போய்வா அம்மா போய்வா

பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!

முதுமையும் குழந்தைமையும்
சந்திக்கும் புள்ளியில் நீ நின்றதை
அறியாமை
அந்நியமாய் எதிர்கொண்டதால் நீ
மனம்நொந்த கணங்கள் எனக்கு
முக்கியமானவை.
மறவேன், நான் மறவேன்
உனது இறப்பின் இறுதிக் காலங்களையும் அவை
பின்தொடர்ந்ததை என்னவென்பது!

வாழ்வு எல்லா இடறல்களையும்
தாண்டிபடி நகர்கிறது.
இழந்தவைகளை இனி
என்னால் மீட்க முடியாது
இப்போ உன்னையும்!
நட்புகளும் உறவுகளும் வருவதும் போவதுமாக
முரண்களில் சிதறுவதாக,
தப்பிப்பிழைத்தவை கைக்கெட்டாதவையாகவும்கூட
போய்விடுகிறது
அம்மா, நீயோ
எப்போதும் நீயாகவே இருந்தாய்.

ஆனாலும் பார் அம்மா,
வாழ்வின் சுமைகளை நீ தாங்குவதும்;
களைப்பதுமாய் இருந்த பொழுதுகள் என்
சிறுபராய மனதில்
ஆணியால் அடிக்கப்பட்டுவிட்டன.
பஞ்சத்தால் ஓர் ஆட்சிக் காலம்
பரீட்சித்துப் பார்க்கப்பட்டபோது
வாழ்க்கையை நீ இழுத்துச் சென்ற
தடங்களை மறத்தல்கூடுமோ!

உனது மடியை
துயர் கரைக்கும் தலையணையாக நான்
உணராத பொழுதுகளே இல்லை.
எனைத் தாங்கும்
என் கவிதை தனித்துப் போய்விட்டது.
கண்ணீர் எனது துயரத்தைக் கரைத்தழிய
தனிமை சுகம் தருகிறது.
போய் வா அம்மா
போய் வா,
நாற்பது வருடங்கள் நீ
தந்தையாய் தாயாய் ஆற்றிய
பாத்திரம் மகத்தானது.
என் தந்தையின் மறைவை
தொலைதூரமாய் நீ கடந்துவந்தும்
நினைவுகளை காவிவந்தாய்.
கண்ணீராலன்றி
வைராக்கியங்களினால் கட்டியெழுப்பினாய் உன்
இருப்பை எமக்காய்.
நாம் வாழ்ந்தோம்
நாமாக வாழ்ந்தோம்
படித்தோம், குடும்பமாய் விரிந்தோம்
அடிமரமாய் நின்றாய்.
ஆலமரமாய் நீ விருட்சித்ததால்;
பரப்பிய விழுதுகளில்
நாம் எழுந்தோம்

ஆனாலும் பார் அம்மா
உனது விழுதுகளும் அடிமரமாய், பின்
சிதைவுகளாய்ப் போமென்பதை நான்
மறவேன், ஒருபோதும் மறவேன்
மறந்தேனெனின் நாளை நான் தனிமரமாய்
உணர சபிக்கப்படுதல்கூடும்.

கண்காணா
அன்றி என் புலனுணரா கடவுளர்க்காய்
ஊனுருகி உருவழியும்
நிலையில் நான் இல்லை.
உனக்காய் நான் வடிக்கும்
சிறுதுளி கண்ணீரும் என்
மனத் தீபமும் உனை
நினைவில் வரைந்துகொண்டேயிருக்கும்.
நீ வாழ்கிறாய்
என்னுடன் நீ வாழ்கிறாய்

சாமப் பொழுதுகளில்
கைவிளக்கு வெளிச்சத்தில் நானும்
புத்தகங்களுமாய் இருந்தபோதெல்லாம்
அருகில் அமர்ந்திருப்பாய நீ.
ஒரு தேநீரையோ பழங் கஞ்சியையோ
அல்லது முட்டைக் கோப்பியையோ தன்னும்
தந்துவிடுதல் உன் பணிவிடையாய்
எண்ணிக்; காத்துக் கிடப்பாய்
சுவரில் சாய்ந்து நீ
நித்திரையில் தியருறுவதும் விழிப்பதுமாய்
அசைந்த அந்தக் கணங்களை
நான் மறவேன்
ஒருபோதும் மறவேன்.

மழைக்கால ஒழுக்குகளை ஏந்திய
பாத்திரங்களுக்குத் தெரியும்
இக் கதைகள்.
எண்ணெய் வற்றி
தீபம் கருகிய
கைவிளக்குக்கும் கூடத் தெரியும் இவை.

இலக்குத் தவறி வீழ்ந்தேன்தான் நான்.
ஆனாலும்
மீண்டும் மீண்டுமாய் எழும்
பீனிக்ஸ் பறவையானேன், நீ
ஊட்டிய ஆளுமையில்.

பல்லாயிரம் மைல் தூரமும்
ஒரு கடப்புத் தூரமாய்; கரைந்துபோனது பார், உன்
பிரிவுச் செய்திகேட்டு நான்
ஓடோடி வந்தபோது.
இன்றோ
இன்னுமின்னமுமாய் நீண்டுபோய்க் கிடக்கிறது
இந்தத் தூரம்
வேலை என்ற பெயரில்
எனைப் பிழி;ந்துகொண்டிருக்கும் ஆலை
என் வெறுப்பிலிருந்து விலகிக் கொண்டது
நான் இங்கு திரும்பி வருகையில்.

போய்வா அம்மா போய்வா
ஒரு தொகை நினைவுகளை
புரட்டியபடி உனை நான்
வாசித்துக்கொண்டிருப்பேன்,
ஓராயிரம் நூல்களாய் விரிந்து
கிடக்கிறாய் நீயென் மனவகத்தில்.
போய்வா அம்மா போய்வா!
இன்னொருமுறை நீ என் அம்மாவாதல்கூடுமோ என
ஏங்க அறிவு அனுமதிப்பதாயில்லை
என்றபோதும் நான் ஆசைப்படுகிறேன் அம்மா
உனைவிட்டுத்
தொலைதூரம் பிரிந்திருந்த காலத்தை நிரப்பிவிட!

உனது மகன்
ரவி

(அம்மாவின் கல்வெட்டுக்காக எழுதியது. 28.12.2010)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: