அம்மாவும் அப்பாவும் நானும்

நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.

முதல்நாள் இரவில் வாசிகசாலை அருகில் குறுக்குப் பாதையில் நாம் வெட்டிவிட்டிருந்த குழியில் இந்த பாண்வேட்டைக்குச் செல்பவர்கள் யாராவது விழுவதை பார்த்து இரசிக்கும் ஆவலுடன் இருந்தோம். நாம் எதிர்பார்த்ததுபோலவே அது நடந்தும் முடிந்தது. விழுந்த அந்த மூத்தவர் “ஐயோ என்ரை பாண்” என்று கத்தினார். தனது உடலின்மீதான அக்கறையைவிட அரது கைப்பிடி விலகிய ஒரு அரை இறாத்தல் பாண்துண்டுக்காக அவர் எழுப்பிய அலறல் எனது குறும்பு மனத்தைப் போட்டுடைத்தது இப்போதும் ஞாபகத்தில் வருகிறது. அந்தளவு கொடுமையான பஞ்சத்தை எதிர்நோக்கிய காலம் அது.

எனது அப்பா 1970 டிசம்பரில் மரணமடைந்திருந்தார். அப்போது எனக்கு பதினொரு வயது. தேசியப் பொருளாதாரத்தை முன்னிலைக்குக் கொண்டுவரும் மாற்று முயற்சியொன்றில் இலங்கை இடதுசாரியச் செல்வாக்கின்வழி செயற்பட முயற்சித்த சிறிமாவின் ஆட்சிக் காலமது. அது “சிறீமாவின்ரை பஞ்சநேரம்” என வர்ணிக்கப்பட்டிருந்தது. நாற்பது வருடங்கள் எனது அப்பாவின் துணையின்றிய வாழ்காலம் அதேகாலப்பகுதியில் தொடங்கியது அம்மாவுக்கு. நாம் எட்டுப் பிள்ளைகள். நான்கும் மூத்த சகோதரிகள். யாரும் அப்போ திருமணம் செய்துகொண்டிருக்கவில்லை. அப்பா இருக்கும்போது அம்மாவை வீடுவிட்டு வெளியே போகாதபடி வைத்திருப்பதை பெருமையாய் கொண்டாடினார்.

பெண்களின் ஆளுமைகளை வளரவிடாமல் தனக்குக் கீழ் வைத்திருப்பதே சமூக அந்தஸ்தாய் கொண்ட ஆண்நோக்குச் சமூகத்தின் ஒரு வகைமாதிரியாய் எனது அப்பாவும் இருந்தார். அவரது இறப்பு எதிர்பாராததாய் 61 வயதிலேயே நடந்துமுடிந்தபோது குடும்பச் சுமை அம்மா தலையில் விழுந்தது. ஒரு குடும்பத் தலைமைக்கான எல்லா ஆளுமைகளையும் எடுக்க அம்மா கடுமையாகப் போராடினாள். ஒரு இரண்டு ரூபாய்க்காக இரண்டு மைல் தூரம் பருத்தித்துறைச் சந்தைக்கு கறிவேப்பிலைக் கட்டை எடுத்துச் செல்லும் நிலையில் அம்மாவின் பயணம் தொடங்கியது. அம்மா களைத்துச் சென்ற அந்த வீதிகள் ஒழுங்கைகள் எல்லாம் இப்போதும் என் ஞாபகத்தில் வரும்.

சுவிசில் எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் காலங்களின்போது ஆரம்பப் பாடசாலைக் கல்வியூட்டலின் முறைகளைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த முறைகளை எனது அப்பா 1960 களிலேயே பயன்படுத்திய விதங்கள் இவற்றுடன் பொருந்திப் போயிருந்ததே அதற்குக் காரணம். இது எனது அப்பா பற்றிய மதிப்பீட்டை இன்னும் உயர்த்தியிருந்தது.

நிலவிய கல்வியூட்டல் முறைகளுக்கு வெளியே எமது அப்பா ஒரு ஆசிரியனாக உலவியதை இப்போதும் அவரிடம் படித்த பலர் நினைவு கூர்வர். பிள்ளைகளுக்கு அடிப்பதில் அவர் நாட்டமற்றவராகவே இருந்தார். வகுப்பறையின் எல்லைகளை அவர் குறுகலாக உணர்ந்தார். எப்போதும் மரத்தின் கீழ் அவரது வகுப்புகள் நடக்கும். வாய்ப்பாடுகூட ஆடிப்பாடலுடன்தான் எமக்கெல்லாம் மனனமாகியது. அவரிடம் ஓவியம் வரையும் திறமையும் இருந்தது. (ஆனால் ஓவியரல்ல.)  நல்ல புள்ளிகள்; வாங்கிவிட்டால் நாம் விரும்பும் உருவத்தை ஓவியமாக அவர் சிலேற்றில் சோக்கட்டியினால் வரைந்துவிடுவார். அது அழிபடாமல் சிலேற்றின் பின்புறமாக வைத்துப் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருப்போம்.

“அ,ஆ” என்ற எழுத்தை முதன்முதல் எழுதப் பழக்குவது சம்பந்தமான வழிமுறை இப்போதும்கூட அதுவும் புகலிடத்திலும்கூட நிலவுகிறது. ஆனால் “அ” என்பதை ஏடுதுவக்குதல் என்பதற்கு பாவிப்பதோடு நிறுத்திவிட்டு முதன்முதலில் “ட” என்ற எழுத்தையும் பின் “ப” வினையும் அதன்பின் “ம” வினையும் என தனக்கென ஒரு எழுதக் கற்பிக்கும் முறையை உருவாக்கினார். (இதுபற்றி அவர் தன் கைப்பட எழுதிய குறிப்பை அண்மையில் நான் இலங்கையிலிருந்து என்னுடன் எடுத்துவந்தேன்.)

பாடசாலை வளவைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டிருக்கும். அதற்கான கதியால்களை வீடுவீடாக மாட்டுவண்டியில் சென்று சேகரித்து வருவார். அவற்றை வேலியைச் சுற்றி நாட்டுவதிலிருந்து அவை வளரும்வரை தண்ணீர்விட்டு வளர்த்தும் விடுவார். அதற்காகவே அதிகாலை பாடசாலைக்குச் செல்லும் நாட்கள் அதிகம்.

சிறுபிள்ளைகள் சட்டையுடன் சிறுநீர் கழித்தாலோ, ஏன் மலம் கழித்தாலோகூட அந்தப் பிள்ளையை பாடசாலைக் கிணற்றில் கழுவிவிடுவதும் அந்த உடைகளை தோய்ப்பதும் மாற்று உடைகளைக் கொடுப்பதுமாக ஒரு தகப்பனாக அவர் மாறிவிடுவார். சோர்வாய் பிள்ளைகள் இருப்பதை கவனித்தால் அதை கேட்டறிவார். பசியால் என்று தெரிந்தால் என்னை வெளியில் உள்ள ‘ஊமையன் கடைக்கு’ அனுப்பி இடியப்பமோ தோசையோ பணிசோ வாங்கிவிர அனுப்புவார். சுகவீனம் எனத் தெரிந்தால் அருகிலுள்ள எமது ஆயுர்வேத மருந்துக் கடைக்கு என்னை அனுப்பி மருந்துகளை கொணரச்செய்வார். சிலவேளைகளில் அந்தப் பெரிய திறப்பால் கடையைத் திறப்பதிலும் பூட்டுவதிலும் நான் சிரமப்படும்போது பக்கத்துக் கடைக்கார வேலுப்பிள்ளை மாமா உதவிசெய்வார்.அந்த மருந்துக் கடை பாடசாலை முடிய பின்னேரங்களிலும் லீவு நாட்களிலும் திறபடும். அது அவரது நண்பர்களுடனான சந்திப்பு மையமாகவும் மாறிவிடும்.

ஆயுர்வேத மூலிகைகளை யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தமாக வாங்கிவருவார். அவற்றை வகைப்படுத்தி தனித்தனியாக கோர்லிக்ஸ் போத்தல்களில் அடைத்து, அதற்குரிய லேபல்களையும் நானே சொத்தி எழுத்துகளால் எழுதவைத்து, அதை அலுமாரியில் அடுக்கிவைக்கவேண்டிய இடத்தில் நானே வைத்துக்கொள்ளவும் என ஒரு தொடர் வழிமுறையை செய்விப்பார். ஏனெனில் நான் தனியாக கடையில் நிற்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போது,  வாடிக்கையாளர் முன் அவற்றை தேடிக்கொண்டிருக்காமல் இலகுவாக எடுத்துக்கொள் வசதியாக இருக்கும்.. நான் கடையில் நிற்பது தெருவால் போவோருக்கு தென்படாது. அவளவு உயரம். மேசையில் எனது நாடி முட்டியபடி இருக்கும். போதாததுக்கு முன்னுக்கு அடுக்கிவைக்கப்படும் முட்டாசு போத்தல்கள் எனக்கு தெருவை மறைத்துவிடும்.

அப்பாவின் மரணத்தின்பின் இவையெல்லாம் எம் நினைவிலிருந்து புறந்தள்ளப்பட்டு பஞ்சத்தோடு போராடுவதே வாழ்க்கையானது. ஒருவாறு வாழ்க்கையை இழுத்துச் சென்றோம். எனது அக்காமார் எவருமே அப்போது மணம்முடித்து இருக்கவில்லை. சீதனமுறை நிலவும் யாழ்ப்பாண சமூக முறைமையில் அக்காமாரை ‘கரைசேர்ப்பது’ பற்றிய கவலை அம்மாவை பெரிதும் ஆழ்த்தியிருந்தது. வாழ்வுக்கான எல்லாப் போராட்டங்களினூடும் நாம் எல்லோருமே அம்மாவுக்கு ஒத்துழைத்த காலங்கள் எனக்கு இப்போதும் பெறுமதிமிக்கனவாய்த் தெரிகிறது.

படிப்பு ஒன்றே மூலதனமாய்ப் போன யாழ்ப்பாண நிலைமையோ அன்றேல் மனநிலையோ எமது மீட்சிக்கான வழியாய்த் தெரிந்தது. இதற்காக பொருளாதார ரீதியில் இன்னும் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது. அந்த இழப்புகள் அம்மாவை இன்னுமின்னுமாய்த் தாக்கியது. இரவு வேளையில் சாமப்பொழுதுகளிலும் கைவிளக்கு வெளிச்சத்தின் முன் நான் புத்தகங்களுடன் மல்லுக்கட்டியபடி இருப்பேன். அருகில் அம்மா சுவரில் சாய்ந்தபடி இருப்பாள். நித்திரைத் தூக்கத்தில் அம்மா சுவரில் அங்காலும் இங்காலுமாக சரிவதும் நிமிர்வதுமாகவே இருப்பாள். பரிதாபமாக இருக்கும். “அம்மா போய்ப் படு. நானும் படுக்கப் போறன்” என்று நான் சொல்வதெல்லாம் எடுபடுவதேயில்லை. இடையிடையே தேனீரையோ பழங்கஞ்சியையோ முட்டைக் கோப்பியையோ எனக்கு தருவதற்கான விருப்புடன் அம்மா நான் உறங்கும்வரை தானும் உறங்காமல் இருப்பாள். நாளெல்லாம் ஓயாது இயங்கி, குடும்பச் சுமைகளின் பாரத்திலும் எனது சகோதரிகளை ‘கரைசேர்ப்பதில்’ திசையறியா ஏக்கங்களிலும் அம்மா மூழ்கியபடி எனதருகில் குந்தியிருப்பாள்.

1970 எனது அப்பாவின் இறப்பில் திசையறியாமல் விடப்பட்ட எனக்கு உவப்பான கல்லூரியொன்றில் இடம் கிடைக்கிறது. எனது வயது பதினொரு வயது பதினொரு மாதம். 8ம் வகுப்பு. அதிகாலையில் நானும் எனது அக்காவுமாக வீடுவீடாக அப்பம் விற்கப் புறப்பட்டு விடுவோம். அம்மா அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து இடியப்பம் தோசை என தயார் பண்ணியவைதான் அவை. இருட்டாக இருக்கும். பயமாகவும்கூட இருக்கும். அதுவும் மழையென்றால் சுளகை தலையில் ஏந்தியபடி கைகோர்த்துச் செல்வோம். கையில் ரோர்ச் லைற். விற்று முடிந்தபின் வீடு திரும்புவோம். அவசர அவசரமாக பாடசாலைக்குத் தயாராவோம். போடுவதற்கு ஒரு சோடி யுனிபோர்ம் மட்டுமே என்னிடம் இருந்தது.

நீலக் காற்சட்டை. வெள்ளை சேர்ட். கொழுத்தும் வெய்யில், வியர்வையில் நனையும் உடல். வெள்ளைக்காரனின் ஒழுங்குவிதியை வெள்ளை சேர்ட் தாங்கிநிற்கும். சேர்ட்டை அம்மா அடிக்கடி தோய்த்து சுடுநீர்ப் பாத்திரத்தால் அயன்பண்ணித் தருவாள். ஏழையென்றால் தயங்கியபடி கால் வைக்கச் செய்யும் எல்லைகளை அந்தக்; கல்லூரி மனதில் வரைந்திருக்கும். டிசிப்பிளின் என்ற பெயரில் அந்தக் கல்லூரியில் படிப்பதை பெருமையாக நினைத்த என் காலங்கள் இப்போ என்னிடம் உயிர்வாழ்வதில்லை. கல்லூரியின் பெருமைக்கு தகவமைய நாம் புடம்போடப்படுவதே டிசிப்பிளின் என்ற பெயரில் நிகழ்ந்தது. எமது எதிர்காலத்துக்கு ஏற்ப ஒரு சமூக மனித ஜீவியாய் எம்மை வளர்த்தெடுப்பதில் அந்தக்; கல்லாரி தன்னைத் தகவமைக்கத் தயாராக இருக்கவில்லை.

தவறுகளை அடியினால் தண்டிப்பதால் திருத்தலாம் என்ற வன்முறை மனோபாவத்தை இளம் பருவத்திலேயே ஊட்டும் உளவியலை கேள்விகேட்க முடியாதளவு இந்த டிசிப்பிளின் மேக்கப் போட்டிருந்தது. அதிகார அலகுகளை அது உருவாக்கி உரையாடலுக்கான களங்களை அது மறுத்துக் கொண்டிருந்தது. ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்கு எதிராக அது இயல்பாய் செயற்பட்டது என நான் இப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். இது ஒன்றும் அந்தக் கல்லூரிக்கு மட்டுமான பிரச்சினையாக இதைப் பார்க்க முடியாது. அடிப்படையில் எல்லாப் பாடசாலைகளுமே இந்தப் போக்கை ஏற்றத்தாழ்வாகக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது அதிகாரம், அடிபணிதல் என்ற எல்லைக்குள் இயங்கியது. பாடசாலைக்கு வெளியே சைக்கிளில் டபிள் போவதைக்கூட பொலிஸ் பாணியில் இந்த டிசிப்பிளின் கண்காணித்தது. தண்டித்தது.

என்னிடம் சைக்கிள் இருக்கவில்லை. கால்நடையாக ஒவ்வொரு நாளும் 2 மைல்கள் நடந்து பாடசாலை போகவேண்டியிருக்கும். புத்தகங்களை கையிலும் தோளிலுமாக மாறி மாறி காவியபடி பாடசாலை விரைவோம். ஒருமுறை பச்சை பூவரசம் தடியினால் நான் தண்டிக்கப்பட்டேன். முதுகுப்புறம் பச்சைக் கோடாய் தழும்பாக்கப்பட்ட வெள்ளைச் சேர்ட்டை கழற்றி கையில் காவியபடி வீடு போகவேண்டி வந்தது. வீட்டில் ஒரேயொரு சைக்கிள் மட்டும் இருந்தது. அது வீட்டுத் தேவைகளின் காவி என்பதால் பாடசாலைக்குப் போக அது என்னுடன் வருவதில்லை.

மாமாவுடன் சேர்ந்து நானும் அண்ணனும் தோட்டத்தில் அதிகாலை வேலைசெய்த காலங்களில் அப்பம் விற்பது நின்றுபோனது. தோட்டத்திற்கு எமது பழைய வூல்சிலி மெசினை இழுத்துச் செல்வதிலோ, வட்டமாய்ச் சுற்றிய நீர்பாய்ச்சும்; குழாயையோ தோளில் தாங்கிபடி சைக்கிளில் போவதிலோ அல்லது தோட்டத்தில் தண்ணிமாறுவதிலோ சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பக்கத்துத் தோட்டக்காரர்களின் அனுமதியோடு வெங்காயப் பூ முறிப்பதிலோ காலை நேரம் விரைவாய் கரைந்துவிடும். அவசர அவசரமாய் பாடசாலைக்குப் புறப்படுதல் என்பது ஒரு பொதுவான நியதிபோல் இருந்தது. இவ்வாறாய் எனது படிப்பு தொடர்ந்தது. அம்மா கறிவேப்பிலையை மட்டும் சந்தைக்குக் கொண்டு போகும் நிலையிலிருந்து மரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய், தக்காளி என எடுத்துச் செல்லும் நிலைக்கு மாறிக்கொண்டிருந்தார். என்னிடம் இரண்டு சோடி யுனிபோர்ம் இப்போ இருந்தது.

அப்பா சம்பளம் வந்தவுடன் வெளிக் கல்வீட்டின் விறாந்தையில் குந்தியிருந்து கடன் காசுகளை தனித்தனியாக கட்டிவைத்துப் பரவியிருப்பார். கடன்காரர்களுக்கானதும் தனக்கானதும் போக எஞ்சியதுதான் அம்மாவிடம் வரும். அம்மா எந்தக் கணக்கும் கேட்க முடியாது. ஒரு குடும்பத் தலைவனின் ஆளுமையோடு இருந்தார்தான். ஆனாலும் அம்மாவின் ஆளுமையை அவர் அடக்கிவைத்திருந்தார் என்பதை அப்பாவின்றி அம்மா நகர்த்திய 40 வருட வாழ்வும் நிரூபித்திருக்கிறது.

குடும்பம் பற்றிய, பெண்கள் பற்றிய ஒழுக்கம் மற்றும் விதிகள் என்பன பற்றிய, சமூகக் கட்டுப்பாடுகள் பற்றிய பொதுநீரோட்டத்தோடுதான் அப்பாவும் இயங்கினார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தபோதும் மனிதாபிமானம் என்பது அவரின் முதன்மையான பண்பாகவிருந்தது. சக மனிதர்களை மதிப்பதும் சமத்துவமாக நடத்துவதும் அவரின் பண்பாக இருந்தது.  அறிவதிகாரம் என்பது துளியளவும் அவரிடம் இருந்ததில்லை.

அவர் ஒரு ஆயுர்வேத வைத்தியராகவும் இருந்தார். வைத்தியம் பார்க்கும்போது சாதிரீதியிலோ அந்தஸ்து ரீதியிலோஅவர் எந்தவித மாறுபட்ட அணுகுமுறைகளையோ வரவேற்பு முறைகளையோ அவர் செய்ததில்லை. அவர் தனது வைத்தியத்துக்கு வசதியற்றவர்களிடத்தில் பணம் வாங்குவதில்லை. வீடுதேடி சைக்கிளில் போய் வைத்தியம் பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் அவர் இதையே செய்தார். பலவீனம் என்னவென்றால் இந்த நல்லெண்ணத்தை துஸ்பிரயோகம் செய்த வசதிபடைத்தவர்களையும் அவர் விட்டுவிட்டு வெறுங்கையோடு வருவதுதான். கடை ஒரு வியாபார நிலையம் என்றில்லாமல் அவரது வைத்தியத்துக்கான ஆதார நிலையமாக ஓடியது. அவர் பெயர்பெற்ற ஆயுர்வேத வைத்தியராக இன்னொரு பாத்திரத்தையும் வகித்தார் எப்பதை ஞாபகப்படுத்த முடியாத ஊரவர்கள் அயலூரவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.

குடும்பம் பற்றிய விதிமுறைகள் எல்லாம் ஆண்களால் உருவாக்கப்பட்டவை. ஆண்கள் இந்த விதிகளையெல்லாம் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மீறினாலும் திரும்பத் திரும்ப இந்த குடும்ப கட்டுமானங்களுக்குள் வரமுடிகிறது. ஆனால் பெண்கள் ஒருமுறை மீறினால் போதும். எல்லாம் சரிந்து கொட்டுப்பட்டுவிட்டதாக கலவரப்படுகிறது இந்தச் சமூகம். பெண்கள் குடும்ப கௌரவங்களை காப்பாற்றும் கலாச்சாரக் காவிகளாக இருத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த வகையில் அம்மாவும் இந்தப் பணியை செய்துகொண்டிருப்பதைப் பற்றி அப்பா எப்போதும் பெருமையாகப் பேசிக் கொள்வார்.

இப்படியாய் இருந்த அம்மாவுக்கு அப்பா திடீரென சுகவீனமுற்று ஆறு மாதங்களின்பின் இறந்துபோனதில் அதிர்ச்சிதான் எஞ்சியது. மூத்த அண்ணா சுகவீனமானவராக இருந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் ஆண்பிள்ளைகள் துணை அம்மாவுக்குக் கிடைக்கவில்லை. இப்போ அம்மா அப்பாவின் பாத்திரத்தையும் ஏற்றார். வீட்டிலும் வெளியிலும் அவர் இயங்கவேண்டியதாயிருந்தது. ஓய்வாக அம்மா இருப்பது என்பதை நாம் காணமுடியாமல் இருந்தது.

அப்பா தனது மரணத்தை இவ்வளவு விரைவில் எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. அவர் குடும்பத்துக்கு வெளியில் இயங்குவதில்தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இரண்டு கோவில்களை நிர்வகித்தார். கோவில்குளம் என்று திரிந்தார். திருயாத்திரை போகும் சாமிமார் பலர் எமது வீட்டுக்கு வருவர். அநேகமாக அவர்கள் சிறு குழுக்களாகவே வருவர். அப்பா அவர்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இயங்குவார். அவர்கள் நாட்கணக்கில் தங்கிய சந்தர்ப்பங்களும்கூட உண்டு. அதிகாலை எழுவது குளிப்பது தீட்சிப்பது தேவாரம் பாடுவது என்று காவியுடையுடன் அவர்களின் நடமாட்டம் சூழலை மாற்றிப் போட்டிருக்கும். அம்மா குசினிக்குள் இயங்கத் தொடங்குவாள். எல்லோருக்குமான சைவ உணவுகளை தயாரிப்பதில் அம்மாவின் காலைப்பொழுது தொடங்கிவிடும். எனக்கு அவர்களைக் காண பயமாக இருந்ததால் அவர்களுக்குக் கிட்ட செல்வதை தவிர்த்துக் கொண்டதாய் ஞாபகம்.

அப்பா எப்போதுமே இயங்கியபடிதான் இருப்பார். அவர் ஒரே மரத்தில் ஒட்டு முறையில் விதவிதமான மாங்காய்களை காய்க்க வைப்பார். அதை நாடி வருபவர்களுக்கு இலவசமாகவே அவற்றை செய்தும் கொடுத்தார். பாடசாலை நேரம் போக அவர் மருத்துவம், சாஸ்திரம் போன்ற துறைகளில் ஈடுபட்டார். ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிப்பது, மருந்துக் கடையை நடத்துவது, சைக்கிளில் வீடுகளுக்குச் சென்றுகூட வைத்தியம் பார்ப்பது என அவரது மருத்துவப் பணி தொடர்ந்தது. தனது வைத்திய வாகடக் குறிப்புகளை ஏட்டில் எழுத்தாணியால் எழுதுவதையும் அவர் செய்தார்.  அவரிடம் இரண்டு எழுத்தாணிகள் இருந்தன. தான் இறப்பதற்கு சில மாதங்களின் முன் ஏட்டுக் குறிப்புகளை காகிதத்தில் எழுதி முடிக்கும் வேலையையும் செய்தார். இப்போ எழுத்தாணிகள் இல்லை. ஏட்டின் பெரும்பான்மையானதும் அவரது பெட்டகத்துள் சரியான கவனிப்பின்றி செல்லரித்துப்போனது. எஞ்சியவற்றை எடுத்து வந்தேன் அவர் நினைவாக. இந்த ஏட்டை தயாரிப்பதிலிருந்து ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதுவரையான வேலைகளில் எனது பிஞ்சுக் கைகள் பட்ட நினைவாக அவற்றை பொத்திவைத்திருக்கிறேன்.

இதன்போதெல்லாம் அவருக்கு ஒத்தாசையாக வாசிப்பு வேலையை நான் செய்தேன். எனது வயதை மீறிய ஆயுர்வேத அறிவை ஊட்டினார். கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஆயுர்வேதப் பாடல்களை மனனஞ் செய்யத் தந்து மற்றவர்களுக்கு முன் பாடிக்காட்டுவதில் பெருமையடைந்தார்.

அவர் ஒரு கடவுள் பக்தராக இருந்தார். எனக்கு அது இளமையில் அற்றுப்போனது. அவர் ஒரு சாத்திரியாராகவும் இருந்தார். எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் போனது. அவரிடம் இடதுசாரிய சிந்தனை எதுவும் இருந்ததில்லை. என்னை அது வந்துசேர்ந்தது. (அப்படியாய் நம்புகிறேன்). ஆனாலும் அவர் என்னிடத்தில்; ஒருவித ஆளுமையை விட்டுச் சென்றதாக எனக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. நேர்மையை கற்றுக்கொடுத்ததாக ஒரு மதிப்பீடு இருக்கிறது. தனக்காக மட்டும் வாழ்வதை அவர் வெறுத்தார் என்றுதான் சொல்வேன்.  எனது ஆளுமையை அவர் உயர்த்தியிருந்தார் என்பதை இப்போ ஆதர்சமாக நான் நினைவுகூர்கிறேன். அவரது மரணம் முந்திக் கொண்டது. நாம் அநாதரவாக விடப்பட்டோம்.

அப்பா இறந்தபின் இளைய மாமா எங்களுடன் இருந்தார். எமக்கெல்லாம் ஒரு பெரும்துணையாக அவர் இருந்தார். எனது படிப்பிற்கு அவர் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார். படித்துவிட்டு வேலையின்றி இருந்த அவர் மெல்ல தோட்டத்துள் இறங்கினார். வீட்டுத் தோட்டத்தில் தொடங்கிய அவரது விவசாயம் வெளித்தோட்டத்துக்குச் சென்று காலப்போக்கில் விசுவமடுவுக்கும் நீண்டுகொண்டது. அவரும் அண்ணனும் விசுவமடுவில் தங்கிவிட்டு வீடு வரும்போதெல்லாம் வெயில் சூட்டில் முதுகுத் தோல் உரிந்திருக்கும். கண்டிப்புடன் அவர் இருந்தார். பயமாக இருக்கும். அதற்காக அவர் அடிப்பதை ஓர் அணுகுமுறையாகக் கைக்கொள்ளவில்லை என்றே நான் ஞாபகப்படுத் முடிகிறது. குழப்படி செய்ததற்காய் அவரிடம் அடிவாங்கிய நாட்கள் சிலதான் என்றதால் அவை மிகுந்த தாக்கத்தை உண்டுபண்ணியது.

ஒரு பரஸ்பர உரையாடலற்ற தன்மை எமது சமூகத்தின் உறவுமுறைகளில் நிலவுவதால் அதன் எல்லைக்குள் நின்று மட்டும் சிந்திக்கும்போது அடித்துத் திருத்துவது என்பதை சமூகம் நிராகரிக்க முடியாமல் திண்டாடுகிறது. இதற்குப் பல ஆசிரியர்கள்கூட விதிவிலக்கின்றி இருக்கின்றனர். ஒரு அதிகாரப் படிநிலை தொழில் ரீதியாக (அதாவது சாதி ரீதியாக) மட்டுமன்றி குடும்ப உறவுக்குள்ளும் பதவிகளுக்குள்ளும் ஆசிரிய மாணவர் உறவுக்குள்ளும் இயங்குவது வன்முறையை ஓர் ஆயுதமாகக் கொள்ள வைக்கிறது. அதனால் அதற்கான சமூக அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. நான் ஒன்பது வயதாயிருக்கும்போது என நினைக்கிறேன், எனது உச்சந் தலையில் தலைமை ஆசிரியர் துவரம் தடியால் அடித்தபோது மயங்கி விழுந்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. சில ஆண்டுகளின் முன்னர் தீராத தலைவலியால் நான் சிலகாலம் அவதிப்பட்டபோது அதற்கான காரணத்தில் ஒன்றாக இந்தச் சம்பவம் இருக்கலாம் என சீன மருத்துவர் என்னுடன் உரையாடியிருந்தார்.

ஏழ்மையை வெற்றிகொள்ளும் ஆயுதமாக கல்வியே என்னிடம் கைவசமிருந்தது. மிகக் கடுமையாக படித்து நான் பல்கலைக் கழகம் போயிருந்தபோது அம்மாவின் உழைப்புக்கான பரிசாக அதை நான் நினைத்தேன். 83 கலவரம் இந்தப் பரிசைப் பறித்துக்கொண்டது. அரைகுறையில் எனது படிப்பு முடிவடைந்தது. எனது படிப்புக்கான செலவு என்னை அச்சுறுத்தியிருந்தபோது, படிப்படியாக என் அம்மா அணிந்திருந்த ஒருசில நகைகளும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. இந்த இழப்புகளுக்கு நான் அம்மாவுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தேன். எனக்கு பிடல் கஸ்ரோவும் சேகுவேராவும் அறிமுகமானார்கள். .

ஒருநாள் சுவாமிப் படத்தின் முன்னால் அழுதுகொண்டிருந்தாள் அம்மா. கைகள் கும்பிட்டபடி துவண்டு போயிருந்தாள். அன்று முழுதாய் இயக்க அலுவலில் அலைந்துவிட்டு வந்திருந்தேன். “நீயும் இயக்கத்துக்குப் போறியாம் மோனை. எல்லாரும் கதைக்குதுகள். வீட்டிலை எவ்வளவு பொறுப்பு இருக்கடா. எங்களை நடுத்தெருவிலை விட்டிட்டுப் போயிடாதை மோனை…” என்றழுதாள். வார்த்தைகள் கண்ணீரில் நனைந்து வந்தன. அம்மாவின் அழுகை கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் போய்விட்டது.

“நான் போகயில்லை” என்றபோது, “அப்பிடியெண்டு நீ எனக்கு மேலை சத்தியம் பண்ணு.” என கேட்டா அம்மா. சமாளிக்க முடியவில்லை.
“நீ பெத்த பிள்ளையிலை நம்பிக்கை இல்லையெண்டால் சொல்லு. நான் சத்தியம் பண்ணுறன்” என்றேன். அம்மாவின் கை மெல்ல கீழிறங்கியது. அன்றே நான் புறப்படும் நாளாகவும் இருந்தது. நான் சொல்லாமல் கொள்ளாமல் (shopping bag உடன்) புதிய பயணத்தைத் தொடங்கினேன்.

அந்த கிடுக்கிப் பதில் எனது அம்மாவை பின்னர் மிக மோசமாகப் பாதித்திருக்கும் என்றே நினைக்கிறேன். இருந்தும் எனது கனவுகள் பொய்த்துப்போய் சோர்வுடனும் அச்சத்துடனும் எதிர்காலம் பற்றிய கேள்விகளுடனும் நான் திரும்பி வந்தபோதும் அம்மா எல்லாவற்றையும் மன்னித்து கட்டியணைத்தா. எந்த முகத்துடன் அம்மாவை நான் பார்ப்பது என்ற எனது தயக்கத்தையும் அம்மாவே கழுவிவிட்டா.

அகதியாய் அடுத்த பயணம் தொடங்கியது.சுமார் 17 வருடங்களாக அம்மாவை நான் சந்தித்துக் கொள்ள முடியாமல் எனது புகலிட வாழ்வு நகர்ந்தது. மீண்டும் எட்டு வருடங்களின்பின் அம்மாவைக் காணமுடிந்தது. இது நடந்து 4 மாதங்களின் பின் அம்மாவை வெறும் உடலமாகப் பார்க்க நேர்ந்திருக்கிறது. கடைசியாக எமது விடுமுறை நாட்களை அம்மாவுடன் கழித்துவிட்டு நாம் போகும்போது இனி நான் அம்மாவைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வலுவாகவே எழுந்திருந்தது. காரணம் எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அம்மாவை அணைத்துக் கொண்டேன். அம்மா வீட்டிற்கு முன்புறம் கதிரையில் அமர்ந்திருந்தா. மிகவும் சோர்வாக இருந்தா. எமது பயணத்தினை கருத்திற்கொண்டு தான் சுகவீனமுற்றிருந்ததை அவ வெளிக்காட்டாமல் இருந்தது பின்னர் தெரியவந்தது. பயணத்தின் இடையில் அம்மா மிகவும் சுகவீனமுற்றிருந்த செய்திகேட்டு திரும்பவும் வீடு வருவதா இல்லையா என நாம் குழம்பிக் கொண்டிருந்தபோதுகூட ~~எனக்கு ஒன்றுமில்லை, நீ சுகமாகப் போய்வா மோனை|| என்று தொலைபேசியில் சொன்னா.

“நான் செத்தாப்பிறகு நீ வரவா போறாய்…” என்ற அம்மாவின் நாசூக்கான கேள்விக்கு நான் மௌனமாகவே இருந்துவிட்டேன். நிச்சயம் வருவேன் என ஏன் நான் பதிலளிக்கவில்லை என்ற கேள்வியை நான் என்னிடமே இப்போ கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்தமான முட்டைக் கோப்பி தயாரித்துத் தந்தா அம்மா. ஒருமுறை முட்டை பொரித்தும்கூடத் தந்தா. குசினிக்குள் அவ அதைத் தயாரிக்கும்வரை அருகில் நின்றேன். அம்மாவின் நிலை அப்படியாயிருந்ததால் அடுப்பு நெருப்பு என்னை எச்சரிக்கைப்படுத்தியிருந்தது. அம்மா இரண்டுமுறை உப்பைப் போட்டதையும் கண்டேன். உப்புக் கரித்த அந்த முட்டையை நாம் நன்றாக இருப்பதாக மெய்ச்சியடி சாப்பிட்டோம்.

amma-1

எண்பத்தியாறு வயதிலும் அம்மா எமது சிறுவயது சம்பவங்களை எனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தபோது எனது பிள்ளைகள் அதிசயமாகப் பார்த்தார்கள். இந்த வயதில் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்த முடிவது என்பது பெரிய விடயம். இது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வயது முதிர்ந்த காலங்களில் முதியவர்களின் மூளைநரம்புகள் ஒழுங்காகச் செயற்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அவர்கள் பல சந்தர்ப்பங்களில் குழந்தைத்தனமாக நடந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவர்கள் தமது வார்த்தைகளை பின்விளைவுகள் பற்றிச் சிந்தித்து எந்த வடிகட்டல்களுக்கு ஊடாகவும் வெளிவிடுபவர்களல்ல. அதனால் குழந்தையாகின்றனர்.

இந்த மேற்கு உலகுகளில் வயோதிபர்களை பராமரிக்கும் முறைகள், அவர்களுடன் உரையாடும் முறைகள், புரிதல்கள் எல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கிறது என்று துணிந்து சொல்ல முடியும். எமக்கு குழந்தைகள் பற்றிய வயோதிபர் பற்றிய உளவியல் அறிவு போதிக்கப் படுவதுமில்லை, வளர்த்தெடுக்கப் படுவதுமில்லை. நாம் சென்ரிமென்ருக்கூடாக எல்லாவற்றையும் கடக்க முனைகிறோம்.

இங்கெல்லாம் அவர்கள் வயோதிபர் இல்லங்களில் கூட்டாகவோ அல்லது வீடுகளில் தனித்தனியாகவோ அன்போடு பராமரிக்கப்படுகின்றனர். அவர்களை சந்தோசப்படுத்துவதற்கான தனியான கொண்டாட்டங்கள், சந்திப்புகள், சுற்றுலாக்கள் எல்லாம் ஏற்படுத்தப்படுகின்றன. எமது முதியவர்களுக்கோ ஊனுருகி உடல்வதைத்து கோவில்குளத்தைச் சுற்றி இயங்குவதும் சோகப் புராணம் பாடுவதையும் தவிர அவர்களுக்கான உலகம் விரிந்துகொடுப்பதில்லை.

அப்பா இல்லாததால் அம்மாவுக்கான உலகம் எமது குடும்பத்தில் மையம்கொண்டிருந்தது. அதேநேரம் புலம்பெயர்ந்து இருந்த எம்மைப் பற்றியும் சிந்தித்தபடியே இருந்தா. நாட்டு நிலைமையால் தொலைபேசி மூலமாவது தொடர்புகொள்ள முடியாமல் இருந்த காலங்கள் சஞ்சலமாகவே இருக்கும். அம்மாவை நாம் ஒருமுறையாவது சந்திக்கக் கிடைக்குமா என்றிருந்த ஏக்கத்தின்மேல் ஓர் ஒளிக்கீற்று விழுந்தது. அப்போ சமாதான காலமென வர்ணிக்கப்பட்ட காலம். பல வருடங்களின் பின் அம்மாவை நான் -எனது மனைவி பிள்ளைகளுடன்- சந்திக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்தது. நாம் போய் இறங்கியபோது தனது முதுமையைத் தூர எறிந்துவிட்டு அம்மா எம்மிடம் ஓடிவந்தது பளிச்சென ஞாபகத்துக்கு வருகிறது. கண்ணீர்விட்டு அழுதேன். அம்மாவின் தொடுகையில் எனது 17 வருட கால இடைவெளி எற்படுத்தியிருந்த ஏக்கம் கரைந்துபோனது. எனது குழந்தைகள் மட்டுமல்ல மனைவியும் அம்மாவின் கற்பனை உருவத்தை சரிசெய்தார்கள். உணர்ச்சிகொண்டு அழுதார்கள். இது நடந்தது 2002 இல். கடைசியாக இந்த ஆண்டு ஆடி மாத விடுமுறை அம்மாவுடன் கழித்த இறுதிக் காலங்களாக அமைந்துவிட்டன.

தனது வாழ்காலத்தில் ஒருநாள்கூட வைத்தியசாலைக்குச் செல்லாத அம்மாவை கடைசி ஒருமுறையாவது போய்வா என்பதுபோல காலம் எலும்பு முறிவோடு அனுப்பிவைத்தது. இதுவே எனது அப்பாவுக்கும் நடந்திருந்தது. அப்பாவை பாரிசவாதம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்திருந்தது. மார்கழி மாதம் இருவரினதும் மரணங்களால் எழுதப்பட்டுவிட்டது எமக்கு. ஒவ்வொரு புதிய ஆண்டும் இந்தப் பக்கத்தை மூடியபடி புதிய ஆண்டுக்குள் நகர்ந்தாலும், நினைவுகளை எடுத்துச் சென்றபடியே நாம் நகர்வோம். மிக நீண்ட அத்தியாயத்தை மூடிவைத்துவிட்டுச் செல்கிறாள் என் அம்மா. இன்னும் குறைந்தது ஐந்தாறு வருடமாவது அம்மா இருப்பா என நான் கடைசியாகச் சந்தித்தபோது சொல்லிய வார்த்தைகளை அவள் போட்டுடைத்துவிட்டுச் சென்றாள்.

–  ரவி

One thought on “அம்மாவும் அப்பாவும் நானும்”

  1. அருமையான பதிவு வாசிக்கும் போது என் கண்கள் பணிக்கக் ஆரம்பித்தன. அம்மாவுக்கு நிகரான தெய்வம் வேறெதுவுமில்லை இந்த உலகில்!

    //அவர் ஒரு கடவுள் பக்தராக இருந்தார். எனக்கு அது இளமையில் அற்றுப்போனது. அவர் ஒரு சாத்திரியாராகவும் இருந்தார். எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் போனது. அவரிடம் இடதுசாரிய சிந்தனை எதுவும் இருந்ததில்லை. என்னை அது வந்துசேர்ந்தது. (அப்படியாய் நம்புகிறேன்). ஆனாலும் அவர் என்னிடத்தில்; ஒருவித ஆளுமையை விட்டுச் சென்றதாக எனக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. நேர்மையை கற்றுக்கொடுத்ததாக ஒரு மதிப்பீடு இருக்கிறது. தனக்காக மட்டும் வாழ்வதை அவர் வெறுத்தார் என்றுதான் சொல்வேன். எனது ஆளுமையை அவர் உயர்த்தியிருந்தார் என்பதை இப்போ ஆதர்சமாக நான் நினைவுகூர்கிறேன். அவரது மரணம் முந்திக் கொண்டது. நாம் அநாதரவாக விடப்பட்டோம்.//

    அபார எழுத்தாற்றல் மூலம் கதைகளை எடுத்தியம்பும் தங்களின் தனிகரற்ற பாங்கு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.மேலும் என் வாசிப்பு ஆர்வத்தை அது அதிகரிக்கிறது.
    தங்கள் எழுத்துப்பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: