அனுமதிபெற்று இரவு முழுவதும் நடமாடும் சுதந்திரத்தை திருவிழா கூத்து.. என ஒருசில சந்தர்ப்பங்களே வழங்கிய காலம் அது. நாம் இளசுகளாக இருந்தோம். ஓர் அரச நாடகத்தின் சாட்டு அன்று கிடைத்தது. இரவுகளை உரசி உரசி கூக்கிரலிட்டு சத்தமாய்க் கதைத்து நாம் களித்திருந்தோம். நாடகம் தொடங்கி… அதுவாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாம் அரைவாசி கவனத்தை நாடகத்தில் விட்டிருந்தோம். அரசன் அட்டகாசமாய் வரும்போதெல்லாம் நாம் கதைக்காமல் இருந்தோம். வாள்வீசி குதித்து விழும் காட்சிகளில் நமது நரம்பை ஏதோ தட்டிக்கொண்டிருந்தது.
இப்போ நாடகம் முடியும் தறுவாய்க்கு சென்றிருந்தது. பகையரசன் சிங்கன் கொஞ்சம் காலை இழுத்தபடி ஓய்ஞ்சுபோற மாதிரி அலுப்படித்தான். திடீரென எங்கடை நாடக நெறியாளர் எம்மிடம் வந்தார். யோகனை தனியாக இழுத்துச் சென்று ஏதோதோ கதைத்தார். அவன் தலையாட்டுவதும் மறுப்பதும்போல் விளங்கியது எனக்கு. அருகில் சென்றேன். குத்துமதிப்பாய் பகையரசனின் தோற்றம் கொண்டவன் யோகன். கடைசிக் காட்சியில் பகையரசனாக வந்து வாள்வீச்சு சண்டையில் சமாளிக்க வாடா என்றபடி இரந்து நின்றார் நெறியாளர்.
நாடகத்தை முடித்தாகணும். பகையரசனுக்கு கால் சுளுக்கிவிட்டதால் சண்டைக்காட்சியில் களைகட்ட சிக்கலாய்ப் போய்விட்டது. ஒருவாறு யோகன் ஒத்துக்கொண்டான். யோகன் ஒரு பிடிவாதக்காரன். ‘மானம்’, ‘ரோசம்’ கொண்டவன். சிலம்படி வேறை பழகியிருந்தான். கடைசி கட்டம். பகையரசனுள் யோகன் மறைந்திருந்ததை நெறியாளர் சரியாத்தான் கண்டுபிடிச்சிருக்கிறார். அவ்வளவு நேர்த்தியாய் மேக்கப், தோற்றம் இரண்டும் இருந்தது. மேடையில் மங்கிய ஒளி. அரசனும் பகையரசனும் களத்தில் இறங்கினார்கள். வாள்சண்டையின் முடிவில் பகையரசன் தோற்கவேண்டும். சண்டை உக்கிரமாக நடக்கிறது.
சண்டை இப்போ முடிவுக்கு வந்து பகையரசன் வீழ்ந்தாகணும். திரைக்கு அருகில் ஒளித்திருந்து நெறியாளர் பகையரசனை தோற்கச் சொல்கிறார். அவன் கவனிக்கவில்லையோ என்ன இழவோ தெரியாது. சண்டை தொடர்கிறது. அதைப் புரியவைக்க அரசனும் “எனது வாளுக்கு இரையாகப் போகிறாயா கோழையே. உனக்கு உயிர்மீது ஆசையிருந்தால் என் காலடியில் மண்டியிட்டுவிடு. பிழைத்துப் போ மானங்கெட்டவனே!…“ என்று வசனம் பேசினார். அது வினையாகிவிட்டது.
பகையரசன் மேக்கப் உடையிலிருந்த யோகனாக நம்மடையாள் மாறினான். சண்டையில் அவன் தோற்பதாயில்லை. அதை நிறுத்துவதாயுமில்லை. ஒளிச்சு நின்று கத்திக்கத்தி களைத்துப்போன நெறியாளர் ஒரு உத்தியை கையாண்டார். அரசனும் பகையரனும் சுழன்று சுழன்று சண்டையிடும்போது அரசன் சபையோர் பக்கமாக வரும்போது திடீரென சீனை (திரைச்சீலையை) இடையில் விட்டு பகையரசனை சீனுக்குப் பின்னால் மடக்கினார். அப்போதான் அது நடந்தது.
சீனை மொட்டை வாளால் வெட்டிப் பிரித்தபடி… நெஞ்சை நிமிர்த்திய பகையரசன் வசனம் பேசினான்,
” மசிரைவிட்டான் சிங்கன்! ”
இப்போ சிங்கன் முகநூலில் எங்காவது பின்னியெறிஞ்சுகொண்டிருப்பான் என நினைக்கிறேன். சந்தடிக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை.