//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்
சீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா ?
பாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார். அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.
சீமான் பாலுமகேந்திராவிடம் குண்டைக் கொடுத்து தனது வெளிக்குள் ஒரு அரசியல் “படைப்பாக்கம்” செய்ய முனைவதுபோலவே, “போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது” என புரிந்துகொள்ள முயற்சிப்பதும் வகையடங்குகிறது. எல்லோரையும் போராளிகளாக பார்க்க அவாப்படுவது இந்த இரண்டு முரண்நிலைகளிலும் நடந்துவிடுகிறது. பாலு மகேந்திரா ஒரு கலைப் போராளி அல்லது படைப்பாளி என்ற இன்னொரு தளத்தின் சுயத்தை ஏன் இயல்பாய் அங்கீகரிக்க முடியுதில்லை. ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?
//பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.// – பாலன் தோழர்
எல்லாத் துறைகளையும், மனிதர்களின் திறமைகளையும் அரசியல் போராளியம் (றேஞ்ச், தகுதி என்ற அளவுகோல்களுடன்) கொண்டு ஒப்பீடு செய்யப் போகிறோமா? போராளிகளுக்கு புனிதம் பூசப்போகிறோமா? மனிதர் சம்பந்தப்பட்ட மதிப்பீடுகள் ஈழத்தமிழருக்கு போராளி என்ற நியமத்திலிருந்து (norm) பரீட்சிக்கப்படுகிறதா?
படிச்சுக்கொண்டிருந்த பெடியன் பெட்டையிலிருந்து புகையிலைக்கண்டுக்கு மருந்தடிச்சுக்கொண்டிருந்தவன் ஈறாக விஞ்ஞானியாய் ஆராய்ச்சியாளராய், கட்டடக் கலைஞராய் வர கனவுகண்டவரையெல்லாம் வள்ளத்திலை ஏத்தி அனுப்பி போராளியாக்கிக் காட்டி களைச்சுப் போனம். பாலு மகேந்திரா என்ற ஒரு கலைஞனையும் ஏத்தவேண்டாம். அல்லது அவன் ஏன் இதிலை ஏறயில்லை என மூளையின் எங்காவது ஒரு மூலைக்குள் நரம்பிலை எறும்பூரவும் வேண்டாம். வித்தியாசங்களை அங்கீகரிக்கும் வெளியில் வைத்து நரம்பூரும் இந்த எறும்புகளை கழற்றிவிடுவோம்.