தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக …
மாலைநேரங்கள் பகல் பொழுதின் முடிவுரைகளாகப் போவதால் நான் காலாற நடந்துகொண்டிருந்தேன். நினைவுகளை மனது வாசித்துக்கொண்டிருக்க உணர்வுகள் எனை வருடிக்கொண்டிருந்தன. நான் அந்த வாங்கில் அமர்ந்திருந்தேன். சோலைகள் ஒளிக்கோடுகளை மெலிதாகவோ கற்றையாகவோ வரைந்துகொண்டிருந்தன. நான் அமைதியற்றிருந்தேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே அந்தக் கிழவன் வந்து என் அருகில் அமர்ந்தான். தனது பைக்குள் கையைவிட்டு எதையோ துளாவிக் கொண்டிருந்தான் அவன். தோலினாலான பை அது. நூற்றாண்டு பழமைவாய்ந்த தடயங்கள் அதில் தெரிந்தது. இந்த இடத்தில் அவனை நான் அதிகமாகக் காண்பதுண்டு. அவன் பழுத்துப்போயிருந்தான். இன்றுதான் எனக்குத் தெரிந்தது அவனிடம் வார்த்தைகள் அதிகம் இருந்தன. அனுபவங்களை கிரகிக்கும் அவனது ஆற்றல் என்னை மலைக்க வைத்தது.
ஆத்மா சாந்தியடைவதாக… என்பார்களே. அதற்கு இவ்வளவு கனத்த மௌனம் தேவை, இந்த சூழல் தேவை என்பதுபோல இருந்தது அந்த மயானவனம். புற்படுக்கைகள், மலர்ச்செடிகள் நடுவே கல்லறைகள் வாழ்வைச் சுருக்கி எழுதிவைத்திருந்தன.
அவன் வணக்கம் சொல்லியபடி அமர்ந்தான். குறுக்கிட்ட நான் “மன்னிக்க வேண்டும் உங்களை நான் இந்த இடத்தில்தான் அதிகமாகக் காண்கிறேன். ஏன் எனத் தெரிந்துகொள்ளலாமா?“ என்றேன். மெல்லியதாய்ச் சிரித்தான். பார், உனக்கும் இந்த இடம் முடிவுற்ற ஒரு இடமாகத் தெரிகிறது பார். அதனால்தான் உன்னிடமிருந்து இந்தக் கேள்வி வருகிறது. எனக்கு பதில் புரியாமல் இருந்தது. வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை செய்யவைக்கும் இடம் இது. அதனால்தான்! என்றான் அவன். அவன் தொடர்ந்தான்… மனிதர்கள் இருமுறை வாழ்கின்றனர். ஒருமுறை யதார்த்தமாய் வாழ்கின்றனர், இன்னொருமுறை நினைவில் வாழ்கின்றனர். நினைவில் வாழ்தல் என்பது இறந்துபோனவர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எம் கண்காணா நிலையில் வாழ்பவர்களுக்கும் பொருந்தும். அதனால் இறப்பு பிறப்பு, பிரிதல் சேர்தல்… எல்லாமும் கொண்டதுதான் வாழ்க்கை. நாம் இதையெல்லாம் ஜீரணித்தாகவேண்டிய நிலையில் விடப்பட்டிருக்கிறோம் என்றான் கிழவன்.
வாழ்வா சாவா என்ற இருமைகளை மட்டும் வைத்து சிந்திக்கத் தெரிந்திருந்த நான் நொருங்கிப்போனேன்.
கல்லறைகளில் சிலர் தீபம் ஏற்றினர். நினைவை இதயத்திலிருந்து உருவி கல்லறையை உயிர்ப்பித்தபடி மௌனமாக நின்றார்கள். ஆங்காங்கு தெரிந்த மனிதர்கள் இந்த அவசர உலகத்தை இந்த மயானத்தின் வாசலில் கழற்றிவைத்துவிட்டு உலாவருவதுபோல் நடந்தனர்.
அவன் தொடர்ந்தான்… இந்த மலர்களைப் பார். கல்லறைகளில் அவற்றை ஏன் நாம் சாத்துகிறோம் அல்லது நாட்டுகிறோம்?.
“அது ஒரு மரியாதைக்கான வெளிப்பாடு… அல்லது ஒரு வழமையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்…“ என இழுத்தேன் நான்.
மெல்லியதாய் குழிவிழ சிரித்தான் கிழவன். அதையும் நான் சரியென எடுத்துக்கொள்கிறேன். அழகாக இருப்பதனால் மனதை மலரப் பண்ணுவதாலும், மனதை குறிப்பான விடயத்தில் ஒன்றுகுவிப்பதற்காகவும் என்றும்கூட எடுத்துக்கொள்ளலாம். வேறு மத ரீதியான காரணங்களும்கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இன்னொரு காரணம் இருக்கிறது. மலர்களின் இதழ்கள் வாடிப்போய்விடுகின்றன. ஆனால் அதன் மகரந்தங்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகவும் இருக்கக்கூடியது. உனக்குத் தெரியுமா மலைகளின் இடுக்குகளில் இப்படியாய் புதையுண்டிருக்கும் மகரந்தங்களை தேடி கண்டுபிடித்து அந்தக் காலங்களுக்குரிய தட்பவெட்பநிலைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆம், இறந்துபோனவர்களின் நினைவுகள் அவர்கள் பாதிப்புச் செலுத்திய மனிதர்களிடம் அழிந்துபோவதில்லை என்பதன் குறியீடாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?.
என்ன இந்தக் கிழவன். அனுபவம், தத்துவம், விஞ்ஞானம் எல்லாவற்றினூடாகவும் போய்வருகிறான். கேட்டுக்கொண்டிருக்க ஆர்வமூட்டியது அவனது உரையாடல்.
அதுசரி, உன்னை நான் இன்றுதான் இங்கு பார்க்கிறேன்.
“ஆம், நான் சூரியாவின் கல்லறைக்கு மலர்சாத்திவிட்டு வந்தமர்ந்திருக்கிறேன்.“
தெரியும்! அந்த இளைஞனின் மரணம் பற்றி நான் அறிந்திருந்தேன். இளமையில் மரணம் என்பது கொடியது. அது தரும் துயரமும் பெரியது. பேற்றோருக்கு எல்லாம் கனவுபோல் இருக்கும், இல்லையா.“ தாழ்ந்த குரலில் சொன்னான் கிழவன்.
“அவன் இறுதிக் காலங்களில் அதிகமாக ரசித்துக் கேட்கும் பாடலின் பொருளை எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியிருந்தான். அவனுக்கு கனவுகள் இருந்திருக்கின்றன. கால்பந்து விளையாட்டில் அது இருக்கலாம் என்பதையும் அவன்; சொன்னான். அந்தக் கனவுகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். பாடல்வரிகளுள் போய்ப் பார்த்தேன். அவன் வாசித்த புத்தகங்கள் பற்றியும் அவனது தந்தை என்னிடம் சொன்னார். இந்த சமூகத்தின் பொதுநீரோட்டத்துள் அகப்படாமல் திணறும் மனநிலை அவனிடம் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் என்னிடம் வலுக்கிறது“ என்று தொடர்ந்த என்னை அவன் குறுக்கிட்டான்.
உனது ஊகம் சரியானதென எடுத்துக்கொண்டால்… உண்மையில் இது ஒரு கடினமான போராட்டம். இதில் வெற்றியடைந்தவர்கள் -எந்தத் துறையாக இருந்தாலும்- அதில் சாதனை படைத்துத்தான் இருக்கிறார்கள். நீ சொல்வதைப் பார்த்தால் அவன் அதில் தோல்வியடைந்துவிட்டானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதை தொடர்ந்து போராடி வெற்றிகொள்ள முயற்சிக்காதது வருத்தமளிக்கிறது என்றான் கிழவன்.
“அவன் துயரமான பாடலொன்றை எமது மௌன வாசிப்புக்காக எழுதிச் சென்றிருக்கிறான்.“ எனது வார்த்தைகளை பெருமூச்சு நிறுத்தியது.
“தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று பலர் எந்த யோசனையுமின்றி சொல்லிவிடுகிறார்கள். சமூகத்தில் பொதுவாகவே சொல்லப்படும் இந்தக் கருத்து ஒரு மனிதஜீவியின் உள்ளக்கிடக்கைகளைப் புரிந்துகொள்ள உதவாது, பொறுப்பற்றது, மூடத்தனமானது“ என்றேன்.
சமூகத்திலிருந்து எழுந்துவரும் எல்லாக் கருத்துகளையும் மூடக்கருத்துகள் என்ற வகைக்குள் வைத்து முடக்கிவிட முடியாது. அறிவியல் அல்லது தர்க்கவியலுக்குள் பொருந்தாத கருத்துகள் தொடர்ந்து நீடிப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். தற்கொலை என்ற செயலுக்கு ஒரு எதிர்ப்பு மனோநிலையை உருவாக்கிட அது கோழைத்தனம் என்று சொல்லப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்ள முடியும். பெரும்பாலான பழமொழிகளைக்கூட உற்று நோக்கினால் இன்னும் பல உதாரணங்களைக் காண முடியும்.
உண்மையில் தற்கொலை செய்வதற்கான இறுகிப்போன மனநிலை எப்படி வளர்கிறது என்பது பற்றிய உளவியல் தேடல்கள் கணிசமானவளவு முன்னேறியிருக்கிறது இங்கு. பொருளாதார, சமூகக் காரணிகளும் எப்போதுமே ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே இதற்கு ஒற்றைக் காரணம் பொருந்தாது. இந்தமாதிரியான விடயங்களை நாம் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சேர்த்து அணுக வேண்டும் என்று தொடர்ந்த அவனோடு நான் இணைந்துகொண்டேன்.
“ஆமாம் உண்மைதான். உரையாடல்களிலும் இது முக்கியம். அவனது இழப்பினால் ஏற்பட்ட பாதிப்பின் சூழலுக்குள் அகப்பட்டிருப்பவர்களை துயரங்களிலிருந்து மீள உதவி செய்ய முடியவில்லையென்றாலும்கூட பரவாயில்லை. துயரத்திலிருந்து மீளாதபடி அல்லது குற்றவுணர்வை ஊட்டுவதாக செய்துவிடக்கூடாது என்ற அவதானமும் புரிதலும் எமக்கு வேண்டும். எங்கள் வார்த்தைகளில் அவதானம் தேவை…“ என்றேன் நான்.
“தற்கொலைக்கு சமூகவியல் ரீதியிலான காரணங்களை உருவாக்க இறுகிப்போன இந்த சிவில் சமூக அமைப்புமுறை ஒரு காரணமாகப்படுகிறதே. பொருளாதார ரீதியில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்ற நிலை இருந்தும் இங்கெல்லாம் தற்கொலையின் வீதம் அதிகமாகத்தானே இருக்கிறது“ என்றேன் நான்.
ஆமாம், உண்மைதான். இங்கு மனிதர்கள் இயந்திரத்தின் ஒரு பின்னிணைப்பு போல் ஆக்கப்பட்டு இயங்கவைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த அரசியல், பொருளாதார அமைப்புக்கு அது தேவைப்படுகிறது. அது மனிதர்களை இன்னுமின்னும் உதிரிகளாக்கி கூட்டு மனப்பான்மைக்கு வேட்டுவைத்துவிடுகிறது. அதாவது அந்நியமாதலை நிகழ்த்துகிறது என்பர் தத்துவவியலாளர்கள். ஆத்மரீதியான வாழ்வு சிதைகிறது. இங்கு இன்னொன்றும் இருக்கிறது. தனிமனித உளவியலைப் பாதிக்கக்கூடிய அம்புகளை இந்த சமூகவியல் காரணிகள்தான் ஏவுகின்றன என்பது. ஆகவே வைத்தியம் இரு தளங்களிலும் செய்யப்பட வேண்டியது. மேற்குலகில் உளவியல் ரீதியில் இதைக் கையாளும் முறை வளர்ந்துகொண்டிருக்க, சமூகவியல் முறையில் இது நிகழமுடியாத அரசியல் பொருளாதார முறைமைதான் பேணப்படுகிறது.
சமூகவியல் ரீதியாகப் பார்க்கும்போது தற்கொலை என்பது சிலசமயங்களில் ஒரு தப்பித்தலாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பிரச்சினைகளின் இயங்குதன்மை பற்றிய அறிவின்மை, அதை எதிர்கொள்வதற்கான தனிமனித அல்லது சமூக நிலைமையின்மை அல்லது அதை உருவாக்கப் போராடாமை குறைந்தபட்சம் அதை எதிர்கொள்ளாமை, தாம் சார்ந்தவர்களை எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்ற சிந்தனையின்றி தான் சார்ந்து மட்டும் செயற்படும் தன்மை, சமூகம் வரைந்துவைத்திருக்கும் ஒழுங்குக்கும் நியதிகளுக்கும் வெளியே இயங்க நிர்ப்பந்திக்கப்படும்போது அல்லது வாழமுற்படும்போது வெற்றிபெறமுடியாமல் போகும் சந்தர்ப்பங்கள், தனது கனவுகளோடும் இலட்சியங்களோடும் வாழ்வதற்கு ஏற்படும் தடைகள் அல்லது அங்கீகாரம் கிடைக்காமை… என பல விடயங்கள் இருக்கின்றன.
நீண்ட பிரச்சாரமொன்றை செய்துகொண்டிருந்த கிழவன் தனது கைப்பையுக்குள் கையைவிட்டு எதையோ தேடினான். புத்தகமொன்றை எடுத்து கையில் வைத்து தடவியபடி பேச்சைத் தொடர்ந்தான். “சுநயளழளெ ழக ளரiஉனைந in றசவைநசள” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
வரலாற்றைப் பார்த்தாயானால் தற்கொலை புத்திஜீவிகள் மட்டத்திலும் நடந்துதான் இருக்கிறது. பார்! நாம் பல இலக்கியப் படைப்புகளை அனுபவித்துப் படித்திருக்கிறோம். அதற்குப் பின்னால் நடந்த சோகங்களும் உள்ளன. பிரபலமான ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் முக்கியமாக கவிஞர்கள் தற்கொலையில் ஈடுபடும் நிகழ்வுகள்தான் அவை. நுண்மையான உணர்திறனும், எல்லைகடந்த கற்பனை வளமும் கொண்டவர்களாக அவர்களில் பலர் இருந்துள்ளனர். அவர்களது படைப்புத்திறனும் அதற்கான அவர்களது சிந்தனைப் பிழிவும் – அதை சித்திரவதை என்றும்கூட சொல்லலாம் – அல்லது போராட்டமும் அவர்களை உளவியல் ரீதியில் பாதித்த இந்தத் துயரத்தின் பின்னால்தான் அவர்களிடமிருந்து நல்ல படைப்புகள் கிடைக்கும் அவலம் ஏற்பட்டன. அவர்கள் கற்பனையில் விரித்துச் செல்லும் உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்கள். பெரும்பாலும் திருப்திப்படாத ஒரு மனநிலை அவர்களது படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் அதேவேளை அவர்களை உளவியல் ரீதியல் அரித்துக்கொண்டும் விடுகிறது. மனஅழுத்தங்கள் அவர்களை அப்பத் தொடங்கியும் விடுகிறது. தற்கொலையை தேர்ந்தெடுக்கச் செய்தும் விடுகிறது.
தற்கொலையில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கை விபரங்களுக்கு அப்பால், அவர்கள் இந்த முடிவை நோக்கி தள்ளப்படுவதற்கான காரணம் குறிப்பாக அவர்களது மன ஆளுகை பற்றிய இவ்வகையான தேடல் “தற்கொலையியல்” என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது.
தற்கொலையின் வரலாறு என்பது நீதிமன்றம், சமயத் தலங்கள், ஊடகங்கள், சமூகம், அறியப்பட்ட புத்திஜீவிகள்… என்பவற்றின் கருத்தியல் தளங்களினூடாக வந்தது என்று தற்கொலையியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்கொலையை எதிர்த்த மதவாதிகள்கூட கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு தம்மைத் தாம் அழிப்பதற்கான உரிமை கிடையாது என்றுதான் சொன்னார்கள். இதன் தர்க்கவியல் தொடர்ச்சியாக சில சமூகவியலாளர்கள் நீ ஒரு சமூகஜீவி, உன்னை நீ அழிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது என்று வைக்கும் குரலையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தவகைக் குரல்களால் தற்கொலைக்கு எதிரான மனவுணர்வை வளர்க்கவே முடியாது.
நான் கனமாகிப் போயிருந்தேன். சோம்பல் முறித்தபடி உடலை சரிசெய்தேன். அது என் நிலையை கிழவனுக்கு உணர்த்தியிருந்தது என நினைக்கிறேன்.
இளம் காதலர்கள் இருவர் கடிந்துகொள்வதும்… பின் ஒன்றாவதும,; இழுபடுவதுமாக சிரிப்பை உதிர்த்துக் கொட்டிக்கொண்டு வீதியில் நடந்தனர். என் கவனம் அவர்கள்மீது போனது. கிழவனும் அதை அவதானித்தான். பார்த்தாயா இந்த இளம் காதலர்களை. அவர்களுக்கு இப்போ வாழ்வு மகத்தானது. அதை அனுபவிப்பதற்குத்தான் தாம் படைக்கப்பட்டதாக உணரவும்கூடும். இது நிலைத்திருக்க எமது உடல் வளம், பொறுப்புகள், வாழ்நிலை மாறுதல்கள் எல்லாம் சவாலாக மாறிக்கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகிறது. ஆக மொத்தம் அகநிலையிலும் புறநிலையிலும் போராடுதல்தான் வாழ்க்கை என்றாகிறது.
“ஆமாம்! எமது நாட்டில் நடந்து முடிந்துள்ள கொடிய யுத்தத்தின் காட்சிகள் படிப்படியாக காணொளிகளில் வந்துகொண்டிருக்கின்றன. வாழ்வுக்காகப் போராடுதல் அல்லது மரணத்தை எதிர்த்து நிற்றல் என்பது முக்கியமானது என்பதையே அதனூடாக நான் பார்க்கிறேன். நீங்கள் சொன்னதுபோல அவர்கள் அந்த போரின் இறுதிக் கட்டத்தில் கூட்டாக ஒரே சூழலை அனுபவித்த -கொலைக்கள- நிலைமை உதிரி மனப்பான்மையை புறந்தள்ளி மரணத்தை எதிர்த்து நிற்க கூட்டு மனப்பான்மையையும் உருவாக்கிவிட்டிருந்தது என நினைக்கிறேன். அதாவது வாழ்வை அவர்கள் நேசித்தார்கள் என்ற செய்தியே புழுதிநீங்கித் தெரிகிறது. இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றேன்.
உண்மைதான். அனுபவங்கள் தரும் படிப்பினைகள் எத்தனையோ நூல்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய அறிவைத் தர வல்லது. அருமையாகச் சொன்னாய். வாழ்வுக்கான போராட்டம் என்பது மரணத்தை எதிர்க்கும் போராட்டம்தான்.
நான் சிறுவயதாய் இருக்கும்போது எனது முதல் பள்ளி ஆசிரியர் சொன்னார், ”இந்த உலகம் படைக்கப்பட்டபோது கறுப்பு வெள்ளையாகத்தான் இருந்தது. ஆதாம் ஏவாள் முதல் காதலர்களாக படைக்கப்பட்டு இந்த உலகத்தில்தான் விடப்பட்டார்கள். பின்னர், அவர்கள் ரசித்துக்கொள்ளும் உலகமாக மாற்ற நிறங்கள் படைக்கப்பட்டன” என்று. எனக்கு அதன் உண்மைத்தன்மை பற்றி சிறுவயதில் கேள்வியிருந்தாலும் கறுப்பு வெள்ளை உலகத்தையும் நிற உலகத்தையும் அருகருகில் வைத்து கற்பனை பண்ணும்போது ரசனை பிரவாகம் எடுக்கிறது, நிறங்கள் பூத்த உலகத்தில். பின்னர், ஏழு நிறங்களைக்கொண்ட வானவில்லை இந்தக் காதலர்களை மகிழ்ச்சிப்படுத்த இறைவனின் படைப்பாளிகள் உருவாக்கியதாகவும் எனது ஆசிரியர் சொன்னதும்கூட ஞாபகம் இருக்கிறது.
“இதெல்லாம் கதைத்துச் சிரிப்பதற்கான வெறும் கதைகள்தான் என்பது இப்போ எல்லோருக்கும் தெரியுமே” என்றேன்.
அறிவியல் பார்வையில் நீ சொல்வது சரி. ஆனால் இந்த வாழ்வு வாழ்வதற்கானது, அது ரசிப்பதற்குரியது, அது இயற்கையோடு கலந்தது என்றொரு பொருள் அதற்கூடாக கிடைக்கிறது என நாம் ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என கிழவன் திருப்பிக் கேட்டான்.
எனது இறுக்கமான சிந்தனைகைளை அவன் உலுப்பிக்கொண்டிருந்தான். நான் கொஞ்சம் கொஞ்சமாக இலேசாகிக்கொண்டிருந்தேன்.
தனது கைப்பையுள் புத்தகத்தை நுழைத்தபடி, நீ இந்த நாட்டுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிறது என்கிறாய். உனக்கு பனிச்சறுக்கல் தெரியுமா? கேட்டான் கிழவன். அல்லது ஏதாவது விளையாட்டுகளை அல்லது உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்கிறாயா?
“நீங்கள் கேட்கவருவது புரிகிறது. நான் ஓரளவு சில உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டு. முக்கியமாக விரைவாக நடப்பது அல்லது ஓடுவது என்பதை குறைந்தளவிலாவது செய்துவருகிறேன்.“
நல்லது. நீ உனது உடலை நேசிக்கிறாய் என நான் எடுத்துக்கொள்கிறேன் என்ற கிழவன், நேசிப்பு என்பதை நாம் எப்படி பார்க்கிறோம். அது எங்கிருந்து வருகிறது என சொல்கிறோம்? பதிலுக்காக புன்சிரிப்புடன் எனைப் பார்த்தான்.
“இதயத்திலிருந்து வருவதாக சொல்கிறோம்“ என்றேன்.
அப்படியானால் அந்த இதயத்தை நாம் நேசிக்க வேண்டும் அல்லவா? என்றான்.
“அதென்ன இதயத்தை நேசிப்பது?“
அந்த இதயம் ஒழுங்காக ஆரோக்கியமாக இயங்குதற்கான உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கத்தையும் நாம் மேற்கொள்வதைத்தான் இதயத்தை நேசித்தல் என்கிறேன் என்றான் கிழவன்.
என்னை சிறு ஊசியால் குற்றியதுபோல் நுண்ணதிர்ச்சி ஏற்பட்டது. “அது உண்மைதான். நாம் எமது உடல் பற்றிய கவனம் அது பற்றிய அறிவு மிகக் குறைந்தவர்களாக இருப்பது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இப்போதும் சாப்பாட்டு நேரம் பற்றி மட்டுமல்ல, எவ்வகையான சாப்பாட்டை உட்கொள்ள வேண்டும், அவைகளின் தன்மைகள் பற்றியெல்லாம் எமக்கு அறிவு குறைவாகவே உள்ளது. இங்கு பாடசாலையில் படிக்கும் பிள்ளைக்கு இருக்கும் இந்த அக்கறை அல்லது அறிவுகூட எமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கீரை உடம்புக்கு நல்லது… மீன் உடம்புக்கு நல்லது… பயறு உடம்புக்கு நல்லது… என்று மாத்திரம் பொதுவாகப் பேசுவதை நாம் அன்றாடம் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறோம்…“ என்றேன்.
அதனால்தான் தமிழ்க் கடைகளில் “பில்“ அடிக்கும்போது மரக்கறிகளின் பெயர்களை அடிப்பதில்லை. பொதுவாக மரக்கறி என்று மட்டுமே அடிக்கிறார்கள்… என்று குறும்பாகச் சிரித்தான் கிழவன்.
நாம் எமது உடலை நேசிக்க வேண்டும். நாம் எமது உடலை கொண்டாட வேண்டும். எந்த நிறமாக இருந்தாலும் அவரவர் தம் நிறத்தைக் கொண்டாட வேண்டும். நிறத்தை கொண்டாடுவதன் மூலம் நிறவெறிக்கு எதிரான மனநிலையை அல்லது குறைந்தபட்சம் நிறவெறியை அசண்டைசெய்வதற்கானளவு மனநிலையையாவது பெறமுடியும். உடல் மெலிதானதோ, குண்டோ, கட்டையோ, உயரமோ எப்படியிருந்தாலும் அதை நாம் நேசிக்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். அதேபோல் கேலிசெய்வதை நிறுத்த வேண்டும். தமது உடலை நேசித்த அங்கவீனர்கள் சாதனைகள் படைப்பதைப் பார்த்திருப்பாய். இசைத் துறையில் பார்த்திருப்பாய். ஓவியக் கலையில் வாயால் அல்லது காலால் ஓவியம் வரைபவர்களைப் பார்த்திருப்பாய்…
குறுக்கிட்ட நான் “ஒலிம்பிக் போட்டிவரை விளையாட்டுத்துறை சார்ந்தும் அவர்களின் சாதனைகள் பல வேளைகளில் எமக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துமளவிற்கு இருக்கிறது“ என்றேன்.
உண்மைதான். நாம் எமது உடலை ஒரு வழங்கியாக மட்டும் பார்க்கிறோம் என்றான் கிழவன்.
“அதுசரிதான் பெரியவர். மதங்களும்தான் எமது உடலை எம்மிடமிருந்து அந்நியமாக்குகிறதே.“ தெரியாமல் கேட்டுவிட்டேனோ. மதம்பற்றி கதைக்கத் தொடங்கினால் நான் இண்டைக்கு வீட்டை போனமாதிரித்தான் என்று என்னை நானே கடிந்துகொண்டேன்.
ஆம!; “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா“ என்ற வரிகளை உச்சரித்த கிழவன் நிறுத்திக் கொண்டான். பார் இந்த வரிகளை. அது மட்டுமல்ல, கடவுள் எமைப் படைத்தான்… அவன் எழுதியதுபடிதான் நடக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஊனை உருக்கி, உடலை உருக்கி கடவுளை தியானிக்கச்; சொன்ன கடவுளின் தூதர்கள் எல்லாம் உணவு விடயத்தில் கவனமாக இருந்தார்கள். உனது இந்து மதத்தைப் பார். கடவுளின் தூதர்களுக்கு அன்னதானம் செய்பவர்களுக்கு புண்ணியமாக சொல்லப்பட்டது. பட்டினியில் இருப்பவர்களும் அன்னதானம் செய்ய இந்தத் தூதர்கள் தவறாது போசித்தனர். ஒழுங்காக யோகா உடற்பயிற்சியில் ஈடுபட்டார்கள். தமக்குரிய கலையாக தமக்கு கடவுள் தந்ததாக பொத்திவைத்திருந்தார்கள். இப்போ இந்தக் கலை மேற்குலகின் வீதிவரை வந்திருக்கிறது பார்…
கிழவன் தொடர்ந்து கொண்டுதான் இருப்பான். அவனிடம் பொக்கிசமாய்ப் புதையுண்டு போயிருக்கும் விடயங்களை கேட்க ஆவல் இருந்தாலும் இயந்திர வாழ்வின் நச்சரிப்பு எனை அவனிடமிருந்து விடைபெற வைத்தது.
சூரியாவின் கல்லறை சிந்திய நினைவின் ஈரம் என் மனதில் உலராமல் இருந்தது. எதிர்காலத்தின் வாசற்படியில் நிற்கும் சத்யா, வாழ்வின் நடுப்பகுதியை எட்டிப்பிடித்திருக்கும் அவனது தாய் தந்தையர் (என் நண்பர்கள் அவர்கள்) பற்றியெல்லாம் கசிந்துகொண்டிருந்த எனது சிந்தனைகளைத் தொடர்ந்த அவன்… “வாழ்வு மகத்தானது. கசப்பான, துயரமான, கடினமான சூழலையெல்லாம் நாம் படிப்படியாகக் கடந்து சென்றேயாக வேண்டும். கடினமானதுதான். என்றபோதும் காலம் எம்முடன் இருக்கும். துயரை தன் மெதுவான ஓட்டத்தில் படிப்படியாய் கரைத்து, நினைவாக மட்டும் நீள வைக்கும் சக்தி அதனிடம் உண்டு. நாமும் அதை உந்தித் தள்ளியே ஆகவேண்டும். போய் வருகிறேன்!“ என்றான் அழுத்தமான தொனியில்.
கிழவன் தனது கைப்பையை பிள்ளையை அரவணைப்பதுபோல் அணைத்தபடி தனது குதிரையில் பாய்ந்து ஏறினான். முதுமையை அவன் வீசியெறிந்துவிட்டு எக்காலத்துக்கும் உரியவன் தான் என்பதுபோல் காற்றாய்ப் பறந்தான்.
– ரவி