யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…
பசித்திருக்கும் குழந்தைகளையும்
உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல
ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்
பார்க்க விரும்பாததால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்.
குவேய் உலங்குவானூர்திகளிலிருந்து
தேர்ந்த விமானிகள்
நேபாம் குண்டுகளினால் எங்கள்
கிராமங்களை துடைத்தெறிகின்றனர்.
நதிகளுக்கு நஞ்சூட்டுகின்றனர்.
மக்களுக்கு உணவூட்டும்
பயிர்களை தீயிடுகின்றனர்
அதனால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்.
விடுவிக்கப்பட்ட எம் நிலங்களில்
மக்கள்
வாசிப்பது எப்படியென
பயிலத் தொடங்கியிருக்கின்றனர்.
நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன
மண்ணின் முகிழ்ப்புகளெலாம்
எல்லோருக்கும் சொந்தமாகிறது
அதனால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்
யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்!
– Alegria (எல்சல்வடோர் பெண்போராளி)
(கவிதையே எனை மன்னித்துவிடு, மொழிபெயர்ப்பின்போது இழக்கப்பட்டவைகளுக்காக. – ரவி, 14.12.2011)