முன்னிலை சோசலிசக் கட்சி – ஓர் அவதானிப்பு

1983 யூலை 26. தீமூண்டெழுந்த கொழும்பு புறநகர்ப் பகுதியின் புகைமண்டலத்தை அப்போ காண்கிறோம் நாம். அதேவேகத்தில் தமிழ் சிங்கள கலவரம் என்ற செய்தியும் எட்டிவிடுகிறது. பல்கலைக்கழகத்தின் விடுதியில் நாம் (55 தமிழர்கள்) இருளத் தொடங்கினோம். பயம். சுற்றிவர சிங்கள மக்கள் வாள்களுடனும் பொல்லுகளுடனும் நிற்பதாக கதைகள் தைத்துக்கொண்டிருந்தன.இரவாகியது. எம்மை விடுதிக்குள் இருக்கும்படி கூறுகிறார்கள் அந்த சில சிங்கள சக மாணவர்கள். அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். இரவுச் சாப்பாட்டை பார்சலாகக் கொண்டுவந்தார்கள். லைற் எதையும் போடவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், பயம் காவிய எமது முகங்களை விடியும்வரை யன்னலோரம் தொங்கப்போட்டிருந்தோம். விடியும்வரை அந்த மாணவர்கள் கொட்டன்களுடன் எமது விடுதியைச் சுற்றி காவல் காத்தார்கள்.

மீண்டும் காலைச் சாப்பாடு. வெளியில் கூட்டம் அதிகமாகியது. இன்றிரவு உங்களை எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடலாம் என்று இயலாமைத்த அவர்கள் எம்மை பொலிஸ் பாதுகாப்புடன் இரத்மலானை விமான நிலையத்துக்கு (தற்காலிக அகதிமுகாமாக செற்றப் பண்ணுப்பட்டிருந்தது) அனுப்பிவைத்தார்கள். அந்த மாணவர்கள் வேறு யாருமல்ல. ஜேவிபியினர்தான். இது 1983 இல்.

2009 மே. அது இப்படியிருந்தது. புலிகளை அழித்த அரசு அதை சிங்கள மக்களின் வெற்றியாக தெருவலங்காரம் செய்தபோது ஜேவிபினரும் சேர்ந்து ஊர்வலமாகினர். தோற்றுப்போனதான உணர்வில் தமிழ்மக்கள் உளன்றபோது அந்த மக்களின் உணர்வுகளை ஜேவிபினரும் இனவாதித்து மிதித்துச் சென்றனர். 1971 கிளர்ச்சியின் படுகொலைகள் போக 1987 இல் தனது தோழர்களில் அறுபதினாயிரம் பேரின் உயிரை அரைத்த அரச இயந்திரத்தின் பல்லுச்சில்லை இவர்களும் சேர்ந்து சுழற்றி வெற்றிவியர்வை சிந்தினார்கள்.

இந்த இருவேறுபட்ட புள்ளிகளையும் இணைப்பதில் „இனவாதிகள்“ என்ற ஒற்றைச்சொல்லு போதுமானதா என்ற கேள்வியை இலகுவில் கடந்துசெல்ல முடியவில்லை.

போர் எல்லாவற்றையுமே குலைத்துப் போட்டபடி இலங்கையின் தமிழ் மக்களிடம் வெறுமையை பரிசளித்த நாள் 2009 மே 18. புகலிடத்தில் இருமை (எதிரெதிர்) அரசியலின் நுனிகளில் நின்று வாள்வீச்சு நடப்பதை எதுவும் குலைத்துப் போட்டதாகத் தெரியவில்லை. இப்போ வாள்முனை முன்னிலை சோசலிசக் கட்சியில் வந்து நிற்கிறது. வந்துவந்து வாள்வீசிவிட்டுப் போய் இளைப்பாறுவதும் அரட்டை அடிப்பதுமான புகலிடப் பொழுதொன்றில் சுவிசில் சம உரிமை இயக்கம் நடத்திய விளக்கக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். ஜேவிபியிலிருந்து பிரிந்து வெளிவந்து முன்னிலை சோசலிசக் கட்சியை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான குமார் குணரட்ணத்துடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதன் அடிப்படையிலும் மேற்சொன்ன வாள்வீச்சுக் காட்சியையும் பார்த்தபடி இந்தப் பதிவை இடுகிறேன். உண்மையில் எதுவும் தெளிவாய்த் துலங்காத நிலைதான். வாசலைக் கடக்காமல் உள்ளே போகமுடியாது என்ற அடிப்படை நியாயத்துடன் எனது அவதானங்களை சொல்லிவிட நினைக்கிறேன். அதனால் இது ஒரு முழுமையான பார்வையாக இருக்க இடமில்லை.

தமிழ்த் தரப்பில் இன்று மக்கள் நலன் சார்ந்த அரசியல் சக்தியோ அரசியல் அதிகாரம் கொண்ட சக்தியோ இல்லாத நிலை. இந நிலையில் அதிகாரத்துவத்துக்கு எதிரான போராட்டத்தின் இயங்குவெளி சிங்களத் தரப்பிடமிருந்தே வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போர் அதற்கான வெளியை உருவாக்கிவிட்டிருக்கிறது. போரால் ஏற்பட்டதும், போரைச் சாட்டி அதிகாரவர்க்கம் கொள்ளையிட்டதாலும் ஏற்பட்டதுமான பொருளாதாரச் சுமை ஒவ்வொரு இலங்கையரின் தலையிலும் சுமத்தப்பட்டிருக்கிறது. இனவாதக் கருத்தியலின் சலங்கை ஒலிக்குள் தமிழ் மக்களின் மரணஓலம் சிங்கள மக்களுக்குக் கேட்காத வகையில் ஆடிய ஆட்டம் ஓய்வுக்கு வந்திருக்கிறது. தமிழ் சிங்கள பெண்களை வீதியமைப்புப் போன்ற கடினமான பணிகளுக்கு பொருளாதார வலுவின்மை அழைத்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் வருகையும் நிகழ்கிறது. ஒரு சோசலிசப் போராட்டத்தின் இலக்கைத் தாங்கியபடி அவர்கள் வருகிறார்கள். அவர்கள் உருவாக்கி விட்டிருக்கும் சம உரிமைக்கான வெகுஜன இயக்கம் பற்றிய விளக்கக் கூட்டங்கள் ஐரோப்பாவெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. சுவிசில் 26.1.2013 அன்று நடைபெற்றது.

இந்த சம உரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவர் (லலித், குகன்) இலங்கையில் காணாமல் போனதற்கு எதிராக அவர்களின் போராட்டங்கள் வீதிக்கு வந்திருக்கின்றன. இதேபோலவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையைக் கோரியும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. பல சிங்களப் பகுதிகளிலும் அரசை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள். கொழும்பில் வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் வைத்து சமவுரிமை இயக்கத்தின் பெண்செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல மீது கழிவு எண்ணெய் ஊற்றிய அரசியல் காவாலித்தனமும் நடந்தேறியது. இந்த அமைப்பு தொடங்கி நான்கே மாதங்களில் இந்தவகை போராட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் தீப்பொறியை மூட்டியிக்கிறார்கள்.

இவ்வாறான நிலைமையில் நாம் என்ன செய்யலாம்? இந்தவகை அமைப்புகளை எவ்வாறு அணுகுவது? என்ற விடயத்தில் ஒரு ஆக்கபூர்வமான வழிமுறைகளில் (constructive) சிந்திப்பது காலத்தின் தேவையாயிருக்கிறது. இனியும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியாது என்று அரசியல் நீக்கப்பட்ட சொற்களுடன் அணுகுவதை நிறுத்தவேண்டியிருக்கிறது. முன்னிலை சோசலிசக் கட்சி பற்றிய தகவல்கள்கூட எட்டப்படாத நிலையில், அதை அறிந்துகொண்டு எழுதும் கால அவகாசத்தைக்கூட எடுக்காத அவசரத்துடன், இவர்கள் ஜேவிபியில் இயங்கிய தமது கடந்த காலத்தை சுயவிமர்சனம் வைத்தார்களா என்று கேட்டு எழுதிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அதை சிங்கள மொழியில் ஏற்கனவே வைத்துவிட்டிருந்தார்கள். (இப்போ தமிழில் மொழிபெயர்ப்பு நடப்பதாகக் கூறுகிறார்கள்.) நாம் ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும். முன்முடிவுகள் எப்போதுமே ஆபத்தானவை.

புகலிடத்தில் இலங்கை மக்களுக்காக தாம் குரல்கொடுப்பதன் உண்மைத் தன்மையை நடைமுறையில் சாத்தியப்படுத்த சிறு அமைப்பைத்தன்னும் -வித்தியாசங்களை அங்கீகரித்து- உருவாக்க முடியாத பலவீனம் உள்ளவர்கள் நாங்கள். எம்மைப் பற்றிய இந்த மதிப்பீடுகளுடன் முன்னிலை சோசலிசக் கட்சியுடனான உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது, அவர்களின் சுயமதிப்பீட்டை (தமிழுக்கு வரும்போது) பார்க்கவேண்டியிருக்கிறது. அரச ஒடுக்குமுறை நிலவும் ஒரு நாட்டில் உருவாகிவரும் அமைப்பு என்ற வகையில் பொறுப்புடன் அணுகவேண்டியிருக்கிறது. அதன் கருத்துநிலைக்குள் தலையீடுசெய்து உரையாடல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.

இன்னொருவகையில் இது ஒரு சமூகம் சார்ந்த கூட்டுப் பொறுப்புத்தான். கட்சிகள் இயக்கங்களுக்கு வெளியில் இயங்கும் புத்திஜீவிகளின் விமர்சனப் பங்களிப்பானது ஒரு கட்சிக்குள், சமூகத்துள் பலமாக ஊடுருவும் தன்மை கொண்டது. அது கட்சியை சரியான திசையில் எடுத்துச் செல்ல ஒரு பங்களிப்பை வழங்கவல்லது. இந்தப் பொறுப்புணர்வுடன் நாம் அணுகவேண்டியுள்ளது.முன்னிலை சோசலிசக் கட்சியினரின் சுயமதிப்பீடு சுமார் 400 பக்கங்களில் செய்யப்பட்டிருப்பதாகவும் இதன்மீது வைக்கப்படும் கேள்விகள் விமர்சனங்களை கவனத்தில் எடுத்து தமது சுயவிமர்சனத்தை முடிவாக வெளியிட இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இது அவசரம் செய்யப்பட வேண்டியது.

ஜேவிபிக்குள் நீண்டகாலமாக தாம் நடத்திய உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக அதன் முக்கியஸ்தர்கள் பலருடன் வெளிவந்து முன்னிலை சோசலிசக் கட்சியாக பரிணமித்தோம் என்கிறார்கள். இது கீழணியில் கணிசமானவர்களையும் அவர்களுடன்; அழைத்துவந்திருக்கும் என்று நம்பலாம். ஆனால் கட்சிக்குள் பெரும்பான்மைக்கு வெளியில் தாம் போருக்கு எதிராக இருந்ததாகவும் கூறுகின்றனர். போர் என்பது மனித அழிவுகள், பொருளாதார அழிவுகள் சுற்றுச்சூழல் அழிவுகள், கலாச்சார அழிவுகள்… என குறுகியகால இடைவெளியில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என்ற விடயமும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்குள் இலங்கையை ஒப்படைப்பதாக ஆகிவிடும் என்ற இடதுசாரிய அறிதலும் இவர்களின் உட்கட்சிப் போராட்டத்தை உலுக்கியிருக்க வேண்டும். அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி போருக்கு எதிராக தம்மாலான வழிகளில் நின்றிருக்க வேண்டும்.

இது அவ்வளவு சுலபமல்லத்தான். இனவாதக் கருத்தியலும், பயங்கரவாதம் பற்றிய ஏகாதிபத்தியங்களின்; தொடர்புச்சாதன மூளைச்சலவையும், புலிகளின் அதிகார வெறியும், சிங்கள முஸ்லிம் மக்கள் மீதான இனரீதியிலான தாக்குதல்களும் அரசின் போருக்கு ஒரு „நியாயத்தை“ வழங்கியிருந்தது. போர் தடுக்கமுடியாததாக மாறியது. என்றபோதும், ஜேவிபியை விட்டு வெளியே வந்து போரை நிறுத்தியிருக்க இயலும் என்று சொல்லவருவதல்ல எனது விமர்சனம். திடீர் அழிவுகளை பெரியளவில் நிகழ்த்தக்கூடிய இந்தப் போரை நிராகரித்து, வெளியே வந்து தம்மை ஒரு சிறிய சரியான சக்தியாக ஊன்றியிருக்க வேண்டும்.

இந்தப் போரை சகித்துக்கொண்டு கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. தனிநபர் படுகொலைகளில் தொடங்கிய புலிகள் மக்களை முள்ளிவாய்க்கால்வரை கொலைக்களத்துக்கு வழிநடத்திச்செல்வதுவரையான பிழையான அரசியலுடன் போனவர்கள் தாம் இயக்கத்துள் முரண்பட்டபடி இருந்தோம் என இன்று எழுதவரும் „துணிபை“ ஒத்தது இது. இதுசம்பந்தப்பட்ட சுயவிமர்சனம் ஒரு குற்றவுணர்வோடு வெளிவரவேண்டுமேயொழிய எந்தவித நியாயப்படுத்தலுடனுமல்ல. இதுவே அவர்களை நம்பிக்கையுடன் அணுகவைக்கும்.

ஒரு 2, 3 மணித்தியாலத்தில் நடந்த உரையாடலை வைத்தும் ஏற்கனவே அறிந்திருக்கும் சொற்ப தகவல்களை வைத்தும் ஒரு முழுமையான பார்வையைப் பெற முடியாது என்ற புரிதலுடன்தான் எழுதுகிறேன்.

சோசலிசப் புரட்சி பற்றிய கோட்பாட்டுடன் மட்டும் எல்லாவகைப் பிரச்சினைகளையும் அணுகும் போக்கு தெரிகிறது. சோசலிசப் புரட்சி நடைபெற்ற நாடுகளில் அதன் நிலையாமையும், குறைந்தபட்சமாக சமூக ஒடுக்குமுறைகளையும் பிற்போக்குத்தனங்களையும் களைய முடியாமல் போனதும் வரலாறு சொல்லிவைத்திருக்கிற பாடம். முதலாளித்துவமும் அப்படித்தான். எதுவும் சகலரோக நிவாரணிகளல்ல. இந்த இடைவெளிகளை இட்டுநிரப்ப புதிய புதிய தத்துவங்கள் சிந்தனைமுறைகள் வருவது ஒரு இயங்கியல். இதற்குள்தான் பின்னவீனத்துவமும் வருகிறது. நுண்களங்களிலான அரசியல் பார்வைகள், பன்மைத்துவம், பெரும்பான்மை அடிப்படையிலான ஜனநாயகம்… என பல விடயங்களுக்குள் நாம் உட்சென்றாக வேண்டியிருக்கிறது. தூக்கிப்போட்டு அடித்து ஒரேயடியாக நிராகரித்து அதற்கு கொடியையும் போர்த்து அனுப்பும் விமர்சன முறை புகலிடத்தின் சில இடதுசாரிகளிடம் காணப்படும் ஒன்று.

முன்னிலை சோசலிசக் கட்சியும் எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் சோசலிசப் புரட்சிக்குள் வைத்து கனவுகாண்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. அது  சோசலிச விடுதலைக்குள் தமிழ்மக்களின் உடனடி அரசியல் தேவைகளை புதைத்துவிடுகிறதா என கேள்வி எழும்புகிறது. முதலாளித்துவ அரச அமைப்புமுறைக்குள் வைக்கப்படும் தீர்வாக அதிகாரப் பரவலாக்கல் என்பது செயற்படாது – அதாவது மக்களிடம் அதிகாரம் சென்றடையாது- வேண்டுமென்றால் அதிகாரப் பகிர்வுதான் நடைபெறலாம் என்கின்றனர். சொல்லின் கறார்த்தன்மை தேவைதான். அதிகாரப் பகிர்வு என்பதைத்தான் நாமும் குறிக்கிறோம்.

அதிகாரத்தை மையப்படுத்தாமல் பகிர்வது என்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் சக்தி பலம்பெறும் சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் அதைக் கோருகிறார்கள். இதை முதலாளித்துவத்துள் வைத்து அணுகப்படும் தீர்வாக வரையறுத்து அதை முன்னிலை சோசலிசக் கட்சி புறந்தள்ள முற்படுவதில் அர்த்தமில்லை. இலங்கை ஒரு குறைவளர்ச்சியான முதலாளித்துவத் தன்மையைக் கொண்டதால் சுவிசில் வினையாற்றுவதுபோல அதிகாரப் பகிர்வுமுறை இலங்கையில் தொழிற்படாது என்பது அவர்களின் வாதம். அத்தோடு சுவிஸ் அந்த முறைமையை நீண்ட வரலாற்றினூடாகவே வந்தடைந்தது என்ற சரியான வாதத்தை, இலங்கை விடயத்தில் -காலமாற்றத்தைப் புறந்தள்ளி- பிழையாக முன்வைப்பதாகவே தோன்றுகிறது.

குறைவளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக இலங்கையை வரையறுக்கும் அவர்கள், அதிகாரப் பகிர்வு என்பது முதலாளித்துவ வளர்ச்சிப் படிநிலையில் வைத்து நோக்கப்பட வேண்டியது என்பதை காணத் தவறுகிறார்களா?. இந்த முரண் அவர்களின் பதிலிலிருந்து வெளிப்படுகிறது. அதனால்தான் அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவோ ஆதரவாகவோ தாம் இருக்கப் போவதில்லை என்று சொல்லும் அதேநேரம் இது வர்க்கப் போராட்டத்துக்குத் தடையாக அமையும் என்ற விடயத்தை மக்களிடம் சொல்லுவோம் என்கின்றனர். இத் தடுமாற்றத்தை கூட்டிக்கழிச்சுப் பார்த்தால், அதிகாரப் பரவலாக்கல் முறையை அவர்கள் ஏற்றுக்கொள்வில்லை என்பது மட்டுமல்ல அதற்கு எதிரானவர்களும்தான் என்ற விடைக்கே வந்துசேர முடிகிறது. இதுசம்பந்தமாக அவர்களுடன் தொடர்ச்சியாக விவாதத்தில் ஈடுபடவேண்டியே இருக்கிறது. விவாதங்கள் கட்சியின் ஆரம்ப நிலையில் நல்ல விளைவுகளைத் தரலாம்.

மறுபுறத்தில், அதிகாரப் பகிர்வு என்பதை ஒரு மந்திரம்போல நாம் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் 25 வருடத்துக்கு முன்னர் இந்தியா பரிந்துரைத்த 13ம் சட்ட திருத்தத்திலிருந்து வெளியே வந்து இலங்கைக்குப் பொருந்தக்கூடிய மாதிரியான ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையை யாரும் வரையறுத்துக் காட்டியதாகத் தெரியவில்லை. சும்மா வாசிகசாலைக் கூட்டம், பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி என்பவற்றுக்கே ஆளுநர் தொடங்கி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையிலும், கவிதைப் புத்தகத்துக்கு அரச சார்பு அரசியல்வாதிகளையும் கூப்பிட்டுவைத்து நடத்தும் வழமையொன்று தோன்றியிருக்கிறது. அதிகாரத்துவம் என்பது எந்தளவுக்கு நுனிவரை சென்றிருக்கிறது என்பதன் சாட்சி இது. அரசின் அதிகார நிறுவனங்களுக்கு அடிபணிந்து போவது என்பது ஒரு கலாச்சாரமாகவே வளர்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இப்படியான ஒரு நிலைமைக்குள் அதிகாரப் பகிர்வு என்பது மக்களுக்கானதாக இருப்பதற்குப் பதில் அரச இயந்திர நிறுவனத்தின் முகவர்களுக்கானது என்றாகிவிடும் ஒரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. எனவே மத்தியில் ஒற்றையாட்சிக்குப் பதில் ஒரு கூட்டாட்சி தேவைப்படுகிறது.

இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரச மொழியாக இரு மொழிகளும் நடைமுறைக்கு வருதலும், மதச்சார்பற்ற அரசாக இருக்கவும் வேண்டும். மு.சோ.கட்சி ஒற்றையாட்சிக்கு எதிராகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல பௌத்த பேரினவாத கருத்தியலை எதிர்ப்பதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் அந்த மக்களின் விருப்பத்திற்கு எதிராக பலவந்தமாக பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதையும் எதிர்க்கிறது. யாரும் தாமாகவே விரும்பி எந்த மதத்தையும் பின்பற்றுவதே சரியானது என்கிறது.

சுயநிர்ணய உரிமையைப் பொறுத்தவரை அதை தாம் ஒரு தீர்வாக முன்வைக்க முடியாது என்கின்றனர். லெனின் சுயநிர்ணய உரிமையை வரையறைசெய்ததே பிரிந்து போவதை அடிப்படையாக வைத்துத்தான், தமிழர்களுக்கான தனியரசு ஒரு தீர்வல்ல என்கின்றனர். தனியரசு தீர்வு அல்ல என்பதில் எமக்கும் உடன்பாடு உண்டுதான். ஆதை தீர்வாகக் கொள்ளும் தமிழ்மக்களும் இருக்கிறார்கள். அதை –தேவைப்பட்டால் பிரித்துவைத்து- உருவாக்கும் சாத்தியப்பாடும் இந்த ஏகாதிபத்திய அதிகாரப் போட்டியுள் சாத்தியமாகாது என்று வாதிடமுடியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் தன்மை கொண்டது.

தனியரசு ஒரு தீர்வல்ல என்பது உடன்பாடானதுதான். ஆனால் சுயநிர்ணய உரிமை என்பதை பிரிவினைவாதம் என மொழிபெயர்ப்பதில்தான் பிரச்சினை வருகிறது. அதுவும் இடதுசாரிய முறைமைக்குள் வரைவுசெய்யப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை இப்படியாய் விளக்க முன்வருவது பிரச்சினைப்பாடாய் இருக்கிறது. சுயநிர்ணய உரிமை என்பதை ஒடுக்கப்படும் மக்களின் ஒரு உரிமையாகப் பார்ப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. ஏன் பயப்பட வேண்டும். சிறுபான்மைத்; தேசிய இனத்துக்கு ஒரு உளவியல் பலத்தையும், அதேநேரம் பெரும்பான்மைத் தேசிய இனத்துக்கு ஒரு எச்சரிக்கைத் தன்மையையும் இந்த உரிமை வழங்கக்கூடியது. இதை விளக்க விவாகரத்தை உதாரணமாக எளிமையாக எடுத்துக் காட்டுவார் லெனின். பிரிந்துபோகப் போகிறோம் என்ற குரல் எழுந்தால் அந்த நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் மீது கவனம் செலுத்தி அதை இல்லாமல் பண்ணுவதுதானே ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசின் கடப்பாடாக இருக்கும். இதைச் செய்வதற்கான வெளி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு இருக்கப் போகிறது.

இதை இன்னொரு விதத்தில் பார்க்கலாம். இந்த மறுப்பு மனோபாவத்துக்கு பின்னால் ஊறிக்கிடப்பது ஒருவகை மேலாதிக்க மனோபாவம்தான். அது தெரிந்தோ தெரியாமலோ செயற்படுகிறதாக இருக்கலாம். சமவுரிமையை எட்டும் இனங்களில் ஒரு இனம் பிரிந்து போகிறேன் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கான நியாயம் பிறக்காது. அப்படி அது முன்வைக்குமாயின் அல்லது உணருமாயின் அங்கு ஒடுக்குமுறை நிலவுவதன் (அதாவது சமவுரிமை இல்லாததன்) வெளிப்பாடாகவே கொள்ளலாம். இதை கருத்தியல்வாதமாக பார்ப்பது அவரவர் பார்வைகளைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை இது மேலாதிக்க மனநிலை செயற்படும் நுண்களத்தைக் காட்டுவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் முடிந்த முடிவாக சுயநிர்ணயம் பற்றிய தமது புரிதலை வரையறுப்பதாக உரையாடல் எதிலும் நான் கண்டுகொள்ளவில்லை. இதைப்பற்றிய விவாதங்களெல்லாம் தாம் உட்கட்சிக்குள் விவாதத்தை முன்னெடுத்துச் செல்லவும், சுயநிர்ணயம் சம்பந்தப்பட்ட தமது நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கவும் தூண்டும் என்றவாறான உரையாடல் வெளியை அவர்கள் திறந்துவிடுகிறார்கள். இதை நாம் கண்டுகொள்ளாமல் விடுவது பிழையானது.

இதை கேள்விகளோடு அணுகுவது என்பது வேறு. „விமர்சன விண்ணபப்படிவம்“ போன்று ஒன்று இரண்டு மூன்று… என பட்டியலிட்டு; அதை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா, இதை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா.. என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி பதிலுக்குக் காத்திருப்பது தன்னடையாளத்தை தேய்ச்சுக்கொண்டிருக்கத்தான் உதவும். அவர்கள் நேரில்சென்று நின்று விவாதிக்கக்கூடிய தூரத்தில்தானே நிற்கிறார்கள். கருத்துகளை வழங்குபவர்களாக மட்டும் இல்லாமல் கருத்துகளை உள்வாங்குபவர்களாகவும் இருக்கும் ஒரு மனோநிலையில்தான் விவாதம் ஆக்கபூர்வமானதாக இருக்கும், மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற அடிப்படையில் சிந்திக்க நாம் முன்வரவேண்டும்.

– ரவி (02022013)

———————-

பின்னிணைப்பு :

1.

ரயாகரன் & குமார் குணரட்ணம் உரைகள் :

 

2.

பின்னரான தனிச் சந்திப்பில் நடத்திய உரையாடல் :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: