இரட்டைக்கோபுரத்தாக்குதல் மீதான மதிப்பீடுகள் வெறுமனே, கொல்லப்பட்ட அப்பாவி மக்களோடு அல்லது பௌதீக அழிவுகளோடு அல்லது தீமை என்ற கருத்தியலோடு மட்டுப்பெற முடியாதவை. அது ஒரு குறியீட்டின் மீதான தாக்குதல். அதாவது உலக அதிகார ஒழுங்கின் மீதான, கேள்விகேட்கப்பட முடியாத அதிகார மையத்தின் மீதான -ஓர் எதிர்ப் பயங்கரவாத- தாக்குதல். அதனாலேயே உலக அதிகார சக்திகள் பதறிப் போயின. அந்த அதிர்வுகள் இன்னமும் அமைதியுறவில்லை.
கீழே உள்ள குறிப்புகள் ழான் போத்ரியா என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் (2001,2002 இல் முன்வைக்கப்பட்ட) கருத்துக்கள். நமது ஆய்வுத்தன்மையையும் பன்முகத்தன்மையையும் விரித்துக்கொள்ள இது உதவலாம் என நினைக்கிறேன். அதிகாரம், அதன் பயங்கரவாதம் அது உருவாக்கும் எதிர்ப்பயங்கரவாதம் அவற்றின் உளவியல்கள் என்பன பற்றி பேசுகிறார் ழான் போத்ரியா.
– இது பயங்கரவாத்துக்கு எதிரான பயங்கரவாதம். இதற்குப் பின்னால் கருத்தியல் என்று ஒன்றுமில்லை. கருத்தியலையும் அரசியலையும் கடந்து வந்துவிட்டோம் நாம். இப்படிப்பட்ட ஒரு கருத்தியலை உருவாக்கும் ஆற்றலாக எந்த ஒரு கருத்தியலும் இருக்க முடியாது. இஸ்லாமும் அப்படிப்பட்ட ஒரு ஆற்றலாக இருக்க முடியாது.
– இந் நிகழ்வு குறித்து கூறப்பட்டவை அனைத்தும் அந் நிகழ்வையும் அதன் கவர்ச்சியையும் மீண்டும் உயிர்ப்பிப்பவையாகவே இருக்கின்றன. தார்மீக ரீதியிலான கண்டனமும், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணியும் உலக வல்லரசு ஒன்று அழிக்கப்படுவதை, செம்மையான முறையில் தன்னைத் தானே அழித்துக்கொள்வதை, தற்கொலை செய்துகொள்வதை பார்க்கும்போது எழும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் ஒன்றுக்கொன்று ஒத்திசைகின்றன. தாங்கிக் கொள்ள முடியாத அதிகாரத்தின், வல்லமையின் மூலமாக உலகெங்கும் வன்முறையை விதைத்த அந்த வல்லரசு, அதன் விளைவாக நம் அனைவருள்ளும் உறைந்திருக்கும் அந்த பயங்கரவாதம், அந்த பயங்கரவாதத்திலிருந்து எழும் கற்பனை எம்மை மிகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.
இந் நிகழ்வு நம் அனைவரின் கனவாகவும் இருந்திருக்கிறது. சகிக்க முடியாத ஒரு மேலாதிக்கமாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட ஓர் அதிகாரம் அழிக்கப்படுவதாக கனவு காணாமல்இருக்க யாரால் முடியும்? ஆனால் இதை மேற்கத்தைய மனச்சாட்சியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.
– வரலாற்றில் அதிகாரத்தின் விளையாட்டு முழுவதும் இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆய்வின் சூழலும் அதன் விதிகளும்கூட இந் நிகழ்வினால் மாற்றப்பட்டுவிட்டன.
– இறுதியான அதிகாரம் மற்றும் ஒழுங்கு, இவை குறித்த ஒவ்வாமை உணர்வு என்பது உலகளாவியது. இறுதி அதிகாரத்தின் ஒழுங்கின் முழுமையான உருவங்களாக உலக வர்த்தக மையத்தின் வானளாவிய இரட்டைக் கோபுரங்கள் திகழ்ந்தன.
– அதிகாரத்தின் வளர்ச்சி தர்க்க ரீதியாக தவிர்க்க முடியாத வகையில் அதிகாரத்தை அழிக்கும் உணர்வையும் வளர்த்தெடுக்கிறது. அதிகாரம் தன்னுடைய அழிவில் தானே பங்கேற்கவும் செய்கிறது.
– ஓர் அமைப்பு முழுமையும் வீழ்த்தப்பட முடியாத நிலையும் நெருங்க நெருங்க அந்த அமைப்பை முழுமையாக மறுக்கும் உணர்வும் அதிகரிக்கிறது.
– பயங்கரவாதம் நியாயத்திற்குப் புறம்பானது. உலக வர்த்தக மைய நிகழ்வு குறியீட்டு ரீதியாக எழுந்த அந்தச் சவால் நியாயத்திற்குப் புறம்பானதுதான். தன்னளவில் நியாயத்திற்குப் புறம்பானதாகப் பரவும் உலகமயமாக்கத்திற்கு எதிர்வினையாக நிகழ்ந்த நிகழ்வு அது.
– இப்படிப்பட்ட கொடுரமான எதிர்த் தாக்குதலுக்கு உரிய புறவயப்பட்ட நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்ததே அந்த அமைப்புத்தான். அனைத்துச் சீட்டுகளையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டவாறு அமைப்பு நிகழ்த்திய விளையாட்டில் மறுதரப்பு விதிகளை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. புதிய விதிகள் கொடுரமானவை. தீவிரமானவை. ஏனெனில் பணயம் வைக்கப்படுபவையும் பயங்கரமானவை.
– உலக அதிகாரத்தின் சின்னமாக இருந்த அந்த இரு கட்டடங்கள் தங்களுடைய வீழ்ச்சியிலும் இறுதிவரை அவ்வாறேதான் இருந்தன. அவற்றின் வீழ்ச்சி ஒரு தற்கொலையை ஒத்திருந்தது. அவை தங்களுக்குள்ளாகவே இடிந்து விழுந்ததைக் காணும்போது தற்கொலை விமானங்களின் தற்கொலைகக்கு எதிர்வினையாக அந்த இரட்டைக் கட்டடங்களும் தற்கொலை செய்துகொண்டதுபோல் தோன்றியது.
(“பயங்கரவாதம் அகமும் புறமும்” என்ற -45 பக்க- சிறுநூலினை விடியல் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து இக் குறிப்புகள் எடுக்கப்பட்டன.)