08 மார்ச்2014. அது கிரிக்கற் பொழுதாய்ப் போனது எனக்கு. “ஏசியன் கப்” க்கான இறுதி ஆட்டம் சிறீலங்கா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடம்பெற்றது. நாள் முழுதும் அதை கணனியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.கிரிக்கெற் எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த விளையாட்டு என்பதால் அதை சும்மா பார்க்க வெளிக்கிட்டு, பின் இடையில் நிறுத்த முடியாமல் இறுதிவரை பார்த்து முடித்தேன்.
எழுபதுகளின் இறுதிப் பகுதிகளில் ஊரில் ரெஸ்ற் தொடர்களையே வானொலியில் நாட்கணக்காக குந்தியிருந்து கேட்டிருக்கிறேன். கவாஸ்கர், விஸ்வநாத் (பின் கப்பீல்தேவ், சிறீகாந்த்) என எனது நாயகர்களின் பெயரைக் கேட்கவே உள்ளம் துள்ளும். அப்துல் ஜபார் நேரடி விவரணத்தில் எனக்கு அறிமுகமாகியவர்.
அப்போதெல்லாம் இந்தியா வேறு நாடுகளுடன் விளையாடும்போது இந்தியா வெல்லவேணும்.. இந்தியாவும் இலங்கையும் விளையாடும்போது இலங்கை வெல்ல வேணும்.. என்று ஆர்வப் போராட்டம் மனதுக்கள் நடந்து ஓயும். எண்பதுகளின் ஆரம்பத்தில் இது மாறியது. எல்லா போட்டிகளிலும் இந்தியா… இந்தியா ஒன்றே வெல்ல வேணும் என்றாகியது.
81 அல்லது 82 இல் என நினைக்கிறேன். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நோய்க்குறி காலமது. இலங்கையும் இந்தியாவும் இறுதியாட்டத்தில் களமிறங்கின. பல்கலைக்கழக விடுதியில் நாம் கொஞ்சப் பேர் எமது அறையில் வானொலி விவரணையில் படபடத்துக்கொண்டிருந்தோம். எம்மில் எவருமே இலங்கை வெல்லவேணும் என நினைக்கவில்லை. அப்படி சொல்வதை விடவும் இந்தியா வென்றே தீரவேணும் என்று அங்கலாய்த்தோம்.
அருகிலிருந்த அறைகளிலெல்லாம் சக சிங்கள மாணவர்கள் இந்தியாவின் விக்கற்றுகள் விழும்போதும், இலங்கை பவுண்ட்ரி அடிக்கும்போதும் விடுதி அதிர சத்தமிட்டார்கள். நாம் மாறி. ஆனால் நாம் சத்தமிடவேயில்லை. பயம். றூமுக்கள் துள்ளினோம். குத்துக்கரணம் அடித்தோம். கட்டிப் புரண்டோம். வாயால் வரவேண்டிய சத்தமெல்லாம் இப்படியாய் உருமாறி குதூகலித்தது.
இவையெல்லாம் நேற்று நினைவில் ஒரே வந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் இலங்கை அணிகளில் யார் வென்றாலும் என்ன. திறமையானவர்கள் அல்லது சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றவர்கள் வெல்லட்டுமே. அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றவாறாக ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் போகப் போக இலங்கை அணியின் விக்கற் விழும்போது ஏதோவொன்று அதை சுதாகரித்துக்கொள்ள மறுத்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் மட்டும் என்ன. இலங்கை அரசின் படுகொலைக்கு உதவிபுரிந்த நேச நாடுதானே. எதற்காக அதை ஆதரிக்க வேணும் என்றது ஒரு கட்டத்தில் எனது அலைவு.
தமிழக கிரிக்கற் ரசிகர்கள் என்ன நிலை எடுப்பார்கள். இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வில் இலங்கையை ஆதரிப்பார்களா என்றெல்லாம் சும்மா அலைந்தேன். குந்தியிருந்து பார்த்ததால் அதற்கு நேரம் போதுமானதாக இருந்தது. கடைசியில் இலங்கை அணி வெற்றி பெறவேணும் என்று அலைவு ஓரிடத்தில் நின்றது.
அணியில் ஆடிய ஒருவர்கூட தமிழ் இனத்தைச் சார்ந்தவரில்லை. அதற்கு முரளிபோல தமிழ்ப் பெயராவது இருந்தால் போதும் என்று அங்கலாய்க்கவா முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றிப் பேசுவது புலுடா என்றும் தெரியும். அது இலங்கையின் பீடைபிடித்த அரசியல் வெளி. “One Nation One country” என கட்அவுட் தூக்கும் வெளி. அதிகாரங்களை பகிர்வது என்பது மட்டுமல்ல விளையாட்டையும் திறமைகளையும் பகிர்வதிலும்தான் அதே பீடை.
அந்த பீடையை கேள்விகேட்பதற்குப் பதிலாக அதை ஆதரித்தால் கட்டற்ற சந்தோசம் கிடைக்குமோ என்னவோ. தெரியாது. இலங்கையின் வெற்றி எனது விருப்புக்கு உவப்பானதாகவே முடிந்தது, கட்டற்ற சந்தோசத்தை மறுத்தபடி.
மழை குடையையும் தாண்டி தூவானமாய் நனைத்தது.