சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.
சிவகாமி பெண்ணியலாளர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்குபவர். விளிம்புநிலை மக்களுக்காக தலித் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். சமூகத் தடைகளைத் தாண்டி அவர் பெரும் போராட்டத்தினூடே ஐஏஎஸ் ஆகவும் வந்தவர், அந்தப் பதவியினூடான அரசியல் அதிகாரத்தை அந்த மக்களுக்காக பயன்படுத்தியவர், களநிலைகளில் பங்கேற்பவர் என்ற விடயங்களை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர் பிழையான தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதை பரிசீலிக்காமல் சொல்லி மாட்டுப்பட்டதும் அவரது உரையில் தெரிகிறது. பதட்டத்துடன் பத்திரிகையில் படித்ததாக பொத்தாம் பொதுவாக அவர் வழியெடுத்து தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்த விடயத்தில் அவரின் பொறுப்பற்ற தன்மையை நான் பார்க்கிறேன். இத் தவறை அவர் -தன் கூற்றை- திரும்பப் பெறுவதன் மூலம் நிவர்த்திக்கலாம். அவர் இந்த குற்றச்சாட்டை ஆதாரப்படுத்தக்கூடிய தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்பதை வெளியிடலாம். இவைகள் அவர்முன் உள்ள தெரிவுகள் என நினைக்கிறேன்.
இதைவைத்து சிவகாமியை தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் தொடுப்பவர்களுடன் உடன்பட முடியாது. (பெண், தலித் என) அடையாள ரீதியில் தாக்குதல் தொடுப்பவர்களின் வன்மம் கண்டிக்கப்பட வேண்டியது. இதைச் செய்பவர்கள் அவரை கண்டிக்கும் எந்த சமூக நிலைப்பாட்டை கொண்டு இயங்குகிறார்கள் என்பது வெளிச்சம். மிக கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாக வெளிப்படும் இவர்களின் “விமர்சன“ மனநிலைக்கு எதிராக நாம் நிற்கவேண்டும்.
சிவகாமி பெண் என்பதால் ஆணதிகார வக்கிர வார்த்தைப் பிரயோகங்களை, வசைமொழிகளை வெளியிடும் ஒருவரில் பெண்போராளிகள் பற்றிய பெண்நிலைக் கரிசனை எப்படியிருக்க முடியும்? அப்படியானால் விடுதலைப் புலிகள் மீதான களங்கம் என்ற ஒழுக்கவாத மனநிலைதான் அந்த சீற்றத்தில் வெளிப்படுகிறது எனலாம். ஒழுக்கவாதத்தினை கட்டியமைத்தது ஆணாதிக்க மரபு என்ற ரீதியில் ஒழுக்கவாத சீற்றம் ஆணாதிக்க மனநிலை வகைப்பட்டதுதான்.