஏவறைவிடச் செய்கிறது.
இராணுவ அதிகாரத்தை எதிர்கொள்ளும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான மனநிலை ஒருபடித்தானதல்ல. ஆணாதிக்க சமூகத்தில் இராணுவம் என்பது பெண்களைப் பொறுத்தவரை இராணுவ உடை போர்த்திய ஆண்குறி கொண்டவர்கள். அதாவது இராணுவ ரீதியிலும் ஆணாதிக்க ரீதியிலும் இரட்டை ஒடுக்குமுறைக்குள் பலியாகிறவர்கள்.
இந்தக் காணொளியில் இராணுவ நெறிமுறை எங்கு தெரிகிறது. தண்டனை முறையாக மேலதிக பயிற்சியா கொடுக்கப்படுகிறது? அவர்களை தடிகொண்டு அவர்களின் குண்டிப் பகுதியில் அடிப்பதிலும் இரசிப்பதிலும் வக்கிரமன்றி என்ன மசிர் தெரிகிறது? இந்தவகை மீறல்களை கொடுமையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் இன உணர்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்க வேண்டுமா என்ன.
80 களில் அரசியலை முதன்மைப்படுத்திய இயக்கங்கங்களில் இராணுவ பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்குமிடையில் வன்முறை சார்ந்த மதிப்பீடு முரண்பாடுகளை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினை Obey the Order என்ற இராணுவ ஒழுங்கை ஒரு பிரிவினர் வலியுறுத்துவதாகவும், மற்றவர்கள் இதை கேள்வி கேட்பதாகவும் தொடர்ந்தது. அடிப்படையில் இந்த இரு பிரிவினருக்கும் இடையில் வன்முறை சார்ந்து கேள்விகள் எழும்பின என்பது கவனிப்புக்கு உரியது. ஆனால் மனிதஜீவியின் உடலமைப்பு பற்றிய எந்த அறிவுமற்றவர்களால் இயக்கங்களில் அளிக்கப்பட்ட பயிற்சி மட்டும் ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது.
கடந்துபோன துயர வரலாற்றிலிருந்து பாடம் கற்கத் துடிக்கும் நாம் ஒப்பீடுகளோடும், தர்க்கங்களோடும் நின்றுவிட முடியாது. அதை நாம் தாண்டிச் செல்வது எப்போது? இல்லையேல் -நாம் எவருமே ஏற்றுக்கொள்ளாத- வன்முறையின் மீதான அங்கீகாரம் நுண்மையாகவே சுவறிவிடும், எமது அறிவில் மண்ணைத் தூவிவிட்டு.
VDO link : https://www.youtube.com/watch?v=GohUnkH0neQ