//வன்சக்திகள் மேலெழாத படிக்கு தமிழ் அரசியலில் மென்சக்திகளை அல்லது மென் சக்திகள் போலத் தோன்றும் மிதவாதிகளை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைத்துலக சமூகத்தின் தெரிவாகக் காணப்படுகிறது.// – நிலாந்தன்
இது ஒன்றும் புதிய விடயமல்ல. மிதவாதிகளை சர்வதேச அதிகார சக்திகள் கையாள்வது என்பது ஒரு வழிமுறையாக தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. தமது நலன் சார்ந்து அந்தந்த நாடுகளை இயக்குவதற்கான வழித்தடத்தை மிதவாதிகளினூடுதான் அவர்கள் கண்டடைந்தார்கள். கண்டடைகிறார்கள். அவர்களது நலனை எதிர்த்து நின்ற சக்திகள் இல்லாதொழிக்கப்பட்டார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது எழுச்சியடைந்த சுபாஸ் சந்திரபோசை புறந்தள்ளுமளவிற்கு காந்தியை முன்னிலைப் படுத்தியதையும், அமெரிக்க கறுப்பின மக்களின் போராட்டத்தின்போது மல்கம் எக்ஸ் இனைவிட மார்ட்டின் லூதர் கிங் இனை முன்னிலைப்படுத்தியதையும் வரலாற்றில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். மனிதரை மனிதராக நடத்தாத (வெள்ளையின) சமூகத்தில், தம்மை சக மனிதர்களைப் போன்ற ஒரு மனிதஜீவியாக உணராத (கறுப்பின) சமூகத்தில் சம உரிமை பற்றிய பேச்சு, பேச்சுவார்த்தை எல்லாம் கேலிக்கூத்தானது என்று மல்கம் எக்ஸ் கடுமையாகவே தனது விமர்சனத்தை முன்வைத்தவர். அந்தத் தளங்களில் அவர் மிகக் கறாராகவே செயற்பட்டவர். அது மார்ட்டின் லூதர் கிங்கின் அணுகுமுறைக்கு ஒரு பலமான ஒத்திசைவை வழங்கியது எனலாம்.
நெல்சன் மண்டேலா ஒரு தனி அகிம்சாவாதியல்ல. அவர் ஆயுதப் போராட்டத்தை சிறை செல்லும்வரை முன்னெடுத்த ஒருவர்தான். அவர் சிறையில் இருந்தபோதும் ஆபிரிக்க தேசிய காங்கிரசு அகிம்சைக்குத் திரும்பியிருக்கவில்லை. அவர் சிறையில் இருக்கும்போது, „ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தால் உனை விடுதலை செய்யலாம்“ என ஆபிரிக்க நிறவெறி அரசு கேட்டபோது அவர் அதை மறுத்து சிறைவாழ்வை தொடர்ந்தார்.
எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் மற்றும் வன்சக்தி, மென்சக்தி என்ற சொல்லாடல்கள் விடுதலைப் பலிகளின் ஆயுதப் போராட்ட தோல்விக்குப்பின் மேலெழுகின்றன. எதிர்ப்பு அரசியல் என்ற ஒன்று இல்லாது இணக்க அரசியல் நகர முடியும் என எடுத்துக்கொண்டால் (அரசு உட்பட) அதிகார சக்திகள் மனிதாபிமானம் -அல்லது அரசியல் வார்த்தையில் ஜனநாயக விழுமியத்தை- கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் பிரச்சினையே அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதிகார சக்திகளின் அணுகுமுறைதான் ஒடுக்கப்படும் சக்திகளின் எதிர்கொள்ளல் வழிமுறையை தீர்மானிக்கிறது என்கிறபோது எதிர்ப்பு அரசியலற்ற களத்தில் இணக்க அரசியல் எவ்வாறு செயற்பட முடியும் என பிடிபடுதேயில்லை. பேரம்பேசும் சக்தியை எதிர்ப்பு அரசியல்தான் வழங்க முடியும். இவை எதுவுமற்ற தனியான இணக்க அரசியல் சரணடைவு அரசியல் என வைக்கப்படும் விமர்சனம் புறந்தள்ளத்தக்கதல்ல.
மேற்சொன்ன காந்தி, மார்ட்டின் லுதர் கிங், மண்டேலா இவர்கள் சாதித்தவைகளை ஒரு மென்சக்தியின் அணுகுமுறையாக அல்லது இணக்க அரசியலாக மட்டும் பார்த்தால், அது குறைபாடுடையது. இந்த எதிரெதிர் அரசியல் அணுகுமுறைகளுக்கு இடையிலான ஊடாட்டமும் இதைச் சுற்றிய (சர்வதேச ரீதியிலான அரசியல்நிலை, கருத்துநிலை, அறிவுசார்) ஊடாட்டமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் அவசியம் எனப் படுகிறது.
தமிழ் மக்கள் தரப்பில் போதியளவு எதிர்ப்பு அரசியல் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. விடுதலைப் புலிகள் இந்த எதிர்ப்பு அரசியலை இணக்க அரசியலுடன் இணைப்பதில் தோல்விகண்டுள்ளனர் என்றுகூட சொல்லமுடியாது, அதுபற்றி போதியளவு அரசியல் பிரக்ஞையற்று இருந்தனர் என்றுதான் சொல்ல முடியும். அதனால் இந்தப் பேரிழப்பு. இந்த எதிர்ப்பு அரசியல் உருவாக்கித் தந்திருக்கும் அரசியல் சூழ்நிலையை அல்லது பேரம்பேசும் ஆற்றலை மென்சக்திகள் அல்லது இணக்க அரசியலாளர்கள் எப்படி கையாளப் போகிறார்கள் என்ற சவால் அவர்கள்முன் உள்ளது. அதற்கான அரசியல் அதிகார சக்திகளாக தமிழ் மக்கள் மாகாணசபை தேர்தல் ஊடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், வகைதொகையின்றிய இழப்புகளின் பின்னான இந்தப் பொழுதில்.
மண்டேலாவின் மறைவை ஒட்டி இம்மாதிரியான ஒரு சிறந்தக் கட்டுரை வெளிவரவில்லை. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
மண்டேலாவின் போராட்ட வரலாற்றின் ஊடாக தமிழர்களின் போராட்ட வரலாறும் நீங்கள் வெளிப்படையாக எழுதாவிட்டாலும் சேர்ந்தே கடலடியில் ஓடும் நீரோட்டமாக
வந்திருக்கிறது. எதிர்ப்பு அரசியலையும் இணக்க அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பல்வேறு காரணிகள்.
உரிமைகளுக்காக போராடும் இயக்கங்களுக்கு மண்டேலா
ஒரு வழியைக் காட்டி இருக்கிறார் என்பதைவிடவும் இப்படியும் சாத்தியப்படும் என்பதைக் காட்டி இருக்கிறார்.
என்றே நினைக்கின்றேன். மண்டேலாவுக்குப் பின் அந்த
இயக்கத்தின் வெற்றிடம்..? இதையும் சேர்த்தே எண்ணிப்பார்க வேண்டும்.
போராட்ட வரலாற்றையும் இன உரிமையை இன துவேஷமாக எடுத்துச்செல்லாத அவருடைய தனித்துவத்தையும் கட்டுரை அருமையாக சொல்கிறது.
வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை, இந்தியா.