ஒழுங்கைக்குள்ளால் வரும் ஒழுக்கவாதம்

மொரட்டுவ பல்கலைக் கழகம். கட்டடக் கலை பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாண தமிழர்கள் தரப்படுத்தல் முறையைத் தாண்டி மிக அதிக புள்ளிகளை தாங்கியபடி வருவர். சிங்கள மாணவர் குறைந்த புள்ளிகளோடு வந்தவர்கள் பலர் இருப்பர். நம்மடை ஆட்களின் ஒரு ஏளனப் பார்வை பிறகெல்லாம் தவிடுபொடியாகிவிடும். காரணம் சிங்கள மாணவர்களின் சிருஸ்டிப்புத்தன்மை அவர்களின் டிசைனில் எமது எல்லைக்கோடுகளை முறித்துப் போட்டுவிடும். திருகோணமலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்களும் தமது சிருஸ்டிப்பில் யாழ் மாணவர்களை விலத்தி முன்னே சென்றுவிடுவர். அவளவு கட்டுப்பெட்டித்தனமான இறுகிப்போன யாழ் மனநிலைக்குள் புள்ளிகள்தான் பொரித்துக் கொண்டிருக்கும். 

எதிர்பார்ப்பதை விடவும் நாம் மிக இறுக்கமானவர்களோ என இப்போ நான் அடிக்கடி நினைப்பதுண்டு. காற்றிலே மிதப்பதுபோல் உடலசைத்து நடக்கும் ஒரு ஆபிரிக்க சகோதரனை, சகோதரியை கண்டால் பொறாமையாக இருக்கும். அவ்வளவு இலகுவாக அவர்கள் தமது உடலை அநாயாசமாய் காவித்திரிகிறார்கள். நம்மடை சனமோ தூக்க முடியாமல் தூக்கிச் செல்வதுபோல் தலையைக் கவிழ்ந்தோ, வேலியை உரசியபடியோ அல்லது சிலோ மோசனிலோ நடப்பர். தண்ணியடிச்சால் மட்டும் மிதந்து காட்டுவர்.

எங்கள் கால் பாதங்களில் ஆணிகள் முளைத்திருக்கின்றன. ஒழுக்கம், தன்னடக்கம், பணிவு, வெட்கம்.. என எல்லா தாழ்வாரங்களிலும் ஒதுங்கிப் போன பழக்கதோசமா… மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்ற அறிவுரையா…தெரியவில்லை. ரசனை… வாழ்வின் மீதான ரசனை.. தன் உடலின் மீதான ரசனை.. இயற்கை மீதான ரசனை… என கவிதைகளுக்குள் வார்த்தைகளை புகுத்திவிடுவதோடு நம்மடை வேலை முடிஞ்சு போய்விடுகிறது.

வீட்டுக்குள் ஆடிப்பாடு… ஆனால் வெளியில் ஆடிப்பாடாதே என எம்மை நாம் தேய்த்துக் கொண்டிருக்கிறோம். குழந்தையும், பைத்தியக்காரன் எனப்பட்டவனும் வீதியிலும் ஆடிப்பாட தயங்குவதேயில்லை. குழந்தையைப் போலவே பைத்தியக்காரரின் மனவளம் உயர்ந்ததோ என எண்ணத் தோன்றுகிறது. நம்மை நாமே நடிக்கவைத்துக் கொண்டிருக்கிறோம்.

தாயாரின் மரண வீட்டின் துயர்பகிர வந்தவர்களிடையில் தன்னியல்பாய் வெளிக்கிளம்பிவிடுகின்ற நகைச்சுவையும் சிரிப்பும் தாயை மறந்ததாக மொழிபெயர்த்துவிட முடியுமா என்ன. நாலாம் மாடியில், இயக்க சித்திரவதை முகாமில் என சித்திரவதைப்பட்ட நாட்களை, தமக்கு நடந்ததை சுவாரசியமாக சொல்லி சிரிக்கும் நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். அதிசயிக்கப்பட ஒன்றுமேயில்லை. சிரிப்பொலிகள் அவர்களின் துயர இழைகளை மெல்ல மெல்ல இயடுபண்ணிவிடுகின்றன என நான் அதை புரிந்துகொள்வேன். அது மனித இயல்பின் ஒளிவுமறைவின்மை என நான் புரிந்துகொள்வேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை இந்த நூற்றாண்டின் பயங்கரங்களில் ஒன்று. அந்தத் துயரை வைத்து, வாழும் மனிதரின் சந்தோசங்களை கேள்விகேட்பதுதான் புரியவில்லை. சந்தோசங்களை உருவாக்கும் அளிக்கை முறைகளை கேள்விகேட்பதும் சந்தோசங்களை கேள்வி கேட்பதும் ஒன்றல்ல. “என்னடா காயம், மனிசி அடிச்சுப் போட்டாளோ” என்று நக்கலடிக்கும்போது எழும் சிரிப்பை, அந்த வசனங்களுக்கிடையில் உள்ள ஆணதிகார அரசியலை ஏற்றுக்கொண்டதாக எடுத்துவிடவா முடியும். இப்படியே வேலிகளை உள்நோக்கி அரக்கிக்கொண்டு வந்தால் மேய்வதற்கான மனிதவெளி குறுகிப்போய்விடும்.

எதிரில் தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்கும் பொலிஸ்காரன்களுக்கு எதிராக ஆபத்தின் இடைவெளியை சுருக்கியபடி ஒருவித நடன உடலசைவுடன் போய்க்கொண்டிருந்த தென்னாபிரிக்க மக்களின்   ஆர்ப்பாட்ட ஊர்வல காட்சிகள் அசாதாரணமாகத் தோன்றும். அவ்வளவு இலகுத்தன்மை. 69 பேரைப் பலிகொண்ட பாஸ் மறுப்புப் போராட்ட (Sharpville-1960) ஊர்வல காட்சியும் அப்படித்தான் நடந்தது. மறக்க முடிவதில்லை. அவர்களின் பாதங்களில் ஆணிகள் அறையப்பட்டிருக்கவில்லை. வாழ்வின் மீதான எளிய பாடல்களில் அவர்கள் மிதப்பவர்கள். நாம்..?

ராதிகா ஆடினால் எழும் பரபரப்புகள் ராதிகன் ஆடினால் வரவா போகிறது. இந்த பரபரப்புகள் ஆணாதிக்கத்தின் ஒழுக்கவாத கசடுகளில் தேனாய்ச் சுரப்பவை. இந்தக் கசடுக்கு கவர்போட்டு நீவினாலும் அது கசிந்துதான் தீரும், காணொளிமீதான வேட்கையுடன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: