சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.
25.4.94 தேர்தலுக்கு முன்தினமான அன்று. தென்னாபிரிக்க வெள்ளையின பண்ணையார் தனக்கு சொந்தமான 500 கெக்ரர் விவசாய நிலத்தை பார்வையிட்டுவிட்டு வீடு திரும்புகிறார். தனது மாளிகையைச் சுற்றி பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிக்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகிறார். தனது வேட்டை நாய்களை திறந்துவிடுகிறார். தனது துப்பாக்கிக்கு குண்டுகளை நிரப்பி அருகில் வைத்தபடி மாலைநேர மகிழ்ச்சிக்காய் தான் வாசிக்கும் பியானோவின் மேல் தலையை பதித்தபடி சோகமாக உட்கார்ந்திருக்கிறார். இதுவரை காலமும் ஆபிரிக்க நாட்டின் சொந்த மக்களாகிய கறுப்பினத்தவரை மோசமாக அடக்கியொடுக்கி தமது வாழ்வை வலுப்படுத்திக் கொண்ட வெள்ளை இனத்தவர்களுக்கு அந்த இரவு அப்படித்தான் கழிந்தது.
ஆம். தென்னாபிரிக்காவின் மைந்தனான நெல்சன் மண்டேலாவை அந்த நாட்டின் ஜனாதிபதியாக்கி ஒரு ஆபிரிக்க நாள் பிறந்தது மறுநாள்.
7 அடி அகலமும் 9 அடி நீளமும் கொண்ட சிறைக் கூண்டுக்குள் 27 வருடங்கள் இருந்தபடி ஆபிரிக்கக் கனவுகளை அடைகாத்தார். விடாப்பிடியாக சமரசங்களை மறுதலித்தார். வன்முறை வழியை கைவிடுவதாக உறுதி தெரிவித்தால் விடுதலையாகலாம் என்ற அரசின் நிபந்தனையை மறுத்தார். தனது 70 வது பிறந்த தினத்தை அவர் தனது குடும்பத்தினரோடு கொண்டாட 6 மணித்தியாலங்களை வழங்க வெள்ளையின அரசு அனுமதித்தபோதும் அதையும் அவர் மறுத்தார். “எனது மக்கள் எனது நாடு.. எனது மக்களை சந்திக்க எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அவர்களை சுதந்திர மனிதனாக நான் சந்திப்பேன்“ என்று பதிலளித்தார். அவருடைய சமரசமற்ற தன்மையும், விரிந்த பார்வையும், நடைமுறைச் சாத்தியங்களின் எல்லைகளை தரிசித்த அவர் சாதுரியமும் தென்னாபிரிக்காவை விடுதலை செய்தது.
1964 இலிருந்து 1982 வரை றொப்பன் தீவில் (Robben Island) உயர் பாதுகாப்புள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு கேப் ரவுணின் பொல்ஸ்மூர் சிறைச்சாலையிலும் (Pollsmoor Prison in Cape Town), கடைசியாக விக்ரர் வெர்ஸ்ரர் சிறைச்சாலையிலுமாக (Victo Verster Prison) 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை வாழ்ந்தார். தனது வாழ்நாளை இனவொதுக்கல் (apartheid) கொள்கைளை பூண்டோடு ஒழிப்பதற்கு அர்ப்பணித்தார். ஆனாலும் இனவெறியூட்டி அவர் போராட்டத்தை வளர்த்துச் செல்லவில்லை. வெள்ளை இனத்தவர் உட்பட தென்னாபிரிக்காவின் எல்லா இனத்தவர்களுக்குமான சம உரிமைகளை வலியுறுத்தியபடியே இருந்தார். தனது வாழ்நாளின் இளமைப் பருவத்தை காவுகொண்ட சிறை வாழ்க்கையால் ஏற்படக்கூடிய பழிவாங்கல் உணர்வை புறந்தள்ளி, தனது அர்ப்பணிப்பை அர்த்தமுள்ளதாக்கினார். இது அவரை நமது வாழ்நாளில் கண்ட ஒரு ஆளுமை மிக்க, மனவுறுதிகொண்ட தலைவராக உயர்த்தியது.
சிறையில் இருந்த காலத்தில் வெளிச் செய்திகள் மூடுண்ட நிலையில் அவரும் தோழர்களும் இருந்தபோது, அவருக்கு சிறைக்காவலர் சிலருடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் குப்பைகொட்டும் இடத்துக்கு மண்டேலாவையும் தோழர்களையும் இரகசியமாக அழைத்துச் செல்வது வழமையாக மாறியது. அங்கு செய்தித்தாள் துண்டுகளை கிளறி எடுத்து துப்பரவு செய்து இரகசியமாக சிறைக்குள் எடுத்துச் செல்வர். இதன்மூலம் சம்பவங்கள் நடந்து மூன்றோ நான்கோ நாட்களின் பின் தமக்கு இச் செய்திகள் எட்டிவிடுவதாக அவர் விடுதலையானபின் பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார். இவ்வாறாக சிறையிலும்கூட ஆபிரிக்கக் கனவுகளுடன் அந்த மக்களின் உணர்வுகளுடன் அவர் வாழ்ந்தார்.
* * *
தென்னாபிரிக்காவினுள் வெள்ளையர்கள் கால்வைத்து 500 வருடங்களாகிவிட்டது. 1487 இல் போத்துக்கீசரின் வரவுடன் ஆரம்பித்ததுதான் வெள்ளையினத்தவரின் வருகை. ஆனாலும் Hottentots (இவர்கள் 4000 ஆண்டுகளுக்குமுன் தென்னாபிரிகாவினுள் வந்த கறுப்பின குடியேற்றவாசிகள்) இனால் போர்த்துக்கேசர் 60 பேரும் தலைமைதாங்கிய அல்மைடாவும் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் அவர்கள் தென்னாபிரிக்காவை விட்டுச் சென்று மொசாம்பிக், அங்கோலா நாடுகளுக்குள் புகுந்து காலனியை அமைத்துக்கொண்டனர். 1602 இல் டச்சுக்காரரின் வருகையுடன்தான் தென்னாபிரிக்காவின் மீதான காலனியாதிக்கம் தொடங்குகிறது. தொடர்ந்து பிரெஞ்சுக்காரர், யேர்மனியர், ஸ்கன்டிநேவியர் என தொடர்ந்தன வெள்ளையரின் குடியேற்றங்கள். 1795 இல் பிரித்தானியாவின் துருப்புகள் கால்வைத்தன. வெள்ளையர்களின் முழுமையான காலனி நாடாக தென்னாபிரிக்கா மாறியது.
இவ்வாறாய் அந்த மண்ணின் கற்காலத்திலிருந்து வாழ்ந்த மண்ணின் மனிதர்கள் Bushmen or San ஆகியோரும், 4000 வருடங்களுக்குமுன் வந்து குடியேறிய Hottentots கறுப்பினத்தவரும், அதன்பின் வந்த Bantu மொழி பேசும் கறுப்பினத்தவரும் தமக்கிடையேயான குழுப் போர்களை எதிர்கொண்ட வரலாறும், அதன்பின் அவர்கள் எல்லோருமே படுகொலைகளையும் போர்களையும் வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எதிர்நோக்கிய வரலாறும் என நீண்ட வன்முறை வரலாற்றைக் கொண்டது தென்னாபிரிக்க மண். 1668 இல் ஆரம்பித்த அடிமை முறை 200 வருடங்களாக நீடித்தது. வேலைக்கான ஆட்பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய வெள்ளையர்கள் தொடக்கிவைத்த மனிதவிரோத முறைதான் அடிமை முறை. குயினியா, அங்கோலா, மடகஸ்கார், யாவா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இந்த அடிமைகள் டச்சுக்காரர்களால் கொண்டுவரப்பட்டார்கள். 1795 இல் பிரித்தானியர்கள் தென்னாபிரிக்காவை ஆக்கிரமித்தபோது பதினேழாயிரம் அடிமைகள் அங்கு இருந்தார்கள்.
வெள்ளையின மேலாதிக்கம் விரிவடைந்து 1910 இல் தென்னாபிரிக்க சுதந்திர தினம் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற முறைமையின் அங்கத்துவம் வெள்ளையினத்தவருக்கு மட்டுமானதாக உருப்பெற்றது. அது 1913 முதல் வெள்ளையினத்தவர் அல்லாதோர் நிலச்சொந்தக்காரர்களாவதை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுவந்தது. 10 வீதமான வெள்ளையர்களுக்கு 80 வீதமான தென்னாபிரிக்க மண்ணையும், அந்த மண்ணின் சொந்தக்காரர்களான கறுப்பினத்தவர்கள் உட்பட மற்றைய இனத்தவர்களுக்கு (அதாவது 90 வீதமானவர்களுக்கு) 20 வீதமான நிலத்துண்டையும் பிய்த்துப் போட்டிருந்தது வந்தேறிகளான வெள்ளையினத்தவரின் ஆட்சி.
ஆபிரிக்க கறுப்பின மக்கள் இந்த விலங்கோடு வாழவிடப்பட்டிருந்த சூழலுள்தான் 1918 இல் நெல்சன் மண்டேலா பிறந்தார். அப்போ ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தோற்றம் பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.
வெள்ளையின மேலாதிக்கம் மேலும் கொழுப்பேறி 1948 இல் அப்பாதெயிற் (apartheid) எனப்படும் இனவொதுக்கல் கொள்கை சட்டபூர்வமானதாக பாராளுமன்றத்தினுள்ளிருந்து நாற்றமெடுக்கத் தொடங்கியது. இந்த நாற்றத்துக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் Good neighbourliness (நல் அயலத்துவம்) என்பது. “இது பிழையாக விளங்கிக்கொள்ளப்படக் கூடாது” என்றொரு கேடுகெட்ட விளக்கம் வேறு கொடுத்தார்கள் வெள்ளையின ஆட்சியாளர்கள்.
1950 இல் குடிசனப் பதிவுச் சட்டத்தில் எல்லா ஆபிரிக்க மக்களும் வெள்ளையர், கறுப்பர், மற்றைய நிறத்தவர் (இனக்கலப்பு) என நிறரீதியாக வகைப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்பட்டனர். வெள்ளையினத்தவரின் பிரதேசங்களுக்குள் மற்றைய இனத்தவர் அல்லது நிறத்தவர் வாழவோ, வேலைசெய்யவோ அல்லது நிலங்களை வாங்கவோ சட்டப்படி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வெள்ளையினத்தவர் அல்லாதோர் வெள்ளையினத்தவர் வாழும் பிரதேசங்களுக்குள் செல்ல பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு தமது சொந்த நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு, அந்நியராக உள்நுழைந்த வெள்ளையின காலனிய மேலாதிக்கம் கறுப்பர்களை கட்டுப்படுத்திய சூழ்நிலைகள் உக்கிரமான போராட்டத்தின் தேவையை தோற்றுவித்தது. நெல்சன் மண்டேலா இதற்குள்ளிருந்து போர்க்குணமிக்கவராய் உருவாகினார்.
* * *
1944 இல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இன் இளைஞர் அணி (ANCYL) தோற்றுவிக்கப்பட்டது. மண்டேலாவின் போர்க்குணமும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைமுறையும் பலரையும் ஈர்த்தது. 1947 இல் அவர் இந்த இளைஞர் அணியின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த அணியில் வோல்ரர் சிசிலு, ஒலிவர் தம்போ ஆகியோரும் ஆளுமை மிக்க இளைஞர்களாக செயற்பட்டார்கள்.
தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். ஒரு வழிமுறை தோற்றுப்போய்விட மாற்றீடாக அடுத்த வழிமுறையை தேர்ந்தெடுக்கும் இயல்புப் போக்கு அவரிடம் காணப்பட்டது. அத்தோடு இனவாதியாக அவர் உருவாகியிருக்கவில்லை. இவரின் இந்த அணுகுமுறைகள் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிராக எல்லா இனத்தவரையும் இணைப்பதில் வெற்றிகண்டது. கறுப்பித்தவர், கலப்பு நிறத்தவர் மட்டுமல்ல இனவொதுக்கலுக்கு எதிரான வெள்ளையினத்தவரையும் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றவைத்தது. அவர் ஆகர்சிப்புக்கு உரியவராக மாறினார்.
சார்ப் வில்லே (Sharpville) நகரில் 1960 இல் பாஸ் முறை மறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது 69 பேர் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டனர். 180 பேர் காயத்துக்கு உள்ளானார்கள். இந்த நிகழ்வு நடந்தபின் ஏஎன்சியும் மற்றைய கறுப்பினத்தவர்களின் அமைப்புகளும் அரசால் தடைசெய்யப்பட்டன.
மண்டேலா அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார். ஒரு இராணுவப் பிரிவை அமைத்துக்கொள்வதில் (தலைமறைவுக்குத் தள்ளப்பட்ட) ANC யை உடன்பட வைத்தார். Umkhonto we Sizwe என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மண்டேலா அரசால் தீவிரமாக கவனிக்கப்பட்டார். 1962 இல் அவர் இராணுவப் பயிற்சி பெறுவதற்காக இரகசியமாக தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறியிருந்தார். சி.ஐ.ஏ யின் உளவுத் தகவலின்படி (ஆதாரம்: த கார்டியன் 15.8.1986, த ரைம்ஸ் 4.8.1986) இந்த விடயம் தென்னாபிரிக்க அரசுக்குத் தெரியவந்தது. மண்டேலா நாடு திரும்பியதும் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 5 வருட கடுழியச் சிறைத்தண்டனை தீர்க்கப்பட்டது.
ஆனால் இத் தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின் மீண்டும் பிரபலமான (Rivonia Trial) றிவோனியா விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அரசுக்கு எதிரான நாசவேலையில் ஈடுபடுவதாக தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு கம்யூனிச தடுப்பு சட்டத்தின்கீழ் ஆயுள்தண்டனையாக அறிவிக்கப்பட்டது. அவரோடு சேர்த்து இன்னும் 8 தோழர்களுக்கும் இதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இது இனவொதுக்கல் கொள்ளைக்கு எதிராகப் போராடியவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் போராட்டம் வேகம் பெற்றது. 1960 களின் இறுதிப் பகுதிகளில் வருடமொன்றுக்கு ஆறு இலட்சம் பேர் வீதம் கைதுசெய்யப்பட்டனர். இனவொதுக்கல் கொள்கையை எதிர்த்து நின்றதே அவர்கள் செய்த குற்றம்.
நெல்சன் மண்டேலா ஒருவிதத்தில் அதிஸ்டசாலியாக இருந்தார். வெள்ளையின ஆட்சி கறுப்பின மாணவர்களுக்கான கல்வி வசதியை சட்டபூர்வமாக கீழமுக்கி வைப்பதற்கு முன்னர் அவர் தனது படிப்பை மேற்கொள்ள முடிந்ததுதான் அந்த அதிர்ஷ்டம். 1978 இன் சராசரி புள்ளிவிபரப்படி மாணவர் ஒருவருக்கான செலவு வெள்ளையினத்தவருக்கு 696 டொலர் ஆகவும், கறுப்பினத்தவருக்கு அது வெறும் 45 டொலராகவும் இருந்தது இனவொதுக்கலின் பரிமாணத்தை காண்பிக்கிறது.
வெள்ளையினத்தவர் மட்டும் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில் 1948 இல் டச்சுக்காரரையும் ஆங்கிலேயர்களையும் கொண்ட தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தொடர்ச்சியான இனவொதுக்கல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதுவே ஆபிரிக்க மக்களின் வாழ்க்கை முறைமையாக உருவமைக்கப்பட்டது. அவர்களிடம் இரு தேர்வுகள் மட்டுமே எஞ்சிநின்றன. ஒன்று இனவொதுக்கல் கொள்ளையை ஆதரிப்பவராக இருப்பது அல்லது எதிர்ப்பவராக இருப்பது. apartheid (இனவொதுக்கல்) என்பது பிழையானது, அதில் கேள்விக்கிடமில்லை என்ற ஆத்மார்த்த ரீதியிலான தீர்மானத்தை எடுப்பது சுலமாக இருக்கலாம். ஆனால் இனவொதுக்கல் கொடுமைக்கு எதிராக எப்படி வாழ்வது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்து பயமுறுத்தியது. இதற்கு அவரவர் தனது சொந்த வழிமுறையில்தான் இயங்கவேண்டியிருந்தது. இந்த மங்கலான வெளியில் நின்றுபிடிக்க முடியாத பலரும் தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு பகுதியினர் ஆயுதமேந்திய போராளிகளுடன் இணைந்தனர். மற்றைய பகுதியினர் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த கொடுமைமிகு ஓரங்கட்டலை எதிர்த்து ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நெல்சன் மண்டேலா முன்னின்று நடத்தினார். 1948 இல் தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வந்ததிலிருந்து 1950 களின் முழுப் பகுதியும் மண்டேலாவை அரச அதிகாரமானது தடை, கைது, சிறைவாசம் என பல வடிவிலும் துரத்தியபடியே இருந்தது. மண்டேலா இதை முகங்கொடுத்தபடியே இருந்தார். அவர் உறுதிபட திரும்பத் திரும்ப கூறிக்கொண்டேயிருந்தார், “நான் இனவாதத்துக்கு (racism) எதிராகவே இருக்கிறேன். ஏனெனில் அது காட்டுமிராண்டித்தனமானது என கருதுகிறேன். அது ஒரு வெள்ளையினத்தவரிடமிருந்து வந்தாலென்ன, கறுப்பினத்தவரிடமிருந்து வந்தாலென்ன அது எதிர்க்கப்பட வேண்டியது“ என்று பதிலளித்துக்கொண்டிருந்தார். மோசமான நிறவெறியை, இனவொதுக்கலை கறுப்பினத்தவர் எதிர்கொண்ட நிலையிலும் இனவாத்துக்கு எதிராக கோட்பாட்டுத் தளத்தில் அவர் இதை எதிர்கொண்டாரேயொழிய, இனத்துவேசத்தை ஊட்டி கறுப்பின மக்களை உசுப்பேற்றி, அணிதிரட்டும் குறுக்குவழியில் ஈடுபடவில்லை. இந்த சமூகப் பார்வை அவரை பேச்சுவார்த்தை மேசைக்கு நம்பிக்கையுடன் அழைத்துவர -காலம் தாழ்த்தியாவது- சிறைக் கதவை திறந்துவிட்டது. அவரை அந்த நாடு அரசுத் தலைவராக அங்கீகரிப்பதில் எதிர்த்தரப்பினரிடமிருந்த தயக்கங்களையும் அது கணிசமானளவு களைய உதவியது.
1944 இல் நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் இளைஞர் அணியாகப் (ANCYL) பரிணமித்தபோது, தெளிவாக தமது கொள்கையை வரையறுத்தார்கள். உண்மையான ஜனநாயகத்தை சாதிப்பதே தமது செயற்பாட்டின் திசைவழி என அறிவித்தார்கள். அதை ஒரு விரிந்த பார்வையில் சொன்னார்கள். “தென்னாபிரிக்காவில் மட்டுமன்றி, ஆபிரிக்கக் கண்டம் முழுவதுமான ஜனநாயகத்துக்கான போராட்டத்தை சாதிப்பதுதான் எமது இலக்கு. ஒரு உண்மை ஜனநாயகத்தில் எல்லா தேசிய இனத்தவர்களினதும், சிறுபான்மையினரதும் அடிப்படை மனித உரிமைகள் அரசியலமைப்புச் சட்டமூலம் பாதுகாக்கப்பட வழியிருக்கும். எனவே இளைஞர் அணியானது பாரபட்சமான சட்டங்களையும் இனவொதுக்கல் முறைமையையும் இல்லாதொழிக்கப் போராடும். மற்றது, ஆபிரிக்கர்களின் முழுமையான பிரசாவுரிமையை அனுமதிப்பதன்மூலம் நேரடி பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஜனநாயக அடிப்படையில் சாதிக்கப்படுவதற்குமாக நாம் போராடுவோம்” என்று அறிவித்தார்கள். இதன்மூலம் இப் போராட்டத்துக்கான அரசியல் களத்தில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் மட்டுமல்ல, புத்திஜீவிகளையும் பங்கெடுக்க வழிதிறந்து விட்டனர்.
1912 இல் உருவாக்கப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ஏஎன்சி) அமைதிவழிப் போராட்டம் தோல்விகண்ட நிலையிலும், 1960 இல் அது (கறுப்பினத்தவரின் மற்றைய அமைப்புகளும் உட்பட) தடைசெய்யப்பட்ட நிலையிலும், 1960 களில் இராணுவ ரீதியான வழிமுறைக்கு தள்ளப்பட்டது. இதனிடையேயும் தடையுத்தரவுகளை மீறி மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். இதில் Winne Mandela (1955 இல் முதல் மனைவியுடனான மணமுறிவின்பின் 1958 இல் மண்டேலா வின்னியை திருமணம் செய்தார்) வுக்கும் ஒரு முக்கிய பாத்திரம் உண்டு. 1976 இல் இனவொதுக்கலுக்கு எதிரான முதலாவது வன்முறைப் போராட்டமாக Soweto Uprising வெடித்தது. 1980 களின் நடுப்பகுதிவரை இது தொடர்ந்தது.
தனது இனவொதுக்கல் முறைமையை இக் காலப் பகுதியில் அரசு தீவிரப்படுத்திக்கொண்டிருந்த நிலைமையானது சர்வதேச ரீதியாக இவ் ஒடுக்குமுறைக்கெதிரான ஆதரவை பெருக்கியது. நெல்சன் மண்டேலாவையும் அவரது நீண்டகால சிறைவாழ்வையும் முன்னிறுத்தி ANC சர்வதேச ரீதியிலான ஆதரவை திரட்டியது. சர்வதேச அழுத்தம் அதிகரித்தது. இதனுடன் சேர்த்து, மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினதும் விளைவு 1980 களின் இறுதிப் பகுதியில் வெள்ளையினத் தலைவர்களை வழிக்குக் கொண்டுவந்தது. 1988, 1989 இல் ஆட்சியாளர்கள் புலம்பெயர்ந்த ஏஎன்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய ஆட்சித் தலைவராக இருந்த கிளார்க் இன் ஆளுமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
போத்தாவின் மோசமான ஆட்சிக் காலம் 1989 ஓகஸ்ற் 14 அன்று முடிவடைய மறுநாள் டி.கிளார்க் பதவியேற்றார். 27 வருட சிறைவாழ்க்கையிலிருந்து 1990 பெப்ரவரி மாதம் நெல்சன் மண்டேலாவை நிபந்தனையின்றி விடுவிக்கும் தீர்மானத்தை அவர் எடுத்தார். பெப்ரவரி 1990 மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். ஏஎன்சி யின் உத்தியோகப்பற்றற்ற தலைவராக நெல்சன் மண்டேலா இனவொதுக்கலை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். “இதுதான் நேரம். எல்லோரும் மேசைக்கு வந்து உங்கள் உங்கள் இடங்களை எடுத்துக்கொள்ளுங்கள்“ என எல்லா அமைப்புகளுக்கும் டி.கிளார்க் அழைப்பு விடுத்தார். 7.6.1990 இல் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.
7.6.1991 இல் ஏஎன்சி யின் முதலாவது தேசிய மாநாடு கூடியது. நெல்சன் மண்டேலா அதன் தலைவராக தெரிவாகினார். ஏஎன்சியின் உறுதியான இனவாதம் (racism) அற்ற ஜனநாயகக் கொள்கையானது இரு பக்கத்து அரசியல் சக்திகளிடையேயும் இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக எடுத்துச்செல்வதற்கான நியாயத் தன்மையையும், நேர்மைத் தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1991 இலிருந்து 1993 காலப்பகுதியுள் ஒரு இடைக்கால அரசியல் யாப்பு வரையப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டது. 1993 இல் மண்டேலா, கிளார்க் இருவருக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 1994 இல் பல்லின மக்களும் பங்குபற்றிய தேர்தல் முறை மூலம் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராக வரலாற்றில் இடம்பெற்றார். அவரது அரசில் கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் மட்டுமன்றி மற்றைய நிறத்தவர்கள், இனத்தவர்களும் அத்தோடு கம்யூனிஸ்டுகள், லிபரல் கொன்சவேற்றிவ் இனர், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் என ஒரு வானவில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.
* * *
1990. விக்ரர் வேர்ஸ்ரர் சிறைச்சாலையின் வாசலில் தனது 27 வருட சிறைவாழ்க்கையை முடித்தபடி வெளியே வருகிறார் மண்டேலா. அன்றைய தினமே கேப் ரவுண் நகர மண்டபத்தின் பல்கனியில் தன் முஸ்டியை வானை நோக்கி உயர்த்தியபடி, “சுதந்திரத்தை நோக்கிய எங்கள் அணிவகுப்பு பின்னோக்கிச் செல்லாது“ என்று முழக்கமிட்டார். அங்கு கூடியிருந்த 50,000 மக்களின் ஆரவார ஒலிகளுக்கு மத்தியில் அவர் தனது உரையை நிகழ்த்தினார். கிளார்க் ஒரு நேர்மையானவர் என்பதை வெளிப்படையாக கூறிய அதேநேரம், “ஆனால் எங்களது போராட்டம் ஒரு தீர்மானகரமான கட்டத்தை வந்தடைந்துள்ளது. சாத்தியமான எல்லா களங்களிலும் எமது போராட்டத்தை தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். இத்தோடு நாம் ஓய்ந்துவிடுவோமாயின் பெரும் தவறொன்றை இழைத்தவர்களாக மாறிவிடுவோம். எங்களை எதிர்கால சந்ததி மன்னிக்காது” என்று முழக்கமிட்டார்.
27 வருட சிறைவாழ்க்கை அவரது வேட்கையையும் சமரசமற்ற தன்மையையும் அசைத்துவிட முடியாத போர்க்குணம் அவரது அறைகூவலில் வெளிப்பட்டது. சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.
வன்முறை வழியை கைவிடுவதாக ஒப்புக்கொண்டால் விடுதலைசெய்யப்படும் வாய்ப்புகள் (போத்தாவின் ஆட்சிக் காலத்தில்) அவருக்கு இருந்தது. வன்முறைமீது நம்பிக்கை கொண்டிருந்தார் அல்லது வன்முறையை ஒரு வழிமுறையாகக் கொண்டிருந்தார் அவர் என இலகுவான ஒரு வாசிப்பை இதற்குள்ளால் நிகழ்த்த முடியும். இங்குதான் அவரது அரசியல் சாதுரியம் வெளிப்படுகிறது. அவர் சொன்னார், “நீங்கள்தான் வன்முறையை தொடக்கினீர்கள். எமது வன்முறை பாதுகாப்புக்காக உருவாகியது. ஒடுக்கப்படும் மக்களின் அரசியற் செயற்பாடுகள் அல்லது வழிமுறைகள் ஒடுக்கப்படுவோரால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. எந்தவிதமான நிபந்தனைகளோடும் நான் விடுதலையாகத் தயாராக இல்லை.” என்றார்.
அது இன்னொரு விதத்திலும் முக்கியத்துவமானது. “எனது தோழர்களிலிருந்து என்னை தனிமைப்படுத்திவிடும் ஆபத்தையும் எனது தன்னிச்சையான -வன்முறை சம்பந்தப்பட்ட- முடிவு ஏற்படுத்திடக்கூடியது. அதனால் நிபந்தனையுடன் கூடிய விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை“ என்று தான் அப்போ தீர்மானகரமாய் இருந்ததாக பின்னாளில் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் வன்முறை மீதான கேள்விகளை சிறைவாழ்க்கை அவரிடம் எழுப்பியிருந்தது. இதையும் அதே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆபிரிக்க நிறவெறி அரசின் நிபந்தனையை ஏற்பதற்கான நியாயத்தை அது தர்க்க ரீதியிலும், ஆத்மார்த்த ரீதியிலும் வழங்கியிருந்தபோதும், அவர் உறுதிபட நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசியல் பார்வை மிக முக்கியமானது. அது ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஜனநாயகத்தன்மையை வெளிப்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, அரசியல் வெற்றியின் படிநிலையில் மேல்நோக்கி தள்ளிவிடக்கூடியது என்பதையும் எதிர்காலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. 11.2.1991 அன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட பின்பே அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து ஆயுதப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தார்.
சிறைவாழ்க்கையின் முழுக் காலமும் தனது தோழர்களைவிட எந்தவித வசதிகளையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தார். “சிறைக்கு வெளியில் உள்ளவர்கள் மக்களை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒன்றிணைப்பதற்காக எனது பெயரை பாவித்தார்கள். ஆனால் சலுகைகளை நான் ஏற்றுக்கொள்வது என்பது என்னையும்விட அதிக உழைப்பைச் செலுத்தியுள்ள தோழர்களுக்கு மோசம் செய்வதாகும்“ என்று கூறினார்.
* * *
சுதந்திர மனிதனாக, நிபந்தனைகளற்ற மனிதனாக அவர் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தார். அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட “ஒரு சர்வதேசப் பயங்கரவாதி” என்ற வரையறை அவர் காலடியில் விழுந்து நொருங்கியது. இதை ஒரு சுவையுடன் (அறியப்பட்ட நம் காலத்து விமர்சகர்) நோம் சொம்ஸ்கி கூறினார்… “1988 இல் பென்ரகன் ஏஎன்சி யை உலகின் ஒரு குரூரமான பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அப்போது கொலின் பவல் பென்ரகனில் இருந்தார். நெல்சன் மண்டேலாவை பயங்கவாதிகளின் பட்டியலிலிருந்து ஒருசில மாதங்களுக்கு முன்தான் (அதாவது 2008 இறுதிப் பகுதியில்) அமெரிக்கா நீக்கியது“ என சிரிப்பொலிகளின் மத்தியில் பயங்கரவாதப் பூச்சாண்டியைப் போட்டுடைத்தார்.
அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை (புஸ் ஆட்சியின்போது) மண்டேலா கடுமையாக விமர்சித்ததுடன், பிரிட்டனின் ஆட்சித்தலைவர் ரொனி பிளேயரை அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் என வர்ணித்தார். அமெரிக்காவின் இந்த முன்னாள் “பயங்கரவாதி“ மண்டேலா இப்போ தன் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது, தற்போதைய அமெரிக்கக் குரலாக ஒபாமா இப்படி சொன்னார், “ஒரு தலைமைக்கான தகுதிகள் கொண்ட தனித்துவமானவராக எம் எல்லோரையும் ஆகர்சிக்கக்கூடியர்களின் பட்டியலில் நெல்சன் மண்டேலா முதலாவதாக இருக்கிறார்“ என்றார்.
அறுபதுகளில் அமெரிக்க கறுப்பின மக்களின் எழுச்சியின் ஒரு குறியீடாக மாறிப்போன மல்கம் எக்ஸ் இனையும் நெல்சன் மண்டேலாவையும் இனவாதிகள் (racist) என விமர்சித்தவர்கள் உண்டு. சிலர் மாட்டின் லூதர் கிங் இன் அருகாமையில் மண்டேலாவை வைத்து மல்கம் எக்ஸ் க்கு எதிர்நிலையில் வைத்து விமர்சித்தனர். ஆனால் மண்டேலா, மல்கம் எக்ஸ் இருவரையும் புகலிட ஆபிரிக்கரான கிறிஸோ (Grisso) என்ற புத்திஜீவி வேறுமாதிரியாக வரையறை செய்கிறார். அவர்கள் இருவரும் இனவாதிகள் (racist) அல்ல, இனத்துவவாதிகள் (racialist) என்கிறார். இனவாதிகள் எப்போதுமே தமது இனத்தை மிதப்பாகக் காட்டுவதுடன் நின்றுவிடாமல், மற்றைய இனத்தின்மேல் தன் மேலாதிக்கத்தை நிறுவ முனைபவர்கள். ஆனால் இனத்துவவாதிகள் அப்படியல்ல. அவர்கள் ஒடுக்கப்படும் இனத்தை சமாந்தரமாக தூக்கிநிறுத்துவதற்கான கருத்தியலை முன்வைப்பவர்கள். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். அவர்கள் மற்றைய இனத்தை கருத்தியல் ரீதியில் கீழ்மைப்படுத்தவோ அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவோ மாட்டார்கள் என்கிறார்.
Apartheid (இனவொதுக்கல் கொள்கை) என்பதே இன அடிப்படையிலானது என்றானபோது, வெள்ளையின மேலாதிக்கம் என்றானபோது, அதை எதிர்கொள்வதில் ஒடுக்கப்படும் எல்லா இனங்களையும் இணைத்துக்கொண்டார் மண்டேலா. அதேநேரம் அவர் வெள்ளையினத்தவர்கள் மேலான கறுப்பினத்தவர்களின் அதிகாரத்துவத்தை அல்லது மேலாதிக்கத்தை நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டவரல்ல, அந்தத் திசைநோக்கிய கருத்தியலை முன்வைத்தவருமல்ல.
* * *
இன்றைய தென்னாபிரிக்காவை பல்லின மக்களையும் கொண்ட ஒரு “வானவில் தேசம்” என அழைப்பர். 400 வருடகால போர்கள், அடிமைப்படுத்தல்கள், படுகொலைகள் என ஒரு நீண்ட வரலாறும், 60 வருட இனவொதுககல் முறைமையின் சிப்பிலியாட்டத்தையும் கடந்துவந்த அந்த மக்களிடம் வன்முறைகள் இலகுவில் நீங்கிவிடும் என எதிர்பார்ப்பதற்கில்லை.
வேறுபட்ட பாரம்பரிய மொழிகளைப் பேசும் இனங்களுக்கிடையிலான சமூக ஊடாட்டம் இப்போதும்கூட குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு வளர்த்துச் செல்லப்படுவதற்கான வழி அடைபட்டே உள்ளது. வெள்ளையின வலதுசாரிகளின் நாசிசப் போக்குகளும் இன்னும் இருக்கிறது. தம்மைவிட கறுப்பினத்தவரின் மூளையின் எடை 120 கிராம் குறைவானது என்றவாறான பிரச்சார விசங்களை கக்குகிறார்கள் அவர்கள். பட்டினியால் வாடும் வெள்ளையர்களில் ஒருவரைத்தன்னும் காண முடியாதளவு வெள்ளையினத்தவரின் பொருளாதார பலம் இருக்க, மற்றைய இனத்தவர்களில் பட்டினியில் வாடுவோரும் மாண்டுபோவோரும்கூட கணிசமானளவு உள்ளனர். வளமான கல்வி வசதிகளை அனுபவித்து உயர்படிப்புகளை மேற்கொண்ட வெள்ளை இளைஞர்கள் பலர் வேலைதேடி மேற்குலகுக்கு நகர்கின்றனர்.
இன்றைய தென்னாபிரிக்காவில் (பெரும்பாலும் வெள்ளையரல்லாதோர்) வேலையற்றோர் 40 வீதமாக உள்ளனர். ஏஎன்சி அறிவித்திருந்த காணி மீள் பங்கீடு நடைமுறையில் சாத்தியமற்றுப் போயிற்று. 1993 இல் உலகவங்கி புதிய நிலப்பங்கீட்டு திட்டமொன்றை முன்மொழிந்திருந்தது. அதன்படி பெரும் நிலப்பரப்புகளை கையகப்படுத்தி வைத்திருந்த வெள்ளையின நிலவுடைமையாளர்களிடமிருந்து 30 வீதமான மத்திய அல்லது உயர்தர வளமுள்ள காணிகளை மீளப்பெற்று, அதை ஆறு இலட்சம் சிறிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பதாக ஒரு வரைவு முன்வைக்கப்பட்டது. ஆனால் இத் திட்டம்கூட ஏஎன்சி யின் 1993 ம் ஆண்டு புனரமைப்பு நிர்மாணிப்பு திட்டத்தின் தூர இலக்காக உருமாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. கடைசியில் இத் திட்டம் நிதி ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடைமுறைச் சாத்தியமற்றது என கைவிடப்பட்டது.
தென்னாபிரிக்காவின் அரச மட்டத்திலும் அதன் நிறுவனங்களிலும் ஊழல்கள் நிலவுவதாக செய்திகள் வருகின்றன. பொலிஸ் அராஜகம் படுகொலை சித்திரவதை என பொதுவெளியில் வைத்தே நடத்தப்படுமளவுக்கு தாண்டவமாடுகிறது. இனவொதுக்கல் கொள்ளை (apatheid) காலத்தில் நடந்த Sharpville படுகொலைக்குப் (1960) பின்னரான மோசமான கூட்டுப் படுகொலையாக கடந்த வருடம் நடந்த படுகொலை பதிவாகியிருக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது -எந்தவித எச்சரிக்கையும் செய்யப்படாமல்- திட்டமிட்டு பொலிசார் கூட்டாக நின்று சுட்டுத் தள்ளினார்கள். இதில் 34 பேர் கொலைசெய்யப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் பொலிஸ் அராஜகத்தின் சாட்சிகளாக இருக்கிறது.
இன்னொருபுறம் ஏஎன்சி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. பலமான எதிர்க்கட்சிகளற்ற, தனித்துவமான இடதுசாரிக் கட்சிகள் எதுவுமற்ற நிலையில் தென்னாபிரிக்க ஜனநாயகம் கேள்விகளோடு நிற்கிறது.
இந் நிலையில்தான் நெல்சன் மண்டேலா இளம் சந்ததியிடம் தனது குரலை ஒப்படைத்து சொன்னார், “எங்களால் ஏற்கனவே நடந்தவைகளை மாற்றமுடியாது. ஆனால் எதிர்காலத்தை மாற்ற முடியும். அது உங்கள் கைகளில்தான் உள்ளது“ என்றார்.
தென்னாபிரிக்காவின் வானவில் சேர்க்கையை அர்த்தமுள்ளதாய் நிகழ்த்திக் காட்ட நெடும் பயணம் செய்யவேண்டியிருக்கும். அதற்கான பலமான அடித்தளத்தை நிர்மாணித்ததில் ஏஎன்சி யினதும் மண்டேலாவினதும் பங்களிப்பு தென்னாபிரிக்க வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. ஆம், தென்னாபிரிக்க மக்களின் முழுமையான – அரசியல் பொருளாதார சமூக – விடுதலை நோக்கிய பயணத்தை ஒரு அரசியல் விடுதலையின் மூலமும், உளவியல் ரீதியிலும் உந்தித் தள்ளிய மண்டேலாவின் பாத்திரம் ஒரு வாழ்நாள் சாதனைதான்.
அசைப்பதற்கு சாத்தியமற்றதாய்த் தோன்றும் நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறை இயந்திரத்தின் தகர்வை மண்டேலா நிகழ்த்திக் காட்டினார். ஒடுக்கப்படும் சக்திகளுக்கு சாத்தியப்பாடுகளின் மீதான வெளிச்சத்தையும் முன்னுதாரணத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார் மண்டேலா. இதன்மூலம் போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஓர் குறியீடாய் அவர் தன்னை நிறுவிச் சென்றிருக்கிறார்.
எமது தலைமுறையில் ஓர் உண்மைப் போராளியின் நினைவை விட்டுச் சென்றிருக்கும் நெல்சன் மண்டேலாவின் இழப்பு வலி தரவல்லது. என்றபோதும் வாழ்நாள் சாதனையாளனாய் அவன் எமையெல்லாம் ஆகர்சித்தபடி, சொல்லிச் சென்ற செய்தி இந்த வலியைவிட வலிமையானது.
The struggle is your life, Mandela, Good Bye !
* * *
ஐரோப்பிய வெளியில் நிறவெறியை எதிர்கொள்ள நேர்கிற போதிலெல்லாம் எமது எதிர்மறுப்புக்கு வலுச்சேர்த்தபடி மார்ட்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் சகிதம் நீயும் வந்துகொண்டேயிருக்கிறாய் மண்டேலா!
– ரவி
* * *
தகவலுக்காய் உலவிய இடங்கள்
Thanks :
மனிதம்-28 (கறுப்பின மக்கள் சூடிய சுதந்திரப் பூ – வரதன்)
http://www.oprah.com/world/Oprah-Interviews-Nelson-Mandela
http://www.youtube.com/watch?v=uwLqWg9BCy4
* * *
note :
a·part·heid
1. An official policy of racial segregation formerly practiced in the Republic of South Africa, involving political, legal, and economic discrimination against nonwhites.
2. A policy or practice of separating or segregating groups.
3. The condition of being separated from others; segregation.
[Afrikaans : Dutch apart, separate (from French à part, apart; see apart) + Dutch -heid, -hood.]
* * *
குறிப்பு : இக் கட்டுரையில் apartheid இனை இனவொதுக்கல் கொள்கை எனவும் racist – இனவாதி , racialist – இனத்துவவாதி எனவும் பாவித்திருக்கிறேன்.