ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்

obama

இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…

அவன் தனது வெள்ளை நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கேள்வி இதுதான் “நீ ஒபாமாவுக்கு வாக்களிக்கிறாய், ஏனெனில் அவர் ஒரு கறுப்பன் என்பதற்காய்?”

அவன் தொடர்கிறான்…
இந்த நாடு அடிமைகளின் முதுகில் பாய்ந்த வியர்வையாலும் கசையடியாலும் கட்டியெழுப்பப்பட்டது. இந்த அடிமைகளின் வழித்தோன்றல்களினால் இன்று அதே நாடு தலைமைதாங்கப்படும் ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. எந்த நாடுஅது. நாம் மனிதர்களாகவே கணிக்கப்படாத ஒரு காலத்தை தாங்கிநின்ற நாடு. கல்விகற்க அனுமதிக்கப்படாத காலத்தைத் தாங்கிநின்ற நாடு. ஒரே உணவுவிடுதியில் அமர்ந்திருந்து சாப்பிட அனுமதி மறுத்த காலத்தை தாங்கிநின்ற நாடு. வாக்குரிமையை மறுத்துநின்ற நாடு அது. ஆம் நான் ஒபாமாவுக்குத்தான் வாக்களிக்கப்போகிறேன்.

இப்போது ஒன்றைச் சொல்கிறேன். அவர் கறுப்பன் என்பதற்காக நான் வாக்களிக்கவில்லை. அவர் ஒரு நம்பிக்கை… அவர் ஒரு மாற்றம். அவர் எனக்கு ஒன்றைப் புரியவைத்திருக்கிறார்… எனது மகன் வளர்ந்து தான் இந்த நாட்டின் தலைவனாக வர விரும்புகிறேன் எனச் சொல்வதை ஒரு கட்டுக்கதைபோலன்றி சாத்தியமான ஒன்றுதான் என்று நான் புரிந்துகொள்ள, ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார் ஒபாமா. அதனால் அந்த நம்பிக்கைக்கு மாற்றத்துக்கு நான் வாக்களிக்கப் போகிறேன்!

நவம்பர் 4 மறைகிறது. 5ம் திகதி அதிகாலை ஆகிவிட்டிருந்தது. ஒபாமாவின் வெற்றி அறிவிக்கப்படுகிறது. அந்த கறுப்பு இனத்தவனின் நம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டிருந்தது.

ஒபாமா தெரிவுசெய்யப்பட்ட பின் தனது கன்னியுரையை ஆற்றும்போது கைதட்டல்கள் அர்த்தமிழந்து போயின. கண்ணீர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டதை தொலைக்காட்சிகளில் நாம் பார்த்தோம். மனிதஉரிமைவாதியான ஜெசி ஜக்சனின் கண்ணீர் ஒரு கறுப்பு வரலாறாய் வெம்மி வழிந்தது. உலகம் முழுவதும் இந்தத் தேர்தலைக் கண்காணித்தது. ஒபாமாவின் வெற்றியில் அவர்கள் ஏன் தம்மையறியாமலே ஈர்க்கப்பட்டார்கள், ஏன் கண்ணீர் வடித்தார்கள் என்பதற்கான விடைகளை மேலே குறிப்பிட்ட உரையாடலில் நாம் தேடிக்கொள்ளலாம். அதனால்தான் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக வர்ணிக்கப்பட்டது. இதை பொருத்தமான சொற்கள் கொண்டு ஒபாமா நிரப்பினார். “ஆம் நம்மால் முடியும்” (Yes we can), “நம்பிக்கை” (hope), “மாற்றம்” (change) இது அவரின் பேச்செங்கும் விரவியது. வாக்களித்த 106 வயது மூதாட்டியினை ஒரு நடமாடும் படிமமாக அவர் முன்நிறுத்தினார். அவரது சொற்தேர்வு பேச்சாற்றல் ஒரு கறுப்பு ஜனாதிபதியின் பிம்பமாக எல்லோர் மனதிலும் விழுந்துதானிருக்கிறது.

என்னிடம் கனவொன்றிருக்கிறது (I have a dream) என மார்ட்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 28 அன்று ஆற்றிய உரையின் புகழ்பெற்ற வசனத்தை அவரின் குரலிலேயே சுவிசில் எமது பிராந்திய வானொலி விளம்பரமொன்றுக்கு ஆரம்பமாக ஒலிக்கவிடுவதைக் கேட்க சகிக்கமுடியாமல் இருக்கும். இப்போ அந்தக் கனவின் பெயர் ஒபாமா என்று வரும் அபத்தக் குரல்களையும் நாம் கேட்க நேர்கிறது. கிங் மக்கள் சார்ந்து பேசிய வசனம் அது, அதிகார சக்திகள் சார்ந்தல்ல. அந்தக் கனவின் மீதி இன்னும் நீண்டுதான் கிடக்கிறது. அதிகாரத்தில் தலித் பங்கேற்றால் தலித்துகளின் நலன்கள் பேணப்படுமென, முஸ்லிம் பங்கேற்றால் முஸ்லிம்களின் நலன்கள் பேணப்படுமென, பெண்கள் பங்கேற்றால் பெண்களின் நலன்கள் பேணப்படுமென… இப்படியே எளிய சமன்பாடுகளை எதிர்பார்ப்புகளையெல்லாம் வரலாறு தகர்த்து எறிந்தபடிதான் இருக்கிறது. ஒபாமாவின் விடயத்திலும் இது விதிவிலக்கல்ல.

இனவெறிக் கருத்தியல் மூலைமுடுக்கெல்லாம் பற்றியெரிந்த காலமது. எல்லோரும் சம அந்தஸ்துகொண்ட மனிதர்களாக வாழும் நாளொன்றுக்கான கனவு மார்ட்டின் லூதர் கிங் இனுடையது. ஒபாமாவின் வெற்றி அமெரிக்காவில் நிறவெறி இல்லையென்று காட்டும் ஊடகங்களின் புனைவுகளை கொண்டலீற்சா றைஸினால்கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது ஒரு பாய்ச்சல் மட்டுமே என்கிறார் அவர். புஸ்க்கு பின்னால் அவர் திரிந்தபோதெல்லாம் நிறவெறியின் சுவடுகளை மறைத்துக்கொள்ளும் பிம்பமாகத் தெரிந்தவர் அவர். அவராலேயே நிறவெறியை மறுக்கமுடியாமல் இருக்கிறது. இருந்தும் கறுப்பர்களும் ஜனாதிபதியாக வரக்கூடிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டார்கள், அமெரிக்காவில் நிறவெறி இல்லை, கிங்கின் கனவும் தீர்ந்தாயிற்று என்று ஊடகங்கள் பினாத்திக்கொண்டிருந்தன. இது விசயமின்றி ஓதப்படவில்லை என்பது ஒடுக்கப்பட்ட சக்திகளுக்கு புரியாத விசயமல்ல.

ஒபாமாவின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது மக்கெயினின் ஆதரவாளர்களில் ஒருவர் ஒபாமா ஒரு ஆபிரிக்க அமெரிக்க மார்க்சிஸ்ட் என்றார். வெள்ளையின இளம்பெண்ணொருவர் ஒபாமாதான் தனது ஜனாதிபதியென அறிமுகம்செய்ய முடியாமலிருக்கிறது என்றாள். இந்தக் குரல்களும்கூட மாற்றம் என்ற வார்த்தையின் சாட்சிகள்தான். கண்டங்களை ஊடுருவிய வெற்றியாக ஒபாமாவின் வெற்றி இருந்தது என்பது ஒரு மிகைப்படுத்தலாக இருக்கமுடியாது.

இது ஒரு ஆட்சிமாற்றம் என்பதற்கும் அப்பால் வெள்ளையினக் கருத்தியலாளர்களின் பரிதவிப்பு ஊடகங்களில் வெளிவந்தபடிதான் இருக்கின்றது. மல்கம் எக்ஸ் இனதும் ஒபாமாவினதும் உருவ ஒற்றுமையான புகைப்படங்கள் அருகருகில் இருத்தப்பட்டு, மல்கம் எக்ஸ் ஒபாமாவின் தந்தையெனவும் உயிரியல் ரீதியிலல்ல, தத்தவார்த்த ரீதியில் என இணையத்தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அரசியல், சமூக, வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட தொனிகளுக்குள் தாம் கொண்டிருக்கும் கருத்தியல் அடிப்படையில் தமது பார்வைக்குள் ஒருவர் பொருந்திக்கொள்ளாதபோது அல்லது அந்தப் பார்வையை அழித்துக்கொள்கிறபோது அவர்களுக்கு சங்கடங்கள் எழுகின்றன, சந்தேகங்கள் எழுகின்றன, கோபம் அல்லது சகிப்பின்மை எழுகின்றன. ஏனெனில் அந்த ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பும் எல்லைக்கு வெளியே போய் அவர் தன்நிலைகளை உருவாக்கிக்கொள்வது அவர்களுக்கு சகிப்புக்கு உரியதாக இல்லாமல் போய்விடுகிறது.

உண்மையில் பலர் தமது இனரீதியாலான பார்வையை மக்களின் கண்களிலிருந்து மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். இந்தத் தேர்தல் தோல் நிறத்தை ஒரு பேசுபொருளாக ஒவ்வொருவரின் வாசல்வரை கொண்டுவந்திருந்தது. நிறவெறி முற்றாக அகற்றப்படவில்லை, அது கட்புலனுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது அல்லது அலட்சியப்படுத்தப்படுகிறது.

இஸ்லாமிய எதிர்ப்புவாதம், கம்யூனிச சோசலிச எதிர்ப்பு வாதம் கொண்டு இவற்றையெல்லாம் பயங்கரவாதத்துக்கு சமமாக சித்தரித்து வைத்திருக்கிறது முதலாளித்துவம். இவர்களையெல்லாம் சந்தேகத்துக்கு உரியவர்களாக, வேண்டப்படாதவர்களாக அது ஆக்கிவைத்திருக்கிறது. ஒபாமாவை சோசலிஸ்ட் என்றும் மார்க்சிஸ்ட் என்றும் (பராக் குசைன் ஒபாமா என்று பெயரை விரித்து எழுதுவதன் மூலம்) இஸ்லாமிய வேர் கொண்டவராகவும், ஏன் ஒசாமா பின்லாடனுடன் தொடர்பு கொண்டவராகவும்கூட “குற்றஞ்சாட்டுவது” கறுப்பினத்தவர் எப்போதும் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்ற பார்வையின் அடிப்படையில் இலகுவாக சாத்தியமாகிறது. ஒபாமாவே விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, ஏற்றுக்கொண்டாலென்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன இது நிறம்கடந்த ஒரு தேர்தல் அல்ல என்பதை இவை வெளிப்படுத்துகிறது.

தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு தூணாக விளங்கிய Desmond Tutu அவர்கள் மாற்றம் என்பது சாத்தியம்தான் என்ற நம்பிக்கையை இன்னொருமுறை உலகுக்குள் ஊற்றிவைத்துள்ள நிகழ்வாக இதை வர்ணித்தார். நாங்கள் எமது பயணத்தில் ஒரு புதிய பாய்ச்சலை எட்டியுள்ளோம், எமது தோள்கள் நேர்கொண்டவையாகின்றன என்றார். நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் அதிபராக மாறியதையொத்த நிகழ்வாக இதை அவர் வர்ணித்தார்.

புஷ் இன் எட்டுவருட ஆட்சிக்காலம் அமெரிக்க மக்களை எப்படி காயப்படுத்தியுள்ளது என்பதை சரியாக இனங்கண்ட ஒபாமாவின் கோசம், பேச்சாற்றல், சொற்தேர்வு பலரை கட்டிப்போட்டது என்று சொல்லமுடியும். இதை அவர் பொதுப் பதங்கள் கொண்டு நிரப்பினார். “மாற்றம்”, “நம்பிக்கை” “ஆம் எங்களால் முடியும்” என்ற பதங்களை அவரவர் தமது பாதிப்பின் வழிநின்று புரிந்துகொள்ளக்கூடியதாய் அல்லது எடுத்துக்கொள்ளக்கூடியதாய் இந்தக் கோசங்கள் பரிமாணம் கொண்டன. இது ஒருவகையில் ஒபாமாமீது அதீத நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதாகவும் இந்த நம்பிக்கைகளை அவர் செயலில் நிரப்பமுடியாதபோது காலப்போக்கில் இதுவே அவருக்கு எதிராக திரும்பக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கறுப்பின மக்களின் போராட்டங்கள் உச்சம்பெற்றிருந்த 60கள்தான், அந்த செயற்பாடுதான் முக்கியமாக அமெரிக்காவை இன்னும் நாகரிகமடைய வைத்த நிகழ்வு என நோம் சொம்ஸ்கி குறிப்பிடுகிறார். இதன்போதுதான் அமெரிக்க சமுதாயம் திறந்த சமூகமாகவும், ஜனநாயகத்தன்மை கூடியவையாகவும் மாறியது எனலாம். இதன் அறுவடையாகவே கறுப்பினத்தவர் ஒரு சிறுபான்மை சமூகமாக இருந்தும்கூட அமெரிக்காவில் ஒரு கறுப்பித்தவரான ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகியது. இளம்தலைமுறை வெள்ளையினத்தவர்களும், 90 வீதமான கறுப்பினத்தவர்களும் ஒபாமாவை ஆதரித்ததாகவும் வெள்ளையினத்தின் மூத்த சந்ததியினர் மக்கெயினை ஆதரித்ததாகவும் கூறப்படும் புள்ளிவிபரங்கள் இக் கருத்துக்கு வலுவூட்டுகிறது. எதுஎப்படியோ ஒரு சிறுபான்மையினத்தவர் சுதந்திரமான தேர்தல் முறையில் ஜனாதிபதியாக வர முடியுமளவுக்கு அமெரிக்க சமூகம் திறந்த சமூகமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

1964 இலேயே கறுப்பினத்தவர்களுக்கான வாக்குரிமை கிடைத்தது. இதற்குள் அவர்கள் சிந்திய இரத்தம் கிங்கின் அகிம்சைக் குரலையும், மல்கம் எக்ஸ் இன் வெள்ளையினக் கருத்தியல் தகர்ப்பையும், இன்னுமின்னுமான கறுப்பினப் போராளிகளின் போர்க்குணத்தையும், ஏன் அவர்களின் உயிரையும்கூட நனைத்தபடிதான் இருந்தது. கறுப்பின மக்களின் விட்டுக்கொடுக்காத போராட்டத்தின் அறுவடை ஒபாமா. இதைத்தான் கிங் அமெரிக்காவுக்கு அளித்த பரிசு ஒபாமா என ஒரு தொலைக்காட்சி நிருபர் வர்ணித்தார்.

§ § §

60 களில் தம்மீதான அரசபயங்கரவாதத்துக்கு மோசமாக முகம்கொடுத்துக்கொண்டிருந்த கறுப்பின மக்கள் வியட்நாம் யுத்தத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள். இப்போ ஒபாமாவால்…?. முடியாது. உலக ஏகாதிபத்தியமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள அமெரிக்காவின் அதிகாரங்களுக்குள் அவர் பங்குபற்றுகிறார்… அவ்வளவுதான். இந்த எல்லைக்குள் ஈராக் ஆப்கானிஸ்தான் நாடுகளை சின்னாபின்னமாக்கும் இரு பெரும் போர்களையும் அவர் முடிவுக்குக் கொண்டுவரும் எல்லைவரை செயற்பட முடிவதே பெரியவிசயமாகத்தான் இருக்கும். இதை அவர் செய்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜோர்ஜ் புஷ் இன் 8 வருட ஆட்சி இரு பெரும் போர்களையும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியையும் ஒபாமாவுக்கு பரிசளித்துள்ளது. எதிரிகளையல்ல நண்பர்களை நாம் தேடிக்கொள்ள வேண்டும் என அவர் சொல்லிச்செல்வதை காலம்தான் எம்மிடம் தாங்கிவந்து காட்டவேண்டும்.

“ஒபாமா எங்கள் கண்களைப் பார்த்துப் பேசுகிறார்… நீங்கள் சொல்பவற்றை செவிமடுக்கத் தயாராகிறார்… அமெரிக்காவுக்கு மாற்றத்தை கொண்டுவரப்போகிறார்…” இவ்வாறு அற்புதமாக சித்தரிக்கப்படுகிறார் ஒபாமா. அவர் பற்றிய விம்பம் உருவாக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் பிரச்சாரம் பேச்சாற்றல்களால் நிரம்பிவழிகிறது, நம்பிக்கை, மாற்றம் என இன்னோரன்னவைகள் பற்றி சிலாகிக்கப்படுகிறது. ஆனால் திட்டங்கள் பற்றி…?. எதுவுமேயில்லை. எமது வளங்களை நாம் தேசியவுடமையாக்குவோமா? மக்களுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறதா? சுகாதாரத்துக்கான வழிமுறைகள் எம்மிடம் உள்ளதா? ஆக்கிரமிப்புகளை நாம் நிறுத்துவோமா?. இல்லை. இவையெல்லாம் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் எமது தேர்தல் முறைமை, அரசியல் முறைமை இப்படியொரு கீழ்மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டவை. நீங்கள் தேர்தலில் நிற்பவர் பற்றிய தகவல்களை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள் என்கிறார் அறியப்பட்ட விமர்சகரான நோம் சொம்ஸ்கி.

யாருக்கும் மாயைகள் இருக்கத் தேவையில்லை. உண்மையில் இந்தக் கட்சிகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கிறதுதான். ஆனால் அவை அடிப்படை முரண்பாடுகளேயல்ல. சாராம்சத்தில் அமெரிக்காவில் நிலவுவது ஒரு கட்சி ஆட்சிமுறைதான் என்கிறார். இரு பிசாசுகளில் குறைந்த பிசாசுத்தன்மையுடையதை தெரிவுசெய்வதில் எதுவித தவறும் இல்லை என்கிறார் அவர். இவற்றை உண்மையாக்குகிறது மாற்றம் எதையும் அறிவிக்காத ஒபாமாவின் இஸ்ரேல் மீதான நிலைப்பாடு, பயங்கரவாததத்துக்கு எதிரான போர் பற்றிய நிலைப்பாடு, ஈரான் மீதான நிலைப்பாடு, கியூபா மீதான நிலைப்பாடு… என.

தேர்தல் காலத்திலன்போது, தான் ஜனாதிபதியாக வந்தால் கியூபாமீது பொருளாதாரத் தடையை தொடர்ச்சியாகப் பேணப்போவதாக அறிவித்தார் ஒபாமா. தயாரிக்கப்பட்ட அமெரிக்க ஜனநாயகக் குரலை அப்படியே உயர்த்துகிறார். கியூபா, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன்மூலம் ஜனநாயக வழிமுறைகள் நோக்கிச் செல்ல ஆரம்பித்தால் உறவை இயல்புநிலைக்கு கொண்டுவருவதுபற்றி யோசிக்கலாம் என்கிறார். கியூபா இந்த விடயத்தில் எப்படி ஜனநாயகத்தன்மையாக நடந்துகொள்கிறது என்ற விடயத்துக்கு முதல், பிடலைக் கொல்வதற்கு பல தடவைகள் கொலைப்படையை கியூபாவுக்குள் அனுப்பிய அமெரிக்காவின் ஜனநாயக யோக்கியதையை ஒபாமாவாலும் பேசமுடியாது என்பதே யதார்த்தம். இது அவரது கியூபாமீதான ஜனநாயக அறைகூவலை அர்த்தமில்லாமல் ஆக்கிவிடுகிறது. குவாந்தனாமோ சிறையில் சங்கிலியால் பிணைத்தபடி அலையும் கைதிகளின் மூச்சுக்காற்று பரவக்கூடிய தொலைவில் நின்றுகொண்டு ஒபாமா கியூப அரசியல் கைதிகள் பற்றி பேசுவது இன்னொரு வேடிக்கை.

“எனது வாழ்க்கை பூராவும் கியூபாவில் அடக்குமுறைகளையும் அநீதியையுமே நான் பார்த்துவருகிறேன். இரண்டு சந்ததிகள் அரை சகாப்தமாக கியூபாவில் சுதந்திரத்தை அனுபவித்ததேயில்லை, ஜனநாயகத்தை அனுபவித்ததேயில்லை…” என்கிறார் ஒபாமா. இதற்கான சரியான பதில் கஸ்ட்ரோவிடமிருந்து ஒபாமாவுக்குக் கிடைத்தது. “எனது நாட்டை மதிப்பிடுவதற்கு முன் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். கியூபாவின் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சார விஞ்ஞான திட்டங்கள் எமது நாட்டுக்குள் மட்டுமன்றி உலகின் வறிய நாடுகளிலெல்லாம் பயன்படுகிறது. அத்தோடு ஏனைய மக்களுடனான தோழமைச் செயற்பாட்டுக்காக இரத்தம் சிந்திய நாடு கியூபா. இதன்மூலம், எங்கள்மேல் பொருளாதாரத் தடையையும் ஆக்கிரமிப்பையும் பயன்படுத்தும் பலம்பொருந்திய உங்கள் நாட்டின் செயற்பாடுகளுக்குப் பதிலாக, கொஞ்சத்தை வைத்து பலதைச் செய்ய முடியும் என்பதை நாம் காட்டியிருக்கிறோம்.” உலகம்பூராக நூற்றுக்கணக்கான படைத்தளங்களை நிறுவி வைத்துக்கொண்டு சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி பேசுகிற அமெரிக்காவின் யோக்கியதை பற்றி கேள்வியெழுப்பினார் கஸ்ட்ரோ.

இதையே ஒபாமாவின் வெற்றிக்கு வாழ்த்து அனுப்பிய நெல்சன் மண்டேலா இன்னொரு வடிவில் சொல்லிவைத்தார். சமாதானத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடும் சமூகங்களின் பங்காளியாக அமெரிக்காவை மாற்றியமைக்கும் உங்கள் கனவை சாதிப்பீர்கள் என நம்புகிறோம் என்றார். அத்தோடு உலகமெங்கிலும் வறுமைக்கு எதிராகவும் நோய்க்கு எதிராகவும் கூட்டாக போராட அறைகூவல் விட்டதற்கு அப்பால் அமெரிக்காவின் இராணுவ வியாபகத்தின் பக்கம் அல்லது ஆக்கிரமிப்புகளின் பக்கம் மண்டேலா போகவேயில்லை. அவை தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு உரியவை என்பது மண்டேலாவுக்கு தெரியாதா என்ன.

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை உயர்ந்தபட்சம் அதன் உலகப் பொலிஸ்காரனின் பாத்திரத்தை பாதிக்காத வகையில் சீவிவிடப்படலாமேயொழிய அடிப்படையில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதுஎப்படியோ ஒபாமாவின் வெற்றி ஒரு ஆட்சிமாற்றம் என்ற எல்லைக்குள் மட்டும் வைத்து வியாக்கியானப்படுத்த முடியாதது என்று சொல்லிக்கொள்ளலாம். அதனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பலராலும் வர்ணிக்கப்பட்டது.

என்றபோதும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் கில்லரி கிளின்டன் வெற்றிபெற்றிருந்தாலும் இந்தத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகத்தான் இருந்திருக்கும். இதுவரையான 44 அமெரிக்க ஜனாதிபதிகளும் ஆண்கள்தான் என்றளவில் கில்லரி கிளின்டனின் வரவும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் வர்ணிக்கப்பட்டிருக்கும். பல பெண்கள் அமைப்புகள் நிறஅரசியலையும் தாண்டி அவரை ஆதரித்ததையும் நாம் பதிவுசெய்துதான் ஆகவேண்டும்.

இப்போது எனது பிராந்திய வானொலியில் புதிய விளம்பரம் போகிறது.
அடுத்த முனையிலிருந்து ஒரு பெண் தளபாட விற்பனை கடையொன்றுக்கு தொலைபேசியில் பேசுகிறாள்.
“ஹலோ… நான் படுத்திருந்தபடியே ஒரு பொத்தானை அமத்துவதன்மூலம் மெத்தையை மேலும் கீழும் விரும்பியபடி அசைக்கக் கூடிய கட்டிலை செய்துதர முடியுமா?”
கடைக்காரன் பதிலளிக்கிறான்”Yes, We can”.

– ரவி (15112008)

Thanks:

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=3980&Itemid=139

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s