எனது உடையில் ஓயில் மணத்தது
உடலை வியர்வை நனைத்திருந்தது
வேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்
என்னை இயக்கிக் கொண்டே இருக்கும்.
விரைந்துகொண்டிருந்தேன்
ஓடிக்கொண்டிருந்தேன்
நீ ஒரு மோசமான சுவிஸ்காரனைவிட மோசம் -வேலைசெய்வதில்
என்பான் அவன்.
மகிழ்வான், வேலையுடனான எனது போராட்டத்தைக் கண்டு.
இப்படியே …இப்படியே…
தொடர்ந்த காலங்களில் எனது இருப்பு என்னை
கேள்வி கேட்டபடியே இருந்தது.
சுவிஸ் பிரஜையாவது என்று முடிவாக்கினேன்.
அப்படியும் ஆனேன்.
இப்போதெல்லாம் அவன் நீ
ஒரு மோசமான சுவிஸ்காரனையும்விட மோசம் என்று சொல்வதேயில்லை.
இப்போ நீ வெளிநாட்டுக்காரருக்கும் சேர்த்து
உழைக்கவேண்டும், என்னைப்போல்
என்கிறான்.
-ரவி