சூரிச், சுவிஸ்
18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.
சக்தி, திலக் ஆகியோருடன் நிகழ்ச்சித் தலைமையை அழகிரி அவர்கள் ஆரம்பித்தார். அழகிரி அவர்களும் ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். வெலிக்கடை சிறை படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர். ஈரோஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர், அதற்காக ஆரம்பத்திலிருந்தே உழைத்தவர் என்ற ரீதியில் அவரது கூட்ட தலைமைக்கு பொருத்தப்பாடும் அதிகம்தான். தோழர் இரட்ணாவுடனான தனது நினைவுகளை மீட்டுக்கொண்ட அவரின் அமைதியான உரையைத் தொடர்ந்து பிரபா அவர்கள் பேசினார்.
ரட்ணாவின் இறுதிக்கால கோலம் அவரின் உணர்வில் செலுத்தியிருந்த பாதிப்பு அவர் உரையில் தெரிந்தது. வயோதிபர் இல்லத்தில் ஒரு அனாதைபோல் உயிர்துறந்த ரட்ணாவின் மீதான கரிசனையை தனது தோழமை உறவின் பாதிப்புத் தோய அழுத்தமான தொனியில் நினைவாக்கினார். அவருக்குக் கிட்ட இருந்த இலண்டன் தோழர்கள் அவரை பாராமுகமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டையம் முன்வைத்தார். அஞ்சலி நிகழ்ச்சியை ஓர் அஞ்சலி நிகழ்வாகவும் அரசியல் நிகழ்ச்சியை ஒரு அரசியல் நிகழ்வாகவும் நடத்துவது நல்லது என்ற அவரது முன்னுரை சற்று ஏமாற்றத்தைத் தந்தது. கிடைத்திருக்கும் வரையறுக்கப்பட்ட ஒரு மாலைப் பொழுது எல்லைக்குள் அஞ்சலி நிகழ்ச்சியை அரசியல் மேடையாகத் திசைதிருப்பி, விடயத்துக்கு வெளியே போய்விடாமலிருக்கும் முன்னெச்சரிக்கை காரணமாக இருக்கலாம். எது எப்படியோ இந்த வேண்டுகோள் நிகழ்ச்சியின் ஊடாகப் பாய்ந்த உரைகளால் இயல்பாகவே கழுவிச்செல்லப்பட்டது. கடந்தகால வரலாற்று ரீதியான உண்மைகளை பகிரவேண்டிய கட்டாயம் உள்ளது என்ற தனது வரிகளை இயக்கத்தின் கலைப்பில் இணைத்துச் சொன்னார். 1990ம் ஆண்டு 6ம் மாதம் 16ம் திகதி பாலகுமாரின் ஆளுமையற்ற தன்மையால் ஈரோஸ் கலைக்கப்பட்டு புலிகளுள் இணைக்கப்பட்டது. அதன்பின் தோழர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளே தொடர்ந்தன. காலத்தின் கட்டாயத்தில் திரும்பவும் புனரமைக்கப்பட்டு மக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களிற்குமான தீர்வை வலியுறுத்தும் அமைப்புகளுடன் ஈரோஸ் கைகோர்த்துச் செயற்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சி ரட்ணாவின் இழப்பை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கா என்ற கேள்வியை தாம் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார் பிரபா. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டும் ஒருசில மாற்று இணையத்தளங்கள் அவற்றை பிரசுரிக்காதது பற்றி வெளியில் தோழர் ஒருவர் என்னுடன் உரையாடியதும்கூட எனக்கு ஞாபகம் வந்தது. இது காலத்தின் கட்டாயமான நியதி… ஈரோசுக்கு மட்டுமல்ல மாற்று அமைப்புகளுக்கும் இந்தக் கடப்பாடு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் பிரபா. பலஸ்தீன பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை ரட்ணா எல்லா அமைப்புக்கும்தான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதே அவர் மற்றைய அமைப்புகளையும் அரவணைத்துச் சென்றதற்குச் சான்று என்பதை நினைவூட்டினார். இலண்டன் தோழர்கள் அவரை பாராமுகமாக மட்டுமல்ல படுமோசமாகவும் விமர்சித்தனர். குடிகாரன் என்றனர். ரட்ணா ஈரோஸ் அமைப்பை ~பார்| ஒன்றுக்குள்ளிருந்துதான் தொடங்கினார்.. என்றார் பிரபா. இந்தவகை ஒழுக்க மதிப்பீட்டின் அடிப்படையில் ரட்ணாவை அவமதிப்பதற்கு எதிரான சாட்டையாக அவரின் இந்தப் பதில் இருந்தது. தோழர் ரட்ணா மரணித்த தினமான மார்கழி 12 “இன்னுயிர் ஈர்ந்தோர் தினம்” ஆக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார்.
நிகழ்ச்சித் தலைவர் அழகிரி அவர்கள் இடைநேரப் பேச்சில் ரட்ணா பற்றிய தனது கருத்துகளை முன்வைத்தார். கடந்த 30 வருட காலப் போராட்டம் கீழ்நோக்கிப் போகிற நிலைதான் உள்ளது. ஆனால் அவர் விட்டுச் சென்ற குறிப்புகள் இப்போதும் பொருந்தி வருகின்றன. அதனால் அவரது கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடியவைதான் என்றார். ரட்ணாவின் இளமைக்கால வாழ்வு பற்றிய குறிப்பில் அவர் தமிழரசுக் கட்சிக்காக இளமையில் பேசியிருக்கிறார்… சுதந்திரனில் பணியாற்றியிருக்கிறார்… லண்டன் ரைம்ஸ் இன் தென்கிழக்காசிய நிருபராக இருந்திருக்கிறார்… மலையகத்தில் கூடுதலான காலம் இருந்திருக்கிறார்… என்ற தகவல்களைச் சொன்னார். நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்ற ரட்ணாவின் வரையறுப்பை மீட்ட அவர் வடக்கு கிழக்கு மலையக முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சொல்லாக ஈழவர் என்ற சொல்லை ரட்ணா பயன்படுத்தினார் என்றார். இந்தச் சொல் கேரளாவில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல் என்று கூறி எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது… காலப்போக்கில் இன்று எல்லோரும் சரளமாகப் பாவிக்கும் சொல்லாக இது மாறியது என்றார்.
அடுத்து இலண்டன் ரவி அவர்கள் அழைக்கப்பட்டார். அவரின் உரை எல்லாவற்றையும் தூக்கி தலைகீழாகப் போட்டமாதிரி அமைந்தது. ஒரு விமர்சன உரைபோன்ற அவரது உரை தேசிய பிராந்திய சர்வதேசிய நிலைமைகளுக்கூடாக பயணம் செய்து ரட்ணாவிடம் வந்துவந்து போனது. காந்தி சொன்ன இந்தியாவுக்கும் இன்றைய இந்தியாவுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று ஆதாரவினா தொடுத்த அவர் ரட்ணா சொன்ன கருத்துக்கள் யாவும் இப்போதும் பொருந்திவரப் போகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார். அவரது கருத்துக்களில் இன்று பொருந்தி வருபவற்றை நாம் வளர்த்தெடுக்க வேண்டுமே யொழிய அவரின் பெயரில் நாம் அரசியல் நடத்தத் தேவையில்லை. ஈழவர் என்ற சொல்லை விசயம் தெரியாமல் பலர் பாவிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய அவர் இன்று முஸ்லிம்கள் தன்பாட்டில் தனித்துவமாக வளர்ந்திருக்கிறார்கள்… மலையக மக்கள் தனித்துவமாக வளர்ந்திருக்கிறார்கள்… கிழக்கு மக்கள் யாழ் மேலாதிக்கத்தின் முகத்துக்கு நேரே நிமர்ந்து நிற்கிறார்கள். இப்படியிருக்க எல்லோரையும் இணைத்து ரட்ணா சொன்ன ஈழவர் என்ற பதத்துக்கு இன்று மீண்டும் விளக்கம் கொடுக்கலாமா? திரும்பவும் ஈரோஸ் என்ற பெயரில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கட்டியமைப்பதில் ரட்ணாவின் கருத்துக்கள் எந்தளவு பொருந்திவரும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார். மலையக முஸ்லிம் மக்களின் பிரச்சினை என்ன?… சிங்கள அரச அமைப்பின் வடிவம் என்ன?… அது எந்த வர்க்கத்தால் என்ன வடிவில் அமைக்கப்பட்டது?… சிங்கள குட்டி பூர்சுவாக்கள் வியாபாரத்தில் முன்னுக்கு வருவதை முதலாளி வர்க்கத்தினர் எதிர்த்தனர். அதனால்தான் இந்த வடிவத்தை சிங்கள முதலாளி வர்க்கமும்தான் எதிர்க்குது. அவர்கள் இந்த வடிவம் மாற்றப்பட வேண்டுமென நிற்கிறார்கள். உள்நாட்டுக்குள் இறைமையைப் பகிர்ந்துகொள்ள அரசு தயாரில்லை. இலங்கையின் இறைமை இந்தியா போன்ற நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்தாயிற்று. ஜேவிபி கிளர்ச்சி உட்பட்ட போராட்டங்களில் ஒன்றரை இலட்சம் சிங்கள மக்கள் இறந்திருக்கிறார்கள். அதையும் அரசுதான் செய்தது. அதாவது இந்த அரசு வடிவத்தைக் காப்பாற்ற அது யாரையும் கொல்லும். எனவே இந்தப் பிரச்சினைகளை வர்க்க வடிவில் பார்க்க வேண்டும் என்றார். திரும்ப ரட்ணாவிடம் வந்தார்.
ரட்ணாவின் கருத்துக்கள் பழங்காலக் கருத்துக்கள். அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரிப் புனரமைக்க வேண்டும் என்றார். உடைந்து சிதறிப்போன கம்யூனிச நாடுகளெல்லாம் இன்றைய சமூக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றியமைத்து வருகிறார்கள். அரசு இயந்திரம்தான் எமது எதிரி. சிறீலங்கா அரசு அல்ல. இன்றைய இளைய சமுதாயம் இந்தப் போராட்டத்தினூடாக தமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று பார்க்கிறார்கள். எதிர்கால சந்ததிக்காக தமது சந்ததியை அவர்கள் பலிகொடுக்கும் மனநிலையிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். உலகளாவிய நிலையில் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மட்டும் எடுத்துச் செல்லலாமா எனப் பார்க்க வேண்டும்… உலக முதலாளியம் தனது முதலீட்டை இந்தப் பிராந்தியங்களில் கொண்டுவருவதற்கான சூழலை கொண்டுவர முயற்சிக்கிறது என்றெல்லாம் சொன்னார்.
இப்படி சுழன்றுவந்தது ரவியின் உரை. நாம் ஈழவர் என்று சொல்வது சரியா பிழையா என்று பார்க்கவேண்டும் எனவும் கிழக்கு மக்களின் எழுச்சியை தான் ஒரு வளர்ச்சியாகப் பார்ப்பதாகவும் இலங்கைப் பிரச்சினை அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறதாகவும் தனது உரையை நகர்த்திச் சென்ற லண்டன் ரவி அவர்கள் ரட்ணாவின் இறுதிநிகழ்ச்சியை தாம் முன்னின்று நடத்திவைத்ததையும் குறிப்பிட்டு உரையை முடித்தார்.
தலைவர் அழகிரி அவர்கள் மீண்டும் இடைநேரத்தை எடுத்துக் கொண்டார். இந்தியாவின் தார்மீக ஆதரவை தமிழ்நாட்டு மக்களினூடாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற ரட்ணா அதற்கு தமிழக மக்கள் மத்தியில் எமது போராட்டம் பற்றிய நியாயப்பாடுகளை விளங்கவைக்க வேண்டும் என்றார். இந்தக் குறிப்புடன் பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டேன்.
எனது உரை இவ்வாறாக இருந்தது. வாழ்வு போராட்டங்களால் ஆனது. வாழ்வதற்காகவே பிறந்தோம் என்பதுபோல வாழ்வதற்காகவே போராடுகிறோம் என்ற வாசகங்கள் வாழ்வுத் தொகுதியின் வரிகள். ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராடுவது அதை வழிநடத்துவது என்பனவெல்லாம் போராட்ட வரலாறுகளாக பதியப்படுகிறது. எமது போராட்ட வரலாற்றிலும் தோழர் ரட்ணா வழிநடத்தலுக்கான முனைப்பில் தோன்றிய ஒருவர்தான்.
1975 இலேயே அதற்கான அமைப்பை உருவாக்கினார். அதுவும் இடதுசாரி சிந்தனைமுறையில் மிக கவனம் செலுத்தினார். தமிழ் பேசுகின்ற மலையக முஸ்லிம் மக்களைப் பற்றிய கரிசனையும் அவரிடமிருந்தது. ஆயுதப்போராட்டத்தை முன்மொழிந்தார்.
லண்டனில் தனிப்பட்ட தனது வாழ்வின் இருப்புக்குள் அள்ளுப்பட்டுப் போய்விடாமல் அந்த எழுபதுகளில் இந்தப் பணியைத் தொடங்கினார்… என்றளவிலெல்லாம் அவரை நாம் இங்கு நினைவுகூருகின்றோம். இந்த 30 வருட அனுபவங்களை வைத்துக்கொண்டு விமர்சிப்பது என்பது இலகுவானது. ஆனால் எதிர்காலத்தில் எழக்கூடிய நிலைமைகளை ஆய்ந்தறிந்து செயற்பட முனைவது என்பது மிகமிகமிக கடினமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
லண்டனிலிருந்து தலைமைதாங்கியதால் சர்வதேச போராட்ட அமைப்புகளின் தொடர்புகளை அவர்களின் அனுபவங்களை அவர் பெறக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் இவையெல்லாம் போராட்டக் களத்தில் நிற்காமை தந்த பாதகமான அம்சங்களை எந்தவிதத்திலும் ஈடுகட்டவில்லை. இன்று விடுதலைப் புலிகள் அமைப்பை இந்த விடயங்களில் பொருத்திப் பார்த்தால் இது புரியும். 83 கலவரமும் அது ஏற்படுத்திவிட்டிருந்த தாறுமாறான அரசியல் குழப்பமும் இயக்கங்களின் பெடியள்பிடி படலமும் வீக்கமும் அதற்கு இயக்கங்களின் அரசியல் உள்ளடக்கம் ஈடுகொடுக்க முடியாமல் போனதும் என்றவாறான சூழல் நிலவிய காலம் தோழர் ரட்ணாவின் களநிலையிலில்லாத தலைமைத்துவம் பாதகமாகவே பார்க்கப்பட முடியும்.
பின்னரான காலப் பகுதியில் அதாவது இயக்க அழிப்பின் பின்னரான காலத்தில் அவர் இன்னமும் மண்ணைவிட்டு அன்னியமாவது தவிர்க்கமுடியாததாகியது. திம்புப் பேச்சுவார்த்தை பங்குபற்றல், பின்னர் 1989 தேர்தலில் அவரது பங்குபற்றலும் என அவரது செயற்பாடுகள் தொடர்ந்தது. எல்லாமும் கைவிட்டுப்போன நிலையில் அவர் தனது அரசியல் தேடல்களை இந்த சமூகத்துக்கு வழங்கும் ஆற்றலுள்ளவராக இருந்தும் அதை அவர் செய்ததாகத் தெரியவில்லை. இயக்கங்களால் திட்டமிடப்பப்டே புத்திஜீவிகள் அழிக்கப்பட்டார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மௌனமானார்கள். உலகின் விடுதலைப் போராட்ட வரலாறுகள் பல சிந்தனையாளர்களைத் தந்தது. தத்துவங்களின் மீதான மறுவாசிப்புகளையும் செழுமைப்படுத்தல்களையும் அந்தச் சிந்தனையாளர்கள் தந்தனர். ஆனால் எமது போராட்ட வரலாறு இந்தப் பெறுமதியைத் தரவில்லை என்றே வேதனையுடன் சொல்ல வைக்கிறது. ரட்ணா, மகா உத்தமன் போன்ற புத்திஜீவிகள் இதற்கான ஆளுமையை மொழியின் தளத்திலும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலும் பெற்றிருந்தும் இந்தப் பணியைத் தவறவிட்டனர். இது எமக்கு நேர்ந்த இழப்பு. நாம் தமிழகத்தில் தோன்றிய சிந்தனையாளர்கள் அல்லது ஆய்வாளர்களிடமிருந்துதான் இந்த அறிவைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசபிதா, தேசத்தின் குரல் என்பதெல்லாம் தேவையானவைதானா? அதுவும் இடதுசாரி சிந்தனை மரபில் செயற்பட்ட ரட்ணாவுக்கு கீழைத்தேய மரபில் தேசபிதா என்ற பட்டத்தைக் கொடுப்பது எந்தவகையில் பொருத்தமானது. தோழர் லெனின் தோழர் மாவோ தோழர் பிடல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தேசபிதா ரட்ணா என்று சொல்வது எந்தவகையில் சரியானதாகும். தேசிய இனப் பிரச்சினையிலிருந்து நாம் விடுபடும் வரையில்தான் தேசியம் நடனத்துக்கான இசையாகிறது. விடுபட்டபின் முன்னுக்குவரும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்களும் அதை வழிநடத்தப்போகும் தேசபிதாக்களும் வந்துகொண்டுதானிருப்பார்கள். தேசபிதா என்ற சட்டகத்தை ஏற்படுத்தி அதை ரட்ணாவுக்கு மட்டும் பொருத்தி வைப்பது சரியானதாய்ப் படவில்லை.
ஈழவர் என்ற சொல் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் மலையக மக்கள் எல்லோரையும் உள்ளடக்கியது. அதனதன் தனித்தன்மைகளை கவனத்தில் எடுக்காத குறைபாடு மலையகம் தானாகவே கையைவிட்டுப் போயிற்று. முஸ்லிம் மக்கள் தம்மை ஒரு தனித்தேசிய இனமாக காண முற்படுகின்றனர்;. இன்ற கிழக்கு மக்கள் தமது தமது தனித்துவத்தை முன்நிறுத்தி நிமிர்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் இன்று ஈழவர் என்ற பதம் பொருத்தப்பாடுடையதாக இருக்குமா. இதேபோல்தான் இன்று கிழக்கின் தனித்துவம் பற்றி பேசிக்கொள்பவர்கள் முஸ்லிம்களின் பிரதேசரீதியிலான தனித்தன்மைகளை கணக்கிலெடுக்காது முஸ்லிம்கள் என்று ஒரே பதத்துக்குள் சொல்லிக்கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.
எது எப்படியோ வரலாற்றின் புள்ளிகளில் மாற்றத்தை அல்லது முறிவை ஏற்படுத்தியவர்களை நாம் நினைவுகூரத்தான் வேண்டும். அந்தவகையில் ரட்ணாவை நாம் நினைவுகூர்வது தேவையென்றெ எனக்குப் படுகிறது என்று கூறி எனது உரையை முடித்துக் கொண்டேன்.
அடுத்துப் பேசிய சக்தி அவர்கள் ~~துவங்கச் சொன்னேன் துவக்கைத் தூக்கியிட்டாங்கள்|| என்ற ரட்ணாவின் அன்றைய விசனத்தை ஞாபகப்படுத்தினார். ரட்ணா நாவலப்பிட்டியில் தனது கல்வியை மேற்கொள்ளும்போது மலையக மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தார். இலக்கியத் துறையிலும் அவரது செயற்பாடு அமைந்திருந்தது. ஈஆர்ஓ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறுபட்ட ஆய்வை மேற்கொண்ட பின்னரே 1975 இல் ஈரோஸ் அமைப்பை உருவாக்கினார். பலஸ்தீன, ஏஎன்சி (ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்), ஐரிஸ் விடுதலை அமைப்பு போன்ற விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட ரட்ணாவின் போராட்ட வீரியங்களை குறிப்பிட்ட சக்தி அவர்கள் ஈபிஆர்எல்எப் பிரிந்து சென்றபோது ஈரோசுக்குள்ளும் முரண்பாடுகள் அதிகமாயின… அவரது பதவிகள் பறிக்கப்பட்டு சாதாரண உறுப்பினராக இருந்தார் என்றார்.
இந்திய இலங்கை ஒப்பந்த காலம் முடிந்த நேரத்தில், “போராட்டத்தினை நாசப்படுத்திவிட்டாங்கள்… பிரபாகரன் விடான்… அவன் அழிப்பான்… அவன்ரை அழிவுக்கும் அவன்தான் காரணமாயும் இருப்பான்.” என்று ரட்ணா எரிச்சலடைந்ததையும் சக்தி நினைவுகூர்ந்தார்.
ரட்ணா ஈழவிடுதலைப் போராட்டத்தை மார்ச்சிய சிந்தாந்தத்தின் அடிப்படையில் தொடக்கியவர். அதனால் அவரை விமர்சிப்பதற்கு மார்ச்சிய தத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றார் சக்தி. 88 இல் இலங்கை ஒரு லெபனானாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றவர் ரட்ணா. 1990 இல் பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டபோது சர்வதேச அழுத்தத்தினூடாகத்தான் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படலாம் என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தார். பிரதேச ரீதியான தனித்தன்மைகள் சரியாக அடையாளங்காணப்பட்டு முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் வடக்கும் கிழக்கும் பிரிய நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார். அவரிடம் இருந்த ஆளுமையையும் ஆற்றலையும் பார்க்கும்போது நாம் ரட்ணாவை சரியாகப் பயன்படுத்தவில்லையென்றே சொல்லத் தோன்றுகின்றது. ஈரோசின் மிதவாதப் போக்குத்தான் பாலகுமாரையும் இப்படியாய் சறுகவைத்தது என்று சொல்லலாம் என்ற தனது அபிப்பிராயத்தை சக்தி அவர்கள் கூறினார். ரட்ணா மெய்ப்பித்த மார்க்சியத்துக்கு மேலாக எந்த விளக்கத்தையும் கொடுத்துவிட முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்… அவரது கருத்துக்களினூடாக புதிய விளக்கங்கள் வரவேண்டும். சுயவிமர்சனத்தினூடாக அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஒன்றுதான் தோழர் ரட்ணாவுக்கான எமது அஞ்சலியாக இருக்க முடியும் என்று தனது உரையை முடித்துக்கொண்டார் சக்தி.
அடுத்து திலக் அவர்கள் உரையைத் தொடங்கினார். சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது என்பது வெறும் இனவிடுதலையாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழல்பவர்கள் பற்றி கல்வி வசதி இல்லாதவர்கள் பற்றி சமூக ஒடுக்குமுறைகள் பற்றியெல்லாம் ரட்ணா சிந்தித்தார். மார்ச்சியத் தத்துவம்தான் இந்த சமூகத்துக்கு விடிவைத் தரும்… தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒரு வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்றவர் ரட்ணா. எமது போராளிகள் பகடைக் காய்களாக மாற்றப்படக்கூடாது என்று கரிசனைப்பட்டார். எமது நாட்டில் தொழிற்சாலைகள் பெருமளவில் இல்லை. அதனால் தொழிலாளர்கள் மயப்பட்ட நாடு இல்லை. ஆனால் விவசாயிகள் இருக்கிறார்கள். வயல்கள் கடல் என திறந்த வளம் எம்மிடம் உள்ளது என்பதை கவனத்தில் எடுத்து மார்க்சியத்தைப் பிரயோகிக்க முனைந்தவர் ரட்ணா.
ரட்ணாவை நான் ஒரு கம்யூனிசவாதியாகவே பார்க்கிறேன். அனாலும் கம்யூனிச நாடுகளின் உடைவை அவர் ஆழமாகப் பார்க்கவில்லை. கொர்ப்பச்சோவின் பிறஸ்ரோறிகா கிளாஸ்நோஸ்ட் என்பவற்றை அவர் ஆரம்பத்தில் ஆதரித்தார். பின்னர் ஏற்பட்ட மோசமான நிலைமையைக் கண்டு அதை பிற்பாடு எதிர்த்தார். இப்படியான ஊசலாட்டத்தை ரட்ணா மீதான விமர்சனமாக திலக் முன்வைத்தார்.
நாம் நிறைய விடயங்களை ஆயவுக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. நூல்களை வாசிக்கும் பழக்கம் எமக்கு வேண்டும். தனியே இணையத்தள வாசிப்பு மட்டும் போதாது என்று எமது வாசிப்பின் மீதான சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டினார் திலக். இன்று மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை ஒற்றுமையாக நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு ஈரோஸ் கொடியை நாம் காவவேண்டியதில்லை. சுற்றுச்சூழல் மாசடைவது போன்ற பல விடங்களும் இன்று சமூகத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. இதைப் பற்றிய ஈடுபாடுகளும் எமது புரட்சிகர சிந்தனைமுறைகளின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள உதவும். ரட்ணாவின் 20 வருடங்களுக்கு முந்தைய சிந்தனைகள் பல இன்றும் பொருந்தி வருவதை நாம் பார்க்கிறோம்… அந்தவகையில் ரட்ணாவை நாம் நினைவுகூர்கிறோம் என்று தனது உரையை முடித்துக் கொண்டார் திலக்.
அடுத்து சிவா அவர்கள் தனது உரையை நிகழ்த்தினார். ரட்ணா தாய் இயக்கத்தின் மூலவேர். தாயும் அவரே தந்தையும் அவரே. தேசபிதா என்று அழைப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தோழர் ரட்ணாவின் கருத்துக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவை. அவரது கருத்துக்களை நாம் ஏற்றுச் செயற்பட்டு அதில் நாம் தோல்வியடைந்திருந்தால் அவரது கருத்துகளை நாம் கேள்விக்கு உட்படுத்தத்தான் வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லையே என்றார். இன்றைய ஈழவிடுதலைப் போராட்டம் ஏன் இந்த நிலைக்கு வந்தது. தமிழ்த் தேசியத்தில் 83 இன் கருத்தியல் பூதாகாரமாக வெடித்து -அதை கருத்தியல் என்றுகூட சொல்லமுடியாத மோசமான கருத்து வளர்ந்து- இன்றைய நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. தனிநபர் பயங்கரவாத இயக்கங்கள் உருவாகின. தத்துவார்த்த அடிப்படையில் முறையாக உருவாக்கப்பட்டது ஈரோஸ்தான். அதனால் அதன் ஸ்தாபகரான ரட்ணாவை தேசபிதா என்பது சரியானதுதான்.
கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும் என்றவர் ரட்ணா. அரசியல் இராணுவத்தை வழிநடத்த வேண்டும்…. இராணுவம் அரசியலை வழிநடத்தக்கூடாது… இரண்டும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்ற அவரது கருத்து ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. ஈரோஸ் நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஆனால் இத்தோடு சமாந்தரமாக மேவிவந்த தமிழினவாதம் முற்போக்குத் தத்துவங்களை உடைத்து பாதிப்பை ஏற்படுத்தியது. போராட்டம் தோல்வியில் முடிந்ததுக்குக் காரணம் குறுந்தேசியவாதம்தான். சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து போராடவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் ரட்ணா. ஆனால் தமிழ்த் தேசியம் பிற்போக்கான நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழ்-முஸ்லிம் உறவுகளை உடைத்துப் போட்டார்கள் தமிழ்க் குறுந்தேசியவாதிகள். அன்று பெண்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர் கொடுத்த விளக்கத்தை கேலிசெய்தவர்கள் புலிகள்… இன்று?… மேலும் காலம்கடந்த ஞானமாக இன்று ~~ஆயுதம் ஒரு கையிலும் உற்பத்திக் கருவி மறு கையிலும்|| என்று அறைகூவல் விடுக்கிறார் பாலகுமார்.
ஈபிஆர்எல்எப் வெளியேற்றத்தால் ஈரோஸ் பலவீனமடைந்தது என்றார்கள். உண்மைதான். ஆனாலும் ஈரோஸ் அதிலிருந்து மீண்டு வந்தது. அது பலவீனப்படுத்தப்பட்டதும், பாதுகாக்கப்பட்டதும் பிரபாகரன்களால்தான். வேலுப்பிள்ளை பிரபாகரனால் அது பலவீனப்படுத்தப்பட்டது. ராஜநாதன் பிரபாகரனால் பாதுகாக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுத்துச் செல்ல உழைக்க முன்வரவேண்டும். மற்றைய குழுக்கள் அங்கு நின்று சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத நிலை. புலம்பெயர் தேசத்திலோ “புலியை அடி… புலியை அழி” என்று கூறும் மாற்றுக் கருத்தாளர்கள் அரசைப் பார்த்து “ஒரு தீர்வை வை” என்று சொல்வதில்லை. அமைதி, ஜனநாயகம்… இதுதான் இன்றைய தேவை. இது ஒரு அரசியல். இதில் நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இதுவே நாம் செலுத்தும் அஞ்சலி. இதற்கு ரட்ணா சொல்லிவைத்த சுயவிமர்சனம் பன்மைத்துவம் எமக்கு உதவும் என்று கூறி தனது உரையை முடித்தார் சிவா.
அடுத்து அழகு குணசீலன் பேசினார். சற்று தாமதமாக வந்ததால் முன்பு பேசிய சிலரின் கருத்துக்களை கேட்கமுடியாமல் போன அங்கலாய்ப்புடன் தனது குறிப்புகளை குலைத்துப் போட்டார். நேபாள மாவோயிஸ்டுகளின் அரசுடனான பேச்சுவார்த்தையை இந்திய மாவோயிச இயக்கங்கள் காரசாரமாக விமர்சனம் செய்தன. நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பத்திரிகையொன்றுக்குக் கொடுத்த பேட்டியில் இன்றைய புதிய போக்குகள் பற்றி விளக்கம் கொடுத்தார். இறுதியாக இவர் ஒன்றைச் சொன்னார். அதாவது நடக்கவேண்டிய புரட்சி பின்போடப்பட்டுள்ளது… அவ்வளவுதான் என்றார். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசியம்தான் முழுப் போராட்டத்தையும் நாசமாக்கிவிட்டது. இதை ரட்ணா முன்பே கவனத்தில் எடுத்துத்தான் ஈழவர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ்த் தேசியம் இன்று குறுந்தேசியமாகக் குறுகிப் போனதுக்குக் காரணம் வெறும் இன உணர்வினால் கட்டியெழுப்பப்பட்டதால்தான். சிங்களப் பேரினவாதம் எமக்கு எதைச் செய்ததோ தமிழ்த் தேசியம் குறுந்தேசியமாக மாறி அதைத்தான் செய்தது. இதுதான் பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது. தேசியம் பிராந்தியம் சர்வதேசியம் இந்த மூன்றிலும் நடக்கும் நிலைமைகளும் கணக்கில் எடுக்கப்பட்டு எமது போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. ஆயுதத்தை எடுத்துவிட்டு பின் அரசியலை -அதை நியாயப்படுத்தும் நோக்கில்- முன்னெடுத்த வரலாறையே நாம் பார்க்கிறோம். இதை ரட்ணா மறுதலையாக சரியான வழிமுறையில் முன்னெடுக்க முனைந்தவர். இதை இன்னொரு வடிவில் சொன்னால் இராணும் அரசியல் இரண்டும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கொள்ளலாம்.
ரட்ணா யாழ் நடுத்தரவர்க்கத்துக்கு வெளியே நின்று விவசாயிகள் நிறைந்திருந்த வன்னி, கிழக்கு பிரதேசங்களை ஈரோசின் தளமாக தேர்வுசெய்தார். ஈரோஸ் இராணுவ அரசியல் சம பலத்தைக் கொண்டிருந்தது. இப்படியாய் ரட்ணாவின் கொள்ளையின்கீழ் அது வழிநடத்தப்பட்டது.
குறுந்தேசியமானது தமிழ் அரசியல் கட்சிகளிலிருந்து தொடங்கி இயக்கங்கள்வரை பற்றிப் படர்ந்ததாகும். ரட்ணாவின் சிந்தனை இதற்கு எதிர்மாறாக இருந்தது. ரட்ணா இந்தியா பற்றி நாம் தெளிவான கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்… நாம் இந்தியாவுக்குள் விழுந்ததுதான் அவர்கள் எம்மை ஆட்டிப்படைக்கக் காரணம் என்றார். இயக்கங்கள் தமது கருத்தில் தெளிவில்லாமல் இருந்தார்கள். இந்தியாவை பயன்படுத்துகிறோம் என்று உத்தியுரைத்தனர். தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டனர். உண்மையில் ரட்ணாவின் கொள்கையில் நடந்திருந்தால் நாம் இந்திய இராணுவத்தின் வரவை ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பாக புரிந்துகொண்டிருக்க முடியும். மாலை மரியாதையுடன் மக்கள் வரவேற்றிருக்க மாட்டார்கள். தமது நலன்கள் பாதிக்கப்படும்போதே புலிகள் இந்திய இராணுவம் தமது எதிரிகள் என்பதை மக்களுக்குச் சொல்லவருகிறார்கள்.
ரட்ணா பலஸ்தீன, ஐஆர்ஏ போன்ற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பைப் பேணினார். இப்படியான நேச சக்திகளோடு இப்போதும்கூட நாம் தொடர்பு வைத்திருப்பதில்லை. எமது சமூகத்துக்குள்ளேயே குண்டுச் சட்டிக் குதிரையோட்டம் நடத்துகிறோம். வருடத்துக்கு ஒன்பது பத்து நிகழ்ச்சிகளை எமக்குள்ளேயே நடத்திமுடிக்கிறோம். இந்தியப் போராட்டக் குழுக்களோடுகூட எமக்குத் தொடர்புகள் கிடையாது. நாமோ நெடுமாறன், வைகோ, முன்னர் எம்ஜிஆர் கருணாநிதி… என்று கையேந்தி நின்றோம். நிற்கிறோம். ரட்ணா அன்று சொன்ன விடயங்களின்வழி நோக்கியிருந்தால் நடந்திருந்தால் இன்று எமது போராட்டம் வேறு நிலையில் நின்றிருக்கும். பயங்கரவாதிகள் என்ற பட்டம் நாமாகத் தேடிக்கொண்டதுதான். எமது நடவடிக்கைகள்தான் காரணம். இருட்டில் விடப்பட்டிருக்கும் நாம் அனைவரும் ரட்ணாவின் சிந்தனைகைளை நினைவுகூரவேண்டியது அவசியமாகும் என்றார் குணசீலன்.
அரசியல் உரையாடலுக்குள் சென்ற அவரது பேச்சு முதலாளித்துவம் மார்ச்சியத்தை ஆயந்து தனது ஆயுளை நீடிக்கும் சூட்சுமத்துக்குள் போய் முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயகம் பற்றி உரையாடியதோடு மார்ச்சியம் பின்நவீனத்துவத்திற்குள்ளும் போய்வந்து சுவிசில் ~தமீமீலன்| என்ற சொல்லின் அர்த்தம் அடையாளப்படுத்தலா இழிவுபடுத்தலா என்ற வினாவுக்குள்ளும் நீண்டு வளர்ந்திருந்தது.
தொடர்ந்து பாஸ்கரன் அவர்கள் தனது சிறு அஞ்சலியுரையை நிகழ்த்தினார். ரட்ணாவுக்கு தன்னை தலைவராக முன்னிறுத்தும் எண்ணம் இருந்திருந்தால் இன்று வயோதிபர் மடத்தில் தங்கியிருந்து அனாதையாக உயிர்பிரிந்திருக்கும் நிலை எற்பட்டிருக்காது என்றார். அவரின் கொள்கைப்படி நடந்திருந்தால் தமிழ்பேசும் மக்களின் போராட்டம் இவ்வளவு அழிவுகள் இயக்க அழிப்பு இனங்களுக்கிடையிலான மோதல்கள் அழிப்புகள் வெளியேற்றங்கள் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் என தொடர்ந்திருக்காது என்ற தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.
பின்னர் சிறீநாத் அவர்கள் தனது உரையை நிகழ்த்தினார். தோழர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமான ஒருவர் ரட்ணா. அவரால் வளர்க்கப்பட்டவர்கள் வேறு இயக்கங்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தனர் என்றார். பாலகுமாரின் நிலைப்பாட்டை வேறொரு கோணத்தில் பார்த்த அவர் எங்களை அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்டத்துக்கு யோசிக்க வைப்பதற்காக சிலவேளை அப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன் என்றார். தோழர்கள் பாலகுமார், சங்கர் ராஜி, ரட்ணா போன்று பரந்த பார்வை எமக்கு இருந்திருந்தால் நாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம் என்றார் சிறீநாத்.
அடுத்து ஜெகநாதன் பேசினார். இங்கு பேசப்பட்ட விடயங்கள் பல ஆறுதலாக அமர்ந்திருந்து பேசப்பட வேண்டியவை… அதற்கு இது உகந்த மேடையல்ல என்றார். இந்தியா பற்றிய ஏற்கனவேயான உரைகளைக் கவனத்திலெடுத்த அவரது பேச்சு இந்தியா எமது பிரச்சினைக்குள் தலையிடுவது இந்தியாவின் விருப்பம் அல்லது நல்லெண்ணம் சார்ந்ததா அல்லது அதன் பிராந்திய பாதுகாப்புச் சார்ந்ததா என்ற வினாவை விட்டுச்சென்றது. ஈழவர் என்ற ரட்ணாவின் உள்ளடக்கலை ஏற்றுக்கொண்ட அவர் ரட்ணாவின் சிந்தனையை எம்முடன் இணைத்துக்கொள்வது அவசியம். இதை நாம் செய்யத் தவறினால் எமது சமூகத்துக்கு நாம் நல்லது செய்யத் தவறியவர்கள் ஆவோம் என்றார்.
கடைசியாக உரைநிகழ்த்திய செல்வராசா மாஸ்ரர் அவர்கள் ரட்ணாவின் சிந்தனைகளை எமது போராட்டம் செயற்படுத்தாத காரணத்தால் இன்ற இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றார். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம்… என பாராளுமன்றம் போன எமது தலைவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகச் சென்றனர். ரட்ணா விடுதலை அமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய் தமிழ் மக்களின் பிரச்சினையை முன்வைத்த தலைவர் என்றார். ரட்ணாவின் இறுதிநிகழ்ச்சியை நினைவூட்டிய அவர், பாரதியின் இறுதிச்சடங்கிலும் 13 பேர்தான் பங்குபற்றியிருந்தனர். அவனின் பெயர் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது என பிரமாண்டங்களின் மாயையை சிதைத்தார். ரட்ணாவின் சிந்தனைகளை எதிர்காலச் சந்ததி நினைவுகூhந்து கொண்டுதானிருக்கும். அதன்படி நடந்து எமது அடுத்த சந்ததியாவது விடுதலையை வென்றெடுக்கட்டும்…. ரட்ணா ஒரு தீர்க்கதரிசி என்ற போற்றுதலுடன் தனது அஞ்சலியை நிகழ்த்தினார் செல்வராசா.
சுமார் 100 பேருக்கு மேல் வந்திருந்தனர். பலர் அமர்ந்திருந்தனர். மிகுதிக் கதிரைகளை அதன் வெறுமைக்கு விட்டுவிட்டு பின்னால் எழுந்துநின்று பண்பாடு காத்தனர் மிகுதிப்பேர். மாறுபாடான கருத்துக்கள் கொண்டவர்கள் என்று அறியப்பட்டும் அவர்களுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்காமல் உரைநிகழ்த்த அழைத்தது மற்றும் முரண்பட்ட கருத்துகளுக்கு இடைஞ்சல் எதுவும் செய்யாமல் அதை இயல்பாக எதிர்கொண்டது போன்ற சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. இது ஈரோஸ் அமைப்பின் அரசியல் சுவறிய சூழல் என்றே எனக்குப் பட்டது. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் அனுப்பப்பட்டும் அதை குப்பைக்கூடையுள் வீசிவிட்டு மவுசை நகர்த்தும் இணையத்தள ஜனநாயகத்தை நொந்தபடி நகர்ந்தோம். யன்னல்கள் இருண்டிருந்தன. நேரம் எட்டுமணியைத் தாண்டியிருந்தது.
– தொகுப்பு : ரவி
பெப்ரவரி.2007