நெருப்புக் கோளங்களை
சமாதானப் ப+க்களுக்குள் நுழைக்கும்
குரூரவாதிகளே
உங்கள்
சமாதானத்துக்கான போரினது
வரைவிலக்கணம்தான் என்ன
சொல்லிடுங்கள்!
உயிர்முகட்டில்
எலும்புக்; குவியலுள்
கூடுகட்டியிருக்கிறது நம் வாழ்வு
வாழ்தலுக்காய் போராடுவதை
போராடுவதற்காய் வாழு என -எமது
அடுத்த சந்ததியிடமும் கையளிக்க நாம்
நிர்ப்பந்திக்கப்படுவது
இன்னமும் துயரமானது.
யுத்தம்
எங்கும் யுத்தம்
ஆயுத வியாபாரிகளின்
ஜனநாயகத் தொழிற்சாலையில்
உற்பத்தியாகிறது மனிதக் கொல்லி ஆயுதங்கள்.
வேடிக்iகாயனதுதான்.
அதி பயங்கரவாதி
போராடுதலை
பயங்கரவாதமென கூச்சலிடுகிறான்
போராடுபவன் சுதந்திரமாய்ச் சிந்திப்பவனை
சமூகவிரோதி என்கிறான்.
நலமடிக்கப்பட்டவன் தண்டனை வழங்குகிறான்.
எங்கே போய் நிற்கிறது எம்
அழகிய தீபகற்பம்.
மனிதச் சதைகள் தின்று
எலும்பு துப்பும்
ப+மியாய் மாறிப்போனதுவோ
போர்வெறி பிடித்த பிசாசின்
பாழ்கூடமாய் போனதுவோ.
துயரம்
எனது அயல்நண்பர்களின்
நட்பறுத்த துயரம் -அவன்
மொழி வெறுத்த துயரம்
போர் சரித்த என் மனிதர்களின் மீதான துயரம்
சொந்த மண்ணிலேயே நாடோடியகதித் துயரம்
பரிமாறிக்கொள்ள
இன்னமும் எத்தனையோ.
ஆயினும்
துயரப்படுதலே வாழ்வாய்
உழலுதல் முடியாது.
இதில் அறுவடை தேடும்
குறுக்குவழி மனிதரின் நடமாட்டம்
அதிகரித்த சூழலிலே
நான் விடப்பட்டுள்ளேன்.
அதனால்
துயரங்களியிருந்து எழுதலே
வாழ்தல் என
அறைந்து சொல்லப்படுகிறேன்.
– ரவி (2007)