பொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.
திருடன் கூரையேறி கோழியை பிடிக்கும்வரை ஒளித்திருந்து பார்த்துவிட்டு, கோழியை பிடித்துவிட்டான் அவன் என உரத்துக் கத்துவது ஒன்றும் குற்றத்தை எதிர்ப்பது என்பதாகாது. அந்தக் கூக்குரல் ஒரு பிடிக்குத்தான், தனது நலனையடைய ஒரு சாட்சியை உருவாக்கிக்கொள்வது. அவ்வளவுதான். ராஜபக்ச அன்ட் கோவின் போர்க்குற்றத்தின்மீது அவர்கள் எதுவும் சீற்றம்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என கனவுகாண நாம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக இருந்தால் சாத்தியம்தான்.போர்க்குற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தாப்போலை தமிழ் மக்களின்ரை பிரச்சினை தீர்ந்துவிடவா போகிறது என அரசியல் கொட்டாவி விடுபவர்களும் இந்த புள்ளியில் சங்கமமாகிக் கொள்வர்.
போர்க்குற்றம் பற்றி இந்த மாநாட்டில் பிரஸ்தாபிப்பது உலகு தழுவி மக்களிடம் சென்றடைய வழிவகுக்கும் என்பது முக்கியமானதுதான். அது தேவையானதுதான். அது இலங்கை அரசுக்கு ஒருவித நிர்ப்பந்தத்தை வழங்கும் என்பதும் உண்மைதான். அதை நாம் அவர்களிடம் எதிர்பார்த்துவிட்டுப் போகலாம். மற்றபடி அதன்மீது நம்பிக்கைகளை வைப்பதற்கு, -அரசுடன் ஒத்தோடமுடியாத- இலங்கை மக்களுக்கு எதுவுமில்லை.
மாநாட்டில் கூட்டாக காலையில் தண்ணீர்க் கிளாசும் மாலையில் “தண்ணிக்” கிளாசும் வார்த்தைகளை ஈரமாக்கிக் கொள்ளும். இலங்கை மக்களை சுரண்ட குந்தியிருப்பவர்கள் வாங்கில் அரக்கி இருந்து தமக்கும் வழிவிட ராசபக்ச இடம் தந்தால் முற்றத்தில் வீழ்ந்து கிடக்கும் மேற்குலகின் போர்க்குற்றக் குரல்.