தமிழக மாணவர் போராட்டம் – ஒரு குறிப்பு

தமிழக மாணவர் போராட்டங்களைப் பற்றிய குறிப்பை எழுதுவது என்பது சங்கடங்களுக்கு உட்பட்ட ஒன்றுதான். என்றபோதும் எழுதியாக வேண்டும். 

 இனப்படுகொலையாளர்களை சர்வதேச விசாரணை மன்றத்தில் நிறுத்து! என்ற கோரிக்கை முக்கியமானது. காலப் பொருத்தம் வாய்ந்தது. தமிழக மக்களிடமிருந்தான ஒரு தார்மீக ஆதரவை சரியாகப் புரிந்துகொண்டது என்பதையும் பதிவுசெய்யலாம்.

ஈழவிடுதலையே ஒரே தீர்வு என்பது பிரச்சினைப்பாடானது. ஈழம் தனிநாடாவது என்பதை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களும் ஏற்பதாக கொள்ள முடியாது. ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது என்பதுள் பிரிவினைவாதம் ஒரு பகுதிதான். இன்றைய உலகமயமாக்கல் மற்றும் வளர்ந்துவரும் இந்திய சீன பிராந்திய வல்லரசுகள் என்பன பற்றிய புரிதல் தமிழீழத்தை நிராகரிக்கும் வலுவான அரசியல் காரணிகள். சிங்கள மக்கள் மத்தியிலிருந்து- அதுவும் மாணவர் சமுதாயத்துள் பெருமளவில்- எழுந்துவரும் புதிய அரசியல் சமிக்ஞைகளையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

பொதுவில் சென்ரிமென்ரல் பொலிற்றிக்குக்குள் அகப்படும் போராட்டங்கள் ஒரு அவலமாக முடிந்துவிடுவதுண்டு. இதில் தேர்ந்தவர்கள் தமிழகக் கட்சியினர் மட்டுமல்ல, தமிழ் மனநிலையும்தான். இதுவே தீக்குளிப்பை ஒரு எதிர்ப்பு அடையாளமாக கடைப்பிடிக்குமளவுக்கு சென்றுவிடுகிறது. தீக்குளிப்புக்கு வியாக்கியானங்கள் கொடுக்கும் மனிதவிரோத செயற்பாடுகளை தமிழக மாணவர்கள் முழுவதுமாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இலங்கையில் மலையக மக்களையே மூன்றாந்தரப் பிரஜைகளாக மதித்த, மதிக்கும் யாழ் மேலாதிக்கச் சிந்தனையாளர்கள் எல்லாம் தமிழக மாணவர்களின் -ஈழ ஆதரவு- போராட்டத்தை ஆதரிப்பதை நாம் சந்தேகிக்காமல் இருக்க முடியாது. தமிழீழப் போராட்ட காலகட்டத்தில் தமிழக மக்கள், புரட்சியாளர்கள் எவரையும் சார்ந்திராது, இந்திய அரசையும் அதன் அதிகார அமைப்புகளையும் சார்ந்திருந்து அல்லது தயவுவேண்டி செயற்பட்ட பிழையான அரசியலை கொண்டவர்கள் பெரும்பாலான ஈழ விடுதலை இயக்கங்கள். இப்போ அவர்களில் பலருக்கு ஞானம் பிறந்திருக்கிறது. இதை நாம் சந்தேகப்படாமல் இருக்க முடியாது.

ஈழத்தில் எந்தப் போராட்ட முனைப்புகளும் சாத்தியமாக காலம் தேவைப்படுகிறது. ஒடுக்குமுறைகள் வேறெதையும் விளைவிக்காது என்றபோதும், அவர்கள் மிகவும் களைத்துவிட்டார்கள். இழப்புகளிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமல்ல. ஒருகாலத்தில் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த போராட்டத்திற்கு ஆதரவு சக்திகளாக தமிழகம், புகலிடம் என போராடிய அணுகுமுறைகளும், தற்போதைய இழவுவிழுந்த காலகட்டத்துக்கான அணுகுமுறைகளும் ஒன்றல்ல.

தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்தே இருந்துவருகிறது. அதில் சந்தேகமேயில்லை. அது எமது தரப்பில் துஷ்பிரயோகம் செய்யப்படுமானால், அது மனச்சாட்சியின்பாற் பட்டதல்ல என்ற அக்கறையிலேயே இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

இன்றைய நிலைமையில் தமிழ் மக்களை நிமிரவைக்கும் அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட நகர்விற்கான கோசங்கள்தான் தேவை. அது சிங்கள மக்களை எதிரியாக நிறுத்தும் இன எதிர்ப்பு அரசியலுக்குள் மாட்டுப்பட்டுவிடக் கூடாது. எந்த அரசியல் கோசங்களும் இலங்கையின் மற்றைய இனத்தவரிடம் ஒரு தார்மீகக் கேள்வியை எழுப்புவதாகவும் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்தில் இந்திய அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கக் கூடிய, அதன்மூலம் அரசியல் தீர்வை நோக்கிய சாத்தியப்பாடுகளை உருவாக்குவதுமான நகர்த்தல்கள் தேவை.

ஈழமக்களின் நலன்மீதான போராட்டத்தை தமிழக மாணவர்கள் தமது தார்மீகக் கடமையாகக் கருதுவார்களானால், அதை இந்த எல்லைக்குள்தான் நடத்த முடியும் என்பது என் கருத்து. அவர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டியது. சந்தேகமேயில்லை. அதேநேரம் அந்த சக்தியை இலங்கைத் தமிழ்மக்களோ, தமிழக தமிழ் இன உணர்வாளர்களோ, வாக்குவங்கி அரசியல் கட்சிகளோ துஷ்பிரயோகம் செய்யாமல் பார்த்துக்கொள்வதும் மாணவர்களின் முன்னால் உள்ள சவால். வீணான அழிவுகளையும, இழப்புகளையும், மாணவசக்தியின் அபரிதமான சக்தியை சிதைத்துவிடுவதுமான அணுகுமுறைகளை தீர்க்கமான முறையில் தவிர்த்துவிடவும் வேண்டும என்பதை ஒரு சகோதரக் குரலாக பதிவுசெய்துவிடுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: