இலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.
இங்கு நான் எழுதும் விடங்கள் பெரும்பாலும் இலக்கியச் சந்திப்பை புறநிலையில் இருந்து பார்க்கும் பார்வைகள்தான். ஏனெனில் 1993 இல் சுவிசில் மனிதம்; குழு நடத்திய இலக்கியச் சந்திப்பைத் தவிர வேறு எந்த இலக்கியச் சந்திப்பிலும் நான் பங்குபற்றியதில்லை. சுவிஸில் நான் அங்கம் வகித்த வாசகர் வட்டம் (மனிதம் குழு) இன் செயற்பாடுகளில் நாம் கொண்டிருந்த ஈடுபாட்டையும், செயற்பாட்டையும் மீறி இலக்கியச் சந்திப்பு என்னை மட்டுமல்ல, மனிதம் குழுவிலிருந்த பலரையும் ஈர்க்கவில்லை. இலக்கியச் சந்திப்புகளுக்கு ஓரிரு தோழர்களே மனிதம் குழுவிலிருந்து அவ்வப்போது போய்வந்தார்கள்.
இலக்கியச் சந்திப்பு பற்றிய மனிதம் குழுவின் (அன்றைய) நிலைப்பாடு இலக்கியச் சந்திப்பு தன்னளவில் ஆற்றிய சமூகப் பாத்திரத்தை மறுத்தல் என்பதாகாது. அதற்கொரு முக்கியத்துவம் இருக்கிறது. அதேநேரம் இலக்கியச் சந்திப்புப் பற்றிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டியமைப்பது தேவையற்றது. அதன் பலவீனங்களை ஜனநாயகத்தன்மை அல்லது பன்முகத்தன்மையின் அடையாளமாகக் காட்டுவது ஏற்புடையதல்ல. அதனடிப்படையில் முரண்பாடுகள் இன்னமும் கூர்மையடையுமே தவிர குறைவடையாது.
புகலிட சிறுபத்திரிகை சூழல்
புகலிட சிறுபத்திரிகைச் சூழலை புரிந்துகொள்ளாமல் இலக்கியச் சந்திப்பை வியாக்கியானப்படுத்துவது இயலாத காரியம் என்பது என் கணிப்பு. இந்த சிறுபத்திரிகைகளின் உருவாக்கம் பெரும்பாலும் 1980 களின் ஆரம்பத்தில் முனைப்புக் கொண்ட ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து வந்தவர்களாலும், இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களாலும்; ஆரம்பமாகியது. இன்னுமொரு குறிப்பிடத்தக்க தரப்பினராக இடதுசாரி இயக்கங்களில் இருந்தவர்கள், அதன் (1970 களின் ஆரம்பத்தைய) சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் என்பவர்களும் இருந்தார்கள்.
1983 இன் இனக்கலவரமும், 80 களின் நடுப்பகுதியில் இயக்கங்கள் மீதான புலிகளின் தடைகளும் அழித்தொழிப்பும், இயக்கங்களின் உள்முரண்பாடுகளில் பிதுங்கி வெளியே விழுந்தவர்களுமாக ஒரு பகுதியினரின் அகதி வாழ்வு தொடங்குகிறது. இந் நிலைமைகளைப் பாவித்து பொருளாதார தேவைகளை ஒட்டி பலர் அகதிகளாக மேற்குலகிற்கு இடம்பெயர்ந்தனர். பொருளாதார தேவை என்பதும் ஒரு அரசியல் பிரச்சினைதான் என்றளவில், அரசியல் அகதிகள் என்ற சொல் பொதுமையாகப் பாவிக்கப்படுவது சரியெனவே தோன்றுகிறது.
வந்துசேர்ந்த அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களிடையே ஒரு பகுதியினர் தளத்தில் (நாட்டில்) இயக்க அரசியலில் நேரடியாக ஈடுபட்டவர்களும், பின்தளத்தில் (இந்தியாவில்) ஆயுதப்பயிற்சிக்கென போய்வந்தவர்களும், அந்த இயக்கங்களுக்காக ஓடித்திரிந்து வேலைசெய்தவர்களும் இருந்தனர். அதேநேரம் புகலிட நாடுகளில் இந்த இயக்கங்களில் சேர்ந்து ஒரு பகுதியினர் அர்ப்பணிப்புடன் வேலைசெய்தனர். பிரச்சாரம் செய்தல், பணம் சேகரித்தல் என நம்பிக்கையுடன் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
அகதிச் சூழல்
தமிழ் அகதிகள் இந்த நாடுகளின் மக்களுடன் தகமைந்த வாழ்வை தொடங்கிக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். நிறவெறி, மொழிப்பிரச்சினை, கலாச்சார முரண்பாடு, காலநிலைக்கு பழக்கப்படாமை, பன்முகத்தன்மையற்ற சிந்தனைமுறையில் பழக்கப்பட்டிருந்தமை, இதற்குமுன்னரான தமிழ்ச் சந்ததியென்ற ஒன்று இல்லாமை (இலண்டன் விதிவிலக்கு) எல்லாமே ஒரு அந்நியப்பட்ட தன்மையில் அவர்களை வைத்திருந்தது. சாதியச் சிந்தனைமுறைகளும், சமூக உறவுமுறைகளும் அதிகாரம் செலுத்துதல், ஒடுங்கிக்கொள்ளல் என்ற மனோபாவத்தை வளர்த்துவிட்டிருந்த நிலையில், வெள்ளையினக் கருத்தியலுக்குள் அகப்பட்டிருந்த நம்மவர் வெள்ளையினத்தவர் முன்னால் ஒடுங்கிக்கொள்ளும் சுபாவத்தை வரித்துக் கொண்டனர். தமக்குள் குறுகிப்போயிருந்தனர்.
இது நாட்டுக்கு நாடு வேறுபாடுகளையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். பிரான்சில் பாரிஸிலும், இங்கிலாந்தில் இலண்டனிலும், கனடாவில் ரொறன்ரோவிலும் தமிழர்கள் கூட்டமாக வாழும் நிலை ஏற்பட்டது. ஆனால் சுவிஸ், யேர்மன் இலும் ஸ்கன்டினேவியன் நாடுகளிலும் இப்படி ஒன்றுகுவியும் நிலை அனுமதிக்கப்படவில்லை. நாம் போய் இருக்கவேண்டிய மாநிலங்களை இந்த நாடுகளே தீர்மானித்தன. அதனால் நாடு முழுவதும் பரந்து கிராமங்கள், மலைப் பகுதிகளென பரம்பி அந்தந்த நாட்டுச் சமூகங்களுடன் ஒன்றுகலந்து இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது வாழ்நிலைகளில், தகவமைதலில், மொழியாற்றலில் எம்மவரிடையே வேறுபாடான நிலைகளை நாட்டுக்கு நாடு தோற்றுவித்தது.
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதானால் நகரநிர்வாகத்தில் (பொலிஸ்) அனுமதி பெற்றே போக வேண்டிய நிலை யேர்மனியில் இருந்தது. கடவுச் சீட்டு இல்லாததால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. சிறு உதவித் தொகையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு பல வருடங்கள் (10 இலிருந்து 20); காத்திருக்க வேண்டியிருந்தது. நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது.
சிறுபத்திரிகைகளின் தோற்றம்
இந்தக் காரணிகள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் மற்றைய இயக்கங்களிலிருந்து வந்தவர்கள் பயங்கரமான மன உளைச்சல், ஆத்திரம், இயலாமை, ஏமாற்றம், குற்றவுணர்வு… என்ற மனித உணர்வுகளுக்குள் சிக்குப்பட்டு அல்லாடினார்கள். அவர்களுக்கிடையில் அறிமுகம், பகிர்வு, உறவு… என தொடர்பாடல் தொடங்குகிறது. பின்னர் இது ஐரோப்பா கனடா என சிறுபத்திரிகைகள் மெல்லத் தலையெடுத்து, சுமார் 40 சிறுபத்திரிகைகள்; வரை வெளிவருவதற்கு வழியமைத்தது. குழுக்களாகவும் சில செயற்படத் தொடங்கின. சுவிசிலிருந்து வாசகர் வட்டமும் (மனிதமும்), கடனாவிலிருந்து தேடகமும் ஒப்பீட்டளவில் பெரிய குழுக்களாக இருந்தன.
மனிதம் என்ற பெயர் வருமுன் அதன் முதற்தோற்றம் வாசகர் வட்டம் என்ற சிறு குழுவாகவே இருந்தது. வாசகர் வட்டம் புலிகளின் அடாவடித்தனத்துக்கு அகப்படாமல் இருப்பதற்காக இரகசியமாக கூடியது. புலிகளுக்கு இது தெரியவர, நாம் துரோகக் குழுக்களென பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நாம் வெளியில் வரவேண்டியிருந்தது. மனிதம் என்ற வீடியோ சஞ்சிகையை 1988, 89 களில் (அரசியல், சமூக பார்வைகளை முன்வைத்து) வெளிக்கொணர்ந்தோம். 5 காணொளி சஞ்சிகைகள் வந்தன. இதுவே மனிதம் குழு என்ற பெயரால் அழைக்கப்பட காரணமாயிற்று. 1989 செப்ரம்பரில் -மனிதம் என்ற பெயரிலேயே- வாசிப்புக்கான கையெழுத்துச் சஞ்சிகை உருவத்துக்கு அது மாறியது.
இவைபற்றி எழுத நிறைய இருக்கிறது. அன்றைய நிலையை ஓரளவாவது புரிந்துகொள்ள வைக்க உதவும் என்ற வரையறைக்குள் நின்றுதான் இவற்றைச் சொல்கிறேன். இங்கே நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். (இயக்கங்கள் தவிர்ந்த) சிறுபத்திரிகைகள்;, அல்லது அது சார்ந்த குழுக்களின் பெயர்கள் பெரிதும் அரசியற் சொற்களாக இல்லாததுதான் அது. இது ஒருவகை தற்காப்பு உத்தியென கொள்ள இடமிருக்கிறது. மனிதம், தூண்டில், சிந்தனை, சுவடுகள், சமர், சஞ்சீவி, அஆஇ, சுமைகள், காலம்… என சஞ்சிகைகள் தம்மை பெயரிட்டுக் கொள்ள, வாசகர் வட்டம், தேடகம்.. என குழுப் பெயர்களும் இருந்தன. இலக்கியச் சந்திப்பு என்ற பெயரிடலும் இதன் அடிப்படையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
இலக்கியச் சந்திப்பின் தோற்றம்
யேர்மனிக்குள் வெளிவந்த சஞ்சிகையாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைத்து கருக்கொண்ட ஒரு தொடர்பாடல் குழுவாக நாம் இலக்கியச் சந்திப்பின் தோற்றத்தை பார்க்கலாம். புதுமை, சிந்தனை, தூண்டில், வண்ணத்துப் பூச்சி, ஏலையா, வெகுஜனம், கலைவிளக்கு, பெண்கள் வட்டம், யாத்திரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் வாசகர்களும் 24.9.88 அன்று யேர்மனியின் கேர்ண் நகரில் (முதல் இலக்கியச் சந்திப்பு) சந்தித்துக் கொண்டனர். இதை “ஓர் அதிசயம்“ என்று தூண்டிலில் ஜோசப் என்பவர் எழுதியிருந்தார். “இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் ஏடுகளின் ஆக்கிரமிப்பை உடைப்பது, சமுதாய விழிப்பை ஏற்படுத்துவது, அரசியல் கருத்துகளைப் பரவலாக்குவது என்ற நோக்கங்களை அனைத்து சஞ்சிகை ஆசிரியர்களுமே பரவலாகக் கொண்டிருந்தார்கள்.“ என அவர் குறிப்பிட்டுமிருந்தார். இலக்கியச் சந்திப்பு இலக்கியம் பேசுவதற்காக மட்டும் உருவாகியதல்ல என்பதை இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது.
இது பின்னர் படிப்படியாக மற்றைய புகலிட நாடுகளின் சஞ்சிகையாளர்கள் வாசகர்கள் என விரிந்த தளத்துக்கு வந்தது. இதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் பார்த்திபன், பீற்றர் ஜெயரத்தினம், ஸீனி லோகன், பாரதிதாசன், பரா மாஸ்ரர், மல்லிகா, சுசீந்திரன், இன்பா, சிவராஜன், புஸ்பராசா, சபாலிங்கம், கலைச்செல்வன், லக்ஷ்மி, அசோக் … என நீண்ட ஒரு பட்டியல் இருக்கிறது. (இவர்களில் சபாலிங்கம் புலிகளால் பாரிஸில் வைத்து கொலைசெய்யப்பட்டார்.)
இலக்கியம், அரசியல் இடையிலான உறவு என்பது பிரிக்கமுடியாதது. இன்னமுமாய் அகதிநிலை மாந்தர்களிடம் போராட்ட அரசியலானது இலக்கியத்துடன் எவ்வாறான கூட்டியக்கத்தை கொண்டிருக்கும் என்ற புரிதல் கவனிப்புக்கு உரியது. வெளிவந்த சிறுபத்திரிகைகள் பெரும்பாலுமே அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தன. எனவே இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கத்தை இவை தீர்மானித்தன. இலக்கியச் சந்திப்பின் உரையாடல்களில் அரசியல் மிதப்பாகியது.
புகலிடத்தில் புலிகளின் விரிவாக்கம்
மற்றைய இயக்கங்களின் அழிவுகளோடும் அழிப்புகளோடும் புலிகள் அமைப்பு தன்னை பெருமெடுப்பில் கட்டமைக்க முனைகிறது. இதை கருத்தியல் தளத்தில் வேலைசெய்வதன் மூலமும் எட்ட முனைகிறார்கள். ஒருபுறம் புலிகளின் சாகசங்களை காட்சிப்படுத்தலும் விவரித்தலுமென இருக்க, மறுபுறம் துரோகக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள், சமூகவிரோதக் கும்பல்.. என்றவாறான மற்றைய இயக்கங்களின் மீதான அவதூறுகளும் நடந்தேறுகின்றன. மற்றைய இயக்கங்களை ஆதரிப்போர் கண்காணிக்கப்படுகின்றனர்.
தனிநர்களின் முயற்சியில் நடந்த சமூக அசைவியக்கங்கள் புலிகளால் உள்வாங்கப்படுகின்றன. வானொலிகள், கோவில்கள், சங்கங்கள், தமிழ்ப் பாடசாலைகள் என சமூக ஊடாட்ட அமைப்புகளையெல்லாம் கையகப்படுத்தியது புலிகள் அமைப்பு. இந்த கையகப்படுத்தல் தொலைக்காட்சிவரை போய்ச் சேர்ந்தது. எந்த இயக்கத்தவரும் பகிரங்கமாக கூடவே முடியாத நிலை. பணம் கொடுக்க மறுப்பவர்களை „நாங்கள் நாட்டிலை பார்த்துக் கொள்ளுறம்“ என்ற வெருட்டலுடன் அடிபணிய வைத்தார்கள். இவை 80 களின் இறுதிப் பகுதிகளின் நிலை.
இலக்கியச் சந்திப்பின் அரசியல்
புகலிடத்தின் அநேகமாக எல்லா சமூக இயங்குதளங்களும் புலிகளிடம் போய்ச்சேர்ந்ததும், முக்கியமான சிறுபத்திரிகைத் தளம் இந்த மாற்று அரசியல் தளத்தில் நின்றதற்கு உறுதுணையான ஒரு இணைப்புக் குழுவாக இலக்கியச் சந்திப்பை வரையறுக்க முடியும். இலக்கியச் சந்திப்புக்கான அரசியல் உண்மையில் வெளியிலிருந்து -அதாவது புகலிட சிறுபத்திரிகைகளிலிருந்தும், இடதுசாரி சிந்தனைகொண்ட தனிபர்கள், குழுக்களிடமிருந்தும்- உள்ளே வந்ததுதான். சிறுபத்திரிகைகளின் உள்ளடக்கம் பேசும் அரசியல் இலக்கியச் சந்திப்பின் விவாதப் பொருளாகி -உடன்பாடுகளோடும் வித்தியாசங்களோடும்- ஒரு குழு வடிவத்தை படிப்படியாக வடிவமைத்துக்கொண்டே இருந்தது. இதுவே பொதுமைப்படுத்தலாக இலக்கியச் சந்திப்பு ஜனநாயகத்துக்காக, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நின்ற பாரம்பரியம் உடையது என தனது கோசத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு அர்த்தத்தை வழங்கியது.
புகலிட நாடுகளில் வந்த இந்த சஞ்சிகையாளர்கள் தனித்தனித் துருவமாக இருந்திருப்பின், அவையும் புலிகளிடம் பறிபோயிருக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கும். அந்தளவில் ஒரு இணைப்புப் பாலமாக வாசகர்களையும் சேர்த்து இலக்கியச் சந்திப்பு உருவாகியதன் மூலம் அன்றைய சூழலில் ஒரு வரலாற்றுத் தேவையை பூர்த்திசெய்திருக்கிறது என சொல்லலாம். ஆரம்பத்தில் புலிகளின் அராஜகத்துக்கெதிராக விடாப்பிடியாக இயங்கும் மனோநிலையையும், சிறுபத்திரிகைகளை முடிந்தவரை கொண்டுவரும் உற்சாகத்தையும் உளவியல் தளத்தில் அது வழங்கியது.
சிறுபத்திரிகைகள் பலவும் புலிகளை விமர்சிப்பதோடு நின்றுவிடவில்லை. அவை அரசு, மற்றைய இயக்கங்கள், பேரினவாத கட்சிகள், தமிழ்க் கட்சிகள், ஜேவிபி.. என அரசியல் சக்திகளையும் விமர்சித்தன. முஸ்லிம் மக்கள்மீதான தமிழ் இனவாத செயற்பாடுகள் பற்றியும் பேசின. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடு மற்றும் அதன் இராணுவத் தலையீடு என்பன பற்றியும் பேசின.
அத்தோடு தாம் வாழும் நாடுகளில் முகங்கொடுத்த நிறவெறி, பண்பாட்டுப் பிரச்சினைகள் என்பனவும் அவைகளின் பேசுபொருளாக இருந்தன. சாதி ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக ஒடுக்குமுறைகள் பற்றியும் அவை பேசின. குழந்தை வளர்ப்பு, தமிழ்க் கல்வி முறைமைகள், மதம் பரப்பும் அமைப்புகள், பண்பாட்டின் பெயரில் நடந்த கொண்டாட்டங்களின் விகாரங்கள் என்பன பற்றியும் பேசின. பெண்ணியச் சிந்தனை கொண்டவர்களால்; பெண்கள் வட்டம், நமது குரல், கண், ஊதா, சக்தி போன்ற பெண்கள் சஞ்சிகைகள் பெண்களின் முழுமையான உழைப்புடன் வெளிவந்தன.
இந்த பன்முக உள்ளடக்கம்கொண்ட சிறுபத்திரிகை யாளர்களினதும், அதன் வாசகர்களினதும் சந்திப்பு என்பது ஒரு பன்முகப் பார்வைகளுடனும் வித்தியாசங்களுடனும் சந்தித்து உரையாடும் களமாக இலக்கியச் சந்திப்பை உருவமைத்ததில் முக்கிய பங்கை ஆற்றின. அதில் புலிகள் உட்பட எவரும் பங்குகொள்ளவும் கருத்துச்சொல்லவும் கோட்பாட்டளவில் வாசல்கள் திறந்திருந்தன. அச்சமும் இருந்தன. புலிகளின் நெருக்குதலை சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில்கூட, அவர்கள் அதுவும் பொறுப்பாளர்கள்கூட அதற்குள் இலக்கியச் சந்திப்பின் வாசலுக்குள்ளால் வந்து ஒரு மார்க்கமாக உட்கார்ந்து இருந்த சம்பவங்களும் உண்டு.
இலக்கியச் சந்திப்பின் கட்டமைப்பு
எனவே இது ஒரு அமைப்பு வடிவமாக வரையறுக்கப்பட்டு தொடங்கப்பட்டதல்ல. அதற்கான சட்டதிட்டங்கள், நிர்வாக முறைமைகள், இலக்குகள், வேலைமுறைகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. இது கூட்டுவிவாதங்களையும், தோழர்களுக்கு இடையிலான தொடர்பாடலையும் உறவுகளையும் பேணியதோடு தனிக்குரல்களை கூட்டுக் குரலாக ஒலிக்கவைக்கும் களமாகவும் மட்டுமே இருந்தது. இதற்கு மேலாக, வெகுஜன அரசியல் தளத்தில், செயற்பாட்டுத் தளத்தில் அதன் நேரடிப் பாத்திரம் இல்லை என்றே சொல்லலாம். இவ்வகைப் போக்கும்; நிர்வாகமுறைமைகளை தேவையற்றதாகப் பேணியது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்த நிர்வாக முறைமையின்மையை அதிகாரமற்றதான அல்லது ஜனநாயகபூர்வமான வடிவமாகக் காட்டுவதில் அர்த்தமில்லை. (இங்கே நிர்வாக முறைமைகள் என்பதை நிரந்தர தலைவர், செயலாளர் என்ற வரைவுக்குள் பார்ப்பதல்ல). உதாரணப்படுத்துவதானால், ஒரு பத்திரிகையை அது வெளிக்கொணர்ந்து இருக்குமானால், அதற்கென பத்திரிகைக் குழு என்ற ஒரு நிர்வாக அலகு தேவைப்பட்டிருக்கும்.
இந்த நிர்வாக முறைமையின்மையானது இலக்கியச் சந்திப்பினை செயற்பாட்டுத் தளத்தில் இயக்குவதற்கான வேலைமுறையின் போதாமையை அல்லது இல்லாமையைத்தான் வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாம். குறைந்தபட்சம் வெளியீட்டுத் தளத்தில்கூட அது வேலைசெய்யவில்லை.
– இந்த சந்திப்புகளில் வாசிக்கப்பட்ட அல்லது உரையாடப்பட்ட விடயங்களை பதிவுகளாக்க தவறியது. (இதுவரை இரண்டு தொகுப்புகள்தான் வந்தன).
– தமிழின் பதிப்பிக்கப்பாத அல்லது வசதியின்மையால் தவறிப்போன எழுத்துக்களை அது கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்ததில்லை. இதை தனிநபர்களாக சில தோழர்கள் தமது சொந்த உழைப்பில் செய்திருக்கிறார்கள்.
– பல்மொழி பேசும் நாட்டில் இருந்துகொண்டே, அந்தந்த நாட்டின் இலக்கிய, அரசியல், தத்துவார்த்த தளங்களில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு, அதை வெளியீடுகளாக்கும் தேவையை கண்டுகொள்ளாமலே இருந்தது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல ஊக்கமுள்ள அதன் பங்குபற்றுனர்களும் இதற்கு வெளியிலிருந்த சிறுபத்திரிகையாளர்களும் முடிந்தளவு இந்த வேலைகளில் இயல்பாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தொலைபேசி மிரட்டலிலிருந்து (சபாலிங்கம்) கொலைவரை புலிகளின் வன்முறைகளை அவர்கள் முகங்கொடுத்தார்கள். சில உதாரணங்களாக, சுவடுகள் சஞ்சிகையின் அமிர்தலிங்கம், பள்ளம் சஞ்சிகையின்; கலைச்செல்வன் ஆகியோர் புலிகளால் தாக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம். பொது இடங்களில் சஞ்சிகைகளை விற்பனை செய்யும்போதெல்லாம் புலிகள் இடையூறுகள் செய்தனர். பறித்து எறிவது, அனுமதி பெறாமல் விற்பனை செய்வதாக பொலிசுக்கு காட்டிக் கொடுப்பது, ஏசுவது மிரட்டுவது… என அவை தொடர்ந்த வண்ணம்தான் இருந்தது.
இதையும் தாண்டி அவைகள் வெளிவந்தன. இவையெல்லாம் அர்ப்பணிப்புகளுடன் செய்யப்பட்டன. இதில் நேர்மையாக ஈடுபட்ட பலரும்; பொருளாதார ரீதியிலும் இழப்புகளை சந்தித்துக்கொண்டே இருந்தனர், இருக்கின்றனர்.
சபாலிங்கம் கொலையை எதிர்கொள்ளல்
அரசியல் செயற்பாட்டாளராகவும், பதிப்பாளராகவும்;, மனித உரிமைவாதியாகவும், எதேச்சாதிகார எதிர்ப்பாளராகவும் செயற்பாட்டுத் தளத்தில் இயங்கிய ஒரு முக்கிய ஆளுமையாக புகலிடத்தில் இருந்தவர் சபாலிங்கம். இவர் புலிகளால் மே தினமொன்றில் (1994) பாரிஸிலுள்ள அவரது வீட்டுக்குள் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது புகலிட சிறுபத்திரிகைகள் மத்தியிலும் இலக்கியச் சந்திப்பினுள்ளும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இலக்கியச் சந்திப்புக்கு வெளியில் இருந்த முக்கியமான குழுக்களாக சுவிஸின் மனிதம் குழு (வாசகர் வட்டம்) வும் கனடாவின் தேடகம் குழுவும் குறிப்பிடக் கூடியன. இவை ஓரளவு செயற்பாட்டு ரீதியில் இயங்கியதால், சபாலிங்கம் சுடப்பட்ட உடனேயே அதை எதிர்த்து நிற்காவிட்டால் இனி எல்லாரும் அமைதியடைய வேண்டிவரும் என்ற எச்சரிக்கையுடன் புலிகள்தான் சுட்டார்கள் என்பதை அம்பலப்படுத்தி பிரசுரம் வெளியிட முடிவுசெய்தன. அப்போ இணையம் இல்லாத காலம் என்பதால் நடைமுறைச் சிக்கல்கள் பல எழுந்தபோதும், இதையும் தாண்டி பொதுவான பிரசுரமொன்று அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது. மனிதம், தேடகம் (தாயகம்), தூண்டில், சமர் ஆகிய சிறுபத்திரிகைகள்;; இதுவிடயத்தில் கூட்டாக செயற்பட்டன.
சஞ்சிகையாளர்களுடன் விரைந்து தொடர்புகொண்டு உடன்பாடு கொண்ட சஞ்சிகைகளின் பெயர்களில் பிரசுரமொன்று தயாரிக்கப்பட்டது. மனிதம், சமர், தூண்டில், சிந்தனை, தேனீ, ஊதா, சுவடுகள், சுமைகள், தாகம், ஈழபூமி, தேடல், தாயகம், காலம், நான்காவது பரிமாணம், விழிப்பு, கிரியகுரல் போன்ற சிறுபத்திரிகைகள் உடன்பட்டிருந்தன. இவை சார்பான அந்தப் பிரசுரம் அடுத்த நாளே அந்தந்த நாடுகளில்; விநியோகிக்கப்பட்டது. சுவிஸிலும் யேர்மனியிலும் டொச் மொழியிலும் இப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இந்த கூட்டு செயற்பாட்டில் பங்குபற்றாத அல்லது பங்குபற்ற முடியாமல்போன சஞ்சிகைகள் ஒருசில தாமே பிரசுரங்களை தயாரித்து வெளியிட்டன. அதேபோல் அரசியல் சமூக இலக்கியத் தளங்களில் இயங்கிய தனிநபர்கள், சில ஈழவிடுதலை இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளும் விரைந்து செயற்பட்டு இந்தப் படுகொலையை சர்வதேசமெங்கும் வெளிக்கொணரும் வேலையில் இறங்கின. இலக்கியச் சந்திப்பு சார்பாக பொதுவான பிரசுரத்தை விடுவதற்கான விரைந்த வேலைமுறைக்கு அதன் நிர்வாக முறைமையற்ற நிலை காரணமாகிப் போனது.
அதன்பின்னரான சபாலிங்கத்தின் அஞ்சலிக்கூட்டத்தை துயரோடும், எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளோடும், அச்சவுணர்வோடும் ஒரு வரலாற்றுக் கடமையாக இலக்கியச்சந்திப்புத் தோழர்கள் முன்னின்று பாரிஸில் நடத்தி முடித்தனர். இந்த ஊடாட்டம் ஒரு சிறு முரண்பாடாகக்கூட எழாமலிருக்குமளவுக்கு பரஸ்பர செயற்பாடுகள் அமைந்ததன. சபாலிங்கத்தின் கொலையை அடுத்து மே 23 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் கனடா ரொறன்ரோவில் இயங்கிவந்த தேடகம் நூல் நிலையமும் ஆவணக் காப்பகமும் புலிகளால் போத்தல் குண்டெறிந்து தீக்கிரையாக்கப்பட்டது.
சபாலிங்கம் கொலையின் பின்னர்..
இதன்பின்னர் நிலைமை மாறத் தொடங்குகிறது. சபாலிங்கத்தின் கொலை 1994 மே மாதம் நடந்து முடிந்த அதிர்ச்சி சில தோழர்களை பின்வாங்கச் செய்தது. ஏற்கனவே தமது பணத்தையே கொட்டி தீர்த்துக்கொண்டு அவதிப்பட்ட நிலையும் சேர்ந்து கணிசமானளவு சஞ்சிகைகள் நின்று போயின. சில சிறுபத்திரிகைகள் நின்றுபிடித்தன.
மனிதம் சிறுபத்திரிகையும் இதற்குள் நின்று பிடித்தபோதும், அமைப்பின் வடிவம் பற்றிய உள்முரண்பாடுகளுள் சிக்குண்டு இருந்தது. சுதந்திரமான வெகுஜன அமைப்பாக இயங்கிய மனிதம் குழுவுக்குள் (வாசகர் வட்டத்துள்) தமிழீழக் கட்சியின் (தீப்பொறிக் குழு) தோழர்களும் இருந்தார்கள். அக் கட்சி; தலைமறைவு அமைப்பாக இயங்கியதனால், இத் தோழர்கள் வாசகர் வட்டத்துள் இயன்றளவு தம்மை வெளிக்காட்டாதபடி இருக்க நேரிட்டது. பின்நாளில் அக் கட்சி தமது அமைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்காகவென படிப்படியாக வாசகர் வட்டத்திலிருந்து வெளியே வரும்படி தனது தோழர்களுக்கு அறிவுறுத்தியது. வாசகர் வட்டத்துள் ஆளுமையுடன் செயற்பட்டுக்கொண்டிருந்த இத் தோழர்களின் வெளியேற்றம், வாசகர் வட்டத்தின் சக தோழர்களை மனிதம் குழுவின் பின்னணி பற்றிய அநாவசியமான சந்தேகத்துக்கு உள்ளாக்கியது. இது மனிதம் குழுவின் சிதைவுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
உள்முரண்பாடுகளுள் சிக்குண்டு போனதை சரியாகக் கையாளத் தவறிய நிலையில் 1994 இறுதிப் பகுதியில் வாசகர் வட்டம் சிதைந்து போனது. 1989 இல் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கிய மனிதம் தனது 30 வது இதழுடன் (தனது அஸ்தமனத்தை வாசகர்களுக்கு அறிவித்து) நின்று போனது. அதன்பிறகும் வேறு சில சஞ்சிகைகள் வெளிவந்தன.
இப்படியாய் நின்றுபோன சிறுபத்திரிகைகளின் செயற்பாட்டுடன் ஒருவித சோர்வும், சபாலிங்கத்ததை பறிகொடுத்த துயரும், அச்சமும், பொருளாதார ரீதியில் இழந்த இழப்புகளும், நம்பிக்கையீனங்களும் புகலிட இலக்கிய அரசியல் பரப்பில் தேக்கத்தை உண்டுபண்ணியது. இதே காலப் பகுதியில் புலிகளின் வன்முறைகள்; மீதான சட்ட நடவடிக்கைகளுக்கான சாதகமான நிலைமை ஐரோப்பிய நாடுகளில் தோன்றின. அவர்கள்மீது ஒரு அழுத்தம் ஏற்பட்டது. இதற்கு சபாலிங்கத்தின் கொலை என்பதைவிட, ஐரோப்பிய நாடுகளின் புலிகள் மீதான அரசியல் நிலைப்பாடுதான் காரணம். அதன்பிறகான நாட்களில் புலிகளின் நிறுவனமயப்பட்ட வன்முறை கட்டுக்குள் வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமான வன்முறைகள் உதிரிநிலையில் நடந்து பின் படிப்படியாக இல்லாமல் போனது.
புகலிட இலக்கிய, அரசியலின் அடுத்த கட்டம்
இத் தேக்கத்திலிருந்து விரைவாகவே விடுபட்டு, படிப்படியாக புகலிட இலக்கியம் பாரிஸை மையங்கொண்டது. அந்தளவில் பாரிஸ் தோழர்களிடம் எனக்கு மதிப்பு இருக்கிறது. ஆனாலும் தனிநபர் தாக்குதல் கலாச்சாரம் அங்கு மிதக்கத் தொடங்கியது. அம்பலப்படுத்தல் என்ற பெயரில் தனிநபர் தாக்குதல்கள் பிரசுரங்களில் தொடங்கி, கல்வெட்டுப் பாடுவது என்று போய், (ஜன்னல்களைத் திறவுங்கள்) என சிறு வெளியீடுவரை போய் நின்றது. பாரிஸிலிருந்து வெளியான எக்ஸில் சிறுபத்திரிகையில் ஏற்பட்ட பிளவில் உயிர்நிழல் சஞ்சிகை தோற்றம் பெற்றது. இந்த இரு சிறுபத்திரிகைகளின் முரண்பாட்டுக்குள் இந்தக் கலாச்சாரமும் புகுந்து விளையாடி சேறாடியது. குழுவாதங்களையும் அந்தக் கலாச்சாரம் தோற்றுவித்தது.
90 களின் ஆரம்பத்தில் பாரிஸ் வந்த தோழர்கள் இந்த நிலைமையை எப்படி நாம் கடந்து வந்தோம் என்பது பற்றிய புரிதல் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கு அண்மையில் சபாலிங்கத்தின் கொலைக்கு குரல் கொடுத்ததில் சிறுபத்திரிகைகளின் பங்கை மறுதலித்து,
“மாற்றுக்கருத்துகளுக்காக போராடிய அவர் சார்ந்த இலக்கியச் சந்திப்பு நண்பர்கள் போன்ற ஒருசிலர் மட்டுமே தனித்துநின்று இக்கொலையினை எதிர்த்து குரல் கொடுத்தனர்.“ என்று தோழர் ஒருவர் (ஞானம்) தனது இணையத்தளமான உண்மை இல் எழுதியதை ஒரு சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்.
தன்னளவுக்கு இலங்கை அரசுக்கு (அதிகாரத்துக்கு) எதிராக எழுதியவர் புகலிடத்தில் எவருமில்லை என அளவீடுகளை வைக்கிறார் இன்னொரு தோழர் (சோபாசக்தி). எவருமே எதிர்த்துக் குரல்கொடுக்க முடியாத அதிகார சூழலுக்குள் எழுதுவதின் பெறுமதியை, எந்த ஆபத்துமற்ற சூழலுக்குள் ஒருதொகையாக எழுதுவதுடன் இப்படி அளவீடு செய்வது அபத்தமானது. அரச ஒடுக்குமுறைக்குள் இருந்துகொண்டே கொழும்பிலிருந்து வெளிவந்த சரிநிகர் பத்திரிகையின் பங்கையும், புலிகளின் வன்முறைக்குள் -90களின் நடுப்பகுதிக்கு முன்னரான- புகலிடச் சிறுபத்திரிகைகளின் பங்கையும் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட புரிதலின் இன்னொரு சாட்சியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல அரசியலிலிருந்தே நீண்டகாலம் ஒதுங்கியிருந்த சில தோழர்களும் (ராகவன், நிர்மலா போன்றோர்) 1990 களின் இறுதிப் பகுதியில் புகலிட அரசியல் சூழலுக்குள் வந்தனர். புகலிடத்தில் கருத்துரிமையைக் காப்பாற்ற சிறுபத்திரிகைகள் செய்த பங்களிப்புப் பற்றி 90 களின் நடுப் பகுதிக்குப் பின் வந்துசேர்ந்தவர்கள் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதோ, குறைந்தபட்சம் அதன் உள்ளடக்கங்களை வாசித்தறிந்திருக்கிறார்கள் என்பதோ கேள்விக்கு உரியதுதான். இந்த சிறுபத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பும் இழப்புகளும்தான் இலக்கியச் சந்திப்பின் அடித்தளம் என்பதிலிருந்தே இக் கேள்வி எழும்புகிறது.
இவ்வாறாக 90 களின் முதற்பகுதிவரை அதிகாரங்களுக்கு எதிரான குரல்களாக வெளிவந்த சிறுபத்திரிகைகள் ஏற்படுத்திய களத்தில் நின்றுகொண்டுதான் 1990 களின் நடுப் பகுதியில் புகலிடம் வந்த தோழர்கள் எதுவித பிரச்சினையுமில்லாமல் புலிகளின் அதிகாரத்துவத்துக்கு எதிரான குரலை தொடர்ந்தார்கள். அதிகாரத்துக்கு எதிரான குரல் என்ற பெருவெளிக்குள் புலிகளின் அதிகாரத்துக்கு எதிராக குரல் ஒரு முக்கிய பங்கை ஆற்றியதால் அதை பிரித்தறிந்து கண்டுபிடிக்கும் நிலை இலகுவானதாக இருக்கவில்லை. அப்படியொரு கண்காணிப்பு அரசியலும் இலக்கியச் சந்திப்புக்கோ யாருக்குமோ இருந்ததில்லை.
பிசாசுடனாவது கூட்டுச் சேர்ந்து புலிகளை அழிக்கவேணும் என்ற வகையிலான குரல் மெல்ல கேட்கத் தொடங்கியபோதே புலியெதிர்ப்பு அரசியல் பிரித்தறியப்படுகிறது. இலக்கியச் சந்திப்பின் போக்கு பாரிஸை மையம்கொண்ட புகலிட இலக்கியச் சூழலால் தீர்மானிக்கப்படும் நிலைக்குப் போனபின்பே, வெறும் புலியெதிர்ப்பு கையோங்கியது. இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்தவர்களிலிருந்து அதன் ஆரம்ப கர்த்தாக்கள் சிலர் ஏற்கனவே ஒதுங்கிப் போய்விட்டனர். முக்கியமான சில தோழர்கள் (கலைச்செல்வன், பரா மாஸ்ரர், புஸ்பராசா) நமைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துசென்றனர். இலக்கியச் சந்திப்பின் ஆவணப்படுத்தலை தனியாகவே நின்று தொடர்ச்சியாகச் செய்து, அதை வகைப்படுத்தி ஒழுங்காக பாதுகாத்து வைத்திருந்தனர் கலைச்செல்வனும் லக்ஷ்மியும். 2007 இல் அதை புலிகள் பட்டப்பகலில் யாரும் இல்லாத நேரம் வீட்டுக்குள் புகுந்து ஒன்றையுமே விடாமல் களவாடிச் சென்றனர்.
கருணாவின் பிரிவின் பின்னர் புலியெதிர்ப்புடன் சேர்த்து யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான போராளிகளாக கருணாவும் பிள்ளையானும் -புலியெதிர்ப்பை அதிகார எதிர்ப்பாகக் கொண்ட சில தோழர்களால்- முன்னிறுத்தப்படுகிறார்கள். ர்pபிசி வானொலி இன்னொருபுறம். தான் தனிப்பட பாதிக்கப்படுவதுவரை புலியின் முக்கிய பிரமுகராக இருந்து பின் வெளியேறிய ஜெயதேவன் என்பவரின் சாட்சியங்களுடன் ரிபிசி வானொலியின் பொறுப்பாளர் (ராமராஜன்) புலியெதிர்ப்பை மையப்படுத்திய ஆய்வுகளை பரப்புரைகளை மேற்கொண்டார். இதில் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ளும் சிவலிங்கம், ஜெகநாதன் இருவரும் முக்கிய ஆய்வாளர்களாக இருந்தனர். இலக்கியச் சந்திப்பில் நீண்டகாலம் பங்குபற்றிவரும் தேனீ இணையத்தள ஆசிரியர் (ஜெமினி) தனது இணையத்தளத்தின் மூலம் தீவிர புலியெதிர்ப்பை மேற்கொண்டார். ஒட்டுமொத்த அதிகாரங்களுக்கு எதிரான குரல், மனித உரிமை மீறலுக்கு எதிரான குரல் என்பதெல்லாம் புலித்திசையை நோக்கி மட்டும் ஒலித்தது.
பிள்ளையான் கருணாவை முன்னிறுத்தி, யாழ்மேலாதிக்கத்தை முதன்முதலாக கண்டெடுத்து எதிர்ப்பவர்களாக தம்மை நிறுத்தினர் சில தோழர்கள் (ஞானம் போன்றவர்கள்). தலித் பிரச்சினையில் இந்தப் புள்ளியில் இணைந்துகொண்ட தலித் முன்னணித் தோழர்கள் வெள்ளாளர்களை எதிரிகளாக முன்னிறுத்தி தலித் மக்களுக்காக முன்னரிலிருந்தே குரல்கொடுத்த சக தோழர்களையே வெள்ளாளர் என்ற சொற்களோடு எதிர்கொள்வதுவரை நிலைமை வந்து நிற்கிறது. அவர்களுக்கு இப்போ எதிரிகள் வெள்ளாளர்கள் மட்டும்தான், அரசு அல்ல என்றாகியிருக்கிறது.
மக்களின் அழிவு பற்றிய எந்தப் பிரக்ஞையுமற்று, போர்தின்னும் பூமியின் பண்பாட்டு, மனித விழுமியங்களின் பேரழிவுபற்றிய தொலைநோக்குமின்றி போர்நிறுத்தத்துக்கு எதிராக அவர்கள் நின்றார்கள். உலகிலேயே ஒப்பீட்டளவில் ஒழுக்கமான இராணுவம் இலங்கை இராணுவம்தான் என எழுதினார்கள். புலிகளை மகிந்த அரசு அழித்ததிற்கு நன்றி தெரிவித்தார்கள். அவர்களின் பேட்டிகள் எழுத்துகளில் அரச ஆதரவு பொசிந்தது. அதிகாரத்தின் நுண்களங்கள்வரை தேடிச் சென்று எதிர்க்கும் பின்நவீனத்துவ சிந்தனை முறையைப் பற்றிப் பேசியபடியே (புலிகளற்ற நிலையிலும்கூட) அரச அதிகாரத்தை எதிர்க்கமுடியாத முரணில் எதை விளங்கிக் கொள்ள முடியும்?
இழப்பதற்கு எதுவுமேயற்ற விளிம்புநிலை மக்களுக்கான போராட்டத்தின் சமரசமற்ற தன்மையானது சகல அதிகாரங்களையும் எதிர்ப்பதினூடாகவே உயிர்ப்பூட்டப்படுகிறது. தலித் மக்களுக்காக குரல்கொடுக்கும் தலித் முன்னணி தோழர்களுக்கு வெள்ளாள அதிகாரம் மட்டுமே கண்ணில் படுகிறது. அரச அதிகாரம் அவர்களுக்கு எதிர்ப்பதற்கு உரியதல்ல. முஸ்லிம் மக்களின்மீதான புலிகளின் அதிகாரம் பற்றி பேசிய அளவுக்கு, தற்போது இம் மக்கள்மீதான அச்சுறுத்தலாக எழுந்து வளரும் சிங்கள பேரினவாதம் பற்றி அவர்கள் பேசுவதேயில்லை. இதுதான் அவர்களின் அதிகாரங்களுக்கு எதிராக நிற்றலின் முகம்.
இப்படியாய் புலிகளின் அரசியலை அழித்தல் என்பதற்கும், புலிகளை (அவர்களின் பாசையில் “பிசிக்கலாக“) அழித்தல் என்பதற்கும் வித்தியாசம் தெரியாத கோட்பாட்டு அரசியலை வெளிப்படுத்தினார்கள். இவ்வாறாய் எழுந்த இருவேறு அரசியல் போக்குகளின் தவிர்க்க முடியாத விளைவு தான் இன்றைய இலக்கியச் சந்திப்பு சந்தித்திருப்பது. இதை அரச ஆதரவு – அரச எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு – புலி எதிர்ப்பு என இலகுபடுத்தி விளங்கிக்கொள்ள முடியவில்லை. தமது நலன் சார்ந்த (அரசு) அதிகாரத்தின் பக்கம் நின்றுகொண்டு மற்றைய அதிகாரங்களை எதிர்ப்பவர்களுக்கும், எல்லா அதிகாரங்களையும் எதிர்ப்பவர்களுக்குக்கும் இடையிலான முரண்பாடு என வரையறுக்க முடியும். இதை இன்னொரு வகையில் சொல்வதானால், அதிகாரங்களை எதிர்த்தல் என்பதின் முழுமைக்கும் பகுதிக்குமான மோதல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதில் இலக்கியச் சந்திப்பு அல்லாடுகிறது.
நிகழ் விவாதங்கள்
புகலிடத்தில் இதுவரை நடந்துகொண்டிருந்த இந்தச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான யோசனை பெரும்பாலும் இந்த அரசு சார்பு அரசியலாளர்களிடமிருந்தே ஒருசில வருடங்களுக்கு முன் எழுந்தது. உண்மையில் இது இலங்கையிலுள்ள இலக்கியத் தரப்பிடமிருந்து வரவில்லை. இதனால் இந்தத் தொடக்கப் புள்ளியே சர்ச்சைக்கு உரியதாகியது. இன்று இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இப்போதைய முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குதல்கள் என்பன பற்றி அரசுமீதான வெளிப்படையான விமர்சனங்களை வைக்காத பலருமே இந்தச் சந்திப்பை அங்கு நடத்த விடாப்பிடியாய் நிற்கிறார்கள்.
இலங்கை அரசின் மீதான அரசியல் அழுத்தங்கள் (தமிழக மாணவர்கள் போராட்டம் உட்பட) சர்வதேச ரீதியில் பல தரப்பிடமிருந்தும் பல்வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. மேற்குலக நாடுகள் தமது நலன் சார்ந்து இந்த அழுத்தங்களை பிரயோகிக்கிறது என்ற அரசியல் புரிதல், இந்த அழுத்தங்களுக்கு எதிராக நிற்பதை நியாயப்படுத்திவிட முடியாது. ஊடக சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைகள் தமிழ்த் தரப்புக்கு மட்டுமல்ல, அரசை விமர்சிக்கும் சிங்கள தரப்புக்கும்கூட பிரயோகிக்கப்படுகிறது. அது தமிழ் சிங்கள பத்திரிகையாளர்களை அகதிகளாய் நாட்டைவிட்டு விரட்டுவதிலிருந்து, படுகொலை செய்வதுவரை சென்றிருக்கிறது. இந் நிலையில் புகலிட இலக்கியச் சந்திப்பை அங்கு எடுத்துச் செல்வது என்பது அது தொடர்ந்துவந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு முரணானது என்ற வாதம் ஒரு தரப்பிலிருந்து வைக்கப்படுகிறது. இதை அரச ஆதரவாளர்களென விமர்சிக்கப்படுவோர் எடுத்துச் செல்வதால் அதற்கு ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது என எண்ணுவதற்கான நியாயம் இருக்கிறது. துர்அதிஷ்டவசமாக அல்லது திட்டமிட்டு, “இலங்கையில் இச் சந்திப்பை நடத்துபவர்கள் அரச ஆதரவாளர்கள்“ என்ற பொதுமைப்படுத்தல் இலங்கை ஏற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியதாக திரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஒரு ஆதரவுத் தளமாக விரிவாக்கம் செய்வதற்கான ஓர் உத்தியாக இது செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் செல்வதை மறுப்பவர்கள் தமிழ்த் தேசியவாதிகள் எனவும் இலங்கையில் அது சுதந்திரமாக நடந்துவிட்டால் அவர்களுக்கு தங்கள் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாமற் போகலாம் என்ற அச்சம்தான் காரணம் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. “புலிகளின் அடக்குமுறை நிலவிய காலங்களில் புகலிடத்திலிருந்து அதற்கெதிராக குரல்கொடுத்த பாரம்பரியம் இலக்கியச் சந்திப்புக்கு இருக்கிறது… அதேபோல் இலங்கையிலும் நின்று இலங்கை அரசுக்கு எதிராக எம்மால் குரல்கொடுக்க முடியும்“ என்கிறார்கள், இலங்கைக்கு எடுத்துச்செல்லும் புகலிட ஏற்பாட்டாளர்கள். இதை தரக்கூடிய நம்பகத்தன்மையை அல்லது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே நிலைநாட்ட முடியாமற் போனதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் அவர்கள். அத்தோடு நாட்டிலுள்ளவர்களின் அரசியல் சூழல் தீர்மானிக்கும் அதிகார எதிர்ப்பு நிலைகளை இவர்கள் எப்படி புகலிடவாசிகளாக (அதுவும் பலர் இந்த நாடுகளின் பிசாவுரிமையைப் பெற்று பாதுகாப்புத் தேடிக்கொண்டவர்களாக) இருந்தபடியே தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
இன்னொரு புறம் வெள்ளாள ஆதிக்கம்தான் இதை (இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச்செல்வதை) தடுக்கிறது என தலித்துகளுக்காக குரல்கொடுப்பதாக புகலிடத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் வாதிடுகிறார்கள். “இதை தலித் கிராமமான கன்பொல்லையிலும் நடத்திக் காட்ட நாம் தயார் என சில குரல்களும் இவர்களிடமிருந்து வந்தன. இப்போ புதிதாக இன்னொரு குரல் (விமல் குழந்தைவேல் ஊடாக) எழுந்துள்ளது. “தலித்தியம், சாதியம், ஒடுக்குமுறை மட்டுமல்ல பிரதேச வேறுபாட்டையும் நிர்ணயிக்கும் தலைமைப்பீடம் யாழ்ப்பாணமே. அந்த மையப்புள்ளியில் இருந்துதான் சகலமும் தீர்மானிக்கப் படுகின்றது. இதுவரை மட்டக்களப்பான், மன்னார்க்காரன், தோட்டக்காட்டான் என்ற பிரதேசவாதத்தை வளர்த்து வைத்திருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இந்த இலக்கியச் சந்திப்பை இலங்கை கொண்டுபோக வேண்டுமென்று முன்னெடுத்தவர்கள் என்பதால் அது யாழ்ப்பாணம் செல்கின்றது என்றால் அதைப்போல ஒரு கீழ்மையான விசயம் வேறொன்றுமில்லை.“ என்கிறது அந்தக் குரல்.
முடிவாக…
புகலிடம் இப்படியாக தலித்தியம், பெண்ணியம், யாழ்மையவாத எதிர்ப்பு, முஸ்லிம் மக்களின் பிரச்சினை, அரசையும் புலிகளையும் அரசியல் ரீதியில் வரையறுத்தல்.. போன்ற பிரச்சினைகளில் பெரும்பாலும் கோட்பாட்டு ரீதியில் நின்றுதான் விவாதிக்கும் நிலை இருக்கிறது. அதற்கு அந்நியப்பட்ட வாழ்நிலை ஒரு முக்கிய காரணம்.
போர்ப்பட்ட ஒரு பூமி உமிழ்ந்திருக்கும் வெறுமை பல நல்ல இலக்கியங்களை இலங்கையில் தர ஆரம்பித்திருக்கிறது. முஸ்லிம் மக்களிடமிருந்து 80 களின் இறுதிப்பகுதியிலிருந்தே வீச்சான இலக்கியம் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவான ஈழத் தமிழ் இலக்கியப் பரப்புடன் சேர்ந்து, 2009 மே க்குப் பின் புலிகளில் செயற்பட்ட போராளிகளின் இலக்கியங்களும் வீச்சுடன் வரத் தொடங்கியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் பல இலக்கிய வடிவங்களில் சஞ்சிகைகளாகவும் தொகுப்புகளாகவும் இலங்கையில் வெளிவருகின்றன. நூல்வெளியீடுகள், சந்திப்புக்கள் என ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அவர்களைச் சற்றியுள்ள அரசியல் சூழ்நிலையை அவர்கள்தான் உணரமுடியும். ஒருவேளை உடனடியாக முழுமையுமாக எல்லாக் கருத்துகளையும் அவர்கள் வெளிப்படுத்தக்கூட முடியாததாகவும் இருக்கலாம். ஒரு சிவில் சமூகத்தின் ஜனநாயகத்தன்மை வெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதல்ல. அதன், சமூக ஓட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய யுத்த அரசியலிலிருந்தும், சிதைக்கப்பட்ட சிவில் அமைப்பு உள்கட்டுமானங்களிலிருந்தும், பண்பாட்டு அழிவுகளிலிருந்தும் அது தன்னை படிப்படியாக மீளுருவாக்கம் செய்து பெறப்பட வேண்டியது. அதை போர்விமானங்களிலோ யுத்தக் கப்பல்களிலோ, “என்ஜிஓ“ க்கள் மூலமாகவோ ஏற்றிச் சென்று அந்த மண்ணில் ஊன்றுவதான கதையளக்கும் மேற்குலக அரசியல் முறைமை மட்டுமல்ல, நிர்வாகத்தனமான அரசியல் அதிகாரம், புத்திசீவித்தனமான அறிவதிகாரம் என்ற முறைமையும்தான் பிரச்சினைப்பாடானது. இன்று இலங்கையில் தேவையான சமூக மீளுருவாக்கத்தை அல்லது சிவில் கட்டுமானத்தை நிர்மாணிக்க பெரும் பங்கு வகிக்கக்கூடியது அந்தச் சூழலுக்குள்ளேயிருந்து உருவாகும் பல்வேறுபட்ட வெகுஜன அமைப்புகளின் தற்தோற்றமும், சுயமான இயங்குதளமும்தான்.
புகலிட இலக்கியச் சந்திப்பு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோன்று இலக்கியத்தைவிட அரசியல் உள்ளடக்கம் கொண்ட அமைப்பு முறை. அது அதன் தேவையிலிருந்தும் அப்போதைய சூழலிலிருந்தும் உருவாகியது. அதேபோல் இப்போ இலங்கையில் உருவாகக்கூடிய சுதந்திரமான ஓர் இலக்கியத்தளத்தின் உள்ளடக்கத்தை அங்குள்ள சூழல்தான் தீர்மானிக்கும். புகலிட இலக்கியவாதிகளின் அடையாளமும் மேலாளுமையும்; முன்கதவாலோ பின்கதவாலோ அந்த இலக்கியத் தளத்துள் நுழைவது சரியல்ல.
ஏற்கனவே புகலிடத்தாரின் நிதி ஆதிக்கமும், மேற்குலக மேட்டுக்குடி பார்வைகளும், தொடர்பாடல்களும், நுகர்பொருள் கலாச்சாரமும் விடுதலைப் போராட்ட அமைப்புகளை எவ்வாறு சீரழித்தது என்ற பாடம் நம்முன் உள்ளது. இலக்கியப் தளத்திலும்; இது நிகழலாம். இலங்கையில் நூல்வெளியீட்டில் பங்குபற்றிவிட்டு வந்த ஒருசில நண்பர்கள் அங்கு நூல் வெளியீடு ஒரு சடங்காக இருக்கிறது என்றும் முன்னுக்கு பேச அழைக்கப்பட்டவர்கள் பேசி முடிந்ததும் கலைந்து செல்ல வேண்டியதுதான். உரையாடல் நடப்பதேயில்லை.. என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என நிற்பவர்களில் ஒருசிலர் “அங்கையிருக்கிறாக்களுக்கு ஒருக்கால் எப்பிடி நடத்திறதெண்டு காட்டவேணும், பொன்னாடையெல்லாம் போர்த்துறாங்கள்..“ என பேசியதாக வரும் கதைகள் புறக்கணிப்புக்கு உரியதல்ல. இது ஒருவகை மேலாளுமைப் போக்குத்தான். 2010 இல் பருத்தித்துறையில் குணேஸ்வரனும் அவரது இலக்கிய நண்பர்களும் ஒழுங்குசெய்த ஒரு சந்திப்புக்கு நாம் போயிருந்தபோது அது உரையாடல் முறையில் நிகழ்ந்ததை கண்ட அனுபவம் என்னது என்பதை இந்த இடத்தில் குறித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் இதை நடத்துவது என்று பொதுவாகச் சொல்லப்பட்டு, அது யாழ்ப்பாணம்.. கன்பொல்லை.. கிழக்கு… என இனி ஒருவேளை மலையகம் அல்லது வன்னி… என அது அலைக்கழியும் முன்மொழிவுப் பாடல்களுக்கான ஸ்வரம் புகலிடத்தின் அடையாள அரசியலிலிருந்து ஊற்றெடுக்கவல்லது. அது இலங்கை இலக்கிய வெளியிலும் சுவற 41வது இலக்கியச் சந்திப்பு வழிசெய்யலாம்.
– ரவி 28042013
– பிற்குறிப்பு : மனிதம் குழுவில் நானும் இருந்ததால் இக் கட்டுரையில் அதுபற்றிய குறிப்பிடல்கள் தூக்கலாகத் தெரியலாம். இது மற்றைய சிறுபத்திரிகையாளர்களினது அல்லது அதுசார்ந்த குழுக்களினது அன்றைய பங்களிப்பை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடுவதாகாது.
info