வடமராட்சியின் பிரபல கல்லூரிகளில் அதுவும் ஒன்று. பி.ரி மாஸ்ரர் பாடசாலையின் மைதானத்தில் கால்பந்தும் பழக்குவார். ஒருநாள் அல்ல, பலமுறை அதை தான் கவனித்ததாக என் நண்பன் இப்போதும் சொல்லிச் சிரிப்பான். பெனால்ரி கிக் (Penalty kick) அல்லது கோர்ணர் கிக் (corner kick) அடித்துக் காட்டுவார். கோல்போஸ்ற்குள் பந்து பிய்ச்சுக்கொண்டு போனால் “இப்பிடித்தான் அடிக்கவேணும்” என்பார். வெளியில் போனால் “இப்பிடித்தான் நீங்கள் அடிக்கிறது” என்பார்.
இந்த பி.ரி மாஸ்ரர்களை இப்போ நாம் முகநூலிலும் பார்க்கிறோம். குழந்தைகள் உரிமை பற்றி பேசுகிற, அல்லது போரில் பெண்களுமே குழந்தைகளுமே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உரக்கக் கத்துகிற குரல்களெல்லாம் புலிசார்ந்தவர்களுக்கு அருகில் போக நேரிடுகிறபோது அப்படியே அழிந்தொழிந்து விடுகிறது என குறைப்பட்ட காலம் கரையத் தொடங்கியிருக்கிறது. பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டதை அன்று கண்டித்த குரல்கள் எத்தனை? புலிகளில் இணைந்து போராடிய பெண்களை “பெண் போராளிகள்” என விளித்த குரல்கள் எத்தனை?
அந்த பெண்போராளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பான „பெயரிடாத நட்சத்திரங்கள்“ தொகுப்பு வந்தபோது அதற்கான விமர்சனங்கள்கூட எழுதாமல் அடக்கிவாசிக்கப்பட்டது. தொலைபேசி எடுத்து //இந்தத் தொகுப்பை எப்படி நீங்கள் விடுவியள்// என்று கேட்ட குரல்களில் பத்திலொரு பகுதியளவுகூட புகலிட மாற்றுகளின் விமர்சன குரல்கள் வந்ததில்லை. இப்போ பெண்போராளிகள் என விளிக்க துருத்திய தடைகளை மெல்லக் கழற்றிவிட்டு “போராளிகள்” என்ற கோல் போஸ்ற்குள் பந்தை தயக்கமின்றி அடிக்கிறார்கள். நல்ல விசயம். சிறுவன் பாலச்சந்திரனின் கொலையை –சிறுவர்மீதான- போர்க்குற்றம் என்ற கோல்போஸ்ற்க்குள் இப்பவாவது அடித்துக் காட்டுவார்கள் என நம்புவோம். 2009 இல் இந்தக் கோல்போஸ்ற்க்குள் பந்தை அடித்தவர்களையெல்லாம் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கும் புத்திஜீவிகள் என்ற பெயர்கொண்டு அழைத்ததும், தொலைபேசி எடுத்து விசனப்பட்டதும் பழைய கதைகள்.
இந்த அம்புதான் போர்நிறுத்தத்துக்கு குரல்கொடுத்தவர்களின் மீதும் ஏவப்பட்டது. //தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை -மக்கள்நலன் சார்ந்து- அரசு முன்வைப்பதன் மூலம் புலிகளின் அரசியல் இருப்பை இல்லாமலாக்குவதை அரசு செய்ய முடியும். அதன்மூலம் புலிகளை இல்லாமலாக்க முடியும்… போர் அழிவுகளைத்தான் பிரசவிக்கும்// என போர்நிறுத்தம் என்ற கோல்போஸ்ற்க்குள் பந்தை அடித்தவர்களை உரசித் தள்ளி “பிசாசுடனாவது கூட்டுச் சேர்ந்து புலிகளை அழிக்கவேணும்” எண்டு பந்தை வெளியே விளாசி அடித்தவர்களில் சிலர் இப்போது //புலிகளை பிசிக்கலாக அழிக்கச் சொல்லவில்லை// என உலர்ந்து உதிர்ந்து விழுந்திருக்கிறார்கள்.
இதுதான் இப்பிடியெண்டால் மற்றப் பக்கமும் ஒண்டும் குறைச்சலில்லை. அண்மையில் புலிகளின் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஒரு ஜேர்ணலிஸ்ட் உடன் கல்யாணவீடொன்றில் உரையாடும்போது அவர் புலியை விமர்சிப்பதில் எம்மையெல்லாம் முந்திக்கொண்டு ஓடிய ஓட்டம் பிரமிப்பாய் இருந்தது. முன்னர் விமர்சனம் என்ற கோல்போஸ்ற்க்குள் பந்தை அடித்தவர்களை துரத்திக் கொண்டு வந்தவர்கள் இப்போ நைசாக முந்தியோடி தாங்களே கோல்போஸ்ற்க்குள் விளாசும் காட்சி புல்லரிக்கிறது. எல்லாம் நேரம்தான்.
இப்பிடியே கோல்போஸ்ற்க்குள் அடிக்கிறதா, வெளியில் அடிக்கிறதா எண்டதெல்லாம் நம்மடை பி.ரி மாஸ்ரரைப்போல் தற்செயல் சம்பந்தப்பட்ட விசயமில்லை. அது சீசனோ, பாசனோ, இடம்பிடிப்போ என்ன இழவோ புரியுதேயில்லை.