இன்று சனிக்கிழமை. மாலை நேரம். வழமைபோல் எனக்கு லீவு. நானும் மயிலனும் வைன் குடித்துக் கொண்டிருந்தோம். மைலன் பக்ரரியிலை என்னோடை வேலைசெய்யிறவன். வழமையாக மே மாதம் அதுவும் நடுப் பகுதியும் தாண்டிவிட்டது. நல்ல வெயில் எறிக்க வேணும். ஆனால் ஒரே மழை. இரண்டு கிழமையாக ஒரே மழை. குளிர்வேறை. அதாலைதான் வைன். இல்லாட்டி பியர் போத்தலோடை இருந்திருப்பம்.
ரெலிபோன் வந்தது. தர்மலிங்கம். “என்னடா.. வாங்கோவன் வீட்டுக்கு“ என்றான். போனோம். நல்ல றால் பொரியல்… மீன் குழம்பு… நெத்தலிப் பொரியல் வாசம் எல்லாம் வந்திது. அந்த மாடிக் கட்டிடத்தில் இந்தநாட்டுக்காரர்தான் அதிகம் என்பதால் இந்த வாசத்தை வெளியே விடாமல் கதவை வேகமாகவே அடிச்சுச் சாத்தினேன். தர்மலிங்கம் கொம்பியூற்றருக்கு முன்னாலை இருந்துகொண்டிருந்தான். ஒருதொகை ஈமெயில் கட்டை குலைச்சு சிக்கல் எடுத்தபடி இருந்தான். எல்லாத்தையும் அடிச்சு மூடிவிட்டு எங்களை வரவேற்றான்.
நெத்தலி பொரியல் மேலும் வைன் கேட்டது. குடித்தோம். என்னுடன் வந்தவன் ஒரு நல்ல மனிசன். அவன் எப்போதும் வாழ்க்கைத் தத்துவங்கள் பேசுவான். வெறியேற ஏற அவனது தத்துவத் தொல்லை கூடிக்கொண்டே போகும். இருந்தாலும் இடையிடையே அவன் இடக்கு முடக்கா கேள்வி கேட்பான். பதில் சொல்வதில் பொய்யனாக மாற விரும்பாத நேரத்தில் எல்லாம் உனக்கென்ன லூசோ என பதில் சொல்லி அடிச்சு அமர்த்திவிடுவன்.
“குஞ்சு தண்ணி கொண்டுவாவனம்மா.. விக்கினாலும்…“ என இழுத்தான் தர்மலிங்கம். “இஞ்சை நான் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கிறனப்பா என்ரை குஞ்செல்லே… வந்து நீயே எடுத்துக் கொண்டுபோவன்“ என்றாள் மனைவி. தர்மலிங்கத்தார் குளைஞ்சபடி எழுந்து போனார். கோப்பையிலிருந்து எழும்பிய சாப்பாட்டு வாசனை கொண்டெழுப்பியது.
விபஸ்தை கெட்டது என்ரை “கொலேக்“ மயிலன். அண்ணை இவர்தானே போனமுறை நாங்கள் சேர்ந்து தண்ணியடிக்கயிக்கை “குடும்பம் எண்டது ஒரு அதிகார நிறுவனம்… அது குலையவேணும் எண்டு பிரசங்கம் செய்தவர்… இப்பிடி குஞ்சு..குஞ்சு எண்டு குலவுறாங்களே…“ எண்டு கவுண்டமணி பாணியிலை உலாய்ஞ்சு காட்டினான் மயிலன். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நேரங்கெட்ட நேரத்தலை இப்பிடியொரு கேள்வியைப் போடுறானே இந்த நாய். “உனக்கென்ன லூசோ” எண்ட வழமையான பதில் சரிப்பட்டு வரும் எனத் தெரியவில்லை. கறுவினேன். இந்தச் சாப்பாடு இவனுக்கு கண்ணுக்குத் தெரியயில்லையா. இந்த இத்தாலி வைன் தெரியயில்லையா. றால் பொரியல் தெரியயில்லையா… வெங்காயம்.. எண்டு மனசுக்குள் கடிந்து கொண்டேன். ஒருமாதிரி ஒரு கெளிச்ச வாய் வைன் சிரிப்பை உதிர்த்து அவனை அமத்திப் போட்டன்.
எப்பிடியோ வந்த அலுவலை பிசிறு இல்லாமல் முடிச்சிட்டம். வயிறு புல். இப்போ நாங்கள் குடையுடன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். இவனிட்டை இன்னும் கேள்விகள் இருக்குமோ எண்டு நான் ஐமிச்சப் பட்டதாலை விஸ்வரூபம் படத்துக்கிள்ளாலை வழியெடுத்து நடந்து போய்க்கொண்டிருந்தோம். ஒரே கும் இருட்டாக இருந்தது.