Millions can walk. ஆவணப்படம்.

Gogo Basic சூரிச் இல் திரையரங்கொன்றில் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றரை மணிநேர ஆவணப்படம்.

First they ignore you.

Then They laugh at you.

Then they fight you.

Then you win.

–  Mahatma Gandhi

millions can walk-1

ஆதிவாசிகள், தலித்துகள், நிலமற்ற விளிம்புநிலை மக்கள் என வீதிகள் மக்கள் மயமாகி அசைந்துகொண்டிருந்தது. ஒரு இலட்சம் மக்கள் என படம் கூறுகிறது. பத்திரிகைகள் 50000 இலிருந்து 90000 வரை பட்டியலிடுகிறது. அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். 2002 இலிருந்து தொடங்கிய அவர்களின் போராட்ட முன்னெடுப்புகள் 2007 இல் 25000 பேருடன் நடந்த டெல்லி நோக்கிய சத்தியாக்கிரகப் போராட்டமாகி, பின் 2012 இல் பெருமெடுப்பாய் மாறியது என்பது இங்கு முக்கியமானது.

இந்தியாவில் 70 வீதமான மக்கள் நிலம் சார்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள். உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என வர்ணிக்கப்படும் இந்தியா இந்த வாழ்வாதாரத்தை தம்மிடமிருந்து பறிப்பதற்கு எதிராகவும், தமக்கு மறுப்பதற்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள்.

millions can walk-2

இந்தியாவின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோர் தலித்துகள். எட்டு வீதமானோர் ஆதிவாசிகள். மொத்தமாயுள்ள 90 மில்லியன் ஆதிவாசிகளில் 30 மில்லியன் ஆதிவாசிகள் இடம்பெயர்க்கப்பட்டிருகிறார்கள் என்ற தகவலை படம் சொல்கிறது. இயற்கை வளம், கனிவளம் மிக்க அவர்களின் காட்டுப் பிரதேசங்களிலிருந்து அவர்கள் விரட்டப்பட்டனர். தேசிய மற்றும் சர்வதேச (குறிப்பாக யேர்மனி) பரகாசுர கம்பனிகளுக்கு அரசு ஒத்தோடியாக மாறியதும், அதற்கான அசைவியக்க கட்டுமானங்களும் (infrastructure) இந்த ஆதிவாசிகளை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியிருக்கிறது. இயற்கையை நீர்நிலைகளை காடுகளை தாவரங்களை பயிர்ச்செய்கையை என சகல வாழ்வாதாரங்களையும் நாசமாக்கியிருக்கிறது. இருப்பிடமற்றவர்களாக்கியிருக்கிறது. நிலமற்றவர்களாக்கியிருக்கிறது. சேரிப்புற வாழ்வுக்கு விரட்டியிருக்கிறது.

அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தாமே நிர்மாணித்துக்கொள்ள தமக்கான நிலத்தை கோருகிறார்கள். தமது உரிமையை கோருகிறார்கள். தமது பிள்ளைகளின் கல்விகற்கும் உரிமையை, வழிவகையை கோருகிறார்கள். அவர்களது கோரிக்கைகள் எளிமையானது. அதற்காக அவர்கள் வலியுடன் போராடவேண்டியிருக்கிறது. அவர்கள் வீதிக்கு தமது குரலை எடுத்து வந்தார்கள். ஒக்ரோபர் 2ம் தேதி 2012. (காந்தி பிறந்த நாள்). மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியர் (Gwalior) என்ற இடத்திற்கு இந்தியாவின் நாலா பக்கத்திலுமிருந்து பயணித்து வந்து கூடினார்கள், பெருமளவு ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்கள். தமிழகத்திலுமிருந்தும் அவர்கள் வந்திருந்தார்கள். புகையிரத பயணம் என்பது அவர்களில் பலருக்கு வாய்த்த முதல் பயண அனுபவம். நெரிசலாக ஆண்கள் பெண்கள் என வயோதிபர்கள்கூட புகையிரத்தில் பயணித்து வந்திருந்தார்கள

millions can walk-3

அங்கிருந்து டெல்லிக்கு அவர்களின் “ஜான் சத்தியாக்கிரக போராட்டம்” தொடங்குகிறது. மத்திய பிரதேசத்திலிருந்து டில்லி வரையான 350 கிலோ மீற்றர் தூரத்தை நாட்கணக்கில் அவர்கள் கால்நடையுடன் அசைத்துக்காட்டத் திட்டமிட்டார்கள். அதைத் தொடங்கினார்கள். ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு மட்டும்தான் சாத்தியமாயிற்று. 29 ஒக்ரோபர் 2012 டெல்லியை வந்தடைவதாக அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எக்ரா பரிசத் (Ekta Parishad)என்ற காந்திய அமைப்பு இதை வழிநடத்தியது.

குவாலியரில் வைத்தே அவர்களை வீட்டுக்கு திரும்பிப்போகும்படி சொன்னது அரசு. அவர்கள் தமது சத்தியாக்கிரகத்தை (கால்நடையாக) தொடர்ந்தார்கள். ஆக்ரா வரை வந்தடைந்த அவர்களின் போர்க்குணத்தைக் கண்ட அரசு அவர்கள் ஒரு இலட்சம்பேரும் கால்நடையாக டெல்லியை வேக வீதியினூடாக வந்தடையத் தீர்மானித்திருந்ததைக் கண்டு அஞ்சியது. அரசு தாம் சந்திக்கவேண்டிய இடர்ப்பாடுகளை கணக்கில் கொண்டு, ஆக்ராவில் வைத்து பத்து அம்சக் கோரிக்கையில் எக்ரா பரிசத் அமைப்புடன் 11.10.2012 அன்று உடன்பாட்டுக்கு வந்தது. கையெழுத்திட்டது. 6 மாத காலத்துள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு சம்மதித்தது. அதனால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆக்ராவில் முடித்துவைக்கப்பட்டது. அவர்கள் தமது வலிகளையும் களைப்பையும் மறந்து துள்ளிக் குதித்தார்கள். நடனமாடினார்கள்.

millions can walk-5 அவர்களின் பிரமாண்டம் என்பது காட்சிப் புலத்தில் நிகழ எனது சிந்தனையை ஏதோ அழுத்திக்கொண்டிருந்தது. நாம் கண்டடைய வேண்டிய போராட்ட முறைகள் இன்னமும் இருக்கின்றன என்பதே அது. எக்ரா பரிசத்; அமைப்பின் வழிநடத்தலில் 700 க்கு மேற்பட்ட சிறியதும் பெரியதுமான வெகுஜன அமைப்புகள் ஆதரவுடன் நடத்திய அந்தப் போராட்டம் அசாதாரணமாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒரு சிறு வன்முறைகூட நிகழ்த்தாத, கட்டுப்பாடுமிக்க, ஓர்மம் மிக்க சத்தியாக்கிரக இயக்கமாக வழிநடத்திச் சென்றது கனதியான ஒன்று. அதற்கான உளவியல் பலம் எங்கிருந்து வந்தது.

ஆரம்பத்தில் அசட்டையுடன் பேசிய அரசே முடிவில் அந்த மக்களின் இடத்துக்கு வந்து எழுத்துமூலமான உடன்பாடுகளுக்கு வரநேர்ந்தது. அதில் 70 வீதமானவை நிறைவேற்றப்பட்டதாக படம் சொல்லி முடிக்கிறது.

millions can walk-6

26.1.2014 அன்று எக்ரா பரிசத் இன் ஸ்தாபகரான பி.வி.ராஜ்கோபால் அவர்கள் சுவிஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அரசு ஒப்புக்கொண்ட அம்சங்களில் முழுவதும் நிறைவேற்றப்படவில்லை என்பதை குறிப்பிட்டார். அதேநேரம் சாதிக்கப்பட்டவற்றுள் 1.2 மில்லியன் மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதை முக்கியமானதாக சுட்டுகிறார்.

அவர்களது பாதங்கள் வீதியில் அசைந்தன. வழிநெடுகிலும் அவர்களுக்கு சாதாரண மக்களிலிருந்து வியாபாரிகள் மனிதாபிமானிகள் என பலரும் உதவுகிறார்கள். உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், மின்சார வசதிகள், நீர் வசதிகள் என ஏனையோரினதும் பங்களிப்பை இணைத்தபடி போராட்டம் அசைவுகொள்கிறது. வீதிகளில் மக்கள் போராட்டக்காரர்களை சந்தித்து அரசு பற்றிய, வோட்டு அரசியல் பற்றிய கருத்துகளை பரிமாறுகின்றனர்.

ஒரு போராட்டத்தின் வலு என்பது கூட்டுருவாக்கத்தின் நிர்மாணிப்பில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை இந்த நிகழ்வு காட்டியது. அதை வழிநடத்துபவர்களின் தன்னுருவாக்கம் என்பதும் அதேபோல் முக்கியமானது என்பதையும் உய்த்துணர வைக்கிறது படம். இந்த தன்னுருவாக்கம் என்பது சரணடைவு நிலைக்கு அல்லது சுயலாபத்துக்காக போராட்டத்தை திசைதிருப்புவதை மறுக்கிறது. விடாப்பிடியான மனோவலிமை மிக்க போர்க்குணத்தை வழங்குகிறது. தனது புத்திசீவித்தனத்தை மக்கள் நலன் சார்ந்து உபயோகப்படுத்துகிறது. கூட்டுருவாக்கம் என்பது -வித்தியாசங்களை அங்கீகரித்தபடி- கூட்டு மனநிலையாக வளரவேண்டும். தந்திரோபாய ரீதியிலான கூட்டுகளால் இதை சாதிக்க முடியாது.

எந்த வன்முறையிலும் ஈடுபடாத விழுமியத்தை இந்த பேரணி கொண்டிருந்தது சாதாரணமானதல்ல. இதற்குப் பின்னால் அறம் மற்றும் ஆத்மீக ரீதியிலான (காந்தியவழி) பயிற்சியளிக்கப்பட்ட 12500 இளைஞர் யுவதிகள் இருந்துள்ளார்கள். அத்தோடு அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முறைமையினுள் சத்தியாக்கிரகிகளின் சகல தேவைகளையும் பூர்த்திசெய்வதிலும் ஈடுபட்டார்கள்.

Gogo Basic

அரசு என்பது மக்கள் திரளின் மேல் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் நிறுவனம் என்ற அடிப்படையில் மக்கள் திரளின் பேரசைவு அரசை அசைத்துவிடக்கூடியது. அந்தப் பேரசைவை நிகழ்த்துவதில்தான் போராட்ட வழிமுறைகள் உருவாக்கம் பெறுகின்றன. அவர்கள் காந்தியத்தின் சத்தியாக்கிரக போராட்ட முறையின் செல்லுபடியை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

இலட்சம் பேர் பங்குபற்றிய இந்த சத்தியாக்கிரகப் போராட்ட முறையின் உள்ளடக்கம் மில்லியன் (பத்து இலட்சம்) பேரையும் திரட்டக்கூடிய உள்ளாற்றலைக் கொண்டது என்பதை இந்தப் படத்தின் தலைப்பு (Millions can walk) காட்டுவதாக ஒரு வாசிப்பை நிகழ்த்தலாம். ஆனால் அது 2020 இல் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் என்கிறார் ராஜ்கோபால். இந்தியாவிற்குள் ஒரு மில்லியன் மக்களுடன் டெல்லிவரை இது நடத்தப்பட இருப்பதாகவும், தொடர்ந்து ஒரு சிறு பகுதியினர் இதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஊடாக ஜெனீவாவரை எடுத்துச் செல்லத் திட்டமிடப்படுவதாகவும் சுவிஸ் தொலைக் காட்சியில் 26.1.2014 அன்று ராஜ்கோபால் தெரிவித்திருக்கிறார்.

70 நாடுகளில் வாழும் 370 மில்லியன் பூர்வீக குடிகளின் பிரச்சினையும் ஒத்திசைவு கொண்டவை. இந்தப் பிரச்சினையை உலகமயமாக்கலின் ஒரு விளைவாக விளக்குகிறார் அவர். நீதி, சமாதானம், சகோரத்துவம் என்பவற்றை உலகமயமாக்குவதற்குப் பதிலாக மூலதனத்தையும் சந்தையையும் உலகமயமாக்கும் முறைமையைத்தான் முதலாளித்துவம் கொண்டு இயங்குகிறது என்கிறார்.

அரசியல் கட்சிகளுக்கு வெளியே மிகப் பலம் பொருந்திய வெகுசன அமைப்புகளின் தேவையையும் உள்ளடக்கத்தையும் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள், அறம் சார்ந்த பயிற்சிநெறிகள் பற்றியெல்லாம் சிந்திக்க வைக்கிறது இந்தப் படம். காந்தியையும் காந்தியத்தையும் எமக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட எளிமையிலிருந்து மீட்டு, மறுவாசிப்புச் செய்யவேண்டிய தருணமாக இந்தப் படமும் ஒரு காட்சிப் புலத்தையும் சிந்தனைப் புலத்தையும் விட்டுச் செல்கிறது. இதன்மூலம் இந்தப் போராட்டம் பற்றிய ஒரு கனதியான அறிமுகத்தை இந்தப் படம் வழங்குகிறது.

– ரவி (22022014)

Triler:    http://www.cineman.ch/movie/2013/MillionsCanWalk/trailer.html

P.V. RajgopalInterview on Swiss TV :

http://www.srf.ch/player/tv/sternstunde-religion/video/rajagopal-jeder-schritt-eine-spirituelle-tat?id=7ccfe9c1-cb30-4117-90ac-bf23f9b45e75

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: