ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு இறப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.
“இந்தத் திரைப்படத்தில் வரும் எந்தக் காட்சியும் கற்பனையல்ல. அனைத்தும் உண்மைச் சம்பவங்கள். இதில் நடித்திருப்பவர்கள் எல்லோரும் ஈழத்து அகதிகளும், தனுஷ்கோடி மீனவர்களும், இராமேஸ்வர பொதுமக்களும், சில நாடக நடிகர்களுமே“ என்ற அறிவிப்போடுதான் திரைப்படம் தொடங்குகிறது.
சூரிச் இல் 24.3.2013 அன்று இத் திரைப்படம் -குறைந்த பார்வையாளர்களுடன்- திரையிடப்பட்டது. அந்த நாடக அரங்கின் இருக்கைகள் ஒளிமங்கிக் கிடந்தது. இருக்கையை கையால் தடவி உறுதிசெய்தபின் உட்கார்ந்தபோது, செங்கடல் திரையில் இந்த வசனங்களுடன் ஒரு இருள்வெளியாய் விரிந்தது. ஆரம்பம் (சனல்-4 இல் வெளிவந்த) இலங்கை இராணுவம் புலிப்போராளிகளை கோரமான முறையில் கொலைசெய்யும் காட்சியுடன் தொடங்குகிறது. ஏற்கனவே அதிர்ச்சியைப் பரிசளித்த இந்தக் காட்சி இங்கு எதுவுமே செய்யாமல் கடந்துபோக விடப்பட்டிருக்கிறது. திடீரென கரைவலையை இழுக்கும் மீனவர் கூட்டத்தின் ஏலே ஒலிகளுடன் சூரிய ஒளிவிரிப்பில் கடல்வெளிக் கதவு திறந்து தனுஸ்கோடி கம்பிப்பாடு கரையோரக் கிராமத்தில் கொண்டுபோய் விட்டது. அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
1964 இல் புயலால் அழிக்கப்பட்ட தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமம் இடிபாடுகளுடனும் சிதிலங்களுடனும் அந்த வெண் கடற்கரையில் ஒரு நினைவுச் சின்னமாய் காட்சியளிக்கிறது. அந்தக் கிராமத்தை உயிர்ப்பித்தபடி மனிதர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். கணவனை அல்லது மகனை இழந்த துயரங்களுள் உறையும் குடும்பங்கள் மூன்றில் ஒரு பகுதியினர் வாழும் இடம் பயங்கரங்களை சுமந்துகொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம் தரும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களாக, அதன் ஆதரவாளர்களாக இலங்கை கடற்படையால் சந்தேகிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதிலிருந்து கொலைசெய்யப்படுவது வரை பயங்கரங்களை சுமந்தபடிதான் கடற்தொழிலுக்கு செல்லவேண்டியிருக்கிறது. கரையில் பிணங்கள் ஒதுங்குவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. அது இந்திய மீனவர்களாகவும் இருக்கலாம்.. அல்லது இலங்கை தமிழ் அகதிகளாகவும் இருக்கலாம்.
ஆம், போர் தின்று துப்பும் இலங்கை தமிழ்மக்கள் அகதியாக வந்து சேரும் இடமாவும் அது இருந்தது. இந்த அகதிகளின் முகாம் வாழ்க்கையும் எந்த வசதியுமற்ற, மனித மதிப்புமற்ற வகையில் பேணப்படுகிறது. இரவு நேரங்களில் திடுதிடுப்பென சோதனை என்ற பெயரில் கிராமத்துள் நுழையும் அரசு இயந்திரத்தின் ஏவல் நாய்கள் செய்யும் அட்டகாசங்கள் ஒருபுறம். குறிப்பாக பெண்களின் மீதான அவர்களின் வக்கிரத் தாக்குதல்கள் என துயரம் விளையும் நிலமாக கம்பிப்பாடு கிராமம் இரவுகளில் லாம்பு வெளிச்சத்துள் துயிலுறங்குவதும், பகல் சூரியன் அந்தக் கிராமத்தின் அழகை பூசிப்புணர்த்தி இயங்கச் செய்வதும், அலையொலிகள் அதன் நிசப்பதத்தை கலைத்தபடி உயிரிசை எழுப்புவதுமாக கதைகளை எழுதிவைத்திருக்கிறது.
நல்லவேளையாக ஒரு வகைமாதிரித் தமிழ்ச் சினிமா இக் கதையை கண்டுகொள்ளவில்லை. இந்தக் கடலின் அழகில் காதலனும் காதலியும் காற்றில் சிவப்புச் சேலை பறக்க கலைச்சுப் பிடிச்சு விளையாட… இந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்தத் துயர் மறைந்து ஒருவனின் துயராக மாறி கதைசொல்லிக் காட்டியிருப்பார்கள். சிலவேளை அந்தக் கிராமத்தை துயரிலிருந்து மீட்டுமிருப்பான் கதாநாயகன்.
அது லீனா மணிமேகலையிடம் சிக்கியதால் தப்பித்துக் கொண்டது. மாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள், அலைகளைக் கடந்து, டீசநயம ளூயஉமடநளஇ ஊழnநெஉவiபெ டுiநௌ என பல விவரணப்படங்களை எடுத்தவர் அவர். பெரும்பாலும் விளிம்புநிலை மக்களின் கதைகளைச் சொல்பவை அவை. செங்கடலில் அவரே ஒரு விவரணப்படம் எடுப்பவராக ஒரு பாத்திரமேற்று நடித்துள்ளார். புகலிட எழுத்தாளர்களில் அறியப்பட்ட சோபாசக்தியும் இப் படத்தில் வந்துபோகிறார். அவரின் முக்கிய பங்களிப்பு இத் திரைப்படத்தின் கதையாக்கத்தில் இருக்கிறது. வசனத்திலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல தனக்கு நெருக்கடிகள் வந்தபோதெல்லாம் ஒரு உளவியல் பலத்தை அளிப்பவராக அவர் செயற்பட்டார் என்று லீலா மணிமேகலை பேட்டியொன்றில் குறிப்பிட்டுமிருக்கிறார்.
மனிதாபிமனமும் கடின உழைப்பாளியுமான குப்புசாமி, தனது கணவனையும் தன் சகோதரிகளின் மூன்று கணவனையும் இலங்கை கடற்படையின்; கொலைவெறிக்கு இதே கடலில் பறிகொடுத்துவிட்டு, அகதிகளுக்கு உதவுபவராக தனது வாழ்வை மாற்றிக்கொண்ட றோஸ் மேரியும், போரின் கைதியாகி மனநோயாளியாகிப்போன சூரி என்ற இலங்கைத் தமிழ் அகதியின் பாத்திரமும் செங்கடலில் அலைகின்றன.
பெரும்பாலும் தமிழ்ச் சினிமாவின் பார்வைப்புலம் பார்வையாளர்களுக்கு ஒரு சட்டகத்தை வழங்கிவந்திருக்கிறது அல்லது வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. இதை கழற்றி எறிந்துவிட்டிருக்கிற படங்களில் செங்கடலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. இதை ஒரு மக்கள் பங்கேற்பு சினிமா என வரையறுக்கிறார் லீனா மணிமேகலை. அந்த மக்களின் கதையை அவர்களின் மூலமே சொல்லவைப்பது என்பது கவனமாகச் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் அரசியல் சாய்வுகள் அவரவரிடமே விடப்பட்டிருக்கிறது. அதாவது தமது அரசியல் சார்புகளை திணிக்கிற வேலையில் லீனா, சோபாசக்தி ஈடுபடவில்லை என்று சொல்லலாம்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை மறிக்கின்றனர். அவர்கள் கையுயர்த்தியபடி நிற்கின்றனர். பாய்ந்து அந்தப் படகுக்குள் ஏறும் கடற்படையினர் அவர்களை பயசூழலுக்குள் தள்ளும் வேலையில் ஈடுபட்டபடியே கத்துகின்றனர், “இது பிரபாகரன் கடல் இல்லைதானே.. இது நம்ம கடல். இன்னொருமுறை இஞ்சை வாறது… தலை தலைமன்னாரிலை கிடக்கிறது.. உடம்பு தனுஷ்கோடியிலும் கிடக்கிறது..“ என பயமுறுத்திவிட்டு அகல்கின்றனர். இலங்கை அரசியலையும் தமிழக மீனவர் உயிர்ப் பிரச்சினையையும் ஒருசேரப் பேசுகிறது இந்தக் காட்சி.
இந்திய மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் இந்திய அரசால் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதன் தொடர் உணர்வுநிலை, ஈழப்பிரச்சினையில் தமிழ் மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை மீதான தொடர் உணர்வுநிலை இரண்டுமே “தமிழ், தமிழர்“ என்ற புள்ளியில் சந்தித்துக் கொள்வது தற்செயலானதல்ல. அத்தோடு திராவிடக் கட்சிகளின் தாய்த் தமிழகம், தொப்பூழ்க்கொடி உறவு என்ற கற்பிதங்கள் ஒரு உணர்ச்சிமயப்பட்ட அரசியல் சேர்க்கையை தமிழர் என்ற அடையாளத்துள் கட்டியெழுப்பியுமிருக்கின்றன. இது சிங்கள மக்களிடம்கூட ஒரு அச்ச உணர்வை அருட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இன்னொருபுறம் பிராந்திய ரீதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவும் ஊடாட்டமும் இரு நாடுகளையும் அருகருகே வைத்துப் பேசவைத்துவிடுகிறது.
வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் சந்திக்கும் புனித ஸ்தலமாக விபரிக்கப்படுவது தனுஷ்கோடி. காவல்துறை, இராணுவம், கடற்படை, உளவுத்துறை, சுங்கவரித்துறை என அரச அதிகாரத்தின் காவலர்களின் பிடியில் நசியுண்டு தவிக்கிறது தனுஷ்கோடி. இந்த அவலத்தை செங்கடல் சரியாகவே பதிவுசெய்திருக்கிறது. இந்த அதிகார காவலர்களில் ஒருசிலரில் உள்ளொழிந்து ஓடும் தமிழுணர்வை அல்லது மனிதாபிமானத்தையும்கூட லீனாவின் கமரா கண்டுகொள்ளவும் தவறவில்லை. லீனா மணிமேகலை செங்கடலில் இறுதியில் தனது ஆவணப்படத்தை முடிக்காமலே திருப்பியனுப்பப்படும் உத்தரவு அதிகாரம் சார்ந்தே எடுக்கப்படுகிறது.
செங்கடலில் சூரி என்ற இலங்கை அகதி ஒரு மனநிலை பிறழ்ந்தவனாக வானொலிப் பெட்டியுடனும் குழந்தைப் பரிவாரங்களுடனும் அலைந்து திரிகிறான். பாடசாலை, படிப்பு என்பதெல்லாம் இந்த சிறுவர்களை ஈர்க்காத விடயங்களாகி விட்டிருக்கிற ஒரு அவலம் காட்சியாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மீனவர் பிரச்சினையில் மத்திய அரசை –தமது அதிகாரத்துக்கு பழுது வராமல்- ஒப்புக்கு நிர்ப்பந்திக்கும் திமுக, அதிமுக வின் அரசியல் முகத்தை செங்கடல் காட்டத் தவறவில்லை. எந்த அதிகார சக்திகளுடனும் சமரசமற்று கள்ளமௌனமற்று வெளிப்படையாகவே இதை லீனா திரைக்குக் கொண்டுவர முயற்சித்துள்ளார். அதனால்தான் இது அதிகார வர்க்கத்தினரின் எல்லாத் தரப்பினரையும் (இலங்கை, இந்திய, தமிழக அரசுகள், அதன் காவலர்களான இராணுவம், கடற்படை, காவல்துறை, அதிகாரிகள்) சினங்கொள்ள வைத்திருக்கிறது. இது திரையிடப்படாமல் தணிக்கைக் குழுவுக்கள் சிக்குண்டு அல்லாடியதற்கு இதுதான் காரணம்.
இதற்கு காரணமாக தணிக்கைக் குழுவால் சொல்லப்பட்ட இன்னொன்று அதில் வரும் “வசைமொழி“ பற்றியது. எப்போதுமே ஒழுக்கம் என்பதை மேலாண்மை அல்லது மேலாதிக்கம் கொண்ட சக்திகளே வரையறை செய்கின்றன. விளிம்புநிலை மக்களின் உரையாடல் மொழி அவர்களுக்கு வசைச்சொல்லாக தெரிகிறது. குடும்பம் தொடக்கம் பாராளுமன்றம் வரையில் இந்தக் கனவான்கள் எல்லாம் இதை வசைச்சொல்லாகவே பாவிக்கிறார்கள்;. இந்தவகைச் சொற்களால் திரையில் தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதாக செங்கடலிலும் 7 இடங்களில் “மியூற்“ (ஒலியழிப்பு) செய்ய பணிக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்து அகதியான சூரி பாத்திரம் “போரால் மனச்சிதைவுக்கு உள்ளான, மயங்கும் உண்மைகளை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசியான ஈழத்து அகதி“ என விகடனின் கேள்விகளுக்கு தொகுப்பாக எழுதியதில் குறிப்பிட்டிருக்கிறார் லீனா மணிமேகலை. ஆனால் படத்தில் சூரி எதிர்வுகூறிய விசயங்கள் என எதையுமே தொகுக்க முடியவில்லை. ஒருமுறை வானொலிப் பெட்டியில் ஆங்கிலச் செய்தியை காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருக்கும் பாத்திரம் அவன் பற்றிய உள்ளீட்டை ஏதாச்சும் சொல்ல விளையலாம். தலைவர் உள்ளைவிட்டு -இலங்கை இராணுவத்தை- அடிப்பார்… விடமாட்டார் என்று உளறுவதிலிருந்து, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவன் கடுப்பாகச் சொல்வதுவரை சூரி ஒரு மனநோயாளி என்றளவில் சரிதான் அல்லது ஒரு பொதுமனநிலையின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துபவையாக எடுத்துக்கொள்ளலாம். (அல்லது ஒரு புலியாதரவாளனுக்கும் சரிதான்). ஒருவேளை கிண்டலாக இந்த வசனங்கள் அவனிலிருந்து வெளிப்படுகிறதோ தெரியவில்லை. எது எப்படியோ மயங்கும் உண்மைகளை(!) சொல்வதாகவோ, தீர்க்கதரிசிப்பதாகவோ சூரியை கண்டடைய முடியவில்லை.
தமிழ்ச் சினிமாக்களில் இப்படியான பாத்திர உருவாக்கம் பாலச்சந்தர் காலத்திலிருந்து நாம் பார்த்திருக்கிறோம். இப் பாத்திரத்தின் தோற்றம் எப்போதுமே குறுந்தாடி, மீசை, பரட்டைத்தலை, கறுப்பு நிறம் என ஒரு தோற்றத்தில் வரும். செங்கடலிலும் அப்படியேதான். 27 ஆண்டுகாலப் போர்ச் சூழலும் போரும் சப்பித்துப்பிய ஒரு ஈழத்தமிழ் மனிதஜீவியின் முழுத் துயரங்களையும் செரித்து விழுங்கியிருக்கும் ஒரு குறியீடாகவே சூரி தெரிகிறான். இந்தப் போரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரதும் கதைகளை அவனது வடிவில் காணும் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. இன்னொரு மொழியில் சொன்னால் அந்த செங்கடல் காவித்திரியும் சோகங்களின் ஒரு கதைச்சுரபி சூரி என்றாகலாம். படம் முடிந்துபோகிறபோது உணர்வுகளின் நெரிசலில் மனம் கனமாகியது. சனல்-4 இன் பிரதியாய் வந்த ஆரம்பக் காட்சி செங்கடலின் துயரிலிருந்து வேறொரு தளத்துக்கானதாய் விடைபெற்றுச் சென்றுவிட்டது.
செங்கடல் சென்னை திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக இயக்குனர்கள் பி.லெனின், அருண்மொழி, அம்சன்குமார், மாமல்லன் கார்த்திக ஆகியோரும்; மற்றும் வெளி ரங்கராஜனும் குரல்கொடுத்திருந்தனர். பொதுவில் செங்கடல் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது சம்பந்தமாக தமிழ்ச் சினிமா முகாமிலிருந்து வேறு குரல் எழாமல் இருந்தது வியப்புமல்ல. அந்த முகாமின் மக்கள்சார் கலை பற்றிய அறிவின்மையும், சமூகப் பிரக்ஞையின்மையும், சோலியில்லா அரசியலோட்டமும், வியாபாரமே குறியாக இருப்பதும் பேசிப்பேசியே புளிப்பேறிவிட்ட சங்கதிகள். எப்படியோ ஒரு வருட நீண்ட போராட்டத்தின்பின் லீனா மணிமேகலை செங்கடலை சிதைவுறாதபடி மீட்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு “ஏ“ சான்றிதழ் வழங்கி அதன் பார்வைப் பரப்பை குறுக்கும் தந்திரத்தை தணிக்கைக் குழு செய்துகொண்டிருக்க, ஏய்..ஏய்.! என்றபடி அரிவாளால் வெட்டியெறியப்பட்ட சதைத் துண்டும் கண்ணாடியில் பட்டுத் தெறித்து ஒழுகும் இரத்தமும், கவர்ச்சி நடிகைகளை இடம்பெயர்த்து எறிந்துவிட்ட கதாநாயகிகளின் ஆபாச காட்சிகளும் “ஏ“ சான்றிதழின்றி தமிழக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகளும் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாற்றுச் சினிமாவுக்கான களம் போராட்டம் நிறைந்தது வலிநிறைந்தது. அதை திரைப்படமாக்குவதிலிருந்து, அதற்கான நிதியாதாரம் உட்பட அதன் விநியோகம் வரை தடைகள் நிறைந்தது. அதற்கு ஓர் அர்ப்பணிப்பு உணர்வு தேவை. அது மக்கள் சார்ந்து இருக்க வேண்டும். அது படைப்பாளிக்கு உருவாக்கித் தரும் தன்னடையாளங்கள் மதிப்புக்குரியவை. மாறாக பட்ட வலிகளையும் இழப்புகளையும் இத் தன்னடையாளங்களுக்கான மூலதனமாக மாற்றும் வேலையில் இவ்வாறான படைப்பாளிகள் ஈடுபட்டால், அங்கு மக்கள் சார்ந்த பிரக்ஞை காணாமல் போய்விடும். மக்கள் நலனுக்காகவென தம் சொந்த வாழ்விலிருந்து உயிரைக் கொடுப்பதுவரையான அர்ப்பணிப்புகளை செய்த உதாரணங்கள் தமிழ்ச் சமூகத்தில் இன்னமும் ஈரம்காயாமல் இருக்கிறது.
நிதியாதாரங்களுக்காக பகாசுர கம்பனிகள், அரசுசாரா நிறுவனங்களை அணுகுவது என்பதுகூட பிரச்சினைக்கு உரியதுதான். செங்கடலின் முடிவில் லீனாவுடனான உரையாடலின்போது டாட்டா நிறுவனம் இப்போதான் பிழைவிடுகிறது என்பதுபோல குறிப்பிட்டது நெருடலாகவே இருந்தது. எந்த தேசியக் கம்பனிகளோ பல்தேசியக் கம்பனிகளோ மக்கள் நலன் சார்ந்து இருந்ததாக வரலாறே இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஏற்கனவே டாட்டா கம்பனிக்கான (“இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை“ என்றபடியே) சிறு விளம்பரப் படமொன்றை லீனா எடுத்ததை சில இடதுசாரியச் சிந்தனையாளர்கள் விமர்சித்திருந்தார்கள். தொழிற்திறனற்றவர்களை (படத்தில் காட்டப்படுவது பெண் தொழிலாளர்கள்) தொழிற்திறன் வாய்ந்தவர்களாக டாட்டா மாற்றியதாக சொல்வதில் உள்ள அரசியல் அபத்தம் லீனாவின் சமூகப் பிரக்ஞையை கொன்று போட்டுவிடக்கூடியது. நிதியாதாரப் பிரச்சினைகள் இவ்வாறான விளம்பரப் படத்தை எடுப்பதற்கான சமூக நியாயத்தை ஒருபோதும் தந்துவிடாது.
நிதியாதாரத்தில் சந்திக்கவேண்டியிருக்கும் இவ்வாறான சிக்கல்களைத் தாண்டி வரும் மாற்றுச் சினிமாக்கள் வலிநிறைந்த பிரசவிப்புகள். இவற்றிற்கான வலுவான வெளிப்பாட்டுக் களம் திரைப்பட விழாக்களினூடு சாத்தியமாகவே உள்ளது. செங்கடல் திரைப்படம் டர்பன், மொன்றியல், ரோக்கியோ, மும்பை, இந்தியன் பனோராமா (கோவை), திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. அது Nயுறுகுஇ புகுஐ புசயவெ ஆகிய போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறது. சென்னைத் திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஏற்பாட்டாளர்களின் அரசியல் பின்புலம் மற்றும் கலைக்; கோட்பாடு, பிரக்ஞை எல்லாம் கேள்விக்குரியதாகிறது. அமெரிக்க அரசியலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விசுவாசித்த விஸ்வரூபம் பட தடைக்கு எதிராக துள்ளிக் குதித்த குரல்கள், தனது மண்ணைச் சேர்ந்தவர்களின் பிரச்சினைகளைச் சொல்லும் செங்கடல் மீதான தடைக்கு ஒரு அசுகைகூடக் காட்டாமலே இருந்தன.
செங்கடல் திரைப்படம் அதை இவ்வளவு நாளும் ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தோம் என்ற ஓர் ஆதஙகத்தை ஏற்படுத்திவிடுகிறது. புலியெதிர்ப்பு, புலியாதரவு என்ற வரையறைகளை அல்லது மனநோயை ஒரு பொருட்டாகக்கூட எடுக்காத படைப்பாக செங்கடல் விரிந்திருக்கிறது. அந்த மக்களின் வாழ்வைப் பேசுகிறது. போர் பெயர்த்தெறிந்த இலங்கை அகதிகளினதும், தமிழக மீனவர்களினதும்; அவரவர் அரசியலை அப்படியே அவரவர் மொழிகளிலேயே பேசுகிறது
போட்டோக் கமராவையே பார்த்திராத அந்த மக்களிடம் சினிமா ஒரு புதிய உருவெடுத்து அவர்களின் பங்கேற்புடனேயே வந்திருப்பதற்கு செலுத்தவேண்டிய உழைப்பு என்பது சாதாரணமானதல்ல. தமிழ்ச் சினிமாவின் நிறுவனமயப்பட்ட எல்லைக்கு வெளியில் ஒரு மாற்று சினிமாவை அல்லது மக்கள் பங்கேற்பு சினிமாவை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதுமல்ல. அதிகாரவர்க்கங்களின் முகத்தில் செங்கடல் அலைமோதியபடியே இருக்கும்.
– ரவி (01042013)