சாமப் பொழுதில்
அல்லது ஓர் அந்திமப் பொழுதில்
இல்லாவிடினும்
ஓர் கருக்கல் பொழுதில்
மறைந்திருத்தல்; இலகு என்றபோதும்
நிலம்வெளித்த ஓர் காலைப் பொழுதில்
யார் கண்டார்
மரணம் ஒளித்திருத்தல் கூடுமென.
வைரவரின் சூலமும்
நாய்களின் ஊளையும்
தட்டிவிட்டால் பறக்கும் சுருட்டுத் தீயுதிர்வில்
எழும் கொள்ளிவால் பேய்களும்
நிலத்தில் கால் முட்டா பிசாசுகளும்
காவோலையுதறி வெருட்டும் பனைகளும்
அரவமற்றுக் கடக்கும் உருவங்களும்
எல்லாம் உறைந்த இரவுகள் உருகி
ஒளிகொள்ளா பகல்
ஒவ்வொரு காலையையும் தளிராய்ப்
பரிசளிக்கும்.
அப்படியான ஓர் பொழுதில்
மரணம் உனைக் காவு கொண்டது.
அதிர்ச்சியில் உறைந்தோம் நாம்.
இறக்கை வெட்டப்பட்ட பறவையாய்
வீரிட்டபடி
இரத்தம் தோய்ந்து விழுந்தது உன்
மரணச் செய்தி காதோரமாய்.
நம்பமுடியவில்லை
ஒரு கனவை செய்துகாட்டுமாப்போல்
நீ எம் நினைவரங்கத்தில்
அதிர்ந்து அதிர்ந்து ஓய்கிறாய்
அசைவுறும் உன் உறவுவலையிலிருந்து
சடுதியாய் நீ
காணாமல் போய்விடும் காட்சியில்
அலறல்கள் ஓங்கியெழும்ப
உன்
உடலைக் காவிச்சென்றனர் உறவினர்.
கண்ணீர்த் துளிகள் சிதறியழிந்த
முக இடுக்குகளில்
வார்த்தைகள் மௌனித்துக் கிடக்கின்றன.
காலம் துயரைத்
துடைத்தழித்தல் நியதி என்றபோதும்
நாம் அழுகிறோம்
கண்ணீர் எமை ஓர் இறகுபோல்
காவிச் செல்லட்டும்.
துயருறைந்த நாட்களின் மீது
நீந்திச் செல்ல எம்மிடம் வலுவில்லை.
அதனால்
விழிமடலுடைத்து வருக கண்ணீரே
துயர் கரைக்கும் காலத்தினூடு
நாம் பயணிப்போம்.
மரணத்தின் சுமையை நாம்
உணர்வதெல்லாம்
வாழ்வின் மீதான எம்
நேசிப்பின் தோள்களில்தான்.
மனிதம் குடியிருக்கும் இத் தெரு
பிறப்பையும் இறப்பையும் இணைத்தபடி
நீண்டு கிடக்கிறது.
நாம் நடந்துகொண்டிருக்கிறோம்.
மரணத்தின் ஓர் அசுகையைத் தன்னும்
தெரிவிக்காது, நீ
போய்விட்டிருந்தாய்.
திரும்பவேயில்லை.
உயிரற்றுப்போன உன் உடலிலிருந்து
எழுந்து நடக்கின்றன நினைவுகள்.
ஒரு விளையாட்டுப் போட்டியிலோ
சிரமதானத்திலோ
பாலர் பாடசாலை வளவினிலோ
புழுதியெறிந்து கிடக்கும்
வாசிகசாலை முற்றத்திலோ
எல்லாமும்
படர்த்திச் சென்றிருக்கிறாய் உன்
நினைவுதனை.
நீ உலவிய வெளிகள் அவை.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நீ
வரைந்த உன் விம்பம்.
புறங்கையால்
மூக்குச்சளி துடைத்து, நடந்துதிரிந்த
களிசான் காலத்திலிருந்து
இன்றைய என்
நரைமயிர்க் காலம்வரையும்
உனது விம்பம் இவ் வெளிகளில்தான்
பதிந்திருக்கிறது.
நாமுண்டு நமது வேலையுண்டு என்ற
சும்மாத் தத்துவமெலாம் உன்னளவில்
பொய்த்துப் போனது.
எப்படி மறத்தல் கூடும் உனை.
ஆசிரியரை இழந்த
பள்ளிக்கூட வகுப்பறையின் வலியோடு
நெளிகிறது எம் வாசிகசாலை.
தன் மடியில் இடறிவீழ்ந்தவன்
காயமாற்றி மீளும் எதிர்பார்ப்பு
பொய்த்துப் போய்விட்ட துயரில்
அரற்றியிருத்தல்கூடும் இவ் வாசிகசாலை.
சோலைக்குள் புதையுண்டுபோயிருந்தும்
வரட்சியில் நாவரண்டு கிடக்கிறது.
அதன் பொலிவுக்காய்
நாம் உன்னுடன்
அளவளாவிய சொற்கள் எம்மிடமிருக்கிறது.
தொடர்வோம் செயல்கொண்டு.
நினைவேந்தும் இந் நாளில்
உன் இழப்பின் துயர்ப் பாடல்களை
காலம் சுமந்து செல்லட்டும்.
நினைவுகளை நாம் பத்திரப்படுத்துவோம்.
– ரவி (27102012)