“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”
கவிதைத் தொகுதி முகவுரை
‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்
இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.
இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?
‘நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள்போல்
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)
இந்த வெளியின் வாழ்வு எப்படிப்பட்டது?
‘முழுநிலவு வானில்
முகங்காட்டும் போதெல்லாம்
நிலவை ரசிப்பதற்கும்
நாதியற்றுப் போன வாழ்வு’
(கைவீசி நடந்து)
இந்த வாழ்வனுபவம் இந்தக் கவிஞனை ஒவ்வொரு துரும்பிலும் ஒட்டிவைத்துவிடுகிறது. சிலந்திவலை முகத்தில் மோதும் போதுகூட அது தொற்றிவிடுகிறது. அதனால் கவிஞன் சொற்களைத் தேடிப் போகவில்லை. அவை வந்து விழுகின்றன. இந்தச் சூழலுக்கு வெளியே வாழ்ந்துகொண்டு போர் பற்றிப்பிடித்த வாழ்வினை (அறிதலினால்) கவிதைகளாக்குவதிலுள்ள ஒரு இடைவெளியை வாழ்ந்தனுபவித்த இக் கவிதைகள் நமக்கு கிளப்பிக் காட்டுகின்றன.
1996 இலிருந்து 2008 வரையான காலப் பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. 2002 இல் போர்நிறுத்தம் என்ற உடன்படிக்கையால் இந்தக் காலப் பகுதி கூறுபோடப்பட்டிருந்து, இப்போ மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது. தமிழ் மக்கள் மீதான போர்கள் பற்றியதல்ல இக் கவிதை. போர் உமிழ்ந்த வாழ்வு பற்றியது. அது போரின் போது மட்டுமல்ல போர் முடிச்சு அவிழ்கிறபோதும் அமைதிக்காலம் என்று வியாக்கியானப்படுத்துகிற காலத்தின் போதும் வாழ்வாதாரங்களை அது அழித்துத்தான் விட்டிருக்கிறது. அதன் ஏற்றத்தாழ்வுகளில் இக் கவிதைகளும் பயணம் செய்கின்றன.
நெருப்புக் கண்கள் கொண்ட காட்டெருமையைக் கண்டு பயந்து விலகி நின்ற காலம் போய் அதன் கண்கள் சாந்தமாய் இருப்பதையும் அது எருதுடன் பிணைக்கப்பட்டு வயல் உழுவதையும்… அதன் அருகில் நான்… என நிச்சயமற்ற தன்மையால் வரைகிறான் கவிஞன் இந்த போர் நிறுத்த காலத்தை.
இதன் உச்சங்களை தொட்டுக் காட்டும் முனைப்புகள் சில கவிதைகளின் வரிகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக,
‘ஆத்மார்த்த நினைவுதான்
என்றாலும்
சில நேரங்களில் மறக்கத்தான் வேண்டும்’
(நினைவுகள்)
என ஆத்மார்த்தத்தை நினைவுகளால் வெல்ல (முடியாது என்றபோதும்) முயல்வதை காண்கிறோம்.
இதேபோலவே வெள்ளெலிகளுடன் வாழ்தல் கவிதையில் சாப்பிடுவதற்கு எதையாவது தேடிக்கொள்ளவும் ஒளித்துக் கொள்வதற்கு ஏதாவது இடம் தேடிக்கொள்ளவும் முடியும் ஒரு வெள்ளெலியின் வாழ்வை மனிதவாழ்விலும் மேம்பாடாகக் காண்கிறான் இவன்.
‘நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்’ (வெள்ளெலிகளுடன் வாழ்தல்)
‘தம் நீண்ட பிரிவின் பின்னான
உறவுகளையும்
வெடித்துச் சிதறடிக்கும்
ஒரு வெடிகுண்டைப்போல்
காத்திருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)
என எந்தப் புனைவுகளுமற்ற நிலைமையால் உச்சித்துக் காட்டுகிறான் கவிஞன்.
காகம் கத்துவதைக்கூட நிசப்தத்தைக் கலைத்துவிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு செயலாக காண்பதும், பேயையும் வானத்தையும் பார்த்துக் குரைத்த நாய்கள் இப்போ எங்கள் காலங்களுடன் குரைத்துக்கொண்டிருப்பதாகக் காண்பதுமாக கவிதைகொள்கிறது கவிஞனின் சிந்தனை.
வரலாற்றில் தான் சிந்திப்பதை பேச எழுத சுதந்திரங்கள் மறுக்கப்படும்போதெல்லாம் குறியீட்டுத்தன்மையான வெளிப் படுத்தல்கள் அசல் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. இது கவிதையில் வரும் சொற்களின் நேரடி அர்த்தத்தைக் கடந்து கவிதை சொல்லவிளையும் பொருளின் அர்த்தத்துள் நம்மை வந்தடையச் செய்கிறது. ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’ தொகுதியும் தவிர்க்கமுடியாதபடி இந்தக் குறியீட்டு வடிவத்துள்ளும் போய்வருகிறது. ‘குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம்’, ‘காட்டெருமை’ போன்ற கவிதைகள் நல்ல உதாரணம். இவ்வாறு இன்னும் பல கவிதைகளை இத் தொகுப்பில் காட்டமுடியும். ‘புணர்ச்சி’ என்ற கவிதையை அதன் சொற்களினூடு பயணித்தால் கவிதையில் ஏதும் இருப்பதாகத் தொpயவில்லை. அதை குறியீட்டு வடிவத்துள் மாற்றிப் பார்க்கும் வாசனையின்போது வேறு பரிமாணங்கள் கிடைக்கின்றன.
பேதம், வறுமை பற்றிய சமூக சிந்தனைகளை பொத்தாம் பொதுவாகச் சொல்கிறபோது வெளிப்பாட்டில் வீச்சம் குறைந்துவிடுகிறது. இந்தக் குறைபாடு முரண்பாடுகள் பற்றிய ‘உனக்கும் எனக்குமான இடைவெளி’ என்ற கவிதையில் வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது.
போர்நிறுத்தம் மீண்டும் முறிக்கப்பட்டுவிட்டது. இதை ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’ என்கிறான் கவிஞன்.
‘ஓடிய சைக்கிளில் இருந்து
இறங்கி நடந்து
ஓடவேண்டியிருக்கிறது.
……………………….
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து
மூடவேண்டியிருக்கிறது.
என் அடையாளங்கள் அனைத்தும்
சரியாகவே உள்ளன.
என்றாலும்
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்;கிறது.
என்ன இது?
(மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்)
இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப ஒலிக்கிறபோது பலரிடம் விரக்திநிலை தொற்றிவிடுகிறது. ‘எல்லாமே இயல்பாயுள்ளன’,
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ போன்ற கவிதைகள் இதை வெளிப்படுத்துகின்றன. மனித மனங்களை, நீண்ட யுத்தகால வாழ்வை, அதன் எச்சங்களை நாம் புரிந்துகொண்டால் இக் கவிதை சொல்லவரும் சேதியுடன் நாம் பயணிக்கலாம். அதுவே கவிஞனின் போக்காக மொழிபெயர்க்கப்படுவது அபத்தம். இக்கட்டான காலங்களிலெல்லாம் மிக நம்பிக்கையுடன் கவிதைகள் பேசுவதை இத் தொகுதியுள் பல இடங்களில் காணலாம். நம்பிக்கை யின்மையுடன் வெளிப்படும் கவிதைகளும் நிராகரிப்புக்கு உரியன அல்ல.
கவிதையின் வெளிப்பாட்டுத் தளத்தில் சொற்சேர்க்கைகள் சிலவேளைகளில் ஒரு கவிதைபோலவே ஆகிவிடுகின்றன. அவ்வளவு அர்த்தத்தை அவை பொதிந்துவிடுகின்றன. இத் தொகுதியுள்ளும் கவிதையின் சில தலைப்புக்குள் மட்டுமன்றி, கவிதைக்குள்ளும் ‘அந்நியகால இருள்’, ‘ஒரு தொகைக் காற்று’ போன்ற சொல்லாளுமை கவிஞனிடம் விளைவதையும் நாம் அவதானிக்கலாம்.
இறுதியாக,
‘மனிதனைக் கொல்ல
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்துடன்
கண்களும் காதுகளும் இருந்தும்கூட
பலர்
வீதிகளில் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)
என்ற கவிஞனின் வரிகள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது இதை எழுதும்போதுகூட!
‘இந்தக் கவிதையின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ என்பேன் நான்.
– ரவி (11052008)
Thanks :
http://kunes-thuvarakan.blogspot.ch/2009/09/blog-post_20.html