எனது மனங்கொத்திப் பறவை
Posted September 20, 2011
on:- In: கவிதை
- Leave a Comment
இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்
மீள்வரவில்
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.
நான் எதையும்
விசாரணை செய்வதாயில்லை.
ஏன் பறந்தாய்
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்
என்பதெல்லாம்
எனக்கு பொருட்டல்ல இப்போ.
என் பிரிய மனங்கொத்தியே
நீ சொல்லாமலே பறந்து சென்ற
காலங்கள் நீண்டபோது
என் மனதில் உன் இருப்பிடம்
பொந்துகளாய்
காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை
அறிவாயா நீ.
நீ அறிந்திருப்பாய்
நீ இரக்கமுற்றும் இருப்பாய்.
மீண்டும் உன் கொத்தலில்
இதமுற்றிருக்கிறேன் நான்
கொத்து
கோதிவிடு என் மனதை
இதுவரையான உன் பிரிவின் காலங்களில்
என் மனம் கொத்திச் சென்ற
பறவைகளில் பலவும் என்
நம்பிக்கைகளின் மீது
தம் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகள் ஊர்கின்றன.
மறக்க முனைந்து மறக்க முனைந்து
தோற்றுப்போகிறேன் நான்.
நான் நானாகவே இருப்பதற்காய்
காலமெலாம்
வலிகளினூடு பயணிக்கிறேன்.
சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு
உன் மீள்வரவும்
மீள்பறப்பாய் போய்விடும்தான்.
என்றபோதும் இன்று நான்
இதமுற்றிருக்கிறேன் – நீ
கோதிய பொந்துள்
சிறகை அகல விரித்ததனால்!
– ரவி (20092011)
Leave a Reply