கம்பளிப்பூச்சியை கையிலேந்தி அதன் மென்மையை லயித்திருந்த அந்தச் சிறுவயதில் என் அப்பா கடவுளை அறிமுகமாக்கினார். இந்த உயிரினங்களின் மீதான என் நேசிப்பில் கடவுளில் பிரியமானேன் நான். கடவுள் உயிரினங்களை சிருஷ்டித்ததாக எனக்கு அறிமுகம் செய்தார். எல்லாக் கடவுளர்களும் சிருஷ்டிகள்.. படைப்பாளிகள்… அதனால் மனிதர்கள் உயிர்களை அழிப்பது பாவம் என்பார்.
போர்களினூடே அடிமைப்படுத்தி ஆண்ட மனிதகுல வரலாறு அதற்கான நியாயங்களை மதச் சித்தாந்தங்களை சிருஷ்டிப்பதினூடும் உருவாக்கியது. ஆதிக்கசக்திகளின் செல்லப்பிள்ளைகளாக மதச் சித்தாந்தவாதிகள் செயற்பட்டனர். அதற்கேற்றவாறு அவர்கள் மதச் சித்தாந்தங்கள் நடைமுறைகளை வகுத்தனர். எல்லாம் கடவுளர்களின் பெயரால் நடந்தேறியது.
ஒரு பூச்சியைக்கூட கொல்லத் தயங்கும் மனிதஜீவி மதச் சட்டத்தின் பெயரால் சகஜீவியைத் துண்டமாக்கி வீழ்த்தும் வன்மம் எங்கிருந்து வருகிறது? றிசானா இந்தவகை கொடுவாளுக்கு இரையானாள். இந்த காணொளியை நான் பார்த்திருக்கவே கூடாது என்பதாகவும் படுகிறது. (பார்க்காமல் இருக்க முடிந்திருக்குமோ எண்டதையும் சொல்லமுடியாமல் இருக்கு.) நினைவை அது துன்புறுத்துகிறது.
பூணூல் போட்டவர்கள் இன்னொரு கடவுளின் பெயரால் மாட்டை இழுத்துப்பிடித்து கழுத்தை வெட்டிவீழ்த்திய (பலியெடுப்பு) காணொளியையும் இந்த முகநூல்வழிதான் பார்த்தேன். எமதூர் வைரவர் கோவிலில் வருசாவருசம் உரு ஆடுபவன் கோழியின் கழுத்தை வெட்டி உசரத்துக்கு வீசியெறிஞ்சதை ஒவ்வொரு வருச வேள்வியிலும் பார்த்து சுணைகெட்டுப் போனதுண்டு. பக்கத்து முத்துமாரி அம்மன் கோவிலில் ஆட்டுக்கு மாலை போட்டு, மஞ்சள் தெளிச்சு இழுத்துப் பிடிச்சு வெட்டுவார்கள். இலங்கையில் புத்த பிக்குகள் “சென்று வாருங்கள்.. வென்று வாருங்கள்“ என்பதாக இராணுவத்தினருக்கு ஆசிவழங்கிய காணொளியையும் இதே முகநூலில் பார்த்தேன். யேர்மனி முன்ஸ்ரர் கத்தோலிக்க தேவாலயத்தின் முகப்பில் இப்போதும் தொங்குகிறது 3 இரும்புக் கூடுகள். புரட்டஸ்தாந்து மத எழுச்சியின்போது அவர்களை கைதியாக்கி இந்தக் கூண்டினுள் சாகவிட்ட சாட்சியாக அந்தக் கூண்டுகள் இருக்கின்றன.
இப்பிடியே வரலாறு நெடுகிலும் போர்களுக்குள்ளால், இனப் படுகொலைகளுக்குள்ளால் ‘கவர்’ எடுத்துத் திரிஞ்ச மதச் சித்தாந்தங்கள் பற்றி படிச்சு “அறிவு” வளர்த்தோம். அதன் வலியை உணரவேயில்லை. றிசானாவின் கொலைக்களத்து நிமிடங்கள் தந்த வலி அறிவை குருதியொழுக உரசுகிறது. சமஸ்கிருதத்தில் மந்திரம் கேட்பதுபோல, அவளுக்கே புரியாத மொழியில் ஓதலுடன் 4 நிமிடங்கள். போதாதிற்கு அவளின் கண்கள் சரியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என இரண்டு மூன்று தடவை சரிசெய்வது போன்ற “அக்கறை” வேறு. இந்த விரல்களின் தொடுகைக்குள்ளாலும், புரியாத மொழிகளுக்கூடாகவும் அவளை சித்திரவதை செய்த உணர்வுகளின் அந்த 4 நிமிடங்களும் அவளளவில் ஒரு யுகப் பிரளயமேதான்.
மதங்கடந்த வெளிக்குள் வந்து நின்று பார்த்தால் இவ்வாறான “மரணதண்டனைகள்” எல்லாம் ஒரு நியாயப் பூழலும் தட்டுப்படாமல் அவதிப்படுவதை உணரலாம். நேற்றிரவு முகநூலில் பார்த்த இந்தக் காட்சி அதிகாலை 4 மணிக்கு தட்டியெழுப்பி ஏதோ சொல்லி வதைத்தது. போதாதிற்கு Dancer in the Dark படத்தின் இறுதிக் காட்சியை (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yu5f_T2wcRI#!) சற்று முன்னர் முகநூலில் பார்த்தபோது உருக்குலைந்தே போனேன்.
கம்பளிப்பூச்சியை உள்ளங் கையில் எடுத்து.. கொஞ்சநேரமாவது லயித்துப்போயிருக்க ஆசைஆசையாய் வருகிறது !