புகலிட அரசியலின் முளைப்பு

இலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன். 

83 இனக்கலவரம், அதைத்தொடர்ந்த இயக்க முரண்பாடுகள் உள் அராஜகம் என தமிழ் மக்கள் புலம்பெயர்ந்ததுதான் ஆரம்பப் புலப்பெயர்வு. இது 85 க்குப் பின் அதிகமாக இருந்தது. அப்போதெல்லாம் எல்லா பெரிய அமைப்புகளுக்கும் இங்கு வேலை செய்வதும் முகாம்களில் தமிழர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதும் பணம் சேகரிப்பதும், பிரசுரங்கள் விடுவதும் என இயங்கிக்கொண்டுதான் இருந்தது. 

இயக்க உள் முரண்பாடுகளால் வெளியேறியவர்களும் புலிகளின் மாற்று இயக்க அழிப்பால் வெளியேறியவர்களும் 85 க்குப் பின் புலம்பெயர்ந்தபோது இந்த அரசியல் இன்னொரு கட்டத்துக்கு வருகிறது. மற்றைய அமைப்புகள் இரகசியமாக கூட்டங்கள் நடத்துவதும், அதை உளவறிந்து புலிகள் தாக்குதல் தொடுப்பதும் என மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் இப்போதான் அரங்கேறுகிறது. தமிழ் இனவெறி தேசியவாத அரசியலை வைத்து மக்களிடம் வருகிறார்கள். மற்றைய இயக்கங்களை துரொக அரசியலின் வடிவமாக சித்தரித்து இயக்க அழிப்பை நியாயப்படுத்துகிறார்கள். பணம் வசூலிப்பதில் பல வழிமுறைகளை மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள். இதில் பயமுறுத்தல் ஒரு வடிவமாக இருந்தது. இதை எதிர்த்து தனிநபர்களாக பலர் துணிவுடன் பணம் கொடுக்க மறுத்தார்கள். இதுவும் ஒருவகை எதிர்ப்பு அரசியல்தான். 
கிட்டத்தட்ட 40 சஞ்சிகைகள் ஐரோப்பா, கனடாவில் வெளிவந்தன. (கணனியில் தமிழ் இல்லா காலம். கையெழுத்துடன் வரத்தொடங்கின) பெரும்பாலும் புலிகளின் அராஜகப் போக்குக்கு எதிராகவும், மற்றைய இயக்கங்கள் மீதான விமர்சனங்களோடும் அம்பலப்படுத்தல்களோடும் வெளிவந்தன. கோவில் நிர்வாகத்தைப் பறித்ததிலிருந்து தொலைக்காட்சியை பறித்தெடுப்பதுவரை வளர்ந்த புலிகளின் அடாவடித்தனம் சிறுபத்திரிகை உலகை தம்வசப்படுத்த முடியாமல் போனதிலிருந்து மாற்று அல்லது எதிர்ப்பரசியலின் போக்கை விளங்கிக்கொள்ளலாம்.
இதுதான் புகலிட அரசியலின் தொடக்கப் புள்ளியும் இயங்குதலும். புலிகளின் பயமுறுத்தல்கள், தாக்குதல்கள், தேடகம் (நூலகம்) எரிப்பு, சபாலிங்கம் கொலை என பல அடாவடித்தனங்களை எதிர்த்தபடி, தாக்குப்பிடித்தபடி வளர்ந்த அரசியல்தான் இன்று இலக்கியச் சந்திப்பின் தொடக்க அடையாளம். அதன் தொடர்ச்சி பல விமர்சனங்களுக்கு உட்படுகிறபோதும், அதன் அடித்தளம் இவ்வாறுதான் நிறுவப்பட்டது. அதன் இற்றைவரையான நீட்சிக்கு இந்த பலமான அடித்தளமும் ஒரு காரணம். இதற்கு வெளியில் மக்களை குறுந்தேசிய வெறியுடன் அணிதிரட்டிய புலிகளின் பெருமெடுப்பு அரசியலை அதாவது 90 களின் தொடக்க அரசியலை -தமிழ் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு- புகலிட அரசியலின் தொடக்கப் புள்ளியாகக் காட்ட முனைவது அபத்தமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: