றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

24 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஓர் ஆளுமை றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

 

“…ஏப்ரல் 23, 1990 ரைம் சஞ்சிகையில் வெளிவந்த இக் கட்டுரை சுவிஸ் மனிதம் இதழ்-6 இல் (1990 யூலை , ஓகஸ்ட்) தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இக் கட்டுரை வெளிவந்த ரைம் சஞ்சிகை இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது…”

அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்தவரும் Inter Press Agency யைச் சேர்ந்தவருமான பத்திரிகையாளர் றிச்சர்ட் டி சொய்சா(31) பெப்ரவரி, 1990 பொலிஸ் சீருடையணிந்த ஆயுதமேந்திய அறுவரால் கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் இரண்டு குண்டுகள் தலையில் பாய்ந்துள்ள நிலையில் கடற்கரையில் பிணமாகக் கிடந்தார்.

1988 இன் பிற்பகுதியிலிருந்து ஒரு வருட காலத்துள் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். பிரேமதாச அரசால் அமைக்கப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின்”  கொடிய வேட்டையாடலைக் கண்டு 1989 இன் இறுதிக்குள் தங்களின் முதுகெலும்பை முறித்து விடுவார்களோ என பெரிதும் கவலையுற்றிருந்தனர் ஜேவிபியினர். ஆனாலும் தமிழர் வாழும் பகுதியில் மூர்க்கத்தனமான சுபாவமுள்ள ஆயுதமேந்திய குழுவினரைவிடவோ ஜேவிபியினரை விடவோ, பிரேமதாச அரசு ஒரு துளியளவேனும் பத்திரிகைச் சுதந்திரத்தை வழங்கமாட்டாது என்பதனை பத்திரிகையாளர்கள் கூடிய கெதியில் அறிந்துகொண்டனர்.

1970 க்கு முன்பவரைக்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனங்கள் ஆசியாவிலேயே மிகச் சிறந்த ஸ்தாபனங்களாக விளங்கின. 1985-87 இடையில் உள்நாட்டுப் பத்திரிகைகளை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிகழ்வும் இரு பத்திரிகையாளர்களைக் கொன்ற சம்பவமும் பத்திரிகை ஸ்தாபனங்களை (முதன்முதலாக) பயமுறுத்தலுக்கு உள்ளாக்கின. 1987-90 இடையில் இந்திய இராணுவமும் அதனுடன் சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எப் உம் முன்னையவர்களைவிட எந்தவிதத்திலும் சளைக்காத விதத்தில் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின. விடுதலைப்புலி ஆதரவளாரான சின்னத்துரை திருச்செல்வம் எனும் பத்திரிகையாளருக்கு கொலைப் பயமுறுத்தல் விட்டனர். அவர் நாட்டைவிட்டு தப்பியோடி கனடாவில் தஞ்சம் புகுந்தார். அவரின் மகனை சுட்டுக்கொன்று வீட்டையும் சேதப்படுத்தினர் ஈபிஆர்எல்எப் இனர்.

அப்பொழுது அந்தத் தீவின் தென்பகுதியில் கொலைகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. இரு வருடங்களுக்கு முன்புவரை இலங்கைப் பத்திரிகையாளர் துணிந்து எழுதினர், ஜேவிபி தான் இக் கொலைகளுக்கு பொறுப்பு என அம்பலமாக்கினர். அவர்களில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு ஜேவிபியிடமிருந்து மரணதண்டனைக்கான அச்சுறுத்தல் விடப்பட்டன.ஜேவிபி, விடுதலைப் புலிகள் என்பன தங்களுக்கு அனுசரணையாக பத்திரிகைகளை தங்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த முனைவதைப் போலவே பிரேமதாச அரசும் அதன் சொந்த காரணங்களுக்காக செய்தி ஸ்தாபனங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டு மனித உரிமை மீறல்களை மூடிமறைக்க முயல்வதாகத் தோன்றுகிறது.

றிச்சர்ட்.டி.சொய்சா அரச ஆட்கொல்லிப் படைகளின் அடாவடித்தனங்களையும் செயற்பாடுகளையும் பல ஆவணங்களைக் கொண்டு அம்பலப்படுத்தினார். கதைகளாகவும் சித்தரித்து எழுதினார். இதுமட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து வந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தினருடன் அரசு நடந்துகொண்ட முறைகளையும், அவர்கள் பற்றி பேசிய பேச்சுகளையும் ஒழுங்காகச் சேகரித்தார். இதன்மூலம் அரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அவர் இருந்திருக்கிறார். டி.சொய்சா லிஸ்போன் நகரில் புதிய பதவியொன்றை ஏற்க இருந்ததாகவும், இதன்மூலம் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மேற்குலகின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் மிகத் தீவிரமாக செயற்பட எண்ணியிருந்ததாகவும் இதுவே அவர் கொல்லப்பட்டதற்கான முக்கிய காரணம் எனவும் அவரின் நண்பர் ஒருவர் கூறினார்.

மேலும் அரசு குறிவைத்திருந்த இன்னொரு ஆபத்தான இலக்கினுள்ளும் தன்னைப் புகுத்திக்கொண்டார் டி.சொய்சா. பிரேமதாசவை தனிப்பட்ட முறையில் சினமூட்ட வைக்கக்கூடிய திரைப்படமொன்றை தயாரிப்பதிலும் ஈடுபட்டிருந்தார். இதுமட்டுமன்றி “யார் இவர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற நாடகத்தையும் எழுதினார். இது பிரேமதாசவின் ஆட்சிமுறையை சித்தரிக்கம் நாடகமாகும். பெப்ரவரி மாதம் இந் நாடகம் அரங்கேற்றப்பட இருந்த முதல்நாளே அந் நாடகத்தின் தயாரிப்பாளர் (டி.சொய்சாவின் நண்பர்) கடத்தப்பட்டார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இச் சம்பவம் நடந்து மூன்று கிழமையின் பின் டி.சொய்சா கொலைசெய்யப் பட்டிருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: