இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.
உணர்வு ரீதியிலும் சாத்தியப்பாடான எல்லாவித பங்களிப்புகளிலும் ஈழ விடுதலை இயக்கங்களோடு ஆதரவு சக்திகளாய் 80 களின் நடுப் பகுதியிலிருந்து தமிழக மக்கள் இருந்துவந்திருக்கின்றனர். தமிழகப் புத்திஜீவிகளும் உணர்வுபூர்வமாகவும், ஆபத்துகளை எதிர்கொண்டும் பங்களிப்புச் செய்த வரலாறு உண்டு. அவை எதுவும் மறக்கப்படவோ மறுக்கப்படவோ முடியாதவை. (இதை தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியலுக்கு சுயநலத்துடன் பயன்படுத்திக்கொண்டனர் என்பது வேறுபிரித்தறியப்பட வேண்டியது.)
ஆரம்பத்திலிருந்தே புலிகளின் பிழையான அரசியலையும் ஜனநாயக மறுப்புகளையும் அராஜகங்களையும் எதிர்த்து சாதாரணமானவர்கள் பலர் எழுதினர்… குரல் கொடுத்தனர், உயிரையும்கூடக் கொடுத்தனர். புலிகளின் எழுச்சி நிலவிய காலகட்டத்திலேயே, புலிகள் தமது அரசியல் போக்கை மாற்றா விட்டால், அது விடுதலையை வென்றெடுக்கப் போவதில்லை, இழப்புகளையே தரவல்லது என எழுதிய பல எழுத்துக்கள் ஆதாரமாய் நம்முன் கிடக்கின்றன. பல ஆண்டுகள் கடந்துபோய்விட்டன. இதே செய்தியையும் உள்ளடக்கத்தையும் -அதுவும்- புலிகள் உட்பட மக்களின் பேரழிவுகள் நிகழ்ந்தபின் வந்து இப்போ தமிழக மக்களுக்கு சொல்லும் நிலையில் தமிழகப் புத்திஜீவிகள் இருப்பது சலிப்புத் தருகிறது. இதற்கு அப்பால் அவர்கள் கடந்துசென்று பேசவேண்டியிருக்கிறது.
அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாய் உருவாகிய இயக்கங்களினது குணாம்சங்களை கணிசமானளவுக்கு தீர்மானித்த சமூகக் காரணிகளையும் அதன் உளவியலையும் ஒரு கூட்டு ஆய்வுத்தன்மைக்கூடாகப் பேச விளையாமல் தனியே புலிகள் மீதான முழுக் குற்றச்சாட்டையும் வைத்து எல்லா தவறுக்குமான விளக்கத்தைத் தருவதில் ஆய்வுத்தன்மை எங்கே வாழப்போகிறதோ தெரியவில்லை. தமிழின உணர்வாளர்கள் தகவல்களை புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு விளாசியதுபோல, தமிழகப் புத்திஜீகள் புலியெதிர்ப்பாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்களா என நினைக்குமளவிற்கு அவர்களின் ஆய்வுகளில் சமூகவியல் காணாமல் போய்விடுகிறது.
நிகழ் அரச பயங்கரவாதம் என்பது இன்று ஊதிப்பெருத்துக்கொண்டிருக்க அதைக் கண்டுகொள்வதை விடவும் செத்துப்போன புலியை அதிகம் கண்டுகொள்வதன் அரசியலில் ஆய்வுத்தன்மை சவப்பெட்டிக்குள் மாட்டிவிடுகிறது.
தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களால் முக்கியத்துவப்பட்டுப் போயுள்ள ஈழம் பற்றிய அளிக்கையை எதிர்க்குரலில் நடத்தி, அதன்மூலம் கவனிப்புப் பெற முண்டியடிப்பதில் எதுவும் ஆகப்போவதில்லை. இலங்கை என்ற நாட்டில் ஜேவிபி, புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை கண்டதுக்கும் மேலால், அடிப்படைவாத அமைப்புகள் தோற்றம் பெறுவதற்கான வளம் தாராளமாகவே இருந்திருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இப்போ இன்னமும் அதிகமாக இருக்கின்றன. அண்மைக்கால சம்பவங்கள் துலக்கமாகவே இதைக் காட்டுகின்றன. ஜேவிபின் இடத்தை, புலிகளின் இடத்தை, தமிழ் இயக்கங்களின் இடத்தை அடிப்படைவாத அமைப்புகள் நிரப்புமாயிருந்தால் – எத்தனை கூட்டுக் கொலைகள் இனப்படுகொலைகள் என்பவற்றால்- இலங்கை இன்னமும் எப்படி சின்னாபின்னப்படும் என அஞ்சவேண்டியிருக்கிறது.
உதிரியாய்க் கிடைக்கும் ஒருபக்கத் தகவல்களையும், உருவாக்கப்படும் தரவுகளையும், சிலநாட்களுக்குள் தாம் ஓடித்திரிஞ்சு கண்ட காட்சிகளையும், மறுத்தோடலில் எழும் கவனிப்புகளையும் வைத்துக்கொண்டு நூல்குலைக்கும் ஆய்வுகள் சிக்கலில்தான் முடிவடையும். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்களின் தனிநபர் அபிப்பிராயங்கள் கவலைகளை அந்தந்த இனத்தின் பொதுக் கருத்தாகக் காட்டுவதின் ஆபத்து ஆய்வுத்தன்மையை திசைதிருப்பக்கூடியது. அதற்கு எவ்வளவு களப்பணி செய்து உழைக்க வேண்டும். அந்த ஆய்வுக்கு இலங்கையில் வாழ்ந்தால் மட்டும் போதாது என்றிருக்கிறபோது, இலங்கைக்கு போய்வருவது என்பது ஒரு மிக மட்டுப்படுத்தப்பட்ட சித்திரத்தையே வழங்கவல்லது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தேசியம் என்பதன் தவிர்க்கமுடியாமையும், அதன் ஆபத்தான பாத்திரமும், குறித்த வரையறைக்குள் அகப்படாத அதன் தன்மையும்… மண்டையை பிய்ச்செறியுது.. இதற்கூடான ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் அழிவுப் பாத்திரத்தை வெறுமனே அதன் தன்னிலை சார்ந்த தவறுகளோடு மட்டும் குறுக்கிவிடுவது எந்தவகை ஆய்வோ தெரியவில்லை. உலக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒருபுறம் ஆதரித்துக் கொண்டே, இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் என்றால் நக்கலாகச் சிரித்துக் கடந்துபோவதற்கெல்லாம் யாரும் அரசியலையோ கோட்பாடுகளையோ தத்துவங்களையோ தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை… முக்கிமுனகி நூல்களைப் படிக்கவும் தேவையில்லை.