கிளிநொச்சியின் வீழ்ச்சி எதன் எழுச்சி?

1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை… பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன.

இராணுவ வாகனங்கள் பெருவீதிகளை சூழ்ந்தபோது செய்தி வேகமாகப் பரவியது. நித்திரையால் எழுந்து ஓடிக்கொண்டிருந்தோம். அருகில் சக இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கையில் பிஸ்ரல்களுடன் எங்களுடன் சேர்ந்து ஓடினார்கள். ~~என்னடா நாங்கள்தான் ஒண்டுமில்லாமல் ஓடுறம். நீங்கள் ஆயுதத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறியள்|| என்றேன் நக்கலாக. பலமாகச் சிரித்த அவன் ~~ஒரு பேச்சுக்கு தமிழீழம் கேட்டால் அதுக்கு இப்பிடியா (ஜே.ஆர் ஜெயவர்த்தனா) அடிக்கிறது??|| என்றபடி ஓடிக்கொண்டிருந்தான்.

சுற்றிவளைப்பு படிப்படியாக வியூகம் கொண்டு இப்போ போராக இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறுவது போன்று கனத்திருக்கிறது. கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி ஏற்படுத்தியுள்ள உணர்வுகள் அதிர்ச்சி ஏமாற்றம் மகிழ்ச்சி கவலை உற்சாகம் என இலங்கை மக்கள் புலம்பெயர் தமிழர்கள் தமிழகம்… என தாக்கம் செலுத்தியுள்ள நேரம் இது. இரு நாடுகளுக்கு இடையிலான போரொன்றில் வெற்றிபெற்றது போன்ற உணர்வலைகள் ஆட்சியதிகார நிறுவனங்கள் தொடக்கம் ஆட்டோ வரையில் தேசியக்கொடியை உயர்த்தியிருக்கிறது. போரை எதிர்த்து குரல் கொடுத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தாம் செய்த கேக்கின் மேல் தற்போதைய அரசு ஐசிங் செய்திருக்கிறது அவ்வளவுதான் என தனது உண்மை முகத்தை திறந்து காட்டியிருக்கிறது. கருணாவை புலியிலிருந்து பிரித்தெடுத்தது தமது ராஐதந்திரம் எனவும் அதனாலேயே புலிகளின் வீழ்ச்சி நிகழ்ந்தது என்பதும் அவர்களது வாதம். ஆக ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியினதும் இனப்பிரச்சினைத் தீர்வு அல்லது வழிமுறை அல்லது எதுவென்பது மீண்டும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

புலிகளின் அழிவு என்பது தமிழ்மக்களை அரசு வென்றெடுப்பது. ராஐபக்ச சிங்களத்தில் உச்சரிப்பை எழுதி தமிழ்பேசும் விளையாட்டு தமிழர்களை வென்றெடுக்காது. அவர்களுக்கு அரசுமீது நம்பிக்கை ஏற்படுத்துவது என்பது வரலாறு சார்ந்த கறைகளை கழுவுவது ஆகும். இது செயற்பாடுகளோடு தொடர்புடையது. வீதிகளைப் புனரமைத்து அரசியல்வாதிகளுக்கு வழங்கிய சொகுசுக் கார்களை அலுங்காமல் குலுங்காமல் ஓட வைக்கும் அபிவிருத்தியை இது குறிப்பதில்லை. போர் உக்கிரமடைந்திருந்த காலத்தில் இந்தப் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டிலுமிருந்து பல அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தவர்கள். இனி அவ்வாறு தெரிவிப்பார்களோ என்பது சந்தேகம்தான். தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்ததில்லை என அதே வாயால் வாதிட அவர்கள் தயங்கவும் மாட்டார்கள்.

இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கும் மனித அழிவுகள் தீவு முழுவதும் பரப்பிவிடப்பட்டிருக்கிறது. 2001 ஆண்டுவரை அதாவது போர்நிறுத்த கால ஆரம்பம் வரை 20,000க ;குக் கிட்ட இராணுவத்தினரதும் அதேயளவு புலிகளினதும் இறப்புகள், ஒரு இலட்சமளவிலாக மக்களின் இறப்புகள் எல்லாத்தரப்பிலும் நிகழ்ந்த அவயங்களை இழந்து முடமாகிய ஐPவிகள் என பெரிய கணக்கெடுப்பே இருந்தது. போர்நிறுத்தம் முறிக்கப்பட்டு நிகழ்ந்த கிழக்குப்போர் முடிந்து இப்போதைய வடக்குப் போர் என உக்கிரமாக நடந்த போர்களின் இழப்புகள் அதிர்ச்சிதரத்தக்கவையாக இருக்கும் என நம்பலாம். இதையும்விட வெள்ளைவான் உயிர்க்களவு, பிஸ்டல் கொலைகள் என கொலையை ஒரு மரம்வெட்டிச்சாய்ப்பதான உணர்ச்சியோடு கடந்து செல்ல இலங்கைச் சமூகத்தை அது பழக்கிவிட்டுமிருக்கிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பது அச்சம் தருகிறது.

யாழில் நடந்த யுத்தத்தின்போதும் கிழக்கில் நடந்த யுத்தத்தின்போதும் ஓரளவுக்கு யுத்த அழிவுகள் வெளிக்கொணரப்பட்டதுபோல வன்னிக் களமுனை இருக்கவில்லை. உதவி நிறுவனங்கள் அவலப்பட்ட இந்த மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளை செய்வதிலிருந்தும், அவர்களிடமிருந்து பெறக்கூடிய ஒரு ஆத்ம பலத்தையும்கூட இலங்கை அரசு உருவி எடுத்தது மிகப் பெரிய கொடுமை. சர்வதேச விதிகளுக்கு அமையக்கூட நடக்காத இந்த அரசு செய்தியாளர்களை உட்செல்ல தடைவிதித்தும் இருந்தது. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து தனது தரப்பிலிருந்துகூட இழப்புகள் பற்றிய விபரங்களை அது மூடிமறைத்தபடிதான் இருக்கிறது. பெருந்தொகையான இராணுவம் புலிகள் உயிரிழந்துள்ளார்கள் என்ற பொத்தாம் பொதுவான தகவலையே இப்போதைக்கு அது தந்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து பெற்ற ஆயுதங்கள், ஆலோசனைகள், நேரடித் தலையீடுகள், மறைமுகத் தலையீடுகள் என எல்லாவற்றையும் கூட்டிவாரியபடி இந்த யுத்த அலை எழுந்தது. அது காவுகொண்டிருப்பது இலங்கைக் குடிமக்களைத்தான். இந்த மேற்சொன்ன நாடுகளை அது பாதிக்கவே இல்லை. மாறாக அவை ஆயுத விற்பனையில் இலங்கை மக்களின் கோவணத்தையும் உருவிக்கொண்டிருக்கின்றன. அதுவும் இன்றைய சர்வதேச பொருளாதார சுனாமிக்குள் அகப்பட்டபடி இந்த இழப்புகளை இலங்கை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறது என்பது எதிர்காலத்துக்கு உரிய சவால்.

இந்த ஒன்றரைவருட கைகோர்ப்பு யுத்தத்திற்கு எதிராக புலிகள் தனியாக நின்று பிடித்தது இராணுவ ரீதியில் புலிகளின் வல்லமையை வெளிக்கொணர்ந்துதான் இருக்கிறது. இதையும்விட பத்து மடங்கு வல்லமையை புலிகள் காட்டினாலும் தோல்விகள் எழுதப்படும் என்பது இதிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு பாடமாக புலிகள் உணர வேண்டும். மக்களைச் சார்ந்திருக்காதவரை இது திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும். உண்மையில் இந்தத் தோல்வியின் ஆரம்பம் 80 களின் நடுப்பகுதியில் மாற்று இயக்கங்களை அழித்தொழித்ததிலிருந்து ஆரம்பமாகியது. இதை அப்போதே பல இடதுசாரியச் சிந்தனையாளர்கள் சொல்லிவைத்தனர். அதன் தொடர்ச்சி ஐனநாயக மறுப்புகளையும் அந்நியப்படுத்தல்களையும் வழங்கியதோடு ஏகப்பிரதிநிதித்துவ வாளையும் உருவிநின்ற புலிகளை சமூகத்திடம் பரிசளித்தது. அரசியல் வெற்றிக்கான வழிமுறையாக ஆயுதம் ஏந்துவது என்ற உச்சரிப்பு மாறி இராணுவ வெற்றிகளுக்காக அரசியல் என்ற நிலை பேணப்பட்டது. அதனால் அது சமூகத்துக்கு எதிராக இலகுவாக நீட்டப்பட ஏதுவாயிற்று.

பேச்சுவார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தாத தவறு புலிகள் சார்ந்தே அதிகமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் ஈட்டியிருந்த இராணுவ வெற்றிகளை பேச்சுவார்த்தைகளில் தாங்கள் ஈட்டக்கூடிய அரசியல் வெற்றியின் எல்லைக்கு நகர்த்த அவர்கள் முற்பட்டது கிடையாது. அடைந்தால் மகாதேவி அன்றேல் மரணதேவி என்றபடி தமிழீழத்துக்கும் சயனைட்டுக்கும் இடையில் போராட்டத்தை தொங்கவிட்டிருந்தார்கள். முரண்பட்ட சக்திகள் ஒன்றாக பேச்சுவார்த்தைக்கு வருவது என்பதே பரஸ்பர விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில்தான் சாத்தியமாகிறது. இதை கவனத்தில் எடுத்து வார்த்தைகளைத் தேர்வுசெய்யும் வல்லமையைக்கூட – ஊடகங்களிடம் – காட்டும் வல்லமையற்றிருந்தனர்அவர்கள். சுயதம்பட்டமே மேலோங்கியிருந்தது. தொடங்கும்போதே நம்பிக்கையீனமாகப் பேசுவதை ஒரு அரசியல் இராசதந்திர ரீதியில்கூட நிறுத்திவைக்கவில்லை. போர்நிறுத்த காலத்தில் முகமாலையில் இராணுவ உயரதியாரிகளும் விடுதலைப் புலிகளும் போர்நிறுத்த மீறல்கள் சந்பந்தமாகக் கூடும் கூட்டங்கள் நடைபெற்ற காலத்தில் அப்போதைய தளபதி கருணா ஊடகமொன்றுக்கு பேட்டியளிக்கும்போது ~~அதென்ன…நாங்களும் போறம்… அவங்களும் வாறாங்கள்… நல்ல சாப்பாடு… கதைக்கிறம்… போறம்… வாறம்… ஒண்டும் நடக்கிறதாத் தெரியயில்லை. இப்பிடித்தான் போகுமெண்டால் இந்தக் கூட்டம் கூடுறதிலை பிரயோசனமில்லை…|| என்றார். மதியுரைஞர் பாலசிங்கமோ சந்திரிகாவுக்கு தன்னிலை ஒரு காதல் என்றார். பாலியல் பகிடிகளுடன் விசிலடிகளைக் கிளப்பினார். இப்படியே பேச்சுவார்த்தைகளை உயர்ந்தபட்ச அரசியல் தளத்தில்வைத்து நகர்த்த முடியாதவர்களாகவே புலிகள் இருந்தார்கள். அரசு என்னத்தை முன்வைக்கிறது பார்ப்போம் என்ற வாதத்தை அடிக்கடி சொல்லித்திரிந்தார்கள்.

ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட தரப்பு என்ற வகையிலும், இராணுவ வெற்றிகளை உபயோகிப்பது என்ற தளத்திலும் புலிகளே உருப்படியான தி;ட்டங்களுடன் மேசைக்குப் போயிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. தமிழீழத்தைக் கைவிடுவது என்பது ஒரு தன்மானப் பிரச்சினையாகவே அவர்களுக்குப் பட்டது. இந்த சமூகத்தில் இந்தப் போராட்ட நிலைமைகளுக்குள் உருவாகிவரக்குடிய முற்போக்கு எண்ணம் கொண்டவர்களையெல்லாம் அமைப்பாகவும் தனித்தனியாகவும் கொலைசெய்து பெற்ற பெறுபேறுகள்தான் இவை. யுத்தநிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தைகளை பாவிப்பதைவிட தம்மை இராணுவ ரீதியில் பலமாக்குவதிலேயே புலிகள் முனைப்பாயிருந்தனர். இரண்டையும் சமநிலைக்குத் தன்னும் எடுத்துச் செல்லும் அரசியல் அவர்களிடம் இருக்கவில்லை.

அதையும் விட வியாபகமாக எழுந்த இரு சந்தர்ப்பங்கள் இருந்தன. ஒன்று ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட்டபின் ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றது சுனாமி ஏற்படுத்திக்கொடுத்த சூழல். இரண்டையுமே புலிகள் தவற விட்டார்கள். ஜெனீவாப் பேச்சுவார்த்தையின்போது புலிகள் ஒரு இராணுவச் சமநிலைத் தோற்றத்தோடு உட்கார்ந்து பேசும் சூழல் இருந்தது. அத்தோடு அதிகாரப் பரவலாக்கல் முறைமைகொண்ட அரசியல் அமைப்புக்குப் பரிச்சயப்பட்ட சுவிஸ் அரசு இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க, ஆலோசனைகள் வழங்க முன்வந்தது. அதுவும் இடதுசாரிச் சிந்தனையுடைய புத்திஜீவி திருமதி. கார்ள் மிரே அவர்கள் இதில் பங்கெடுக்கத் தயாராக இருந்தார். (இவர்தான் பின்லாடனுடனும் சந்தித்துப் பேசத் தயார் என்று சொன்னவர். அதனால் எழுந்த அமெரிக்காவின் சீற்றத்தையும் புறந்தள்ளியவர்). மற்றையது சுனாமி. உண்மையில் அதிகார மட்டத்திலிருந்து கீழ்மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் முடிவுகளைவிட கீழ் மட்டத்திலிருந்து அதாவது மக்களிடமிருந்து அதிகார மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் முடிவுகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவை. அதை அதிகாரம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கும். அதற்கான சூழலை சுனாமி உருவாக்கியிருந்தது. அதை சுனாமி மீட்புப் பணிக்குள் மட்டும் குறுக்கியாயிற்று. இந்தோனேசியாவில ஆச்சே போராளிகளும் அரசும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம்.

சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேபாளப் புரட்சியாளர்களும் ஐரிஸ் புரட்சியாளர்களும் செயற்பட்ட விதங்களிலிருந்துகூட புலிகள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தப் புரட்சிகள் போராட்டங்கள் எல்லாம் நிறைவுக்கு வந்துவிட்டதாக அவை அர்த்தப்படவில்லை என்பதை அந்தப் புரட்சியின் நாயகர்களே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர். அவர்கள் அடைந்திருக்கும் அரசியல் வெற்றி முக்கியமானது. புலிகளின் அரசியல் நகர்த்தல் இவைபோன்று எங்கிலுமே வெளிப்படவில்லை.

இதன் கருத்து அரசு இதயசுத்தியுடன் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வந்தது என்றல்ல. அவர்களை வரவைத்த நிலைமை சம்பந்தப்பட்டது. அதை உருவாக்கியவர்கள் என்ற பலத்தை புலிகள் சரியாகப் பயன்படுத்தவி;ல்லை என்பதே. அதேநேரம் இந்த யுத்தமும் பேரழிவும் புலிகளின் இருப்பை முற்றாக அழித்துவிடும் என்று மாயை கொள்ளத் தேவையில்லை. தமிழ்மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் தளங்களை அது அழித்துவிடவில்லை. மாறாக இன்னும் ஆழப்படுத்தியிருக்கிறது. அதாவது புலிகளின் இருப்பை அது தக்கவைத்தபடிதான் இருக்கிறது. இதை அரசியல் ரீதியில் இல்லாமலாக்குவதே பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் ஒரு நேர்மையான அரசுக்கு முன்நிபந்தனையாகிறது. மாறாக புலிகளையும் தமிழ்மக்களையும் பிரித்துவைத்துப் பேசும் அரசியலை, புலிகளையும் மக்களையும் சேர்த்து வைத்துத் தாக்கும் யுத்தம் இல்லாதொழித்துவிடுகிறது. இதனால் யுத்தத்தை எதிர்ப்பது அரசியல் பாதைக்கு முன்நிபந்தனையாகிறது. இதை ~ஜனநாயக நீரோட்டத்துக்கு| வந்த டக்ளஸ், பிள்ளையான், கருணா மட்டுமல்ல, கடிதங்கள் மட்டுமே எழுதி சமாதானத்துக்கான பரிசைப் பெற்ற ஆனந்தசங்கரியிடமும் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

யுத்தத்தை புலியெதிர்ப்பாளர்கள் ஆதரித்தது ஒருவித பழிவாங்கும் உணர்வு அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பொதுப்புத்தி சார்ந்தது என்று கொள்ளமுடியும். அதனாலேயே ஒடுக்குமுறையை நிகழ்த்திய அரசுடன் கூட்டுச் சேர்வதிலிருந்து பிசாசுடனாவது (அமெரிக்காவாக இருக்கலாம்) கூட்டுச் சேர்ந்தாவது புலியழிப்பு நிகழ்வதை ஆதரித்து நின்றவர்களும் உளர். குறைந்தபட்சம் தலிபான்கள் மீதான அமெரிக்காவின் அழித்தொழிப்பு படும் பாட்டையோ, ஈராக்கில் சர்வவல்லமை படைத்த அமெரிக்க இராணுவத்தின் ஆப்பிழுத்த குரங்கு நிலையையோ, அதுக்கும் மேலாக அங்கெல்லாம் மக்களின் பேரழிவுகளையோ சந்தர்ப்பவாதமாக ஒரு பக்கத்தில் தூக்கிவைத்துவிட்டு புலியழிப்புக்கு ஆதரவு தெரிவித்தார்கள் புலியெதிர்ப்பாளர்கள். அரசைச் சார்ந்துதான் எதையும் சாதிக்கலாம் என்று சரணடைந்தார்கள். மாகாணசபைக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியைத்தன்னும் பெற்றுக்கொள்ளாமல் சென்றியில் நிற்பதுபோல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நின்றார்கள். யாழ்மேலாதிக்கத்தின் பெயரால் இந்த மௌன அரசியலை பல புகலிட புத்திஜீவிகள் கேள்விக்குட்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஆதரித்தார்கள்.

தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் மலையகத் தலைவர்கள் எல்லாம் அரசுடன் சேர்ந்துண்டு மக்களை உரிமைகளற்ற பஞ்சைப் பராரிகளாக ஆக்கிய வரலாறு ஒன்றும் குறுகிய காலங்களைக் கொண்டதல்ல. இன்றுகூட மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கின் முதலமைச்சர் சொல்லவர, அது தேவையில்லை என்றபடி ராஜபக்சவின் சால்வையைச் சரிசெய்கிறார் கருணா. தமிழகக் கட்சிகளுக்கும் தமிழக நடிகர்களுக்கும் -நீர்த்துப்போன இயக்க அறிக்கைச்; சொல்லாடல்களுடன்- டக்ளஸை கடிதம் எழுத வைக்கிறார் ராஜபக்ச. போராட்ட இயக்கங்களில் பார்த்த இவர்களையெல்லாம் இந்தக் கோலத்தில் பார்ப்பதும் ஒருவகையில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஜேவிபி போன்றவற்றை மட்டுமன்றி கிழக்கின் விடிவெள்ளிகளையும் பிளவுபடுத்தி குடும்ப ஆட்சி நடத்துவது என்றுமட்டுமில்லாமல் அகதி நிறுவனங்கள்மீதான சர்வதேச விதிமுறைகளைக்கூட மீறி தன்னிச்சையாகச் செயற்படும் ராஜபக்சவைச் சார்ந்து தமிழ் மக்களின் உரிமையை பெற்றுத் தரும் அரசியல் வித்தகர்களைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது. சமாதானத்துக்கான யுத்தம் என சந்திரிகாவும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என ராஜபக்சவும் யுத்தங்களுக்கு அழகுக் குஞ்சம் கட்டினார்கள். அதிலிருந்து இரத்தம்தான் வடிந்தது. அரசபயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான்; புலிகள். பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாத ஒருவர் எதிர்ப்பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. அமெரிக்கப் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாத ஒருவர் தலிபான்களின் பயங்கரவாதம் பற்றிப் பேச அருகதை அற்றவர்.

புலிகள் பேச்சுவார்த்தைகளைக் குழப்பினார்கள் என்று புலியெதிர்ப்பாளர்களும் அரசும் மாறிமாறி குற்றம் சுமத்துவதில் நின்றனவேயொழிய புலிகளை இன்னுமின்னும் அரசியல் தளத்தில் இல்லாதொழிப்பதான அணுகுமுறைகளை அரசும் செய்யவில்லை, புலியெதிர்ப்பாளர்களும் அதைக் கோரவில்லை. ஜனநாயக நீரோட்டத்தில் குளித்து முழுகப் புறப்பட்டவர்களும் ஓதினாரில்லை. மாறாக புலியழிப்பை இராணுவ ரீதியில் கோரினார்கள். மக்கள் பற்றிய எந்தக் கரிசனையுமற்ற இந்தப் பார்வை குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் புலியெதிர்ப்பாளர்களிடம் செழித்தோங்கியிருக்கிறது. பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பது புலிகளின் அரசியல் பலவீனத்தை அரங்கிற்குக் கொண்டுவரும் என்று பார்ப்பதற்குப் பதில், இராணுவ ரீதியிலான புலியழிப்பைப் பற்றிச் சிந்தித்தார்கள். மக்கள் சக்தி அற்புதமாக அதிகாரங்களை புரட்டிப் போடக்கூடிய ஆற்றல் படைத்தது என்பதில் நம்பிக்கையற்றிருந்தார்கள். ஆனால் அன்றிலிருந்து இன்று தாய்லாந்துவரை வரலாறு மக்கள் சக்தியின் ஆற்றலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்திய அரசுதான் இந்தப் போரை நடத்துகிறது என்ற பார்வை ஒரு சர்வதேச நோக்குக் கொண்டது. பாகிஸ்தான் சீனா என மூக்கை நுழைக்கும்வரை காத்திருந்த இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைப்பதில் இலங்கை அரசை ஒருவித பாசத்துடன் அரவணைப்பதில் ஈடுபட்டது. இதை இடதுசாரிச் சிந்தனையாளனான விக்கிரமபாகு கருணாரட்ன ஆரியப் பாசம் என்றார். இலங்கை எப்போதுமே கொந்தளிப்பான பிரதேசமாக இருப்பது இந்தியாவுக்கும் அதேபோல் அமெரிக்காவுக்கும் தேவையாகிறது. அதேநேரம் புலிகளின் பலம் நொருக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாகவே இருக்கிறார்கள். விமானப்படையைக் கொண்ட உலகின் முதல் விடுதலை இயக்கம் என்று புலிகள் காட்டிய அதீதம் இந்தியாவை சும்மா இருக்க விடவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு அதனால் அச்சுறுத்தல் இல்லை என்று இந்தியாவுக்குத் தெரிந்தபோதும் புலிகளின் இந்த வளர்ச்சி ஒட்ட நறுக்கப்படவேண்டியது என்பதில் இந்தியா கவனமாகவே இருந்தது.

தமிழக மக்களிடம் 15 ஆண்டுகளுக்குப் பின் எழுந்த உணர்வலைகளை -தமிழக அரசியல் கட்சிகள் பிய்ச்சுப்புடுங்குவது ஒருபுறமிருக்க- இந்திய அரசு போக்குக் காட்டிக்கொண்டு புலியழிப்பை துரிதப்படுத்த தன்னாலான உதவிகளை வழங்கியபடிதான் இருந்தது, இருக்கிறது. இந்தப் போக்குக் காட்டலை சமாளிக்க இலங்கை அரசை அது அவசரப்படுத்தியபடிதான் இருந்தது. புலிகளின் நிர்வாகங்கள் கிளிநொச்சியின் வீழ்ச்சியோடு சிதைக்கப்பட்டுவிட்டது. இராணு ரீதியில் மரபுப் படையணி நிலையிலிருந்து மீண்டும் கெரில்லா போர்முறைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு நோக்கி புலிகளின் அதிகார மட்டங்கள் குறுக்கப்பட்டுவிட்டன. இனி போதும் என்ற நிலை இந்தியாவுக்குத் தோன்றும்போது பிரணாப் முகர்ஜி கொழும்பு போய் போர்நிறுத்த அங்கீகாரத்துடன் வருவது இந்திய அரசின் போக்குக் காட்டலுக்கும் தமிழகக் கட்சிகளின் அரசியல் பிழைப்புக்கும் தேவையாகிறது.

புலிகளின் முற்றான அழிவை இந்தியா ஒருபோதும் விரும்பப் போவதில்லை. அதேபோல் புலிகளின்; இடத்தை இடதுசாரியச் சிந்தனையுடன் எழக்கூடிய அமைப்புகளின் போராட்டங்களால் அது நிரப்பிவிடாதபடியே, இலங்கையை எப்போதுமே ஒரு கொந்தளிப்பான பிரதேசமாக அது வைத்திருக்க வேண்டும். தன் மூக்கை நுழைக்க ஏதுவான நிலைமைகளை அது தக்கவைத்தபடிதான் இருக்க வேண்டும். தன் நாட்டுக்குள்ளேயே பஞ்சாப், காசுமீர், நாகாலாந்து, அசாம்… என தேசிய இனங்களை ஒடுக்கும் ஒரு அரசு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையில் எந்தவகை தீர்வை முன்தள்ள உழைக்கும் என்பது கேள்விக்குறியே. அதனால்தான் தமிழகத் தமிழர்களின் உணர்வலைகளை இந்தியர்கள் என்ற எல்லைக்குள் வைத்துப் புரியமுடியாமல் போக்குக் காட்டும் வேலையை அது செய்கிறது. ஆனால் அதன் விளைவு தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக் கண்களை மெல்லத் திறக்கும் வேலையைச் செய்துவிடும் ஆபத்துக் கொண்டது. பாகிஸ்தான் மீதான போரை ஏய்ப்புக் காட்டுவதால் இந்நிலை இல்லாமல் போகுமா என்பது எதிர்வுகூற முடியாதது.

மக்களின் இவ்வளவு இழப்புகளையும் போராளிகளின் உயிர்களையும் புலம்பெயர் மக்களின் உழைப்புகளையும் உறிஞ்சி மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பின்னான நிலைக்கு போராட்டத்தை இழுத்துச் சென்றிருக்கும் புலிகளின் அரசியலை புலிகள் கேள்விக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். போராட்டத்தில் பின்வாங்கல்கள், இழப்புகள் வருவதும் உண்டு போவதும் உண்டு என்றெல்லாம் சதா விளக்கமளித்தபடி இருக்க முடியாது. சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் சக அமைப்புகள் மீதெல்லாம் எகிறிப் பாயும் வேலைகள் கெரில்லாப் போர்முறையைக் கொச்சைப்படுத்துவன. இன்னமும் தாங்கிக்கொள்ள மக்களிடம் வலுவில்லை. அவர்கள் இழந்தவைகள் ஏராளம்.

கிளிநொச்சியின் வெற்றியை ராஜபக்ச அனட் கோ கொண்டாடுவார்கள், ஆட்சிக்கு வருவார்கள் போவார்கள், போரின் பெயரால் சுருட்டிய இலாபங்களோடு அவர்களின் சந்ததிகள் கொழுக்கும். ஆனால் ஏழ்மையிலும் வேலைவாய்ப்பின்றியும் இராணுவத்தில் சேர்ந்து மடிந்த அல்லது உடல்ஊனமுற்ற அவர்களின் குடிசைகளின் வாசல்படிகளில் எந்த விளக்கு எரியப் போகிறது. போர்களில் மடிந்துபோன உயிர்களுடனும் அல்லது ஒடிந்துபோன வாழ்வுடனும், அழிந்துபோன விவசாய நிலங்களுடனும், தாறுமாறான கண்ணிவெடிகளின் விதைப்புகளுக்கு நடுவிலும் ஏன் இன்னமும் முடிந்துபோகாத யுத்தத்துடனும் எந்த நம்பிக்கையுமற்று வாழும் தழிம் மக்களின் முன் ஒரு கனவு தன்னும் எஞ்சியில்லை இதுவரை.

-ரவி (04012009)

thanks :

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4739:2009-01-04-18-30-37&catid=143:2008-07-15-19-48-45&Itemid=50

HITS: 2634

Comments on Tamil Circle

 #5 kuddy 2009-01-05 20:39
yea, Its a good analysis
But ravi, What do you intend to say tamils?
What is your solution for tamils?
All can criticize everybody…. they should also point out a suitable way to resolve the problems.

Quote

#4 Mathavan 2009-01-05 11:10

Hi Ravi,From your article, I have a hope; there are lots of peoples with right political views about our struggle. Even though some former hope Comrades gone with Tamil nationalism and supporting to LTTE now days with blind eye. I am looking forward more Ravi’s come out and write their political views for a new people’s war.

Quote

#3 மஞ்சூர் ராசா 2009-01-05 10:44

தெளிவாக, விளக்கமாக இன்றைய நிலையை எழுதியுள்ளீர்கள ்.

Quote

#2 மஞ்சூர் ராசா 2009-01-05 10:43

மிகவும் தெளிவான விவரமான அலசல்.

Quote

 #1 arun 2009-01-05 09:07
Dear MR. Ravi,
this article is giving the complete information about the sri lankan tamil people life and struggle. it is analysing very deeply about the role behind indian govt and what kind of mistakes LTTE they did.
thanks,
arun


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: