வருந்தாதே கடலே
உன் அடிமடி பிளந்து
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன்
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது.
நாம் அறிவோம்
வருந்தாதே கடலே
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின்
குரல்வளைவரை தாக்கியது.
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள்
சிதைவுகளுள் சொருகுண்டனர்
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர்.
கதறினர் நினைவுகளை வீசி
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால்
வரைந்து தள்ளினர்.
வலிதாங்க முடியவில்லை.
எங்கள் குழந்தைகளும் சேர்ந்தே
காணாமல் போயினர், காவுபோயினர்.
மரணம் எம் மனிதர்களை
உனது மடியில்வைத்து
உயிர்கோதி உறங்கச் செய்த கதை
சொல்லிமாளா.
வலிதாங்க முடியவில்லை.
நீ மண்ணோடு பிணைந்ததனால் நாம்
உன்னோடு பிணைந்தோம் பார்.
வாழ்வளித்து வாழ்வளித்து
சலிப்படையா மனசுனக்கு.
நீ அளித்த வாழ்வின் பலிபீடம்
உன் பரப்பில் நாட்டப்பட்டிருந்ததுதான்
இன்னும் துயர் தருகிறது.
வலிதாங்க முடியவில்லை.
கடலே,
உனை தழுவி எழும் காற்றுக்குச்
சொல்லிவிடு – வீழ்ந்த எம் வாழ்வை
சிலிர்ப்பிவிடு என.
எஞ்சிய எம் மனிதர்களை
நோய் பசி எடுப்பெடுத்து
மரணமேடைக்கு அழைத்துச் சென்றுவிடாதே
என்றேனும் சொல்லிவிடு.
வலிதாங்க முடியவில்லை.
ஏவியவன் இருக்க அம்பை நொந்தென்ன.
வருந்தாதே கடலே
உன்மீது வலைவிரித்து
அவர்கள் தம் வாழ்வைப் படர
மீண்டும் வருவர்.
நிலாச் சந்திப்பொன்றில்
காதலர்கள் ஒளிவீசி உன்
மணலில் புரண்டெழுவர்.
ஓயாது நீ பாறைகளில்
மோதுமோர் உயிர்ப்பொழுதில்
துயர்கரைத்து
இலேசாகிப்போக நான் வருவேன்.
ஓயாது மண்நுகரும் உன்
அலைநுனியின் குறும்பினில் எம்
குழந்தைகள் மகிழ்வெடுப்பர்.
அளைந்து அளைந்து
அழிவினதும் ஆக்கத்தினதும் புள்ளிகளில்
நம்பிக்கைகளை சலிப்பின்றி வரைவர்.
வருந்தாதே கடலே, நீ
வருந்தாதே!
– ரவி (சுவிஸ்)