பாடசாலை விடுமுறை நாட்கள். இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களில் 13 வயதுக்கு மேற்பட்டோர் “விடுமுறை வேலை” (Ferien Job) என கைச்செலவுக்கோ விடுமுறைச் செலவுக்கோ அல்லது ஏதாவது பொருள் வாங்குவதற்கோவென ஓரிரு வாரம் வேலைக்கு புறப்படுவர். எனது வேலையிடம் ஒரு தொழிற்சாலை. பெரிசுபெரிசாய் யன்னல்கள் உயரமாகவும் பதிவாகவும் ஒருதொகை இருக்கிறது. அதை துப்பரவு செய்வதில் ஒருசில மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்தவாரம் அப்படி இருவர் வந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல. எமது தொழிற்சாலையின் சொந்த முதலாளியின் பிள்ளைகள். என்னுடன் வேலை செய்யும் குரோசிய நாட்டு நண்பன் (முன்னாள் யூகோஸ்லாவியன்) மெல்ல தலையை ஆட்டியபடி சொன்னான், “பார் ஒரு இலட்சாதிபதி. இப்பிடி தன்ரை பிள்ளையை கிளீன் பண்ண விட்டிருக்கிறான். நானாயிருந்தால் சும்மா காசை வீசி எறிந்திருப்பேன். இதுதான் சுவிஸ்காரன்“ என்று அலுத்துக் கொண்டான். நம்மடை ஆட்களும் இப்பிடித்தான் யோசிப்பார்கள் என்றேன்.
உழைப்பு! உழைப்பு என்றவுடன் காசு உழைத்தல் மட்டும்தான் பலருக்கு நினைவில் மின்னும். மிருகங்களிலிருந்து மனிதஜீவி வேறுபட்ட இடமே உழைப்புத்தான். சிறு பிள்ளைக்கும் உழைப்பு என்றால் என்னவென்று தெரியவேணும். அதாலைதான் அவங்கள் இப்பிடிச் செய்யிறாங்கள். மற்றபடி முதலாளி தனது பிள்ளைக்கு காசை விட்டெறியத் தெரியாதெண்டில்லை… என்று -தனது அறிவுக்கு எட்டியவரையும் அவனது மொழியாற்றல் இடம்விட்டதுவரையும்- விளக்கம் கொடுத்தான் சக தொழிலாளியான இத்தாலிகாரன். அவன் சொல்லவருவது எனக்கு உவப்பானதாகவே தெரிந்தது.
புகலிடத்தில் உழைப்பில் ஈடுபட்டதைவிட, அதிகமாய் அரசாங்க உதவிப் பணத்தில் வசதிப்பாடாய் காலத்தை ஓட்டிக்கொள்பவர்களே உழைக்கும் மக்களுக்காகவும் விளிம்புநிலை மக்களுக்காகவும், அவர்களது உழைப்பின் வலி பற்றியும் பேசத் துணியிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
யன்னல்களில் படிந்த அழுக்கை அந்தச் சிறிசுகள் வியர்வை சிந்த துப்பரவு செய்துகொண்டிருந்தனர்.