உயிரிசை

ஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்
சப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்
நீ நிறுத்தப்பட்டாய், இசைப்பிரியா.
செங்கோலர்களின் எல்லா அங்கீகாரங்களையும் சூடி
கொலைவெறி கொண்டலைந்த
பேய்களின் பாழடைந்த போர்மண்டபத்துள்
அகப்பட்டாய் நீ.

வெறிநாய்கள் துப்பாக்கி வாலை ஆட்டியபடி
உனை சூழ்ந்தனர் பார்.
யாருமற்ற தீவினுள் ஓர் தீவாய்
அதனிலும் நீ தனித்து விடப்பட்டவளாய்
உணர்ந்த கணங்கள் கொடியதடி சகோதரியே.
ஆண்டுகள் நான்கும் போயென்ன
அவர்கள் பூசிய இரத்தம் இன்னமும் காயாத பூமியில்
எல்லா கண்காணிப்புகளையம் மீறி
உயிர்த்துக் காட்டும் உண்மைகளில்
நீயும் ஒருத்தியானாய்.

ஒரு தாயின் வயிற்றில்தானே பிறந்தார்கள்
இவர்கள்
பிசாசுகள் குடியிருக்கும் ஒட்டறை படிந்த அறைகளில்
இராணுவ உடைபோர்த்தி
கர்ப்பமுற்றார்களா, இவர்களின் தாய்மார்கள்.
முடியவில்லையடி இவர்களை
வரைந்துகாட்ட.

இதுமட்டுமா என்ன
மானம், கற்பு என உனைச் சுற்றிய வேலிகளை
இன்னமும் தகர்க்காத ஆண்மனசுடன்
வருகின்ற அஞ்சலியிலும் நீ
மீண்டும் மீண்டுமாய் சாகடிக்கப்படுகிறாய்.

விதிக்கப்பட்ட எல்லா முள்வேலிகளையும் தாண்டி
போர்க் களத்தில் புதுவிம்பமாய்
முளைத்தவர்கள் நீங்கள் -அவை
வெறியர்கள் உருவிய உன் உயிருடன்
வீசியெறியப்பட முடியாதவை.
அதைத் தாண்டிய வெளியில்
உலவுகிறது அவர்கள் மீதான கோபமும்
உன் மீதான நேசமும்.

உண்மைகள் முளைத்த காடுகளின்
உயிரிசை அழிவில்லாதது,
உன்னதும்தான்!

– ரவி (08112013)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: