“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.
யோசிச்சுப் பதில் சொல்ல இது என்ன அரசியல் கேள்வியா என்ற காரணமும் இருக்கலாம். எனது நண்பனொருவன் எடுப்பெடுத்து சொல்வதுபோல் “உனக்குத் தெரியாது.. உனக்குத் தெரியாது…” என ஒவ்வொருவராக கேட்டு, நாமெல்லாம் “எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது..” என்று பதில் சொல்லவும், “தெரியாது.. அப்ப எனக்குத் தெரியும்” என அவன் ஒரு பதிலை (உருவாக்கிச்) சொல்லவும் நான் பழக்கப்பட்டில்லைத்தான். என்றாலும் அதுவாகவும் இருக்கலாம்.
வெள்ளைக்காரனுக்கு எங்கை நம்ம நாட்டைப் பற்றி தெரிஞ்சிருக்கும் என்ற அசட்டையாக அல்லது முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். நமது நாட்டைப் பற்றிய கேள்விக்கு எனக்கு விடை தெரியாது என்று சொல்வதில் “மானப்” பிரச்சினையுமிருக்கலாம். இந்த எல்லா “இருக்கலாம்”களோடு எனது பதில் இப்படியாய் இருந்தது. “பத்துப் பதினொரு வகை இருக்கு” என்று சொன்னேன். சமைக்கிறதுக்கு… பழமாய் சாப்பிடுறதுக்கு… அதிலும் பழத்தின் வகைகள், அதன் ருசி, அதன் நிறங்கள், முக்கியமாய் இரதை வாழையின் மருத்துவக் குணம்… இப்படியாய் ஒரு விளக்கம் வேறு கொடுத்தேன்.
அவர் சிரித்துவிட்டு எழுந்து சென்றார். கையில் ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தார். “29 வகைகள் உங்கள் நாட்டில் இருக்கின்றன.. இந்த புத்தகத்தைப் படி..” என்றார். தூக்கிவாரிப் போட்டது. பனை மரமோ தென்னை மரமோ எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் என்றுகூட பள்ளிக்கூட வாத்திக்கும் தெரியாத நிலையில், எனக்கு எப்பிடி தெரியுமாம். நல்ல காலம் ஒரு வாழை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழக் கூடியது என்று கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அவிழ்ந்து விழுந்திருக்கும். நல்ல காலம் அதை அவர் கேட்கவில்லை. ஒருவேளை அந்தக் கேள்வியை அவர் கேட்டிருந்தால் பதிலை இப்படியாய்தான் நான் சொல்லியிருக்கவும்கூடும். “அதெங்கை வாழுறது, நாங்கள் வெட்டித்தான் விழுத்துவோம்” என ஒரு பதில் என்னிடமிருந்து வழுக்கி விழுந்திருக்கவும்கூடும்!
*
இன்றோ தகவல் தொழில்நுட்பம் விரல்களுக்கிடையில் அருவியாய்ப் பாய்கிறது. இன்றும் புகலிடம் சார்பாக இலங்கை அல்லது தமிழக தமிழர்கள் சார்பாக ஒட்டுமொத்த தகவலாளர்களாக அல்லது பிரதிநிதிகளாக உருமாறுவோரை வாசிக்கும்போது இந்த வாழைமரக் கதை ஞாபகத்தில் வந்துகொண்டேயிருக்கும்.
(2015)