எழுபதுகளின் இறுதிப் பகுதி. ரியூசன் கலாச்சாரம். சைக்கிள் மிதி. பருத்தித்துறையின் தம்பசிட்டி வீதியில் மாலை 5 மணியை முந்தியபடி நாம் (நேர விடயத்தில்) வெள்ளைக்காரர்களாய் இருப்போம். 5 மணியைத் தாண்டியால் நாம் வகுப்புக்குள் நுழைய முடியாது. கணித பாடத்தை „சாக்கர்“ நடத்த, சரியாக 5 மணிக்கு 5 நிமிடம் இருக்க -கால்நடையாக- கேற்றை வந்தடைவார். ஒருநாளுமே இந்த நியதி பிழைத்ததாக எனக்குத் தெரியாது.
யார் இந்த சாக்கர். இந்தப் பட்டப் பெயர் வந்ததற்கான காரணம் எனக்குத் தெரியாது. ஆனால் அவரை நாம் முதுகுப் பின்னால் அப்படித்தான் விளித்துக் கொள்வோம். மனிதர்களின் தனித்துவங்களை மட்டுமல்ல உடலமைப்புகளையும்கூட அங்கீகரித்துப் பழகாத கலாச்சாரம் நம்மது. உடல் அங்கங்களை பழித்து „காமெடி“ பண்ணும்; கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் இந்தக் காட்டில்தான் மழையாய்ப் பெய்வார்கள். சாக்கரின் உருவ அமைப்போ அல்லது அவரின் சிலோமோசன் அசைவோ அவருக்கு அந்தப் பெயரை வாங்கித் தந்திருக்கலாம்.
அறியப்பட்ட காட்லிக் கல்லூரியின் அதிபர்களில் சாக்கரும் ஒருவர். இரத்தினசபாபதி அவரது இயற்பெயர். விறைப்பான முகத்துடன் அந்தக் கல்லூரியின் அதிபர்களின் நிழற்படங்களை பள்ளிக்கூட யூனிபோர்ம் இல் நின்றபடி அடக்க ஒடுக்கமாய்ப் பார்த்திருக்கிறேன். இரு அதிபர்களை அப்படியே நேரிலும் கண்டிருக்கிறேன். சாக்கரையும் அப்படித்தான் சுவரில் கண்டிருக்கிறேன். ஆனால் நிசத்தில் அவர் ஒரு குழந்தைபோல் சிரிப்பை கொட்டிச் சிந்துபவர். மென்மையானவர்.
எமது பாடசாலைக் காலத்தில் எப்போதுமே சிரித்த முகத்துடனும், (ஒப்பீட்டளவில்) முன்னால் நின்று பேசத் துணியக்கூடிய வெளியையும் உருவாக்கித் தந்திருந்த ஒரு அதிபரை சொல்ல முடியுமெனின் அது சாமுவேல் அவர்கள்தான். அவர் மூலம்தான் சாக்கர் எனக்கு விம்பமானார். இரத்தினசபாபதி சேர் கல்லூரிக்கு நடையில்தான் வருபவர் என்றும், ஒருவர் தனது வீட்டு மணிக்கூட்டை சாக்கர் அவரது படலையைக் கடந்து செல்லும் நேரத்தை வைத்து சரிசெய்ய முடியும் எனவும் துல்லியப் படுத்திக் காட்டுவார். அந்தக் கல்லூரியின் பங்சுவாலிற்றியை, டிசிப்பிளினை சாக்கரை வைத்து வரைவிலக்கணப்படுத்திக் காட்டுவார். அவர் வங்கிக்குள் செல்லும்போதெல்லாம் வேலைசெய்பவர்கள் எல்லாம் எழுந்து நிற்பர் என்றெல்லாம் றெஸ்பெக்ரை வரைவிலக்கணப்படுத்திக் காட்டுவார்.
க.பொ.த சாதாரண தர வகுப்பில் நான் சுழற்றி எறிந்து விளையாடிய இரண்டு கணித பாடங்களும் உயர்தர வகுப்பில் எனைவிட்டு காணாமல் போயிருந்ததால் அதைக் கண்டு பிடித்துத் தர சாக்கர் சரியான ஆளாகப் பட்டது. சந்தர்ப்பமும் கிடைத்தது. அவரிடம் ரியூசனுக்குப் போனேன்.
அவரிடம் உயர்தர வகுப்புக்கான கணிதத்தை படிக்கும்போதெல்லாம் நான் காடுமேட்டை தரிசித்ததில்லை. இலகுவாக அழைத்துச் செல்வார். அந்தப் பழையகாலக் கட்டடத்துள் சாக்கரின் பழசுத் தோற்றமும், கவ்விக்கொண்டிருக்கும் அசைவில்லா வெளிச்சமும் நாமும் இருப்போம். அவரது சிறிய கண் மூடியிருப்பதுபோல் இருக்கும். ஆனால் எவரும் அவரது கண்காணிப்பு வலயத்துள்ளிருந்து எக்கணமும் தப்பவியலாது. நழுவுபவர்களையெல்லாம் சோக்கட்டியை அனுப்பி தனது கட்டுப்பாட்டுக்குள் அழைத்துவந்துவிடுவார். முடியாதவர்களை வகுப்பைவிட்டு துரத்திவிடுவார்.
அவர் வீதியில் நடந்து வரும்போது ஒரு சீரான நேர்கோட்டில் நிமிர்ந்தபடி முகத்தை நேராக வைத்தபடி வருவார். கண்கள் மட்டும் நாலா பக்கமும் சென்றுவரும். எதிரில் பெண்கள் வரும்போது அவரது நேர்கோடு குலைந்து வேலியை உரசியபடி வந்து பின் மீளும். வகுப்பை விட்டு துரத்தியடிக்கப்பட்ட மாணவர்களின் தாய்மார்கள் அடுத்த நாள் கேற்றடியில் நின்று மகனை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி மன்றாடுவார்கள். தகப்பன்மார் வந்தால் சரிவராது என்பது மாணவர்களின் கணிப்பு. சாக்கர் வேலியை உரசியபடியே அவரை நாளைக்கு அனுப்புங்க என்றபடி நடந்துகொண்டிருப்பார். தாய்மாரின் முகத்தை நேரில் பார்த்து அவர் சொன்னதை நான் பார்த்ததில்லை.
எல்லாத்தையும்விட இன்றளவும் நான் மறக்கேலாத ஒரு வசனம் அவருடையது. அதற்காகவேதான் இந்தக் குறிப்பு. அதை அவர் அநேகமாக ஒவ்வொரு வகுப்பின்போதும் சொல்லியதாக நினைவுண்டு. “படிப்பு… அது ஒரு இரும்புக் குதிரை. அதுக்குமேலை ஏறி ஓடுற மாதிரி பாசாங்கு செய்யலாம். அது ஓடாது.“ என்றுவிட்டு சிரித்துக்கொள்வார். இந்த வசனம் எமது கல்வி முறைமை பற்றிய, ஏட்டுக் கல்வி அறிவு பற்றிய, கட்டுப்பாடுகள் பற்றிய வரட்டுத்தனங்கள் பற்றிய, படங்காட்டல் பற்றிய எல்லாவற்றின் மீதும் உதைத்துக்கொண்டே இருக்கிறது இப்போதும்கூட. எனது புரிதலுக்கு உட்பட்டளவில், அறிவதிகாரத்தை எதிர்த்து நிற்கும் ஒரு வாக்கியமாகவும் அதை புரிந்துகொள்ள முடியும்.
அண்மைக்காலமாக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் வசனங்களுக்கிடையில் பயணிக்கிறபோது, அவர் இந்தக் குதிரையில் சவாரி செல்லக்கூடும் என்ற அச்சம் வருகிறது.